பொருளடக்கம் 13 / 300
மறமானம் மாண்ட
அச்சுப் பக்கம் 43–44 · ஸ்கேன் 60–61 · அதிகாரம் 77 (படைமாட்சி) — குறள் 766
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காப்பக விவரிப்பு: Large colour battle illustration above the prose showing an armed warrior amid combat, directly introducing the page's martial-history discussion.
போர்க்களக் காட்சிகளையும் போருக்குப் புறப்படும் வேந்தர்கள் உரைத்திடும் சூளுரைகளையும் தமிழ் இலக்கியம் சிறப்பாகக் கூறும்.
‘போரில் தோற்றுவிடுவேனாயின் புலவர்கள் என்னைப் பாடாது போகட்டும்’ என்றும் ‘என் நாட்டு மக்கள் என்னைக் கொடுங்கோலன் என்று இழித்துரைக்கட்டும்’ என்றும் முழங்கியவாறு களம் புகுந்தனர் நாட்டுடைத் தலைவர்கள் என்று, தமிழர் வரலாறு கூறுகிறது.
“என் மகன் களம் சென்றுள்ளான். அந்தப் புலி வாழ்ந்த குகை இதோ இருக்கிறது” என்று, தன் மகனைச் சுமந்திருந்த வயிற்றைக் காட்டினாளாம் வீரத் தாயொருத்தி.
“மன்னனைத் தொடர்ந்து சென்றுள்ள வீரர் அணிவகுப்பில், என் மகன் மீது மன்னன் தனியன்பு காட்டுகிறான் என்பதறிந்து மகிழ்கிறேன். எனினும் இன்னும் என் மகன் போரில் விழுப்புண் பெற்றுக் களம்பட்டான் என்ற செய்தி எனக்குக் கிடைக்கவில்லையே; அப்படிக் கிடைத்தால் அல்லவா - அவன் மன்னனையும் இந்த மண்ணையும் உயிரெனப் போற்றுகிறான் என்பது உண்மையாகும்?” என்ற கருத்துப்படக் கதறுகிறாளாம் இன்னொரு வீரத் திருமகள்!
காவா நாவிற் கனகனும் விசயனும் தமிழ் மன்னர்களை இழித்துரைத்தார்கள் எனக் கேள்வியுற்று வடபுலம் சென்று, அவர்களை வென்று, அவர்தம் முடியினில் கல்வேற்றி வந்து கண்ணகிக்குச் சிலையெடுத்தான் சேரமன்னன்.
இலங்கையை வென்றான்; கடாரம் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டினான் - சோழ மன்னர்கள்.
இளந்தளிரென இருந்த பாண்டியனோ போர்முரசு கேட்டவுடன் அரிமா எனக் கிளம்பி, ஒரே களத்தில் பல அரசர்களை மோதி வென்றான்.
இவையனைத்தும் தமிழகத்தின் கடந்தகால வீர வரலாற்றுக் கருவூலங்கள்!
‘பாய்ந்துவரும் வேலைக் கண்டு இமை கொட்டினால்கூட அது வீரத்திற்கு இழுக்காகும்’ எனக் கொள்ளப்பட்டது.
இரு வீரர்கள் பேசிக் கொண்டார்களாம். இருவரும் இரண்டு பகை நாட்டைச் சேர்ந்தவர்கள்.
ஒரு வீரன் : எமது மன்னர் முதுகில் உமது மன்னரின் வாள் பாய்ந்திட முடியாது!
இன்னொரு வீரன் : ஆம்! உண்மைதான்! புறங்காட்டி ஓடுபவர்மீது எமது மன்னர் வாள் வீசிப் பழக்கமில்லை.
தங்களின் தலைவர்களாம் மன்னர்களைத் தமிழ் வீரர்கள் எவ்வாறு பற்றுக் கொண்டு மதித்தார்கள் என்பதற்கு இந்த உரையாடல் எடுத்துக்காட்டாக அமைகிறதல்லவா?
‘எமனே கோபமுற்று எதிர்த்து வந்தால்கூட ஒன்றுகூடி எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதுதான் சிறந்த படையாகும்’ என ஒரு குறள் வாயிலாகக் கூறும் வள்ளுவர், அந்தப் படையின் வீரர்கள் எத்தகையோராக இருக்க வேண்டுமென்றும் வரையறுத்துக் காட்டுகிறார்.
மறம், மானம், மாண்ட வழிச்செலவு, தேற்றம் என்ற நான்கு சிறப்புப் பண்புகளும் உடைய வீரர்கள் கொண்டதே படைக்குப் பெருமை தருவதாகும் என அறுதியிட்டுக் கூறுகிறார்.
வீரம், நாவிலே நர்த்தனமாடிப் பயனில்லை. அது களத்திலே நிர்ணயிக்கப் படக்கூடிய ஒன்று. அத்தகைய வீரமுடையவர்களே படையில் இருந்திட வேண்டும்!
அதன் தொடர்ச்சியாகத்தான் மானமும் வீரர்க்கு வலியுறுத்தப் பெறுகிறது. பகைவனின் காலைவிடச் சாவின் வாய்ச் சிறந்தது என்ற உறுதிப்பாட்டுடன் எழுந்து நிற்பதே மான உணர்வு!
அதேபோன்று வீரமும் மானமுங்கொண்ட வரலாற்றுக்குரியவர்களாகத் தங்களை ஆக்கிக் கொண்டவர்களின் வழியைப் பின்பற்றுகிற ஆசையும் பின் பற்றும் பண்பும் படை வீரர்க்குத் தேவை.
இந்த மூன்று சிறப்பியல்புகளுடன், படைத்தலைவனின் நம்பிக்கைக்குரிய வராகவும் திகழ்ந்திட வேண்டும்.
புறப்பாடல் இலக்கியத்தில் காணப்பெறும் இந்த நான்கு பண்புகளையும் ஒரு படைக்குரிய சிறப்பாக வள்ளுவர் வகுத்திருப்பது, எக்காலத்திற்கும் - எத்தகைய போர்முறைக்கும் பொருந்தும்.
இதோ அந்தக் குறள் :
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு.
அதிகாரம் - 77 - படைமாட்சி; பாடல் - 766
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்