பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 12 / 300

அ. கெடுப்பதூஉம் கெட்டார்க்கு / ஆ. தெய்வந் தொழாஅள்

அச்சுப் பக்கம் 4142 · ஸ்கேன் 5859 · அதிகாரம் 2 (வான்சிறப்பு) — குறள் 15; அதிகாரம் 6 (வாழ்க்கைத் துணை நலம்) — குறள் 55

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour illustration above the text showing an elderly man beside a tree and a woman within a circular inset, visually accompanying the Kural discussion.

தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை

இந்தக் குறளுக்கு உரையெழுதிய பலரும் தவறான உரையே எழுதியிருக்கிறார்கள்.

“தன் கணவனுக்கு மேலான தெய்வம் ஒன்றில்லை என்ற எண்ணத்துடன் கணவனைத் தொழுது வணங்குகிறவள் பெய்யென்று கூறினால் மழை பெய்யும்.”

இத்தகைய உரைகளும் இதனிலும் பிற்போக்கான கருத்தை விளக்கும் உரைகளும் இந்தக் குறளுக்குத் தரப்பட்டிருக்கின்றன. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் இந்தக் குறளுக்குத் தந்துள்ள உரைதான் பொருத்தமுடையது என அறிவுலகம் ஏற்க முடியும்.

“பெய்யெனப் பெய்யும் மழை” என்பதற்குப் பெய்ய வேண்டுமென்று சொன்ன மாத்திரத்தில் பெய்யக் கூடிய மழை என்றுதான் பொருள் கூறிட முடியும். கணவனே தன் தெய்வமெனக் கொண்டவள் மழையைப் போன்றவள். யாருக்கு? அவளது கணவனுக்கு அவள் மழை போன்றவள். அதுவும் எத்தகைய மழை? பெய்ய வேண்டுமென்று கூறிய மாத்திரத்தில் பெய்யக்கூடிய மழையைப் போன்றவள்.

கழனி, காய்ந்து கிடக்கிறது; கதிர், நீர் தேடி வாடுகிறது; அந்த நேரத்தில் உழவன் வான் நோக்கி நிற்கிறான்; மழை பொழியவில்லை - உழவன் வாடுகிறான் - வேதனைக் தீயில் பாடுகிறான் -

கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை

எல்லாம் வல்லதல்லவா மழை! அத்தகைய மழையின்றி மனிதன் வாழ முடியுமா? உலகத்தை உய்விக்கும் மழையை மகளிரோடு ஒப்பிடும் அழகே அழகு! அந்த அழகை - வள்ளுவர் தந்த மிக உயர்ந்த இடத்தை - உரை எழுதியோர் கெடுத்தனர்.

கழனிக்கு மழை தேவை என்று உழவன் நினைத்தபோது உடனே மழை பொழிந்துவிட்டால் - அந்த மழை எத்தனைக் குடும்பங்களின் நல்வாழ்த்தைப் பெறுகிறது! பெய்யெனப் பெய்யும் மழை, பெறுகிற புகழ்மாலைகள் எண்ணிலடங்கா!

அதுபோன்றவளாம், கணவனையே தெய்வமாகக் கருதும் பெண்! அந்தக் கருத்தைத்தான் வள்ளுவர் வண்ணத் தமிழிலே குழைத்துத் தருகிறார்- மீண்டும் ஒருமுறை படியுங்கள்.

தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை

அதிகாரம் - 2 - வான்சிறப்பு; பாடல் - 15 அதிகாரம் - 6 - வாழ்க்கைத் துணை நலம்; பாடல் - 55

காப்பக விவரிப்பு: Small standing Thiruvalluvar monument illustration centred below the citation block.

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்