பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 11 / 300

வாள்போல் பகைவரை

அச்சுப் பக்கம் 3940 · ஸ்கேன் 5657 · அதிகாரம் 89 (உட்பகை) — குறள் 882

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour illustration above the prose showing an elder and a younger man in conversation, a prominent sword crossing the composition, and two additional faces below.

வள்ளுவரின் மாணவர் ஒரு நாள் வள்ளுவரிடம் ஒரு விளக்கம் கேட்டார். “வாள் போன்ற பகைவர்க்கு அஞ்சத் தேவையில்லை என்று குறள் தீட்டியிருக்கிறீரே; பகையை வாளுக்கு ஒப்பிடுவதற்குக் காரணம் என்ன? எத்தனையோ போர்க்

கருவிகள் இருக்கும்போது வாளை ஒப்பிட்டது ஏதற்காக?” இதுதான் அந்த மாணவர் கேட்ட விளக்கம். அதற்கு வள்ளுவர் விடை அளித்தார்.

“அன்பு! குறளை, ஒரு முறைக்கு இருமுறை ஆழமாகப் படித்துப் பார். நான் என்ன சொல்லுகிறேன் என்பது தெளிவாகும். வெளிப்படையாகத் தெரியும் பகைமைவிட, மறைந்திருந்து உறவினரைப் போல நடித்து திடீரெனத் தாக்கும் உட்பகை மிகக் கொடியது என்பதையும், வெளிப்படையான பகைக்கு அஞ்சா விடினும் பரவாயில்லை, உட்பகைக்கு அஞ்சி எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதையுமே இந்தக் குறள் வாயிலாக வலியுறுத்துகிறேன்.”

வள்ளுவரின் விளக்கத்தைக் கேட்ட மாணவர், மற்றொரு வினாவை எழுப்பினார்.

“பெரியீர்! வாள் கூடச் சில நேரங்களில் மட்டுந்தானே வெளிப்பட்டுக் காட்சி தருகிறது. எஞ்சிய நேரமெல்லாம் அது உறைக்குள்தானே ஒளிந்து கொண்டிருக்கிறது! இதை நோக்குமிடத்து, மறைந்திருந்து தாக்கும் பகையை வாளோடு ஒப்பிடுவதுதானே பொருந்தும்! வெளிப்படையான பகையை எவ்வாறு வாளோடு ஒப்பிட்டுள்ளீர்?”

புன்முறுவல் பூத்தவாறு வள்ளுவர் பதில் அளித்தார்.

“வாள் உறைக்குள் இருப்பினும், அது தன்னை முழுமையாக மறைத்துக் கொள்வதில்லை. வாளின் பெரிய பிடி, உறைக்கு வெளியேதான் தலையை நீட்டிக் கொண்டிருக்கும். வாளைப் போல அல்லாமல் தன்னை முழுவதுமாக மறைத்துக் கொண்டு, நண்பனாக உறவு கொண்டாடி, சமயம் பார்த்துத் தலையில் கல்லைத் தூக்கிப் போடக் கூடிய பகைவர்களும் இருக்கிறார்கள் என்பதற்காகவே, ‘வாள்’ போன்ற பகைவர்க்கு அஞ்சாவிட்டாலும், ‘கேள்’ போன்ற தொடர்பு கொண்ட பகைவர்க்கு அஞ்ச வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளேன்.”

வள்ளுவரின் பதில் மாணவரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.

ஆம்! உறைக்குள் இருக்கிற வாளை உருவி நம் மீது வீசலாம்! அல்லது உறையிலிருந்து விடுபட்டுக் கரத்தில் பிடித்துள்ள வாளும் நம் மீது எந்த நேரத்திலும் பாயலாம்! அதனை முன் கூட்டியே அறிய முடியும் என்பதால் அஞ்சத் தேவையில்லை. ஆனால் நம்மவராகவே பழகி, நட்புறவு கொண்டு, நாசம் விளைக்க நேரம் பார்த்திருப்போரின் பகைக்குச் சிறிதும் இடம் தராமல், அந்தப் பகைக்கு அஞ்சி முன் கூட்டியே பாதுகாப்பாக இருத்தலே சிறப்புடையதாகும்.

அதை அழகுறச் சித்திரிப்பதே இந்தக் குறள்:

வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல பகைவர் தொடர்பு

அதிகாரம் - 89 - உட்பகை; பாடல் - 882

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்