பொருளடக்கம் 10 / 300
அ. மதியும் மடந்தை / ஆ. தாம்வீழ்வார் மென்றோள்
அச்சுப் பக்கம் 37–38 · ஸ்கேன் 54–55 · அதிகாரம் 112 (நலம் புனைந்துரைத்தல்) — குறள் 1116; அதிகாரம் 111 (புணர்ச்சி மகிழ்தல்) — குறள் 1103
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காப்பக விவரிப்பு: Large colour illustration occupying the upper half: a couple seated closely together beneath a moon and stars, visually tied to the moon/maiden comparison in the prose.
வெள்ளிப் பாற்குடத்தின் வாய்போன்ற வட்ட நிலா. அல்லிக்குளமோ என ஐயுறும் வண்ணம் நட்சத்திர வானம். அவைகளைப் பற்றியெல்லாம் தேனிசை மீட்டிவிட்டு, உலகத்தையே மறந்து அசைவற்று இருக்கின்றன அந்த நல் யாழ்கள் இரண்டும். அந்த உயிர் யாழ்களின் கனவுலகத்தைக் கலைத்துவிடக் கூடாதேயென்ற பயத்தோடு, மென்காற்று அவர்களைக் கீழ் ஸ்தாயியில் தாலாட்டுகிறது.
வானத்தில் உள்ள விண்மீன்களோ, பெரியதோர் குழப்பமான ஆராய்ச்சியில் இறங்கிக் கலங்கித் திரிகின்றன. என்ன அந்த ஆராய்ச்சி?
தாங்கள் எங்கேயிருக்கிறோம் - நிலவு எங்கேயிருக்கிறது என்பதுதான் அவைகளின் ஆராய்ச்சியாகும்.
வானத்திலே உள்ள கண்ணாடியில்தான் இவள் முகம் தெரிகிறதோ, அல்லது பூமியில் உள்ள கண்ணாடியில்தான் நிலவு தெரிகிறதோ என வியக்கும் அளவுக்கு, நிலா முகம் படைத்த பேரழகி அவள்! ஆகவேதான் அவளுக்கும் நிலவுக்கும் வேறுபாடு தெரியாமல் விண்மீன்கள் கலங்கித் திரிகின்றன. அதற்கு இதோ குறள்:
மதியும் மடந்தை முகனும் அறியா பதியிற் கலங்கிய மீன்
இப்படி விண்மீன்களுக்கே கலக்கத்தை உண்டு பண்ணிய அந்தக் கட்டழகியின் தோளிலே ஒருவன் மெய்மறந்து சாய்ந்து கிடக்கிறான் என்பதைக் காணும்போது, இளம் உள்ளங்களில் பொறாமைத் தீயும் விழத்தான் செய்யும்! ஆனால், வள்ளுவர் உள்ளமோ அறிவு மணக்கும் அழகான கேள்வியொன்றை எழுப்புகிறது.
தான் விரும்பும் காதலியின் மெல்லிய தோளில் சாய்ந்திருந்து துயிலும் துயில்போல் இனிமை வாய்ந்ததா அந்தத் தாமரைக் கண்ணான் உலகம்?
இல்லை, இல்லை!
இதோ, குறளோவியம் காணுங்கள் :
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு
அதிகாரம் - 112 - நலம் புனைந்துரைத்தல்; பாடல் - 1116 அதிகாரம் - 111 - புணர்ச்சி மகிழ்தல்; பாடல் - 1103
காப்பக விவரிப்பு: Small decorative chariot/monument illustration centred in the lower half beneath the citation lines.
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்