பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 9 / 300

அற்றேமென்று அல்லல்

அச்சுப் பக்கம் 3536 · ஸ்கேன் 5253 · அதிகாரம் 63 (இடுக்கண் அழியாமை) — குறள் 626

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour illustration occupying the upper portion of the page; a standing richly dressed man greets a seated ascetic under a tree, visually accompanying the Ilango/Chenguttuvan narrative.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மூத்த மகன் செங்குட்டுவன்! இளைய மகன் இளங்கோ! ஒரு நாள் இமயவரம்பனின் கொலுமண்டபத்திற்கு வந்த நிமித்திகன் ஒருவன், செங்குட்டுவன் மூத்த மகன் எனினும் அவன் நாடாளும் வாய்ப்புக் கிடையாது என்றும் இளையவன் இளங்கோதான் முடி சூட்டிக்கொள்ள முடியுமென்றும் அழுத்தம் திருத்தமாக ஆரூடம் கணித்துச் சொன்னான். நிமித்திகனின் சொல்லைப் பொய்யாக்கிக் காட்டுகிறேன் என்று இளவரசன் இளங்கோ, அரண்மனையை விட்டு வெளியேறித் துறவுக்கோலம் பூண்டு குணவாயிற் கோட்டத்தில் இருந்தான்; செங்குட்டுவன் தங்கு தடையின்றி முடிசூடிக்கொள்ள வழிவகுத்துத் தந்தான்.

துறவுக் கோலத்தில் குணவாயிற் கோட்டத்தில் இருந்த இளங்கோ அடிகளை, இப்போது அவரது உற்ற நண்பர் ஒருவர் சந்திப்பதாகக் கற்பனை!

“என்ன இளங்கோ; இப்படிச் செய்துவிட்டாய்! கொடிபறக்கும் கொத்தளங்கொண்ட கோட்டையென்ன! முகில் தழுவ உயர்ந்து நிற்கும் கூட கோபுரமென்ன! அகிற்புகையால் மணங்கமழும் மாட மாளிகையென்ன! பாதம் நோகாமல் நடப்பதற்குப் பட்டு விரித்த தரைகள் என்ன! கூப்பிட்ட குரல் கேட்டுக் கும்பிட்டு ஓடிவரும் ஆள் அம்புப் பட்டாளமென்ன! நவமணிகள் பதித்த ஆடை அணிகலன்கள் என்ன! உனை நாயகனாக ஏற்க நயன மணிகள் போட்டியிட்டு நிற்ற காட்சி என்ன! ஒப்பம் வைத்து உறவு கொண்ட சிற்றரசர்கள் கட்டும் கப்பம் என்ன! ஓய்யார வாழ்வு! உல்லாசபுரி! உற்சாக நாட்கள்! இத்தனையும் இழந்துவிட்டு இப்படி ஏதுமற்ற துறவுக்கோலத்தில் இருக்கிறாயே; இப்படியொரு துன்பத்தை நீயாக ஏன் ஏற்றுக்கொள்ளவேண்டும்?”

உளம் நொந்து உருக்கமுடன் கேள்வி கேட்ட உற்ற நண்பருக்கு உடனடியாக விடையளித்தார் இளங்கோவடிகள்!

“நண்பரே! நீர் வர்ணித்த அத்தனை செல்வச் சிறப்புக்களையும்- நான் பெற்றிருந்தபோது, ஆகா! இத்தனை வளத்திற்கும் உரிமையுடையவனாக இருக்கின்ற பேறு பெற்றிருக்கிறேனேவென்றோ - அடடா இத்தனையும் பெற்றோமேவென்றோ - நான் ஒரு நொடிப்பொழுதுகூட எண்ணி அவற்றைக் காத்திட வேண்டுமென்று கருதியதில்லை! அப்படிக் கருதியிருந்தால்தான் அவற்றையெல்லாம் இழந்துவிட்டோமே என்ற துன்பம் துளைத்தெடுக்கும். நான் பெற்றிருந்த நிலையையும் - இழந்துவிட்ட நிலையையும் ஒன்றாகக் கருதுகிற காரணத்தினால் தான் - துன்பம் என் நெஞ்சைத் தொடுக்கூடப் பார்க்கவில்லை.”

இளங்கோவடிகளின் விளக்கம் கேட்டு அவர் நண்பர், அவரது காலடி வீழ்ந்து வணங்க முயன்றார். அவரைத் தடுத்துத் தழுவிக்கொண்டு அன்பினைப் பொழிந்தார் அடிகள்!

இதோ குறளடிகள் :

அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று ஓம்புதல் தேற்றா தவர்

அதிகாரம் - 63 - இடுக்கண் அழியாமை; பாடல் - 626

அற்றேம் = இழந்தோம் ஓம்புதல் தேற்றாதவர் = பாதுகாத்திட எண்ணாதவர்

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்