பொருளடக்கம் 8 / 300
அறத்தாறு இதுவென
அச்சுப் பக்கம் 33–34 · ஸ்கேன் 50–51 · அதிகாரம் 4 (அறன் வலியுறுத்தல்) — குறள் 37
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காப்பக விவரிப்பு: Large colour illustration above the prose showing bearers carrying a curtained palanquin along a road while two figures observe in the background.
சாலையில் பல்லக்கு ஒன்றைச் சிலர் தூக்கிக்கொண்டு நடந்தனர். பல்லக்கில் ஒருவர் சாய்ந்தவாறு, சாலையின் இருமருங்கிலுமுள்ள இயற்கைக் காட்சிகளைக் கண்டு களித்தவாறு பயணம் நடத்திக்கொண்டிருந்தார். கழுத்து வலியெடுக்கவும் கால் கொப்பளிக்கவுமான நிலையில், பல்லக்குத் தூக்கிகள் தங்கள் பணியினை ஆற்றிக்கொண்டிருந்தனர்.
இரண்டு முதியவர்கள் இந்தக் காட்சியை ஒரு மண்டபத்தில் இருந்தவாறு கண்டனர். அவர்களில் ஒருவர் தமிழ் நூல்களை நிரம்பப் படித்தவர். அவர் சொன்னார்: “பார்த்தீரா? இதுதான் பாவம் செய்த ஜென்மத்திற்கும் புண்ணியம் செய்த ஜென்மத்திற்கும் சரியான எடுத்துக்காட்டாகும்” என்று! அவருடன் இருந்த முதியவர் “எப்படி? எப்படி?” என்று ஆவலுடன் கேட்டார். தமிழ் படித்த முதியவர் கூறினார் விளக்கமாக:
“திருக்குறளில் வள்ளுவர் இதுபற்றி மிகச் சிறப்பாகச் சித்திரித்துள்ளார். அறத்தினால் ஏற்படும் பயன் என்னவென்று நூல்களைக் கொண்டு ஆராயத் தேவையில்லை. பல்லக்கில் செல்பவனையும் பல்லக்குத் தூக்குபவனையும் பார்த்தாலே அவர்களில் அறஞ்செய்தது யார் என்று புரிந்துவிடும். ஒருவர் செய்த அறத்திற்கு ஏற்ப அவர் பல்லக்கில் ஏறுகிறார். அறம் செய்யாதோர் பல்லக்கைச் சுமக்கிறார்.”
இவ்வாறு- படித்த முதியவர் விளக்கம் கூறிக் கொண்டிருந்தபோது, “என்னே, கொடுமை! என் குறளையே குழிதோண்டிப் புதைக்கிறீர்களே” என ஒரு குரல் கேட்டது. இரு முதியவர்களும் வியப்புடன் திரும்பிப் பார்த்தனர். வள்ளுவர் கண்கலங்கி நின்று கொண்டிருந்தார். முதியவர்கள் அவருக்கு வணக்கம் தெரிவித்தனர்.
பதிலுக்கு வள்ளுவர் அவர்களை வணங்கிவிட்டு, “நான் எழுதிய குறளுக்கு இப்படி ஒரு பொருந்தாத உரை கண்டது யார் என்றே எனக்குத் தெரியவில்லையே! முதியவர்களே! பல்லக்குச் சுமப்போரையும் பல்லக்கில் செல்வோரையும் வைத்து நான் பாடிய குறளுக்கு நீங்கள் உரைத்தது சரியான பொருள் அல்ல. பல்லக்கில் ஏறியவன் அறச்செயல் புரிந்தவன் என்றோ, பல்லக்கைச் சுமப்பவன் தீச் செயல் புரிந்தவன் என்றோ நான் கருத்தறிவிக்கவில்லை. அது அறிவுக்கு ஒவ்வாத ஒன்றாகும். அற வழியில் நடப்பவர்கள் பல்லக்கில் செல்பவனைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளிதாகக் கருதிப் பயணத்தைத் தொடர்வர். தீய நெறிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்குகிறவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல் அதேசமயம் துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவர். இவ்வாறு, அறச்செயலின் பயனுக்கு பல்லக்கில் செல்பவனையும் தூக்குபவனையும் உவமை காட்டினேனேயல்லாமல் அவரவர்களின் பாப புண்ணியங்களுக்கேற்ப பல்லக்குச் சுமப்போராகவும் பல்லக்கில் செல்வோராகவும் ஆகிறார்கள் என்று நான் குறிப்பிடவே இல்லை! என்னையும் என் குறளையும் உணர்ந்து கொள்ளாமல் தவறான எண்ணங்களை மக்களிடம் பரப்பாதீர்கள்” என்று உருக்கமுடன் கேட்டுக்கொண்டார்.
படித்த முதியவர், வள்ளுவரிடம் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டு- இனித் தன்னைத் திருத்திக் கொள்வதாகவும் கூறினார்.
“உம்மைத் திருத்திக்கொண்டால் மட்டும் போதாது; உரையையும் திருத்துக” என உரைத்து வள்ளுவர் அவர்களிடம் விடைபெற்றுச் சென்றார். அதற்குள் பல்லக்கு, வெகு தொலைவுக்குச் சென்றுவிட்டது.
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை
அதிகாரம் - 4 - அறன் வலியுறுத்தல்; பாடல் - 37
காப்பக விவரிப்பு: Small seated Thiruvalluvar monument illustration centred below the Kural/citation block.
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்