பொருளடக்கம் 7 / 300
உறாஅர்க்கு உறு நோய்
அச்சுப் பக்கம் 31–32 · ஸ்கேன் 48–49 · அதிகாரம் 120 (தனிப்படர் மிகுதி) — குறள் 1200
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காப்பக விவரிப்பு: Surreal colour illustration above the prose: a rounded heart-like, human-faced figure with thin arm/leg forms, set against blocks of blue sky/sea colour.
ஒரு நாள் கடற்கரையோரம் சென்று கொண்டிருந்தேன். ஒரு புதுமையான உருவம், கடலை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. வியப்பு மேலிட்டது எனக்கு!
ஓர் ஆணைப் போலவோ அல்லது பெண்ணைப் போலவோ அந்த உருவம் இல்லை. பறவையினம் போலவும் தெரியவில்லை. விலங்கினமாகவும் தோன்றவில்லை. எப்படியும் இந்தப் புதிருக்குக் விடை கண்டாக வேண்டுமென்ற அவா உந்தித் தள்ள, அந்த உருவத்தை நோக்கி வேகமாக நடந்தேன். அருகில் செல்லச் செல்ல அந்த உருவத்தின் முழுத் தோற்றப் பொலிவையும் என்னால் காண முடிந்தது. ஆமையைப் போன்ற வடிவத்தில் உடல். தலையென்று தனியாக இல்லை. ஆமை வடிவத்திலேயே கண், காது, மூக்கு, வாய் என்ற முகத்துக்குரிய உறுப்புக்கள் இருந்தன. கொடி போன்ற இரண்டு கால்கள்; கொடி போலவே இரண்டு கைகள்! திகைத்து நின்றேன். அந்த உருவம் என்னைப் பார்த்தது; ஆனால் நிற்கவில்லை. என்னதான் செய்கிறது பார்ப்போம் என அமைதியாக அங்கேயே நான் நின்று கொண்டிருந்தேன்.
அந்த உருவம், திடீரெனத் தனது கைகளை விரித்துக் கடற்கரை மணலை அள்ளியது! அள்ளிய மணலைக் கடலில் கொண்டுபோய்ப் போட்டது! மீண்டும் மீண்டும் அதே காரியத்தைச் செய்து கொண்டிருந்தது. மணலையள்ளி விளையாடுகிறதுபோலும் என்று முதலில் எண்ணிய எனக்கு அந்த உருவத்தின் செயல், பெரும் பிரச்சனையாகவே ஆகிவிட்டது! மணலை அள்ளுகிறது! கடலில் வீசுகிறது! சற்றுக் களைப்புற்று நிற்கிறது! மறுபடியும் மணலை அள்ளுகிறது! கடலில் தூவுகிறது.
துணிவை வரவழைத்துக் கொண்டு இன்னும் கொஞ்சம் நெருக்கமாகச் சென்றேன். உருவம், என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு மணலை அள்ளுவதற்குக் குனிந்தது.
“நீ யார்?”
இது என் கேள்வி!
“என்னைத் தெரியவில்லையா? நான்தான் இதயம்!” என்றது அந்த உருவம்.
“ஓகோ! இதயமா? உனக்குக் கால் கை முளைத்து, கண்ணும் மூக்கும் வந்துவிட்டதா? சரி! சரி! நீ யாருடைய இதயம்? ஆண்பாலா? பெண்பாலா?”
“என் கொடி நிகர்க் கால் கைகளைப் பார்த்தாலே நான் பெண் இதயம் என்று புரியவில்லையா?”
எனக்கு எல்லாமே புரிந்துவிட்டது! ஒரு பெண்ணின் நெஞ்சம், ஏதோ வேதனையின் காரணமாக இப்படி வெளியே வந்திருக்கிறது என்பதைத் தெளிவாக உணர்ந்துகொண்டேன். தொடர்ந்து கேள்வி கேட்டேன்.
“ஏ, பெண் நெஞ்சே! எதற்காக நீ மட்டும் தனியாக வந்திருக்கிறாய்?”
“இது என் தலைவியின் கட்டளை.”
“தலைவி உன்னைத் தனியாக அனுப்பினாளே? அனுப்பியது சரி! இந்த மணலையெடுத்துக் கடலில் போடச் சொன்னதும் உன் தலைவியின் கட்டளை தானோ?”
“ஆமாம்!”
“ஏன் இந்த வீண் வேலை உனக்கும், உன் தலைவிக்கும்?”
“என் தலைவி என்னைக் கூப்பிட்டாள். ‘அடியே! என் நெஞ்சமே! நீ, உன் மீது அன்பு இல்லாதவரிடம் உன் மிகுந்த துன்பத்தையும், பிரிவின் வேதனையையும் சொல்லிப் பயன் கிடையாது. அதைவிட எளிதான வேலை, மணலை அள்ளிப் போட்டு ஆழ்கடலைத் தூர்ப்பதாகும்! எனவே அந்த வேலையைச் செய்’ என்றாள். அதைத்தான் இப்போது செய்கிறேன்.”
இந்தப் பதிலைக் கேட்டதும் என் தலை சுற்றியது. அடடா! அந்தத் தலைவியின் துயரம் எத்தகையது? காதலனிடம் தன் வேதனையைச் சொல்லி, அவனைத் தன்பால் அன்பு கொள்ளச் செய்வதைக் காட்டிலும் கடலைத் தூர்ப்பது எளிதாம்!
விழித்துக் கொண்டேன்.
கனவு என்பது புரிந்தது.
என் நெஞ்சின் மீது கிடந்த திருக்குறள் சுவடியை உற்று நோக்கினேன். எந்தக் குறள் என்னை இந்தக் கற்பனைக் கனவுக்கு அழைத்துச் சென்றதோ, அந்தக் குறளை மீண்டும் ஒரு முறை படித்தேன்:
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு
அதிகாரம் - 120 - தனிப்படர் மிகுதி; பாடல் - 1200
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்