பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 27 / 300

இறந்தமைந்த சார்புடைய

அச்சுப் பக்கம் 7071 · ஸ்கேன் 8788 · அதிகாரம் 90 (பெரியாரைப் பிழையாமை) — குறள் 900

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour illustration above the prose showing an angry older-looking prince/ruler in front of assembled men, with another figure partly visible at right.

ஒரு நாட்டின் இளவரசன், தலைநகரத்துப் பொது மன்றத்தில் மிக்க துடிப்போடு உரை நிகழ்த்தினான். ஆட்சியில் அவன் தலையீடுபற்றி நாட்டில் எழுந்துள்ள அடுக்கடுக்கான கேள்விகளுக்கு அவன் பதில் சொல்ல வேண்டியிருந்தது. பதிலில் தெளிவோ உண்மையோ இல்லாத காரணத்தால், ஆத்திர உணர்ச்சி அலைபாய்ந்து கொண்டிருந்தது. அறிவுசான்ற பெரியோர்களை அவன் அலட்சியமாகப் பேசினான்; தொடர்ந்து பேசுகிறான். அனுபவமிக்க அமைச்சர்களை அவன் தனது அடிமைகளைப்போல நடத்துகிறான். அந்த ஆட்சிக்குக் கட்டுப்பட்டுள்ள குறுநில மன்னர்களை அவன் தனது எடுபிடிகளாக இருக்குமாறு உத்தரவிடுகிறான். இந்த இழிவு தரும் நடவடிக்கைகளையெல்லாம் வேறு வழியின்றி அமைச்சர்களும் குறுநில மன்னர்களும் பொறுத்துக் கொள்கிறார்கள். இளவரசனின் இத்தகைய அத்துமீறிய போக்கிற்குக் காரணம் அவனைச் சார்ந்துள்ள பாதுகாப்புகளேயாகும். ஆம்! பகைவர்கள் நுழையமுடியாத அளவுக்குப் பலமான அரண் இருக்கிறது. பெரியதோர் வலிமை வாய்ந்த படை இருக்கிறது. கருவூலம் கொள்ளாத அளவுக்குப் பொருள் குவிந்து கிடக்கிறது. பேரரசர்கள் சிலரின் நட்பும் அந்த நாட்டு அரசுக்கு இருக்கிறது. இத்தனையும் இருக்கும்போது யார் என்ன செய்ய முடியும் என்ற இறுமாப்பு இளவரசனுக்கு! இந்நிலை நீடிப்பது நாட்டுக்கும் அரசுக்கும் நல்லதல்ல என்று ஒரு பெரியவர் கூறினார். அந்தப் பெரியவர், தன் இளமைக்காலத்தில் அந்த நாட்டின் படைத்தளபதிகளில் ஒருவராக இருந்து இப்போது ஓய்வு பெற்றிருப்பவர். தளபதிகளில் ஒருவராக இருந்தபோது பகை நாட்டுடன் போரிட்டு, பிறந்த மண்ணைக் காப்பாற்றினார் அவர்.

அந்தப் போரில் அவர் தன் கைகளில் ஒன்றை இழக்க நேரிட்டது. எதிரிகளின் சிறையிலும் சில ஆண்டுகள் இருக்க நேரிட்டது. இப்படிச் சொந்தநாட்டு வெற்றிக்காகக் கடுந்தவம் ஏற்ற அந்தப் பெரியவர், இளவரசனின் போக்கிலே வெறுப்புக்கொண்டு, தான் ஓய்வு பெற்றிருப்பதையும் மறந்து ஓய்வின்றிப் பணியாற்றினார். அதனால் எழுந்த சீற்றத்தால் இளவரசன், பொதுமன்றில் கூடியிருந்த மக்களிடம், அந்தப் பெரியவர் குறித்து மிகக் கீழான முறையில் உரை நிகழ்த்தினான். குடிமக்களுக்கு இளவரசனின் போக்கும் பேச்சும் கிஞ்சிற்றும் பிடிக்கவில்லை. அவற்றை அவர்கள் வெறுப்பதைக் காட்டிக்கொண்டு பொது மன்றத்தைவிட்டு வெளியேறத் தொடங்கினர். அந்த அவமானத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத இளவரசன், குடிமக்களின்மீது போர் வீரர்களை ஏவினான். குடிமக்கள் எலும்பு நொறுங்கத் தாக்கப்பட்டார்கள்; சிலர் உயிரையும் இழந்தனர். அந்தச் செய்தி பெரியவருக்கு எட்டியது. பொறுமையின் உறைவிடமாக இருந்த அவர் வெகுண்டு எழுந்தார். குடிமக்கள் கொடுமைப்படுத்தப்படும் இடம் நோக்கி நடந்தார். குருதி வெள்ளம் பெருக்கெடுக்கும் அந்தப் பொதுமன்றத்தருகே சென்றார். ‘அய்யோ! அய்யோ!’ என ஓலமிட்டவாறு ஓடிக்கொண்டு இருக்கும் மக்களைப் பார்த்து அவர் கூறினார்:

“உங்களுக்கு இருப்பது ஒரு உயிர்தானே! அது போகப்போவதும் ஒரு முறைதானே! அதற்குள் ஏன் இப்படி அஞ்சிச் சாகிறீர்கள்? அநியாயத்தை எதிர்த்து நில்லுங்கள்! வாருங்கள். அடிபடும் உங்களுக்கு நான் தலைமை வகிக்கிறேன். இனி விழுகிற அடிகள் அத்தனையும், என்மேல் விழட்டும்.”

அடிபட்டுக் கொண்டிருந்த மக்கள் நிமிர்ந்து நின்றனர். ஓடியவர்கள் திரும்பி வந்து அவர் பின்னே அணி வகுத்தனர். மக்கள் கடல் உருவாகியது. அதன் கொந்தளிப்பு வெளியே தெரியவில்லை. குமுறலும் கொந்தளிப்பும் அவர்களின் உள்ளத்திலே இருந்ததை அவர்களின் விழிகள் காட்டிக் கொண்டிருந்தன.

பெரியவர் தலைமையில் அந்தப் பேரணி, இளவரசன் நின்ற இடத்தை நோக்கி நகர்ந்தது. ஓங்கிய கைகளுடன் இருந்த வீரர்கள் திகைத்துப்போய் ஒதுங்கி நின்றனர். பெரியவர், இளவரசனின் முன்னே மிக நெருக்கமாக வந்து விட்டார். அவர் முகம் எழுஞாயிறு போலச் சிவந்திருந்தது. அவர் பின்னே வந்த மக்களின் முகமும் அவ்வாறே!

நிலைமை மோசமாகிவிட்டதை உணர்ந்த இளவரசன், அந்த இடத்தை விட்டு ஓடத் தொடங்கினான். பெரியவரின் நெஞ்சு உறுதியின் முன்னே அவனால் நிற்க முடியவில்லை; அவன் படையும் செயலிழந்தது; அரணும் அவனுக்குக் கை கொடுக்கவில்லை; நட்பு அரசுகளும் துணை புரியவில்லை; கருவூலத்துப் பெரும் பொருளும் அவனைக் காத்திடவில்லை. அவன் தன்னைத்தானே நாடு கடத்திக் கொண்டான். சிறப்புடைய பெரியவர்கள் சீற்றம் கொள்வாராயின் அரண், படை, பொருள் போன்ற அளவுகடந்த சார்புடையவர்களானாலும் அவர்களால் அந்தப் பெரியவர்களின் சீற்றத்திற்கு எதிராகத் தப்பிப் பிழைக்க இயலாது என்பதையே இது விளக்குகிறது.

இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார் சிறந்தமைந்த சீரார் செறின்.

அதிகாரம் - 90 - பெரியாரைப் பிழையாமை; பாடல் - 900

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்