பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 4 / 300

அ. ஒருமைக்கண் தான்கற்ற / ஆ. ஓர்த்துள்ளம் உள்ளது

அச்சுப் பக்கம் 2425 · ஸ்கேன் 4142 · அதிகாரம் 40 (கல்வி) — குறள் 398; அதிகாரம் 36 (மெய்யுணர்தல்) — குறள் 357

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour illustration above the prose: a reader with an open book radiating light, surrounded by books and scroll-like forms.

ஒருவனுடைய ஆற்றலைப் புகழும்போது “இவனை வெல்ல உலகத்திலேயே யாரும் இல்லை” என்கிறோம். நமக்கு அந்த ஊர் அளவுக்குத்தான் தெரியும். உலகில் அப்படி ஒரு ஆற்றலாளன் இருக்கிறானா; இல்லையா என்பது தெரியாது! இருந்தாலும் இவனைப் போற்றும்போது உலகையே எதிர்நிறுத்தி மிகைப்படக் கூறுகிறோம்.

ஆற்று வெள்ளத்தில் மூழ்கித் தப்பித்து விடுகிறான் ஒருவன். அவனைப் பார்த்து, “இனிமேல் உன்னை இமயமலையிலேயிருந்து உருட்டிவிட்டாலும் சாக மாட்டாய்!” என்கிறோம். அவன் ஆற்றில் மூழ்கிச் சாகாமல் பிழைத்துக் கொண்டதை அப்படிப் பாராட்டுகிறோமே தவிர, அவனை மலையிலிருந்து உருட்டினால் சாகமாட்டான் என்பது நமக்கு எப்படித் தெரியும்! இருந்தபோதிலும் அவனது உயிரின் வலிமையை மிகைப்படுத்திக் கூறுகிறோம்.

இப்படி மிகைப்படுத்திக் கூறும்போது - நம்முடைய கருத்துக்கு ஏதாகிலும், நாமே நம்பிக்கை கொள்ளாததுமான சிலவற்றைக்கூட நாம் சிறப்பாகக் கையாளுகிறோம்.

“அவன் உனக்குச் செய்திருக்கிற உதவிக்கு நீ ஏழு ஜென்மம் எடுத்தால் கூட அவனுக்கு நன்றி தெரிவித்து மாளாது!”

இப்படிக் கூறும்போது, நாம் ஏழு ஜென்மங்களை ஒத்துக் கொள்வதில்லை! அதாவது மறுபிறவியையே ஒத்துக்கொள்வதில்லை! இருந்தாலும் மிகைப்படுத்திக் கூறிவிடுகிறோம்.

மனிதன் தீவினைகளில் ஈடுபடாமல் தடுத்திடவே, மறுபிறவி என்ற பயம் காட்டப்பட்டது என்பது தெளிவு!

இந்த நிலை, வள்ளுவர் காலத்திலும் இருந்திருக்கிறது! அதனால்தான் கல்வியின் சிறப்பைக் கூறவந்தவர், அதன் தேவையை எல்லை கடந்து புகழ்ந்திருக்கிறார்.

“ஒரு பிறப்பில் கற்றுக்கொள்கிற கல்வியானது, அப்பிறப்பிற்கு மட்டுமின்றி, ஒருவனுக்கு ஏழு பிறப்பிலும் உதவும் தன்மையுடையதாகும்.”

“தம்பி! நீ படிக்கிற படிப்பு உனக்கு ஏழு ஜென்மத்துக்குப் பயன்படும்!”

ஓர் இளைஞனைப் பார்த்து இப்படிச் சொன்னால் - அந்தக் கருத்தின் அழுத்தம் கல்விக்குத் தரப்படுகிறதே தவிர, ஏழு பிறவிகளுக்கு அல்ல என்பதை உணர்தல் வேண்டும்.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து.

ஒரு பிறப்பில் கற்ற கல்வி, ஏழு பிறப்பும் பயன்படும் என்கிறார்! இது கல்வியின் பெருமையை மிகைப்படுத்தலேயன்றி ஏழு பிறப்பை ஒத்துக்கொண்டதாகாது.

உலகில் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் இளந்தளிர்களாகிப் பள்ளிக்குச் சென்றே கல்வி பயிலுகின்றன! முற்பிறப்பில் கல்வியே கற்காத குழந்தைகளா அத்தனையும்? முற்பிறப்பு என ஒன்றிருந்து, அப்போது கல்வி கற்றிருந்தால், இப்போது கற்கத் தேவையில்லையே!

வள்ளுவர் காலத்திலும் நம்பப்பட்ட ஏழு பிறவிகளை - அல்லது மறு பிறவியை - அவர், கல்வியின் சிறப்புக்காக எடுத்துக் கையாண்டுள்ளார் - அவ்வளவே!

“கல்வி”யெனும் அதிகாரத்தில் இவ்வாறு குறிப்பிடும் வள்ளுவர், “மெய்யுணர்தல்” எனும் அதிகாரத்தில் “பிறவிகள்” குறித்து என்ன கூறுகிறார்?

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு

உள்ளமானது உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால் - மீண்டும் பிறவி உள்ளதென எண்ணவேண்டாம்.

உள்ளம் தெளிவுபெற்று உறுதியாக இருந்தால் - பிறப்பு மீண்டும் உண்டு என நினைக்கவே தேவையில்லை என்கிறார்.

உள்ளம் தெளிவுபெற்று உறுதியாக நிலைக்கக் கல்வி தேவை! ஆம்; உள்ளத் தெளிவு எது என்பதை விளக்கி அறிவிக்கவும் ஒரு கல்வி உண்டன்றோ! அந்தக் கல்வி தேவை!

கல்வி கற்றாலே; அது ஏழு பிறவிக்கும் பயன்படும்!

கற்றிடும் கல்வி, உள்ளத்தில் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதி விளக்கைக் கொளுத்தி வைத்திடுமேயானால் - மீண்டும் பிறப்பு உண்டு என்ற எண்ணமே வேண்டாம்! ஆம்! அந்த எண்ணமே எழாது!

“ஏழு பிறவி” என்ற கருத்தைப் பயன்படுத்தியது, கல்வியின் பெருமையைக் கூறுவதற்காகவே!

உண்மைப் பொருளை ஆராய்ந்திட உறுதியான உள்ளம் தேவையென்பதை வலியுறுத்துவதற்காகவே - அத்தகையோர்க்கு “மீண்டும் பிறப்பு” இல்லையென்று திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார்.

மெய்யுணர்தலின் வலிமையையும் - கல்வியின் பெருமையையும் - மிகைப்படக் கூறியேனும் மக்களுக்கு உணர்த்திட வேண்டும் என்ற வள்ளுவரின் அவாவே இந்த இரு குறட்பாக்களின் வாயிலாக வெளிப்படுகிறது.

அதிகாரம் - 40 - கல்வி; பாடல் - 398 அதிகாரம் - 36 - மெய்யுணர்தல்; பாடல் - 357

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்