பொருளடக்கம் 5 / 300
அ. இருநோக்கு இவளுண்கண் / ஆ. யான்நோக்குங்காலை
அச்சுப் பக்கம் 26–27 · ஸ்கேன் 43–44 · அதிகாரம் 110 (குறிப்பறிதல்) — குறள் 1091, 1094
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காப்பக விவரிப்பு: Large colour illustration of a couple embracing on a bed, directly above the prose that introduces the lover/beloved gaze metaphor.
வைத்தியர் ஊசி குத்துகிறார்; உடலில் வலி ஏற்படுகிறது. ஆனால், அந்த ஊசி வழியே உடலுக்குள் செல்கிற மருந்து, நோய் தீர்க்கப் பெரிதும் உதவுகிறது. வைத்தியரிடம் வேதனை தரும் ஊசியும் இருக்கிறது; நோய் வேதனையை நீக்கும் மருந்தும் அதனுள் இருக்கிறது!
இங்கே திருவள்ளுவர் ஒரு வைத்தியரைக் குறள் மூலம் அறிமுகப்படுத்துகிறார்! பாருங்கள். அழகி, அழகனைப் பார்க்கிறாள். அந்தப் பார்வையை அவன் வர்ணிக்கிறான். இந்த அணங்கு இரு பார்வையுடையவள்; ஒரு பார்வையால் அவனுக்கு வேதனை உண்டாக்குகிறாள். அடுத்த பார்வையால் அந்த வேதனையைப் போக்குகிறாள். இந்த விசித்திரமான மருத்துவப் பெண்மணியின் பார்வைச் சிறப்பை வள்ளுவர் வாய்மொழியாகவே கேளுங்கள்:
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன்று அந்நோய் மருந்து
அப்படி அவள் பார்க்கிறாளே என்பதற்காகப் பருவ இளைஞன் வாளாவிருந்து விட்டானா? அவனோ ஒரு வம்புக்கார வாலிபன் போலும். காதல் மயக்கத்தில் என்னென்ன சொல்கிறான் பாருங்கள்:
“நான் அவளைப் பார்க்கும்போது அவள் என்னைப் பார்க்காமல் நிலத்தை நோக்குகிறாள். நான் அவளைப் பாராதிருக்கும்போது அவள் என்னைப் பார்த்து மகிழ்கிறாள்” என்று கூறுகிறான். இது எவ்வளவு பெரிய பொய் தெரியுமா?
“நான் அவளைப் பாராதிருக்கும்போது அவள் என்னைப் பார்த்து மகிழ்கிறாள்” என்கிறானே - இவன்தான் அவளைப் பார்ப்பதில்லையே; அப்படி இருக்கும்போது அவள் இவனைப் பார்ப்பது மட்டும் இவனுக்கு எப்படித் தெரிந்தது? அதேபோல் இவன் அவளைப் பார்க்கும்போது அவள் நிலத்தை நோக்குகிறாளாமே; அது எப்படி? இவனைப் பார்த்துவிட்டுத்தானே அவள் தனது பார்வையை வேறு பக்கம் திருப்ப வேண்டும்?
இந்தப் பார்வைக்குத்தான் ‘பார்க்காமல் பார்க்கும் பார்வை’ என்று பெயர் போலும்! இத்தகைய நிகழ்ச்சியால், வள்ளுவர் எதை விளக்குகிறார் தெரியுமா? காதலன் கூறும் பொய்யை மட்டுமல்ல; அவர்கள் கண்களை வேறு பக்கம் திருப்ப அவர்களே முயன்றாலும் அது முடியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள் என்பதைத்தான் சொல்லாமல் சொல்கிறார் செந்நாப் போதார். இதோ அந்தக் குறளோவியம்:
யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும்
அதிகாரம் - 110 - குறிப்பறிதல்; பாடல்கள் - 1091, 1094
‘மெல்ல நகும்’ - உள்ளுக்குள் மகிழ்ச்சியடைவாள்.
காப்பக விவரிப்பு: Small seated-sage illustration centred in the lower portion beneath the Kural metadata.
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்