பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 3 / 300

குழலினிது யாழினிது

அச்சுப் பக்கம் 2223 · ஸ்கேன் 3940 · அதிகாரம் 7 (மக்கட்பேறு) — குறள் 66

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Colour illustration of a smiling woman and man with a child between them; a large yaazh and bow-like playing implement occupy the foreground.

“என் வாழ்க்கைத் துணைவி, வார்த்தெடுத்த தங்கப்பதுமை. இல்லறத்து முல்லைக்கொடி. தாமரை மலர்மீது இரு வண்டு அமர்ந்தாற்போல் அவள் விழிகள். கோத்துவைத்த முத்துமாலை அவள் சிரிப்பு. இத்தனை உயர்வுடையாள் யாழெடுத்து மீட்டிவிட்டால் இத்தரையினிலே யாருமில்லை என்பேன்.

“தெங்கின் இளம்பாளை சுவைத்துவரும் தென்றல் உடலில் மோதும். அதை அந்த யாழ் வெல்லும் - என் துணைவி மீட்டுகின்ற யாழ் வெல்ல, இவ்வுலகில் யாருண்டு? எங்குமில்லை?

“குயிலோசை கேட்டதுண்டு. கோதை நான் மீட்டுகின்ற யாழோசை எனக்கே தெவிட்டியதுண்டு; என் கொழுநன் வழங்குகின்ற அந்தக் குழலோசை சேர்த்த இன்பம் பேரின்பம் என்பேன்! கூதிர் காலம் கொட்டுகின்ற பனிக் காற்றில் குளிரில்லை; என் கோமான் ஊதுகின்ற குழலோசை குளிர் வெள்ளம்!”

“சத்துள்ள முத்தமிழ்க் குவிகின்ற இதழ்பொருத்திக் குழலூதும் அவரை வெல்லக் கத்துகடல் சூழ்கின்ற இப்புவியில் யாருமில்லை - எங்குமில்லை!

யாழ் மீட்டும் துணைவி - குழலூதும் துணைவன் - ஒருவரையொருவர் புகழ்ந்தனர். வாழ்த்தினர். குழலையும், யாழையும் வெல்லக் குவலயத்தில் எதுவுமில்லையென்ற நினைப்போடு இருவரும் தழுவினர். பின் தம்மை மறந்தனர்.

குழல் இனிதா? யாழ் இனிதா? இரண்டையும்விட இனியது ஒன்றிருக்கிறது எனக் கண்டனர். அப்போதே அல்ல; ஓரிரு ஆண்டுகள் ஓடியபின்!

இரு மலர் - ஒரு மொட்டு என்று ஆகிவிட்டது குடும்பம்-

அன்புச் சின்னம் - அழகின் பெட்டகம் - அழித்தெழுதாச் சித்திரம் - அவர்கள் வீட்டில் நடமாடுகிறது.

தன் சிறு கையால் கூழை அள்ளி அமிழ்த்தினும் இனிதாகுகிறது. தன் மெய் தீண்டிய பெற்றோர்க்கு உடற்கின்பம் அளிக்கிறது.

‘இதோ உங்களிருவரின் குழலையும் யாழையும் வெல்லுகின்ற மழலை மொழி’ என அறைகூவல் விடுக்கிறது.

முற்றாத இதழ்களிலேயிருந்து முதிராத சொற்கள் உதிரும்போது, யாழெங்கே - குழலெங்கே - அனைத்தும் இந்த மழலைக்குப் பிறகுதான் என்று முடிவு கட்டுகின்றனர், துணைவனும் துணைவியும்.

இந்த இன்பத்தைத்தான் வள்ளுவர் இரு வரிகளில் எழுதிக் காட்டுகிறார்.

குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்

அதிகாரம் 7 - மக்கட்பேறு; பாடல் - 66

காப்பக விவரிப்பு: Small decorative chariot/monument illustration centred in the lower portion of the page.

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்