பொருளடக்கம் 2 / 300
அ. காலை அரும்பி / ஆ. அழல்போலும் மாலைக்கு
அச்சுப் பக்கம் 20–21 · ஸ்கேன் 37–38 · அதிகாரம் 123 (பொழுதுகண்டு இரங்கல்) — குறள் 1227, 1228
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காப்பக விவரிப்பு: Colour illustration of a pensive woman among flowers with a flute-playing man behind her against a warm sunset backdrop.
மாலை நேரத்திலே - சோலை ஓரத்திலே - வேலை நிறுத்த விழியினர் காதல் பயில்வர். அதுபோல் ஆலையிட்ட கரும்பென அவதிப்பட்டு உழல்வர் ஆளன் அருகிலா மாதர். அந்திவானத்தில் அழகு காண்பார் - அதனோடு தன் இதழை ஒப்பிடும் அழகன் அங்கு வரவில்லையே என அயர்வார். தென்றல் அவர்தம் ஆடை நகர்த்தும். அதற்கு வாழ்த்துக் கூறித் தம்மைக் கேலி செய்யும் இன்பலோக ஏந்தல் இன்னும் வரக் காணோமே என விம்முவார். பூங்கொம்பு மலரிதழைத் திறப்பதற்கு முன்பே தேன்வண்டு பறந்து வரும் தன்மை காண்பார். “வண்டு தழுவும் மலர் பார் கற்கண்டே! என இன்பம் மொண்டு தரும் என் துரையை இன்னும் காணோமே?” என ஏங்குவர். மனம் வீங்குவர். மாலைப் பொழுது, அவர்தம் நெஞ்சில் படை
கொண்டு தாக்குவது போல் தோன்றும் - இன்பம் தரவல்ல காதலையே நோயென்று கூறுவர். அந்த மனோநிலையைத்தான் வள்ளுவர் அழகாகக் கூறுகிறார்.
காலைப் பொழுதிலே அரும்பாய்த் தோன்றி, பகலெல்லாம் பேரரும்பாகத் தழைத்து, மாலையில் மலராக மாறுகிறது இந்தக் காம நோய்; அதற்கு இதோ குறள்:
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந் நோய்
அந்நோய் மலருகிற மாலை நேரம் எப்படி இருக்கிறது தெரியுமா மங்கைக்கு? அவளைக் கொல்ல வருகிற சேனையானது, நெருப்புப்போல் உள்ள மாலை நேரத்திற்குத் தூதாக வருகிறது.
“கொல்லும்படி; அழல்போலும் மாலைக்குத் தூதாகி” என்கிறார். அது மட்டுமா?
மாலை நேரத்திலே ஆயன் குழலூதிக் கொண்டிருக்கிறான். குழலிலேயிருந்து இனிமை அருவியெனக் கொட்டுகிறது, தென்றலுக்கே இன்பம் சேர்க்கிறது, அந்த இசை! அசைந்தாடும் மலர்க் கொத்துக்கள், குழலிசைக்கு அபிநயம் காட்டுவதுபோல் காட்சி தருகின்றன. குழலோசை, நாகத்தையும் மயங்க வைக்கும் என்பார். அந்தக் குழலோசையைப் பற்றிக் காதலனைக் காணாக் கட்டழகி என்ன கூறுகிறாள் தெரியுமா? “என்னை வருத்தும் சேனை, மாலைக்குத் தூதாக மட்டுமல்ல - ஆயன் குழலாகவும் வருகிறது போலும்!” என்று புலம்புகிறாள்.
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை
அதிகாரம் 123 - பொழுதுகண்டு இரங்கல்; பாடல்கள் 1227, 1228
காப்பக விவரிப்பு: Small Thiruvalluvar statue illustration centred in the lower portion of the page.
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்