பொருளடக்கம்

2. புரட்சி வளர்ந்த கதை

கட்டுரை 2 / 10

புரட்சி வளர்ந்த கதை

The Story of How the Revolution Grew

அச்சுப் பக்கம் 10–14

scan 10 (the article opening) shows no printed numeral

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

மேதினம்! தொழிலாளர் வாழ்வை வதக்கி அவர்கள் எலும்புகளை மென்றுதின்று தங்கள் மேனியை மெருகேற்றிக் கொண்ட முதலாளி வர்க்கத்தின் மென்னையை இறுக்கிக் கொன்றவரின் கொண்டாட்டம். பீட்டர்ஸ்பர்க் நகரத்துப் பாட்டாளி மக்கள் பசியெனக்கதறியதற்காக அவர்களை ரத்தத்தில் மிதக்க விட்டு கோரச் சிரிப்பு சிரித்த கோமான்களின் குரல்வளையை அமுக்கியவர்களின் குதூகல விழா.

மலைப்பாம்பினுங்கொடிய மதம் மாய்ந்தது மக்களின் வாழ்வைக் குடித்து ஏப்பமிட்ட பணக்காரப் பேய்க்கும்பலின் ‘பவிசு’ குறைந்தது...கஷ்டப்பட்டதை—கண்ணீர் விட்டதை—கலங்கி நின்றதை—கதியிலை எனக் கதறியதை கண்ணெடுத்தும் பாராமல் கற்களாய் நின்று அறிவைக் காவுகொண்ட கடவுள் கூட்டத்தின் வம்சம் பூண்டற்றுப் போனது—என்ற மகிழ்ச்சியை நரம்புகளில் ஏற்றிக்கொண்டு இரஷ்யப் பாட்டாளி மக்கள்—ஏன் உலகப் பாட்டாளி மக்கள் மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் பிணமாக வீற்றிருக்கிற மாவீரன் இலெனினை நினைத்துக்கொண்டு வீரநர்த்தனம் புரிகின்ற வெற்றி விழா!

மனித சாதியின் உயர்வுக்கே ஏணியாக—வாழ்வுக்கு வழிகாட்டியாக—அமைந்தது மே தினம்.

1917 மார்ச் மாதம் 8-ம் நாள் புரட்சி உருவாயிற்று இரஷ்யாவில்! பீட்ரோகிராட் நகரில் உள்ள நெசவுத் தொழிலாளப் பெண்கள் புரட்சி பவனி நடத்தினர். 1917 நவம்பர் 7-ம் நாள் சோவியத் அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இலெனின் அமைச்சர் குழுவின் தலைவன். புரட்சிகளுக்கெல்லாம் வித்தாக இருந்தது ஒரு தியாகியின் புன்னகை. 1905ல் அடக்கு முறை தாங்கமாட்டாமல் துடித்தெழுந்த ஒரு இளைஞன், நிக்கோலாஸ் மன்னனின் நெருங்கிய உறவினனான உயர்தர இராணுவ உத்தியோகஸ்தன் செர்கியஸ் கோமகனை பட்டப்பகலில் கொன்று குவித்தான். கொலை செய்தவன் நிலை குலைந்து ஓடவில்லை. சமுதாயத்திற்குத் தேவையான ஒரு காரியத்தை செய்ததாகவே எண்ணினான்.

போலீஸ் அதிகாரிகள் அந்தக் கொலைகாரனிடம் ஏதாவது வாக்கு மூலம் வாங்கிவிடவேண்டுமென தலைகீழாய் நின்று பார்த்தார்கள். ஒரு எழுத்து கூட எழுதிக்கொள்ள முடியவில்லை எப்படியும் சாகப் போகிறோம் என்ற நெஞ்சுரம் அவனை ஊமையாக ஆக்கிவிட்டது, மௌனமாகவே இருந்தான். தூக்கு மேடையிலே நிறுத்தப்பட்டான். “கொலைகாரனே ! உன் உயிரைக் குடிக்கப் போகிறேன்” என்று கும்மாளம் போட்டது தூக்குமேடை. அப்பொழுது தான் அவன் உதடுகள் அசைந்தன. பேசுவதற்கல்ல புன் சிரிப்புக்காக ! அந்தப் புன்சிரிப்பிலே எவ்வளவு பெரிய பயங்கரமான புரட்சிப் பொறி பறந்தது தெரியுமா ?

செர்கியஸ் கோமகனை சாக அடித்தான். தான் சாவதற்கு சிரித்தான். சமுதாயம் தன்னைமறவாது...என்ற திருப்தி—இரஷ்ய வரலாறு தன்னை ஒதுக்கிவிடாது

என்ற நம்பிக்கை—இவைதான் அந்த வாலிபனின் இதழோரப் புன்னகை. சாவின் சிரிப்பு !

அந்த சிரிப்பு மறைவதற்குள் நாட்டிலே வேலை நிறுத்தங்கள் எழுந்தன. வேலை நிறுத்தத்திற்கு ஜார் அரசாங்கத்தால் வேட்டு வைக்கமுடியவில்லை. அரசாங்கம் திணறியது. எட்டுமாத காலம் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக வாழ்ந்தது. ஜப்பானுடன் சமர் செய்த இரஷ்யா சரண் புகுந்த வேளையது. ஜனசமுதாயம் ஜார் ஆட்சியைக் காரி உமிழ்ந்தது. புரட்சி வளர்ந்தது. 1906 ம் ஆண்டில் ‘டூமா’ கூடிற்று. சீர்திருத்தங்கள் சில செய்ய அந்த ‘டூமா’ விரும்பியது டூமாவின் சிருஷ்டிகர்த்தா ஜார்!...சிருஷ்டி கர்த்தாவே டூமாவை சிதைத்தான். காரணம்; அது நல்லவை செய்ய எண்ணியது தான். டூமா என்றால் ஜனப்பிரதிநிதி சபை என்று பொருள். இது ஜாருக்கு பிடித்திருந்தால் லெனின் பிறந்திருக்க வேண்டியதில்லை. 1907-ல் டூமாவுக்கு தேர்தல் நடைபெற்றது, ஜாரின் வால் பிடிப்போர் வெற்றி பெற்றுங்கூட...அவர்கள் வாயிலும் தப்பித்தவறி நல்ல பேச்சுக்கள் வந்துவிட்டன, இரண்டாவது டூமாவும் இறந்தது. இல்லை...சாக அடிக்கப்பட்டது, ஜாரால்!

வயது வந்த எல்லோருக்கும் ஓட்டுரிமை இருப்பது ஜாருக்கு பிடிக்கவில்லை. மேல் அந்தஸ்தினருக்கே ஓட்டுரிமை அளித்து மூன்றாவது டூமாவுக்கு தேர்தல் நடத்தினான். அது ஐந்து ஆண்டுகள் உயிரோடிருந்தது. 1912-ல் நான்காவது டூமாவின் தேர்தல். அது முதல் ஜார் ஆட்சியின் அடிபீடம் ஆடத்தொடங்கிற்று.

அரசன், அறிவை விலை கேட்பவன். ஆண்மை எந்தக் கடையில் விற்கும் என விசாரிப்பவன். ஆனால், அக்கிரமத்தின் மொத்த வியாபாரியாக விளங்கினவன் • தன்மனைவியின் தளிர்க்கரங்களே அவனுக்கு செங்கோல் !....அவளது அந்தப்புறமே அவனுக்கு சபாமண்டபம். லீலா விநோதங்களே’ அவனுக்கு சட்டபுத்தகம். மதுவுண்ட மந்தியை தேள் தீண்டிடுவதுபோல் ரஸ்புடீன் என்ற மதவாதி அவனை நெருங்கினான். ரஸ்புடீன்-ஜாரின் மனைவி இருவரும் கிழித்த கோட்டை ஜார் தாண்டுவதில்லை, இரஷ்யாவின் மங்கையற்கரசியும்—குலச் சிறையுமானார்கள் அவர்கள் !....ஜார் சாய்ந்ததற்கு இவர்களே பூகம்பமாயினர். கொடுமை தாண்டவமாடிற்று. அணையப்போகும் விளக்காக ஆயிற்று அது!....போல்ஷ்வெக்கர் கட்சியினர் தூக்கில் தொங்கினார்கள். புரட்சி புகைய ஆரம்பித்தது. அது எரிமலை என்பதை அந்த ஏமாளி மன்னன் உணரவில்லை. அதே நேரத்தில் 1914 வந்தது. உலக மகாயுத்தத்தின் கோரைப் பற்கள் நீட்டப்பட்டன. கூரிய நகங்கள் எட்டிப்பார்த்தன. போரில் கலந்து கொண்ட இரஷ்யா 1915-ல் டான்னென்-பெர்க்கில் ஜெர்மானியரிடம் படுதோல்வி கண்டது துவண்டு போன மன்னன் ஒரு புது மந்திரி சபை அமைக்க எண்ணினான். அந்த எண்ணத்தை வளர விடாமல் தீய்த்து விட்டனர், மன்னன் மனைவியும்—மாபாதகன் ரஸ்புடீனும் !

1916-ல்......மன்னர் குடும்பத்தில் மற்றொரு கொலை. 1905-ல் தூக்கு மேடையில் சிரித்தானே ஒரு சிங்கக்குட்டி...அவன் சிரிப்பின் எதிரொலி......1916-ல் ரஸ்புடீனை

சுட்டுக்கொன்றது. அடக்கு முறை குமுறிற்று. புரட்சியும் கொந்தளித்தது.

போர் முனையிலே ஜார் ! இங்கோ புரட்சிக்கொடியை பெண்கள் பறக்கவிட்டனர், 1917 மார்ச் எட்டாம் நாள் !

ரஷ்ய தலைநகரம் ‘கிடுகிடு’ வென நடுங்கிற்று. யுத்தகளத்திலிருந்த படியே உத்திரவிட்டான் ஜார், ‘சுட்டுத் தள்ளுங்கள்’ என்று !

யார் யாரைச்சுடுவது? எரிமலைகள் பொங்கி வழியும் போது அதை எதிர்க்க எண்ணெய்க் கிணறுகளா? தானே நேரில் புறப்பட்டான் ஜார் ! அவன் வந்த புகைவண்டிக்கு பாதை கிடையாது, நாடாண்ட மன்னாதி மன்னனின் கதி...இதுவென ஏங்கினாள் ஜாரின் மனைவி. காடாளும் காண்டா மிருகமவன் என கர்ச்சனை புரிந்தது மக்கள் உள்ளம். ஜனப்பிரதிநிதி சபையின் அவசரக்கூட்டம் கூடியது. புரட்சியை அடக்க ஒரேவழிதான் தெரிந்தது அவர் கட்கு! அது தான் “ஜார் அரசனின் முடிதுறப்பு வைபவம்”

ரோமனால் அரச வம்சத்திற்கே அன்றுதான் முடிதுறப்பு விழா. முதலாளி—மதவாதி வர்க்கத்திற்கே அன்று இரஷ்யாவில் இடுகாடு கட்டப்பட்டது, புதிதாக ! சாகாவரம் பெற்றிருந்த முதலாளி மதவாதிக் கூட்டங்கள் சிரஞ்சீவிப் பட்டத்தையிழந்து சிதையில் ஏற்றப்பட்டன. அந்தக் கொடுங்கோலர் கூட்டத்தின் உயிர்த்தோழனான கடவுளீயம் “சிதையே சிதையே” என்று பாடிற்று.

புரட்சி அடங்கிற்று. மழை ஓய்ந்தது: தூறல் நிற்கவில்லை.

சுமார் எட்டுமாதங்கள் இரஷ்யாவில் சில்லறைக் குழப்பங்கள். தொழிலாளர் சக்தி முழுவதையும் போல்ஷ்வெக்கட்சியின் பக்கம் திரட்டத் திட்டம் போட்டான் இலெனின். 1917 நவம்பர் ஏழாம் நாள் அகில இரஷ்ய சோவியத் காங்கிரஸ் பீட்ரோ கிரோட்டில் நடைபெற்றது.

கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே போல்ஷ்வெக்படையினர், அரசாங்கத்தைக் கைபற்றிக் கொண்டனர். தற்காலீக அரசாங்கத்தின் பிரதம மந்திரி கெரென்ஸ்கி பெண் வேடத்தில் தப்பியோடினார். சோவியத் அரசாங்கம் நிறுவப்பட்டது. இல்லை ...புதுவாழ்வுக்கு கால்கோல் விழா செய்யப்பட்டது. அந்தவெற்றிச் சிரிப்புதான் இன்றைய மேதினத்திலே எதிரொலிக்கிறது அந்த எதிரொலி திராவிடத்தில் இன ஒலியை—சுயமரியாதை ஒலியை எழுப்புமா?

கலைஞர் மு. கருணாநிதி · உணர்ச்சிமாலை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்