கட்டுரை 1 / 10
உணர்ச்சி மாலை
Garland of Emotion
அச்சுப் பக்கம் 6–8
scan 6 (the article opening) shows no printed numeral
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
சிங்கத்தின் முழக்கம், சிறுத்தையின் பாய்ச்சல், வேங்கையின் கம்பீரம், புயலின் வேகம், இடியின் கர்ச்சனை, மின்னலின் வீச்சு, அருவியின் ஓட்டம், தென்றலின் தெம்மாங்கு, நிலவின் குளிர்ச்சி,
இத்தனையும் சேர்ந்ததுதான் பாரதிதாசன் கவிதை.
“இனிமைத் தமிழ் மொழி எமது, எமக்கின் பந்தரும்படி வாய்த்த நல் அமுது”
வசந்த நடையிலே தமிழ் கொஞ்சுகிறது இங்கே!
இதோ சூறாவளியாகச் சுழலும் சொற்கள் :
“வளம்பெரிய தமிழ் நாட்டில் தமிழரல்லார் வால் நீட்டினால் உதைதான் கிடைத்திடுங்காண்”
கனல் பொழிகிறது - அனல் கிளம்புகிறது சிங்கம் சினங் காட்டுகிறது. ஆம். கவிஞரின் பேனா முனை ஈட்டியாகிறது. இதோ கவிஞர் இல்லமொன்றில் நுழைகிறார் இனிய நறுமணம் பரவுகிறது. இதயகீதம் புறப்படுகிறது.
“தொண்டையினில் ஒன்றுமே அடைக்கவில்லை துணைவனவன் சிறுகனைப்புக் கனைக்கலுற்றான். அண்டையிலே மங்கை போய் அத்தான் என்றாள் அத்தானா தூங்கிடுவான் ‘அருகில் உட்கார்’ என்றான்”
காதல் இலக்கியம்-நெஞ்ச ஓவியம்-கண்விருந்து - கவிதையிலே தேன் மழை! புயல் நடை மாறித் தென்றலாகத் தவழ்கிறது கவிஞரின் பேனாமுனை!
தாமரை பூத்த குளத்தைக் காண்பார்—அங்கே முகத்தாமரை தோன்ற முழுகிடும் கோமளவல்லியைக் காண்பார், கொள்ளை கொடுத்த உள்ளத்தினன் குப்பனையும் காண்பார்.
குளத்தைக் கண்ட அவர் குதூகலத்தாலேயே முழுகிவிட மாட்டார்....‘வியர்வைக்குளம்’ எனத் தலைப்புக் கட்டுவார். தொழிலாளியின் ஒவ்வொரு துளி வியர்வையிலும் “இவ்வுலகு உழைப்பவர்க்கே” என்பதைக் காண்பார்.
சிற்றூர்-வரப்பெடுத்த வயல்—ஆறு தேக்கிய நல் வாய்க்கால்-அயோத்யாபுரி வர்ணனையாகக் கொள்ள மாட்டார். நிறையுழைப்புத் தோள்களின் வலிமையால் வந்த வளமென்பார். காக்கையைக் காணுவார்- ‘சனிபகவானின் வாகனமே’ எனப் பாடமாட்டார். “காக்கையிடத்திலுள்ள ஒற்றுமைகண்டு வாழ்க்கை
நடத்தினால் பயனுண்டு” என அறிவு நல்குவார்.
மண்-மரம்-செடி-கொடி-பறவை - மிருகம் - மனிதன்- எல்லாம் கவிஞர் பாரதிதாசனின் கவிதைக் கடலிலே மிதக்கும் படகுகள். இராமனைப் பாடினால்தான் கவிதை- காளி வரம்பெற்றால்தான் கவிஞன்- இந்த நிலையைத் தலைகுப்புறக் கவிழ்த்தவர் பாரதிதாசன்.
அவருக்கு மணிவிழா அறுபது ஆண்டுகள் பறந்து விட்டன. மிச்சமிருப்பது நாற்பது ஆண்டுகள் மனித வயதின் கணக்குப்படி! சாகாத கவிதைகள்-இளைக் காத எழுத்துக்கள்-நோய் தழுவா இலக்கியங்கள் கவிஞரால் தமிழ் நாட்டுக்குக் கிடைத்திருக்கின்றன.
அவருக்கு செய்ய வேண்டிய கடமையைத் தமிழகம் ஒருவாறு செய்துவிட்டது. நன்றி தெரிவித்து விட்டது. ஆனால் இது போதாது. நிதியளிப்பதல்ல கடமை! மணிவிழா அல்ல நன்றி!
“வெள்ளம்போல் தமிழர் கூவிடம் வீரங்கொள் கூட்டம் உள்ளத்தால் ஒருவரே! மற்றுடலினால் பல ராய்க் காண்பார் கள்ளத்தால் நெருங்கொணாதே என வையம் கலங்கக்கண்டு களிக்கும் நாள் எந்த நாளோ!”
அந்த நாளை விரைவில் அமைப்பதுதான் நாம் அவருக்குக் காட்டும் நன்றி-கடமை-எல்லாம்!
நிதி விழாவும்-மணிவிழாவும் கவிஞரைத் தமிழகத்திலே நன்றாக உலவ விடும் மார்க்கங்கள். அவரது கவிதைகளை தமிழரின் உள்ளங்களிலே ஏற்றிவைக்கும் ஏற்பாடுகள்.
மணிவிழா இதோடு முடிவதல்ல, முடியக் கூடாது. ஆண்டு தோறும் கவிஞருக்கு விழா நடத்த வேண்டும். கவிஞர் இருக்கும் வரையில் மட்டுமல்ல! அவர்தான் சாகாதவராயிற்றே! சாகித்யகர்த்தா தியாகராஜ
அய்யருக்குத் திருவையாறே ‘ரகளை’ப் படுகிறது. தஞ்சை மாவட்டம் தமிழர்கள் உலவும் சோலை. ஒரு சாகித்ய கர்த்தாவுக்கு-தமிழ்க்கலைஞர்கட்கு மதிப்பு கொடுக்காத திருவையாற்று ‘திருவிழாவிலே’ புகழ் மாலை! வெட்கக்கேடு. தமிழ் இசைத்தால் மேடை தீட்டாகி விடுகிறதென கூறினார் ஒரு அய்யங்கார் பாடகர் சில ஆண்டுகட்கு முன்பு, திருவையாற்றில்! அந்த எதிர்ப்புக்கு ஆளான பெரும் இசைவாணர் இந்த ஆண்டு திரும்பவும் திருவையாற்றுக் காலிலே விழுந்தார். தமிழரவர். தலைகுனிகிறது தமிழ்நாடு. ஏனென்று கேட்டால் திருவையாற்றிலே நாலைந்து நாள் கொண்டாட்டங்களிலே கலந்து கொண்டால்தான் விளம்பரமாகிறதெனக் கூறுகிறார்கள் பதிலாக!
அந்த நிலையை மாற்றுவோம். அறிவு முழக்கம் செய்வோம். தமிழர் நெஞ்சை பகுத்தறிவுக்கோட்டையாக அமைப்போம். திருவிடத்தார் திறனுடையார் எனப் பறை சாற்றுவோம். பாரதிதாசனின் விழா அதற்குப் பயன்பட வேண்டுமென்பதே என் ஆசை.
ஆண்டுக்கொரு முறை மாவட்டத் தலைநகர்களிலே பாரதிதாசன் விழா மூன்று நான்கு நாட்கள். அங்கே கலைமலர்கள் வாரியிறைக்கப்பட வேண்டும். அவை தமிழர் வாழ்விலே மணம் பரப்ப வேண்டும். புரட்சிக் கவிஞரைப்போற்ற நாடெங்கும் நல்லவர்கள் தோன்ற வேண்டும்.
கலைஞர் மு. கருணாநிதி · உணர்ச்சிமாலை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்