கட்டுரை 3 / 10
போகிறான்;போகிறான்..!
He Goes; He Goes..!
அச்சுப் பக்கம் 16–17
scan 16 (the article opening) shows no printed numeral
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
கூறிய முட்கள் கைகளைக் கீறிடினும் மலர் கொய்யத் தாவும் குமரியின் கரங்கள்.
மூச்சை நிறுத்திவிடும் பயங்கர அலைகள் இருப்பினும் முத்தெடுக்க நினைக்கும் மனித உள்ளம்.
பாறைகள் இடிந்து உடலை நசுக்கிவிடும், என்பதறிந்தும் பொன்னெடுக்க சுரங்கந் தோண்டும் மானிட ஜாதி.
மலரும்-முத்தும் - பொன்னும் இலட்சியங்களாகின்றன. முள்ளும் - கடலும்- பாறையு இடையூறுகளாகின்றன. இடையூறுகளுக்கு அஞ்சாத பண்புகொண்டவன் இலட்சியப் பாதையை நோக்கி நடந்தபடியிருக்கிறான்.
அந்த இலட்சிய வீரன் எதற்கும் கலங்காத காளை.
“இடுக்கண் வருங்கால் நகுக,” இந்தக் குறள் அவன் மூச்சு.
‘இலட்சியமே என் உயிர்’ இது அவன் பேச்சு.
கொடுமைகள் கோர நர்த்தனம் செய்யும்போதும் அவன் குதூகலமாகத்தான் தன் பயணத்தை நடத்துவான்.
தன் எதிரே தனக்குக் தடையாக நிற்கும் மனிதர்களை அவன் மாமிச மலையென்பான். நசுங்கிப் போன ஈயச் செம்பே! என நையாண்டி செய்வான்.
“என்னை இப்படிப் பேசச் சொல்வது இதயத்தில் பீறிடும் இறுமாப்பல்ல ! உன் கண்களிலே தாண்டவமாடுகிறதே... அந்த கோரம் ! உன் உதடுகளின் இடுக்கில் வழிகிறதே அந்த அலட்சியம் ! உன் உள்ளத்தில் பொங்குகிறதே அந்த நஞ்சுக் குழம்பு ! இவைதான் என்னை அமைதியிழக்கச் செய்கின்றன” என்று தன் ஆத்திரத்தித்திற்கு விளக்கம் கூறுவான்.
அவன் புகழுக்காக ஆசைப் பட்டு பொதுநலப் பணியில் குதிக்கவில்லை. அவனுக்குத் தெரியும் அந்த வேலை சருக்கு மரம் ஏறும் கதை யென்று ! அவனறிவான் பொதுப்பணி-குமுறிவரும் வெள்ளப் பெருக்கில் எதிர் நீச்சல் போடும் செயல் என்று! எதிர் இயக்கத்தார் ஏவுகிற கணைகள் சொந்த இயக்கத்தார் சொருகுகிற ஈட்டிகள் - இவைகளை எதிர்பார்த்தே அந்த இலட்சியக்காரன் களத்தில் உலவுகிறான்.
பாசிபிடித்த ரத்தக்குட்டைகளாக - உளுத்துப் போன எலும்புக் கூண்டுகளாக-செல் மொய்த்த நரம்புக் கூடுகளாக மக்கள் வாழ்வது அவனுக்குப் பொறுக்க முடியவில்லை.
வாழ்வதற்குப் பகையாக இருக்கும் அத்தனை சக்திகளையும் அவன் நேர் நின்று தாக்குகிறான். மகாத்மாக்கள் போற்றி வந்த மதமா? மரவுரிதரித்த நாள் முதல் வணங்கி வந்த கடவுளா? மதத்தின் தலைவர்களா? கடவுளின் பிரதிநிதிகளா? அத்தனையும் அவன் சிந்தனைப் பட்டரையில் தூள்! தூள்!
சமுதாய துரோகிகள், சுயநல பெருச்சாளிகள், இலட்சிய முத்திரை குத்திக்கொண்டு இழி தொழிலில் ஈடுபடுவோர், பரிகசிப்போர், பின்னிருந்து பேசுவோர், உறுமுவோர், உதைப்பேன் என்போர் ; இந்த பட்டியல் அவன் உறுதியின் முன்னே எரிந்து கருகும்.
“பார்! பார்!...பசலைப் பயலே! உன் செல்வாக்கை செல்லாக்காசாக்குகிறேன்” எனக் குமுறும் ஒரு பொறாமை உருவம்.
“நான் உன் போல் புகழில் நெளியும் பூச்சியல்லவே நீ என் புகழுக்குத் தோண்டும் குழி உன்னையும் உன்போன்ற சதைக் குன்றுகளையும்விழுங்கிஜீரணித்து என் அழியாத புகழுக்கு அஸ்திவாரமும் அமைக்கும்” அன்று வீரமுழக்கம் செய்வான்.
இதோ பாரப்பா......மாட மாளிகை. மரகதக் குவியல், மனதிற்கேற்ற உல்லாசபுரி, இங்கே வந்தால் மல்லிகையில் படுக்கலாம், வெல்வெட்டுக் கம்பளத்தில் நடக்கலாம், என்ற மோகவலை வீசப்படும். துறவியைப் போல பேசி தூர நிற்பான். இலட்சிய வாதி.
காயமே இது பொய்யடா-காற்றடைத்த பையடா என்ற ‘நீர்மேற்குமிழி பஜனை’ நடத்திக்காட்டப்படும். கண்மூடிகளிடம் காட்டப்பா உன் கைவரிசையை எனக்கேலி செய்வான்.
எச்சரிக்கை.அபாய அறிவிப்பு- உடனடி நடவடிக்கை - பாகு மொழி- பாசாங்கு வேலை இத்தனை உருவங்களில் அழிவு அவனை அண்ட வருகிறது. ஆனால் அந்த இலட்சிய வீரன் தன் பாதையிலேயே போகிறான் -போகிறான்-போய்க் கொண்டே இருக்கிறான்.
கலைஞர் மு. கருணாநிதி · உணர்ச்சிமாலை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்