கட்டுரை 4 / 10
இராவணன் நம் பாட்டன்
Ravana Is Our Grandfather
ஸ்கேன் 19–29
scan 19 (the article opening) shows no printed numeral; scan 20 shows a page-position witness `1` only. The archive does not infer `19`, and neither does this integration.
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
கொசுவின் தாயகம். உயிர்க்குடிக்கும் பல்வகைப் புழுக்களின் பிறப்பிடம். கண்ணுல் காணமுடியாத தொலைவிலேயே மூக்கைப் பிடித்துக்கொள்ளக் கூடிய நாற்றம். கழிவுப்பொருள்களின் முடிவிடம்-ஆபாசத்தின் எல்லை. இம்மாதிரி ஒரு குட்டையைக் காணுகிறேன் மனிதன். ஆகா! இதோ நெளியும் புழுக்களின் நேர்மைதான் என்னே...பரத நாட்டியமாடும் பாவையரைப் போலல்லவா வளைந்து வளைந்து ஓடுகின்றன. பகவானின் படைப்பே; படைப்பு! இந்த மணத்தை எங்கும் நுகர்ந்திட முடியாதே என்று கூறி அந்த சேற்றிலே விழுந்து புரளுகிறான்.
அடுத்த மனிதன் குட்டையின் நாற்றத்தைப் போக்கினால் பலன் உண்டு எனக் கூறுகிறான். வாசனைப் பொருள்கள் அச்சிறு குளத்தில் ஊற்றினால் பயன் கிடைக்குமென்பது அவன் முடிவு.
மூன்றாவது மனிதன் குட்டையின் தண்ணீரையெல்லாம் இறைத்துவிட்டுக் குட்டையைக் குளமாக்கிப் புதுத் தண்ணீரைப் பாய்ச்சி தக்கதோர் மருந்து கலந்தால் மக்களுக்குப் பயன் தரும் என்கிறான்.
இந்த மூன்றுவகைத் தோழர்களில் உங்கள் ‘ஓட்’ யாருக்கு என்பது 'என் கேள்வியல்ல ! மேலே குறிப்பிட்ட நாற்றக் குட்டையாக நமது தமிழ்நாட்டுக் கலை அமைந்துள்ளதே அதைத் திருத்த வேண்டாமா என்பதுதான் பிரச்சினை. இந்தப் பிரச்சினையை மீண்டும் கிளப்பவேண்டிய அவசியத்தை ஒரு தோழர் ஏற்படுத்தியுள்ளார். பிழைப்புக்கும் செல்வாக்குக்கும் பாதை அமைத்துக் கொள்வதற்காக ஒரு சிலர் கலைக் குட்டையிலே விழுந்து புரளுவது எனக்குத் தெரியும். சேறு அவர்களுக்கு சந்தனமாகவும், சேற்றிலே கிளம்பும் நாற்றம் அவர்களுக்கு மல்லிகையில் மோதி வரும் தென்றலாகவும் தோன்றுகிறதாம். அவர்களைத் திருத்தவோ அல்லது திருப்பவோ நினைப்பது நாயின் வாலை நிமிர்க்க நினைப்பது போலத்தான் என்பதும் எனக்குப் புரியும். புரிந்த போதிலும் இவர்களுடைய வலை வீச்சில் திராவிட இளைஞர்கள் சிக்கிவிடலாகாது என்பதற்காகவே; “பாம்பே! கடிக்காமலிரு, தேளே ! கொட்டாமலிரு !” என்று அகிம்சா உபதேசம் செய்வதைவிட அவை ‘விஷ ஜந்துக்கள் விலகிப் போங்கள்’ என்று எச்சரிக்கை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளேன்.
வாழை, மா, பலா, என்ற முக்கனியின் கூட்டில் வசிய மருந்து கலப்பதுண்டு. வண்ணப் புதுச்சேலை - வாலிப மேற்பூச்சு இவைகளோடு, வயதேறிய மாது வலை வீசுவதுண்டு.
இந்த வகையைச் சேர்ந்த கட்டுரையொன்றை நான் காண நேர்ந்தது, ஆர். எம். அழகப்ப செட்டியாரை ஆசிரியராகக் கொண்ட “குமுதம்” என்ற
மாத வெளியீட்டில் ஒரு கலாரசிகர். தீட்டியுள்ளது. கட்டுரையின் தலைப்பு இராவணன் நம் பாட்டன் தலைப்பைக்கண்டதும் அழகப்பாவின் பத்திரிகையிலும் இன உணர்ச்சி வாடை வீசுகிறதே என துள்ளிக் குதித்தேன். நான் நினைத்தது முழுத்தவறு என்பதை மெய்ப்பிப்பது போல் தலைப்பின் ஓரத்தில் பத்து தலை இராவணன் படம் விளங்கிற்று. இருந்தாலும் தலைப்பிலே கலந்திருந்த அந்த இன உணர்ச்சி என்னைப் படிக்கத் தூண்டிற்று. இராவணன் நம் பாட்டன்! ஆகா! தென்னிலங்கை வேந்தன் - தீராதி தீரன் - திராவிடரின் மூதாதை - அவனை நம் பாட்டன் என்று உரிமை கொண்டாடும் உண்மைத் தோழனுக்கு ‘குமுதத்திலே இடமா?’ எனக் கூத்தாடிற்று என். உள்ளம்.
படிக்க ஆரம்பித்தேன் ; “தோள் கண்டார் தோளே கண்டார்” என்ற கம்பனின் வர்ணனையைத் துவங்கியிருந்தார் தோழர்! இராவணன் நம் பாட்டன் என்று கூறிவிட்டு... இராமனின் அழகை வர்ணிக்கும் கட்டத்தில் நிற்கிறாரே ஏன் என்று எனக்கு முதலில் புரியவில்லை. கம்பரின் வர்ணனையைப் புகழ்ந்து... அட்ட! கடவுளீயக் கலையை சிருஷ்டித்திருக்கிறாரே கம்பநாட்டாழ்வார் எனக் காவடிச்சிந்து பாடுவதோடு கட்டுரையாளர் நிறுத்திவிடுவார்; கம்பர்தருங் காட்சி கம்பசித்திரம், சித்திர ராமாயணம் இந்த வர்க்கத்தைச் சேர்ந்த இழைப்பு வேலையாக இருக்கும் இதுவென எண்ணினேன். ஆனால் கட்டுரையாளர், வாலிபனை மயக்க வண்ணப்புதுச் சேலையுடுத்தி வந்த வயோதிக மாது என்பதை நன்றாக நிரூபித்துக்கொண்டுள்ளார்.
“கலை என்னும் கடவுள்பொருளின் உண்மை இயல்பை உணாந்துவிட்டால் இந்தப் பிணக்குக்கு கலையுலகில் இடமில்லை. அவரவர் நிலைக்கு அமைந்ததோர் அழகுக்கோலம் தாங்குவது கலை. ஒருவர் காட்சி மற்றவர்க்கு ஏலாது, இதை உணர்ந்தால் எரிக்கும் வெறியும் தரிக்கும் வெறியும் கலையுலகில் இடம்பெறமாட்டா”.
ஆசிரியர் புகுத்தியுள்ள கருத்து இது ! இதைத்தான் கனிச்சாற்றில் கலந்த ‘வசிய மருந்து’ என நான் கூறுகிறேன். சோற்று உருண்டையைக் காட்டி மீனைத் தூண்டிலில் சிக்க வைக்கும் சூழ்ச்சியைப் போல் இராவணன் நம் பாட்டன் என்ற தலைப்பைக் காட்டி கம்பர் கலையெனும் தூண்டில் முள்ளில் இளைஞர்களை சிக்க வைக்க முயற்சிக்கிறார் தோழர்.
பசுமலை பாரதியும், பண்டித சேதுப்பிள்ளையும் நிற்க முடியாத இடத்திலே நிற்க நினைக்கிறார் தோழர். சரிந்து விழுந்த கம்பராமாயணக் கட்டிடத்தைப் புதுப்பிக்க சாரம் கட்டுகிறார் அன்பர். பாவம் பரிதாபத்திற் குரியவர். “கலை வாழ்க! ஆனால் கலை, நாற்றக் குட்டையாக-புழுக்கள் நெரியும் இடமாக உள்ள நிலை ஒழிக!” இதுதான் பகுத்தறிவாளனின் பாசறை முழக்கம். இந்த முழக்கம் முன்னமேயே கம்பர், சேக்கிழார் போன்ற இனத் துரோகிகளின் முதுகெலும்பை முறித்து விட்டது என்பதை நண்பர் அறிந்திருந்தும் நச்சுப்பல்லை நீட்டியிருக்கிறார். ஆபாசக் குட்டையின் அழுகல் நாற்றத்தை அந்திமல்லிகையின் வாடையெனக் கூறும் ரகம் இவர் ! முகத்தின் சுருக்கங்களை முக்காட்டால் மறைத்துக்கொண்டு என் முல்லைச்
சிரிப்பைப் பார் எனக்கூறும் மூதாட்டிக்கும் தோழரின் கட்டுரைக்கும் முரண்பாடிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. குட்டையின் நாற்றத்தை அகற்ற அத்தரும் ஜவ்வாதும் போடு எனக் கூறுகிறவரின் வரிசையில் கூட தோழர் இடம் பெறாதது வருந்தத் தக்கது.
திரிக்கும் வெறி கலை யுலகில் இடம்பெறக் கூடாது என தோழர் கூறுவதிலிருந்து நாற்றக் குட்டையில் வாசனைப் பொருள் கலப்பவரின் வரிசையில்கூட நிற்கமுடியாமல் வழுக்கிவிழுந்து டி. கே. சிதம்பரநாதர்களின் மேலும் சீறிப் பாய்கிறார் என்பது விளங்குகிறது.
எரிக்கும் வெறி என எழுதியதால் சுயமரியாதை இயக்கத்திற்கு சூடு கொடுத்துவிட்டதாக அன்பர் சொல்லிக் கொள்ளலாம். அழகப்பாவின் ‘அப்ளாசை’ யும் பெற்றிருக்கலாம். கையிலிருப்பது பேனா என்பது கூட தெரியாமல் கலை போதையில் கிறுக்கியிருக்கிறார் ஆசிரியர் !
கம்பராமாயணத்தைக் கொளுத்துவதா? இல்லையா? என்ற சொற்போரில் அறிஞர் அண்ணாதுரையை எதிர்த்து மேடையில் நிற்கமுடியாமல் சேதுப்பிள்ளைக்குத் தலைவலியும், சோமசுந்தர பாரதியாருக்கு பிரயாண அவசரமும் ஏற்பட்டதை இந்தக்கலைக் காதலர் மறந்துவிட்டது மாபெரும் ஆச்சரியம்.
“அவரவர் நிலைக்கு ஏற்ப அமைந்ததோர் அழகுக் கோலம் தாங்குவது கலை” எனக் கூறுகிற ஆசிரியர். கொள்ளைக்காரன் கொள்ளையடிக்கும் தொழிலைக் கலையாகக் கொள்வதையும், விபசாரி...வாலிபர்களை
மயக்கிக் கவிழ்ப்பதைக் கலையாகக் கொள்வதையும், அதற்கென அவர்கள் கம்ப ராமாயணத்தில் தொழிலுக்கேற்ற சுவையான கட்டங்களைத் தேடுவதையும்—அதற்காகவே அவர்கள் கம்பர் கலையை ஏத்திப் புகழ்வதையும் ஒத்துக் கொள்கிறாரா என்பது என் கேள்வி !
“ஒருவர் காட்சி மற்றவர்க்கு ஏலாது” என்கிறார். உண்மை. எரிக்கும் எண்ணம் சுயமரியாதைக்காரர்களுக்கு ஏற்பட இது காரணமாகுமா என்று கேட்கிறேன்.
இனக்கொலை செய்தார் கம்பர். சாதாரண மனிதனை சகத் ரக்ஷகனாக்கிக் காட்டினார் கம்பர்.
கடவுளின் காதையைப் பாட வந்த இடத்திலும் காமலீலைகளுக்கு முதல் ஸ்தானம் அளித்தார் கம்பர்.
இந்தக் குற்றச்சாட்டுகள் தான் கம்பர் கலையைக் கொளுத்தியெறியும் தீக்குச்சுகள் என்பதை குமுதத்தின் வியாசகர்த்தா தெரிந்து கொள்ள வேண்டும்.
கம்பரின் உயிரைக் காப்பாற்ற கட்டுரையாளர், கவிஞர் பாரதிதாசனின் “சஞ்சீவி பர்வதத்தின் சாரலில்” ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்திருக்கிறார். இராம பக்தரல்லவா? கம்பரின் வர்ணனைகள் நம்பத் தகாதவை என்கிறீர்களே; பாரதிதாசன் பாடியுள்ள சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்ற கவிதையில் ஒரு பச்சிலையின் உதவியால் இங்கிலாந்து, அமெரிக்கா தேசங்களில் பேசுவோரை குப்பனும் வஞ்சியும் பார்க்க முடிந்தது என்கிறாரே இந்த வர்ணனையை நம்பலாமா? என்கின்ற தோரணையில் தோழர் பிரச்சினையை எழுப்பு
கிறார். அளவு மீறிய வர்ணனைக்காக கம்பராமாயணத்தை கசக்கிறது என்று கூறியவர்களல்ல நாம் ! கூறுபவர்களுமல்ல.
இராமன் அயோத்தியைத் துறந்து ஆரண்யம் சென்றபோது நகரத்து மக்கள் அழுதனர் எனக் கூறுவதோடு நிறுத்தாமல் “பூவையர் அழுதனர் பூனையும் அழுதது” எனக் கம்பர் வாணனையை நீட்டியது. கண்டு கூட நாம் வருந்தவில்லை. பூனை. அழுமா ? என்று கேட்கவுமில்லை. வர்ணனையின் உச்சம் என நாம் விதி விலக்கு அளித்தோம்.
பூவையர் அழுத கண்ணீர் போகும் பாதையை கம்பர் வர்ணிக்கிற கட்டம்தான், அண்ணாவின் கம்பரசத்திற்கும், அறிவு உலகத்தின் “அக்கினியில் போடு கம்பராயணத்தை” என்ற தீர்ப்புக்கும் இடமளித்தது என்பதை தோழர் உட்பட யாரும் மறுக்க முடியாது.
இதுவரை படிக்காமலிருந்தால் பகுத்தறிவாளரைக் குறை கூறும் நண்பர், படித்துப் பார்க்கட்டும் என்பதற்காக எஞ்சியுள்ள கம்பரசத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கலக்கித் தருகிறேன்; பருகட்டும் தோழர் என்பதற்காக! கலை மயக்கம் தெளியட்டும் என்பதற்காக!
இராமன் காடு செல்கிறான். அயோத்தி அழுகிறது. ஆரணங்குகள் அழுகிறார்கள். அழுத கண்ணீர் ஆறாக ஓடுகிறது பாருங்கள்.
“திடருடைக் குங்குமச் சேறும் சாந்தமும், இடையிடை வண்டலிட்டாரமீர்த்தன.
மிடைமுலைக் குவடேறி மேகலைத் தடங் கடலிடைப் புகுந்தகட் குலுழியாரரோ!”
பொழிப்புரையாகக் கூறுவதே போதுமென் எண்ணுகிறேன் ; அண்ணா அவர்கள் கம்பரச புத்தகத்தில் அதிக விளக்கம் இருப்பதால் அதைப் படித்துக் கொள்ளட்டும் என்ற அளவில்!
இராமன் பிரிவால் மங்கையர் கண்ணில் வடியும் நீர், ஆறாகப் பெருகி குங்குமத்தையும் மையையும் கரைத்துக்கொண்டு, மணிமாலைகளைக் கடந்து, ஸ்தனங்கள் என்ற மலைகளில் ஏறி மேகலாபரணம் அணிந்திருக்கிற “மறைவிடம்” எனப்படும் கடலில் விழுகிறது.
“எழுதவே வெட்கமாயிருக்கிறது தோழரே!......இந்தக் காமக்கலை கடவுளின் பேரால் பாடப்பட வேண்டுமா என்று கேட்பது உமக்கு வெறிச்செயலாகப் படுகிறதா?” எனக் கலாரசிகரான என் நண்பரைக் கேட்கிறேன்.
ஒருவேளை “அவரவர் நிலைக்கு ஏற்ப அமைந்த தோர் அழகுக் கோலம் தாங்குவது கலை.” என்ற தத்துவத்தைக் கடைப்பிடிப்பவராயிருக்கலாம் நண்பர்!
பாரதிதாசனையும்—கம்பரையும் ஒரே கோட்டில் நிறுத்திப் பார்க்கும் தோழர், பாரதிதாசனின் கவிதையில் இந்தக் காமக் களஞ்சியத்தைக் காணமுடியுமா என்று அறை கூவியழைக்கிறேன். வர்ணனைக்கும் அளவிருக்க வேண்டாமா? அதுவும் பரந்தாமன் சரித்திரத்திலா இந்தப் பள்ளியறைச் சிறப்பு ?...
“கலைஞர், களியர், பித்தர், பக்தர்—இவர்கள் பெரும்பாலும் ஒரு நிலையினர். அவர்களை உணர அவர்களாகவே மாறத்தான் வேண்டும். முடியவில்லை என்றால் ஒதுங்கிவிட வேண்டியதுதான்.” என்று முடிவு கூறுகிறார் கட்டுரையாளர். கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழிப்பவன்......விவாதத்தை வளர்த்த முடியாமல், நீ பேசுவது விதண்டாவாதங்கள் என்று கூறிவிட்டு ஓடுவதுபோலிருக்கிறது தோழரின் போக்கு! மூக்கையறுத்துக் கொள்ளுங்கள்.... கடவுளை தரிசிக்கலாம் எனக் கூறிய மூக்கறையனின் தந்திரத்தைப் போலிருக்கிறது தோழரின் அபிப்பிராயம்.
சொட்டையுள்ள இடத்தை சுட்டிக் காட்டுகிறான் சுயமரியாதைக்காரன். “பொட்டைக் கண் உனக்கு” என்று பொய் கூறுகிறார் நண்பர் !
“கம்ப ராமாயணத்தில் கடவுளீயம் இல்லை. கதை உண்மையில்லை. இராமன் சாதாரண மனிதன். தமிழ் அழகுக்காக...கலை நுட்பத்திற்காக மட்டும் படியுங்கள். இராமனைக் கடவுளென எண்ணி சீதா கல்யாணமும், அனுமாருக்கு வடைமாலை சாற்றும் வைபவமும் நடத்தாதீர்கள்” என்று ஒரு முன்னுரை எழுதிவிட்டு கம்ப ராமாயணத்தை அச்சிடுவதற்குத் துணியாத தோழர் பெருந்தகை....செல்வர் வீட்டுக் குமுதத்திலே சீர்திருத்த வாதியின் மேல் சீற்றம் நடத்துவது ஏனோ தெரியவில்லை.
மக்கள் பண்பு உயர, கலை தேவையே தவிர மாட மாளிகையிலே—மலர்ச் சோலையிலே—மஞ்சத்திலே—மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிக் கிடக்க, மங்கையர்
வனப்பை வர்ணித்து ஆனந்த லாகிரியில் அமிழ்ந்து கிடக்க, கண்ணீரானது கரை புரண்டு கடலில் கலக்கும் விதத்திற்கு உதாரணம் தேட, கலை தேவையில்லை.
கலை காலத்தின் கண்ணாடியாக...இன எழுச்சியின் முரசமாக இருக்கவேண்டும். கம்பரின் காதை...காமக் கோட்டத்தின் கீதம். கடவுளீயத்தில் மக்களைக் கவிழ்த்து சதிபுரியும் சிந்து! வேற்றினத்துக்கு வணங்கிச்சாகும் வேதனையைத்தந்த வெண்பா! நான் முதலில் குறிப்பிட்டபடி கலையை நாற்றக் குட்டையாக்கி நெளிகின்ற புழுக்கூட்டம்.
சேலம் மாநாட்டிலே கம்பர் கதையை நெருப்பில் போட வில்லையே தவிர சேதுப்பிள்ளை—பாரதியார் தோல்வி, கம்பராமாயணத்துக்கு மூட்டப்பட்ட தீ என்பதை தோழர் அறியவேண்டும்.
“காமாலைக் கண்ணின்றி, கலைமாலைக் கண் கொண்டு நோக்க வேண்டும்..... இப்படியாக உள்ள சில உண்மைகளை உணராதவரை இராவணன் நம் பாட்டன்தான், சூர்ப்பனகை நம் பாட்டிதான்.” என்று கிண்டல் செய்து கட்டுரையை முடிக்கிறார் கம்ப பக்தர்!
தோழர் எழுதுவதற்கு இடங் கொடுத்த குமுதத்தின் கௌரவ ஆசிரியர் அழகப்ப செட்டியார் அவர்கள் எப்பொழுதாவது புது டெல்லிக்குப் போனால் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களைக் கேட்கட்டும்; ராமாயணத்தில் அரக்கர் என்று குறிக்கப்படுவோர் யாரென்று! “ராமாயணத்தில் அரக்கர் என்று எழுதப்
பட்டிருப்பவர் தென்னாட்டிலுள்ள திராவிடர்.” என ஜவஹர்லால் நேரு, செட்டியாரிடம்...தான் முன்பு தீட்டிய “ஜவஹர்லால் தன் மகளுக்கு எழுதிய கடிதங்கள்” என்ற புத்தகத்திலிருந்து ஆதாரம் எடுத்துக் காட்டுவார். அப்பொழுது தெரியும்; இராவணன் நம் பாட்டனா; இல்லையா? என்பது ஏது மறியாத இந்தத் தோழருக்கு; இதைத் தவிர வேறு பதிலில்லை.
கலைஞர் மு. கருணாநிதி · உணர்ச்சிமாலை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்