கட்டுரை 5 / 10
இங்கல்ல! இரஷ்யாவில்
Not Here! In Russia
அச்சுப் பக்கம் 30–31
scan 30 (the article opening) shows no printed numeral
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
காக்கைபாடினியார் நச்செள்ளையார் காவற்பெண்டு பாரிமகளிர் பெருங்கோப் பெண்டு வெண்ணிக்குயத்தியார் வெறிபாடிய காமக் கண்ணியார்
புதுப் பெயர்களல்ல ! புறநானூற்றிலே பொதிந்து கிடக்கும் புதையல்கள் பலவற்றின் படைப்பாளர்கள். பெண்கள் ! அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பேதுக்கடி என லாலிபாடும் பாட்டிகள்......பத்தாம்பசலிகள் நிறைந்துள்ள இன்றைய திராவிடத்தின் வரலாற்றில் ஒன்று இரண்டு பக்கங்களிலே காணப்படும் மங்கையர் கும்பல் !
கவிதை மழை பொழிந்த தமிழரசிகள் ! தமிழுக்கே தனிப்பெருமை தந்த தங்கக் கொடிகள் ! வீரத்தின் பீடத்தில் அமர்த்தி வெற்றி மாலை சூட்டி, வெங்கொடுமை சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித்தோள்கள் என காளையரைத் தட்டிக் கொடுத்து, கங்கையைப்போல் காவேரியைப்போல் கருத்துரை கவிதைகளை, உணர்ச்சி கொப்பளிக்க, பெருக்கெடுக்கச் செய்த பெருமாட்டிகள் !
“மகன் போன இடமறியேன் அப்புலி வாழ்ந்த குகையிதோ !” என தாயொருத்தி வயிற்றைக் காட்டினாள் என்ற வீர முழக்கத்தை விருத்தமாக்கினவர்—என் பாலைக்குடித்தவனா பகைவனின் ஈட்டியை முதுகினால் தாங்கினான்......அவன் பால் குடித்த மார்பின் ரத்தத்தை இந்த வாள் குடிக்கட்டும் என ஆவேசக் கூச்சல் போட்ட கிழவியொருத்தியின் எழுச்சியை இதய கீதமாக்கினவர்—“தந்தை மாண்டார். சோதரர் செத்தார், என் இளம் மகனே ! இங்கே வா ! இந்தா வேல் ! இந்நாடு உன் உதிரத்தாலும் நனையட்டும்” என்று தலைவாரி பூச்சூடி களத்திற்கு பசலைப் பையனை அனுப்பிய தாயின் நாட்டுப் பற்றை சிங்க நடைச் செய்யுளாக ஆக்கியவர்—ஆம் மேலே காணப்படும் பெண் புலிகள்தான் !
அவர்கள் இருந்த திராவிடம்......அவர்களுடைய கல்லறைகளின் மேல் அமர்ந்து அவர்கள் தந்த தமிழ்ச் சொத்துக்களை வீசியெறிந்துவிட்டு மாரியம்மன் தாலாட்டை மனப்பாடம் செய்கிறது. புறநானூறு இங்கிருந்து புறப்பட்டு இதோ இரஷ்யாவில் புகுந்து விட்டது.
சென்ற போராட்டத்தில் இடோகியோ நிஜுலினா என்பவர் ஆகாய விமானம் மூலமாக 600 தடவை பறந்து சென்று விரோதிகளின் விலாவை ஒடித்து வேகமான தாக்குதல்கள் நடத்தி திரும்பினார், இடோகியோ நிஜுலினா. ஆணல்ல ! பெண் ! பெண் !! இங்கு ஏணை ! அங்கு ஏரோப்ளேன் ! இங்கு அரசமரம் ! அங்கு ஆராய்ச்சிக்கூடம் !
1945-பிப்ரவரி 1-ந் தேதி வரையில் 10,55,000* பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டதின் காரணமாக பற்பல வகையான வீரப்பிரதாப பட்டங்களைப் பெற்றனர்.
அங்கே புறநானூறு! இங்கே புற்றடி மாரியம்மன் கோயில் சிந்து!
கூட்டுப்பண்ணை போன்ற அமைப்புகளில் தலைவர், பொருளாளர், செயலாளர், பதவிகளில் 1940-ஆம் ஆண்டு முடிய 54,200 பெண்கள் உள்ளனர். இரஷ்யாவில்!
அறிவு, நாட்டில் அடுப்பங்கரை இந் எதிரிகளின் நிஜுலினா உட்பட 49-பெண்கள் முதுகெலும்பை முறித்து நாட்டுத் தொண்டாற்றினார்கள் என்பதற்காக “சோவியத் யூனியன் வீரர்” (Hero of the Soviet union)என்ற விருதுபெற்றுள்ளனர்.- “ஆகா அசல் சீதேவி மாதிரி குணம்” “அருந்ததி மாதிரி அடக்கம்” “அகல்யாமாதிரி அழகு” “திரௌபதி மாதிரி கற்பு” இந்தப் பட்டங்கள் இங்கே, இருண்ட திராவிடத்தில்!
புறநானூறு இங்கு புதைந்துவிட்டது. அங்கே......இரஷ்யாவில் ஒளி விடுகிறது.
கலைஞர் மு. கருணாநிதி · உணர்ச்சிமாலை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்