கட்டுரை 6 / 10

3, 57, 90.

3, 57, 90.

அச்சுப் பக்கம் 33–37

scan 33 (the article opening) shows no printed numeral

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

“என்ன துணிவப்பா இது”
“எப்படியப்பா எழுதினான் இந்த மனுஷன்”
“வாயில் வந்தபடி பேசுகிறானே வகை கெட்டவன்”
“ஆட்டு மந்தைப்போல் ஒரு கூட்டம் நம்மைப் பின்பற்ற இருக்கும்போது இவனுக்கு மட்டு மென்ன அறிவு கொழுந்து விடுகிறதாம்”
“ஆளை உயிரோடு விடுவதே ஆபத்து”
“இவன் இருக்கும் வரையில் நாம் தலை தூக்க முடியாது போலிருக்கே”
“விஷத்தை யல்லவா வாரி யிறைக்கிறான் விரியன் பாம்பு”

இப்படி சொல்லம்புகள் மாறி மாறி வீசப்பட்டன அந்த வீரர் மேல். வீரர் கலங்கவில்லை. விலாவொடிந்து போனாலும், வெட்டுண்டு சாய்ந்தாலும் கவலைப்படாத வைர நெஞ்சத்தினர் அவர். மனதிற் பட்டதை மறைத்துப் பேசும் கோழைத் தனமோ, கால் கழுவி வாழ நினைக்கும் கபோதித் தன்மையோ, சுய நலத்திற்காக

சூதர்களை சுற்றி, நிற்கும் சோதாப் பண்போ அவர் இதயத்தை எட்டிப் பார்க்கவுமில்லை.

“ஏய் நாஸ்திகனே !......நீ நாசமாய்ப் போக”
“வகுப்பு வாத விஷ விருக்ஷமே......உன்னை வாழ விடுகிறோமா பார் !”

இந்த வசவுகளை வாழ்த்தாக நினைத்தார்.

“வகுப்பு வாரி பிரதி நிதித்துவம் வேண்டும்”

அந்தக் குரலை சற்று பலமாக அமைத்தார். திருப்பித் திருப்பிச் சொன்னார். அடிக்கடி சொன்னார். அதற்காகவே வாழ்வை அர்ப்பணிக்க வந்துவிட்டார். புத்தன் முதல்...இராமலிங்கன் வரையில் கூறுவதற்கு நடுங்கிய கொள்கைகளை இன்று துணிவாகச் சொல்வதென்றால்—அதுவும் நம்மவர் காலடியில் நாட்டாட்சி கிடக்கிற வேளையில் சொல்வதென்றால்......என்று ஆச்சரியப்பட்ட ஆரியம் தனது பாகு மொழியையே பலி பீடமாக அமைத்து திராவிட சமுதாயத்தைக் காவு கொள்ள ஆரம்பித்தது.

அய்யோ.........அந்த பலி பீடத்தில் சாய்ந்தவர் எத்தனை பேர் ! காமராசர்கள், முத்துரங்கர்கள், பக்தவத்சலர்கள், கிராமணியர்கள், நாடிமுத்துக்கள், தியாகராசர்.........

“சகோதரர்களே......வகுப்பு வாதத்தில் வழுக்கி விழாதீர்கள். நாம் பாரதத் தாயின் கர்ப்பத்தில் கிடந்த புதல்வர்கள்”

பூணூலை உருவிக் கொண்டே ஆரியம் பேச.........புன் சிரிப்பு நெளிய திராவிட விபீஷணர்கள் கரகோஷம் செய்ய......காங்கிரஸ் கட்சி வளர்ந்தது.

வகுப்புக்கள் ஒழிந்தால் தான் வகுப்பு வாதம் ஒழியும்......அதுவரை நாம் வாழ—வளம்பெற வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் தேவை......ஆரியம் ஒற்றுமை வலை விரிக்கும் ஒன்றே குல மென்று கூறும், உம்மை யெலாம் ஒதிய மரங்களாக்கி உயர்ந்த ஸ்தானங்களில் அமர்ந்து உல்லாசம் பேசும். அது ஒரு ஓநாய்க்கூட்டம். இந்தக் கருத்தை அந்த வீரர் எடுத்துரைத்தார். வேதியர் அவரை நாஸ்திகர் என்றனர். விபீஷணர்கள் அவரை வகுப்பு வாதி என்றனர். விழித்துக் கொண்ட மக்கள் அவரை மதித் தலைவர் என்றனர். விபீஷணர் விழிப்படைய—விழித்துக் கொண்டவர் விளக்கம் பெற உதவி புரியும் வகையில் நாம் தரவேண்டிய செய்தி ஒன்றுளது.

“திருப்பதி ஓரியண்டல் கல்லூரியில் பொது உணவு முறை ஏற்படுத்துவதுபற்றி அரசாங்கம் வற்புறுத்துகிறது. தேவஸ்தானக் கமிட்டியார், அரசாங்கத்தை இவ் வுத்திரவுபற்றி புனராலோசனை செய்யுமாறும், பொது உணவு முறையில் கலந்துகொள்ளச் சம்மாதிக்காத மாணவர்களுக்குத் தற்காலம் கொடுக்கப்பட்டு வரும் உபகாரச் சம்பளத்தை தொடர்ந்து கொடுக்க அனுமதிக்குமாறும் வேண்டிக்கொள்கிறது. ஆனால் அரசாங்கத்தார் இது பற்றி புனராலோசனை செய்யத் தயாராக இல்லை, என்று அறிகிறேன். ஓரியண்டல்

கல்லூரியில் 150 மாணவர்கள் இருக்கிறார்கள். பிராமண மாணவர்கள் 90 பேர் இருக்கின்றனர். ஹரிஜன மாணவர்கள் 3 பேர்களே உள்ளனர். பிராமண மாணவர்களும், பிராமணரல்லாத மாணவர்களும், பொது உணவு முறை ஏற்படுத்தப்பட்டாலும், தனியாக உண்ண விரும்புபவருக்கு உபகாரச் சம்பளம் கொடுப்பது நிறுத்தப்பட்டாலும் கல்லூரியை விட்டு விலகிவிட ஒரே முகமாக விரும்புகின்றனர். அரசாங்கத்தை இது பற்றி மீண்டும் தெளிவாக—தாராள மனப்பான்மையுடன் சிந்திக்கும்படி வேண்டிக்கொண்டும் பொது உணவு முறையை ஏற்க மறுக்கும் மாணவர்களுக்கு உபகாரச் சம்பளத்தை தொடர்ந்து கொடுக்குமாறு தேவஸ்தான கமிட்டியையும் வேண்டிக்கொள்கிறேன்”

வகுப்புவாதத்தை திராவிடக் கும்பல் நாட்டில் பரப்புகிறது என்று பிரச்சாரம் செய்கிற பிராமணோத்தம குலத்துப் பெம்மான் ஸ்ரீ துரைசாமி அய்யங்காரின் இந்த அறிக்கை 29-5-48 மெயிலில் காணப்படுகிறது.

கல்லூரி மாணவர்கள் நூற்றியைம்பது பேர். நூற்றுக்கு மூவராய் வாழும் பார்ப்பன குலத்தவர் அந்தக் கல்லூரியில் தொண்ணூறு பேர்! நூற்றுக்கு தொண்ணூற்றேழு பேராயுள்ள திராவிட மாணவர்கள் அங்கு ஐம்பத்தேழு பேர். படிப்பில்லா சமுதாயமாக பாழ்பட்டு நிற்கும் பழங்குடி வகுப்பினர் மூன்று பேர். சதவிகிதக் கணக்குப்படி 100-க்கு 60 பார்ப்பனர்; 100-க்கு 38 (பார்ப்பனரல்லாத) திராவிடர்; 100-க்கு

2 பேர் ஆதிதிராவிடர். இந்த அழகில் அங்கேயும் ஒரு குருகுலத்தை சிருஷ்டிக்க நினைக்கிறார் ஆரிய குல மகிபர். எல்லோரும் அன்னை பாரததேவியின் அருந்தவப் புதல்வர்கள் என்று கீதம் பாடிய கூட்டம் இன்று பேதம் பாடுகிறது. அதற்கு தலையாட்டும் பொம்மைகளாக சில தன்மான மற்ற திராவிடரையும் துணைக்கழைக்கிறது.

நாம்......பரிதாபமாக...வயிற்றெரிச்சலோடு......விழியிலே நீர்வழிய கெஞ்சுகின்றதோரணையில்...ரத்தப் பாசம் விடாமல்... மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம் அந்த 57 பேரை நோக்கி!.....ஐம்பத்து ஏழுவரே !... வகுப்புவாரி பிரிதிநிதித்துவத்தை ஏளனம் செய்து... கீழ்பாக்கம் வைத்திய சாலையை கிண்டலுக்கு பயன்படுத்துகிற வெறியர் கூட்டத்தின் செயலை சற்று சீர் தூக்கிப்பாருங்கள். நீங்கள் மக்கள் கணக்கில் 97 சதவிகிதத்தினர். அவர்கள் மூன்று சதவிகிதத்தினர். ஓரியண்டல் கல்லூரியில் நீங்கள் 57 பேர், அவர்கள் 90 பேர். உங்களுக்கும், அவர்களுக்கும் உட்கார, உலவ, உல்லாசம் அனுபவிக்க உழைத்து உழைத்து உருமாறிய—இரத்தத்தை வியர்வையாக மாற்றிய வம்சத்தவர் மூவர். அந்த மூவரையும் மூலையில் தள்ள ஆரியத்தின் மூளை அஸ்திவாரம் அமைக்கிறது. பலம் தேடிக் கொள்ள உங்களையும் பிணைத்துக் கொண்டு பேசுகிறது.

ஆம்......ஆஞ்சநேய சுக்ரீவர்களை துணைக்கழைத்துக் கொண்டு வெற்றிப் பண் பாடியது போல—சர்

ராமசாமிகளை, சண்முகங்களை இழத்துக் கொண்டு தன் சமுதாயத்தை காத்துக்கொண்டது போல துரைசாமி அய்யங்காருக்கு உங்கள் 57 பேரின் துணை தேவையாயிருக்கிறது. அந்த மூன்று பேரையும் மூன்று துளி நஞ்சாகக் கருதுகிறார் உங்கள் 57 பேரையும் 57 பிர பிரஹலாதர்களாக 57 கருவேப்பிலைகளாகக் கருதுகிறார்.

நீங்கள் அறுபது பேராகுங்கள். ஆரியம் தொண்ணூறும் அந்த முனையில் நிற்கட்டும். திராவிட இன உணர்ச்சியை இனி மேலாவது, காற்றில் பறக்கவிட்டு மீளாத பழியை சுமத்திக் கொள்ளாதீர்கள். இதையே தான் நாம் அரசாங்கத்தாருக்கும் அறிவிக்க வேண்டியுளது.

கல்லூரியை விட்டு தொண்ணூறு பூணூலும், ஏன் ஐம்பத்தி ஏழுவரும், கண்ணிருந்தும் குருடராய்—காட்டுமிராண்டித் தன்மையராய் அவர்களோடுசேர்த்து விலக நேர்ந்தாலும் அந்த மூவருக்காக—புது சமுதாயத்தின் அந்த அஸ்திவாரக் கற்களுக்காக...ஒரியண்டல் கல்லூரியை நடத்தும் துணிவை ஏற்றுக் கொள்ளுங்கள் என்ற கோரிக்கையை “உள்ள ஒலி”யாக்கித் தருகிறோம். எம்மை வகுப்பு வாதி என்னும்—பெரியோரே! திராவிட இயக்கத்தாரை குறுகிய மனப்பான்மை படைத்தோர் எனக் கூறுவோரே! வகுப்பு வாரி பிரதிநிதித்துவத்தை எதிர்த்து நிற்போரே! மீண்டும் கருத்தில் பதிய வையுங்கள் அந்த எண்களை! 3, 57, 90.

கலைஞர் மு. கருணாநிதி · உணர்ச்சிமாலை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்