பொருளடக்கம்

8. பத்தினியே உன்போல்...!

கட்டுரை 8 / 10

பத்தினியே உன்போல்...!

O Chaste Woman, Like You...!

அச்சுப் பக்கம் 42–43

scan 42 (the article opening) shows no printed numeral

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

“ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி என்கிறார்களே அது எப்படிப் பொருந்தும் ?”
“ஐவர் என்றால் ஐந்து பஞ்ச பூதங்கள், காந்திஜி கூட அரிஜன் பத்திரிகையில் அப்படித்தான் வியாக்கியானம் செய்திருக்கிறார். எல்லாம் தத்துவார்த்தம்”
“பஞ்ச பூதங்களா ?......சரி... அவள் கர்ணன் மேலுங் காதல கொண்டாளாமே அந்த ஆறாவது பூதம் எதுவோ ?”

“.........” பதில் இல்லை.

“பருவமடையாத குந்தி தேவி கர்ணன் என்ற பாலகனை கன்னத்தால் பெற்றாள் ! அது எப்படி முடியும் ?”
“பகவத் அனுக்ரகம், வரப்பிரசாதம்”
“பால்யத்திலே சூரிய பகவானைக் கூடி பிள்ளை பெற்றவள் பிறகு பாண்டு மகாராஜாவை மணந்தது பத்தினி தன்மைக்கு ஏற்றதா ?”
“அட பாவி...சூரியனை அவள் கூடினாளா ? டே நாக்கு அழுகிவிடுமடா ! அநியாயம் பேசாதே ! குந்தி தேவி குளிகை சாப்பிட்டாள். சூரியன் வந்தார். வரம் தந்தார். உடனே கர்ணன் தோன்றினான். பார்த்தது மாதிரி பொய் பேசாதேடா பாவிப்பயலே !”
“ஓகோ அப்படியா !...சரி ! பாண்டுவை மணந்த குந்தி தேவி யமதர்மனுக்கு தர்மரையும், வாயுபகவானுக்கு பீமரையும், இந்திரனுக்கு அர்ச்சுனரையும் பெற்றாளாமே...அது ?”
“அதிலும் தோஷமில்லை, யமன், வாயு, இந்திரன் மூவரையும் குந்தி தேவி கையால் தொடவில்லை. குளிகையை சாப்பிட்டாள். அவர்கள் பிரத்யக்ஷமானார்கள் அவள் கும்பிட்டாள். குழந்தைகள் தோன்றினார்கள். இதெல்லாம் தத்துவார்த்த மடா தருதலை !”

*

வயதில் பெரியவரை எதிர்த்துப் பேசுவானேன் என்று கேள்வி கேட்ட வாலிபன் திரும்பி விடுகிறான். அல்லது சாக்கடையில் சவ்வாது மணமா கிளம்பும் என்ற திருப்தியோடு பேச்சை முடித்து விடுகிறான்.

ஆனால் ஒன்று...தத்துவார்த்த முக்காடு போட்டு தகராறுப் புராணங்களைக் காப்பாற்றப் புறப்படும் பிரசங்க பூஷணங்கள் ஸ்ரீ ஜத் கோவிந்தராஜ அய்யங்காரால் எழுதப்பட்டு 1937-ல் வெளியிடப்பட்ட வில்லிபாரத வசனம் 43-ம் பக்கத்தைச் சற்றுப்புரட்டிப் பார்க்கட்டும்.

குழந்தை வேண்டி குந்தி குளிகை சாப்பிடுகிறாள். இந்திரன் தோன்றுகிறான். தோன்றியவன் குந்தியைத் தொடாமல். அவள் துவளாமல்... “வரந் தந்தேன்” என்று சொல்லி மறைந்து விட வில்லை. படியுங்கள், அய்யங்காரே கூறுகிறார் அழ்காக! சுவை கூட்டி!

“பீதாம்பரமும் பொன்னாபரணமும் தலையில்

முடியும், வில்லும் தோளும், வேலும் கையும், வீரகண்டையும் விளங்கத் தோன்றிய எழில் தன்னைக் கண்டு மனங்களி கூர்ந்து மங்கை குந்தியும் காமக்கனி யெனக் கட்டி அணைத்தனள். ஏந்தினன் இந்திரன். தாங்கிய கையுடன் தையலைத்தழுவி அமளியிற் கடத்தி அருங் கலையுடனே அணைந்தனன் பன் முறை (ஒரு முறை யல்ல).

இன்பக்கடலில் இறங்கிய மாது அன்பே உருவாய்த் தன் பெருந் தேவுடன் கூடிக் கூடி குலவிக் குலவி ஆடியாடி அகங்களி கூர அவனே தானாய் தானே அவனாய் ஓருருவாகிப் பெருங்களிப்புடனே பெற்றனள் போகம், கலவியிற் களைத்து மண்ணையும் மறந்து தன்னையும் மறந்தாள் !”

மன்னன் பாண்டுவின் மனைவி மாற்றான் மடியிலே இந்த மயக்கம் காணுகிறாள், இதை நமது வைதீகப் பித்தர்களிடம் காட்டினால்...“குடிகேடா ! குருடா ! பத்தினியைப்பழிக்காதேடா !” என்று குதிப்பார்கள், வரத்தால் பிறந்த குழந்தைகளப்பா பாண்டவர்கள் என்று பழைய கள்ளையே புதிய கலயத்தில் ஊற்றி காலக்ஷேபம் செய்வார்கள்.

இந்திரன்-குந்தி இவர்களின் இன்பலோக வர்ணனையை அய்யங்கார் ஒருவரே தீட்டியுள்ளதை நாம் எடுத்து நீட்டினால் “பாரா முகம் உன்னையே” என்று வெறுத்துப் பேசிவிட்டு பாஞ்சாலி, குந்தி சிலைகளுக்கு முன் நின்று “பத்தினியே உன் போல் இத்தரை மீதினில்” என்று பாட ஆரம்பித்து விடுவார்கள்.

என் செய்வது ? எதிர்காலந்தான் பதில் சொல்ல வேண்டும்.

கலைஞர் மு. கருணாநிதி · உணர்ச்சிமாலை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்