பொருளடக்கம்

9. அன்னை நாகம்மையார்!

கட்டுரை 9 / 10

அன்னை நாகம்மையார்!

Mother Nagammaiyar!

அச்சுப் பக்கம் 45–46

scan 45 (the article opening) shows no printed numeral

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

பெரியார் ராமசாமி அவர்கள் இளைஞர் ராமசாமியாக இருந்த காலம் வரலாற்று ஆசிரியர்களுக்கு சுவையூட்டும் பகுதி.

பொதுநலவாழ்வில் அவருக்கு கிடைத்த பட்டம் பெரியார். இளமையில்—சுயநல வாழ்வில் ‘மைனர்-காலி’-என்ற மகுடங்கள் ராமசாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்தன. அவருடைய பத்தொன்பதாவது வயதில் நாகம்மையார் வாழ்க்கைத் துணைவியாக வந்து சேர்ந்தார்கள். பருவகால மாறுதல்கள் அவர்களைப் பிணைப்பதற்கு முன் விளையாட்டுப் பருவத்திலேயே அந்தக் கொழுந்து உள்ளங்கள் கூடிக் குலாவிக் கொண்டன,

“நான் உன்னையே மணப்பேன்; வேறு யாரையும் மணக்க மாட்டேன்” இந்த உறுதி தளும்பும் காதல் தொனி அந்த இளம் வீணைகளில் ஒரே சமயத்தில் அதிர்ந்து ஒலித்தது, இராமசாமிக்கு வயது 19! வாலிபம் அவருடைய உடற்கட்டில் நர்த்தனம் செய்த காலம்! ‘பிள்ளையாண்டானுக்கு சீக்கிரத்தில் ஒரு கட்டையைக் கட்டிவிட வேண்டும்’ என்று பெற்றோர்கள் தீர்மானிக்கிற அளவுக்கு வாலிப ராமசாமி “நல்ல பிள்ளை” என்று பெயர் எடுத்தார்.

நாகம்மையின் 13-வது வயதில் பெண் கேட்கப் பலர் வந்துவந்து போயினர். அம்மையாரின் அபிப்பிராயத்தை அசைக்க முடியவில்லை. ராமசாமியின் உருவம் அழியாத ஓவியமாக தன் உள்ளத்தில் தீட்டப்பட்டிருப்பதை அவர்கள் காட்டத் தவறவில்லை. அந்தப் புது மலரைப் பறித்துக்கொண்டுபோக ஒரு ஆசைக்காரத் தாத்தாவும் வந்தார். இரண்டு மனைவிகளை இழந்த அந்தக் கிழம், வாலிப ஒய்யாரங் கொட்டிக் கொண்டு சம்பந்தம் பேச வந்தது, நாகம்மா நெருப்பு மொழிகளை இறைத்தார்கள்.

அந்த அனல் வீச்சில் “மணந்தால் ராமசாமியை மணப்பேன்; இன்றேல் தற்கொலை செய்துகொண்டு இறப்பேன்,” என்ற தீப்பொறிச் சொற்கள் தெரித்துக் கிளம்பி பெற்றோர்களின் பிடிவாதத்தைத் தீய்த்தன, ‘லாயத்திலே தள்ளி அடைக்கப்படும் குதிரைக்கும் கனைத்திட உத்தரவுண்டு’ என்ற புரட்சிக் கவிதைக்கு எடுத்துக்காட்டாக சிறுமி நாகம்மா நின்றார்கள், கிழ மாப்பிள்ளை வந்த வழியே நடையைக் கட்டினார்; 13 வயது சிறுமி தன் வாழ்வைத் தானே பண்படுத்திக் கொண்டார்,

இங்கே ராமசாமியாருக்கு செல்வக் குடும்பங்களில் பெண் தேடினார்கள். “சீமான் வீட்டுச்சிங்காரி தேவை யில்லை. என் சிந்தையில் குடியேறியவள் தான் என் குடும்ப விளக்காக வேண்டும்” என்று கூறி விட்டார் ராமசாமி.

தாய் தந்தையர் முடிவுப்படிதான் மணம் செய்து கொள்ள வேண்டுமென்று, மணமக்களை மந்தை மாடுகள் சேர்ப்பதென எண்ணியிருந்த காலமது. ஆம் 1898! அப்பொழுதே காதல்புரட்சி செய்தவர்கள் ராமசாமி—நாகம்மா!

வெற்றியின் சின்னமாக அவர்கள் திருமணம் அமைந்தது.

வெள்ளத்தினோடொரு வெள்ளமாய்க் கலந்து விட்ட அவர்கள் இன்பவாழ்வு, முப்பத்திஐந்து ஆண்டுகள் நடைபெற்றது. 1933 வரையில்! ராமசாமி-நாகம்மா குடும்ப வாழ்க்கையில் சிந்தனையைக் கிளறும் நிகழ்ச்சிகள்—பகுத்தறிவைத் தூண்டும் பல குறும்புகள்—பெண் உயர்வுக்கான சம்பவங்கள் பல! பல! வாலிப ராமசாமி-வயதேறிய ராமசாமிப் பெரியாராக ஆனகாலத்திலும் அம்மையாரிடம் கொண்டிருந்த அன்பு வரண்டு விடவில்லை. வற்றாத உயிராறாகவே பெருக்கெடுத்தோடியது.

கிழவர் ராமசாமியைப் பார்த்து யாராவது “பெரியவர்; வயதேறியவர்; கிழவர்;” என்று சொன்னால், உடனே அவர் நாகம்மையாரைக் காட்டி “என்னை அப்படிச் சொல்லாதீர்கள் அந்தம்மாளுக்குக் கோபம்வரும்” என்பார். அப்பொழுது பார்க்க வேண்டுமே நாகம்மாவின் ஆனந்தத்தை! அன்பு தவழும் கண்களால் பெரியாரின் வார்த்தையை ஆமோதிப்பார் அம்மையார்! ஆமாம்! அவர்கள் உள்ளத்தால் இளங் காதலர்கள் தான்! இல்லற வாழ்விலும் பொது வாழ்விலும் நீங்காத துணையாக நின்ற நாகம்மையாரை 11-5-1933-ல் பெரியார் இழந்தார். ஆனால் அவர் துக்கத்தால் துவண்டு போய்ப் படுத்துவிடவில்லை. மறு நாளே 12-5-1933ல் பெரியார் திருச்சியில் ஒரு கிறிஸ்துவ திருமணத்தை 144 செக்ஷனை மீறி நடத்திவைத்து கைது செய்யப்பட்டார். காதலையும் மீறிய கடமை, பெரியாரின் வாழ்வுக்கே புது இலக்கியம் கோர்த்தது.

கலைஞர் மு. கருணாநிதி · உணர்ச்சிமாலை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்