பொருளடக்கம்

3. பூம்புகார்

கட்டுரை 3 / 4

பூம்புகார்

Poompuhar

ஸ்கேன் 20

No printed page numeral is visible on any scan of this article; nothing is inferred.

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

கம்பராமாயணம் மட்டுமே கவிதைத் தேனாறு, கம்பன் ஒருவன்தான் கவிச்சக்கரவர்த்தி என்றெல்லாம் பேசப்பட்ட நிலைமை கரைய ஆரம்பித்திருக்கிறது இப்போது. கம்பனுக்கு மட்டுமே மாலை அணிவித்து மகிழ்ந்தவர்கள் இளங்கோவடிகளுக்கும் மதிப்புத் தர முன்வந்திருக்கிறார்கள். கம்பன் மகாநாடுதான் கவிதை மகாநாடு என்று கருதிக்கிடந்தவர்கள் சிலப்பதிகார மகாநாடு நடத்துகிற அளவுக்கு பெருநோக்கம் பெற்றிருக்கிறார்கள்.

திராவிடத்திலே அரசியலில் மட்டுமின்றி, சமுதாயத்தில் மட்டுமின்றி, இலக்கியத் துறையிலும் புரட்சி செய்தவர்கள் அறிவியக்கத்தாராகிய நாம் என்பதை யாரும் மறுக்க முடியாது—கம்பனுக்குக் கோயில் கட்டி அவனைக் கடவுளாக வணங்குகிற அளவுக்கு முதிர்ந்து போன மூடநம்பிக்கையை நமது கம்பராமாயண எதிர்ப்புக் கருத்துக்கள் முறியடித்தன. கம்பனை நாம் குறை கூறிய நேரத்திலே நம்மீது வீசப்பட்ட கணைகள், கொஞ்சமல்ல, கொடுஞ் சொற்களால் அர்ச்சிக்கப்பட்டோம். கலையுணர்ச்சி இல்லாதவர்கள் என்று பேசப்பட்டோம். “செவிச்சுவையுணரா வாயுணர்வின்மாக்கள்” என்று சுடு சொல்லால் தாக்கப்பட்டோம். ஆயினும் வெற்றி நமக்குத்தான் கிடைத்தது. நம் நோக்கம் கம்பராமாயண நூலே நாட்டில் கிடைக்கமுடியாமல் செய்துவிட வேண்டுமென்பதல்ல. கம்பன் செய்த தவறை நாட்டிலே எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டுமென்பதுதான் நம் குறிக்கோள். கம்பராமாயணம் திராவிடரை அரக்கர்கள் குரங்குகள் என்று சித்தரிக்கும் சிலந்திக்கூடு. ஆகவே அதை வெறுக்கவேண்டுமென்றோம். அடிப்படையான வெறுப்பே அதுதான். ஆரிய ராமனை கம்பன் கடவுள் என்று கூறிவைத்தான்.

அந்தக் கயமைத் தனத்தைக் கண்டித்தோம். அப்படிப்பட்ட ஒரு நூல் திராவிடரின் பூஜைக்குரியதாயிருப்பது தன்மானமற்ற செயல் என்று விளக்கினோம். காலத்துக்கேற்றவாறு கம்பராமாயணத்திலே உள்ள கருத்துக்களை அனுமதிக்கத்தான் வேண்டுமென்றார்கள் கம்பதாசர்கள்! நாமோ அவைகளை ஆட்சேபிக்கவில்லை. ஒரு இனத்தையே இழிவுபடுத்தும் முறையில் கம்பன் திராவிடரைக் காட்டிக்கொடுத்திருக்கிறான் என்பதே நம்முடைய தலையாய குற்றச்சாட்டு, அதைத்தான் எதிர்த்துப் போராடினர் புலவர் பலர். அந்த நேரத்திலே கூட நாம் கூறினோம் நாங்கள் இலக்கிய விரோதிகளல்ல, சிலப்பதிகாரம் போன்ற நூல்கள் அக்காலக் கருத்துக்கள் பல கொண்டனவாயினும் திராவிடரை இழித்துப் பேசவில்லை என்பதோடு திராவிடரை உயர்த்திக் காட்டியிருக்கின்றன அவைகளை நாங்கள் வெறுப்பதில்லை என்று விளக்கியிருக்கிறோம்.

சிலப்பதிகாரம் போன்ற தமிழரின் செல்வங்கள் புதைபட்டுக் கிடக்கும் போது தமிழனை அரக்கனெனக் கூறும் கம்பராமாயணத்துக்கேன் விழா நடத்துகிறார்கள் வீணர்கள் என்று வினவியதுண்டு. நாம் அப்படி வினவியது சிலப்பதிகாரத்தின் மீது நமக்கேற்பட்ட பக்தியல்ல. பகவத் உணர்ச்சியுமல்ல. அல்லது அதிலே காணப்படும் அளவுக்கு மீறிய கற்பனைச் செய்திகளல்ல. தமிழர்களுடைய வாழ்க்கை முறை சிலப்பதிகார காலத்தில் எப்படியிருந்தது என்பதை விளக்கும் நூலாக சிலப்பதிகாரம் அமைந்திருக்கிறது என்பதற்காகவும், வடநாட்டாரின் முடிநெறித்த திராவிட வீரர்களின் சிறப்பு காணப்படுகிறது அதிலே என்கிற காரணத்தாலும் நீதிக்காக வாழ்ந்த திராவிட மன்னர்களின் பெருமை கூறப்படுகிறது அதிலே என்கிற ஆர்வத்தாலும் கண்ணகியென்கிற பாத்திரம் கற்பனைக்கெட்டாத செயல்களை செய்தாள் என்பதை நம்பாவிட்டாலும் அக்காலப் பெண்மணிகளின் துணிவு சித்தரிக்கப்பட்டுள்ள தன்மையை அறிந்துகொள்கிற வாய்ப்பு அதிலே இருப்பதாலும், சேர, சோழ, பாண்டியர் மூவருடைய ஆட்சிபற்றிய விபரங்கள் தெரிந்துகொள்ளும் அரிய நூல் அது என்பதாலும் சிலப்பதிகாரத்தை நாம் ஆதரிக்கிறோமே தவிர வேறில்லை.

திருக்குறளை ஏன் போற்றுகிறோம். தெய்வப் புலவர் திருவள்ளுவர் என்பதற்காகவா? இல்லை; அக்காலத்

தமிழகத்தைப் பற்றிய நல்லதொரு படப்பிடிப்பு திருக்குறள் என்பதாலும் திராவிடர் நீதி முறைகள் குறிக்கப்பட்டிருப்பதாலுமே குறளுக்கு விழா எடுக்கிறோம். குறைகளே யில்லாதது அல்ல குறள். அந்தக் குறைகள் அக்காலத்தில் எழுதப்பட்ட நூல் என்கிற ஒரே காரணத்தில் அடிபட்டுப் போகின்றன. வரப்போகும் காலங்களிலே இன்றைக்கு எழுதப்படுகிற புரட்சிக் கருத்துக்கள் கூட பழமையென்று கூறப்படலாம்.

பொதுவாக குறள், சிலப்பதிகாரம் போன்ற நூல்களிலே திராவிடரின் பெருமை ஒளிவிடுகிறது; ஆகவே பாராட்டுகிறோம்; கம்பன் திராவிடரை இழி மக்களாய் ஆக்கிவைத்தான்; ஆகவே எதிர்த்தோம்.

நம்முடைய பேச்சுக்களுக்கு சக்தி உண்டு என்பதைத்தான் கம்பனையே கட்டியணைத்திருந்தவர்கள் சிலப்பதிகாரத்துக்கும் மாநாடு நடத்த முன் வந்திருப்பது காட்டுகிறது.

ஆனால் ஒன்று கம்பனைப்போல ஆக்கி விடக்கூடாது, இளங்கோவடிகளை! காவிரிப்பூம்பட்டினத்திலே கூடிய மகாநாட்டில் இந்திர விழா கொண்டாடும்படியாக உபதேசம் செய்திருக்கிறார் ஆர். கே. சண்முகனார்! அந்த மூட நம்பிக்கைகளை வளர்ப்பதற்காக இருக்கக்கூடாது சிலப்பதிகார மகாநாடு.

“கொங்கணர் கலிங்கர் கொடுங் கருநாடர் பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர் வடவாரியரோடு வண்டமிழ் மயக்கத்துன்

கடமலை வேட்டமென் கட்புலம்பிரி யாது கங்கைப் பேரியாற்றுக் கடும்புனனீத்தம் எங்கோ மகளை யாட்டிய வந்நாள் ஆரிய மன்ன ரீரைஞ்ஞூற் றுவர்க்கு ஒரு நீயாகிய செருவெங்கண் விழித் துக் கண்டது கடுங்கட் கூற்றம்”

என்பன போன்ற செய்யுட்களை விளக்கி திராவிடரின் பண்டைய வீரத்தை—நீதியை—நினைவுபடுத்துவதற்கு பயன்படவேண்டும். பூம்புகாரில்கூடி மாநாடு நடத்தியவர்கள் மட்டுமே சிலப்பதிகாரத்துக்கு உரியவர்களல்ல. சிலப்பதிகார மாநாட்டைப்பற்றி அவர்கள் சிந்திக்கத் தூண்டியதே நாம்தான். பூம்புகார் மாநாடு பூரிப்பு தருகிறது என்றாலும் சண்முகம் போன்றவர்கள் ‘இந்திர விழா’ போன்ற புது மூடத்தனங்களை வளர்த்து விடக்கூடாதே என்று அஞ்சுகிறோம்.

Assembly provenance

- scan 20 — publications/thudikkum-ilamai/pages/0020-poompuhar-1.md - scan 21 — publications/thudikkum-ilamai/pages/0021-poompuhar-2.md - scan 22 — publications/thudikkum-ilamai/pages/0022-poompuhar-3.md - scan 23 — publications/thudikkum-ilamai/pages/0023-poompuhar-4.md - scan 24 — publications/thudikkum-ilamai/pages/0024-poompuhar-5.md

P3 assembly audit

- source scans — 20–24 / 5/5 records - page-record coverage — 5/5 PASS - verified boundary-word joins applied — 2 - scan 20→21: வாயுணர்வின் + மாக்கள் = வாயுணர்வின்மாக்கள் - scan 21→22: வெறுப் + பதில்லை = வெறுப்பதில்லை - quoted verse across scans 23→24 — PRESERVED / PASS - omitted P2 body text — 0 - added unsupported body text — 0 - modernization / paraphrase — 0 - unresolved assembly issues — 0 - result — P3 COMPLETE / PASS

P5 strict visual-fidelity revalidation

- all contributing source scans reopened directly at P5 — PASS; - canonical P2 page records compared word-by-word / punctuation-by-punctuation — PASS; - P5 body corrections required — 0; - source wording / punctuation / historical type identity changed at P5 — 0; - page-boundary joins revalidated — PASS; - unresolved fidelity discrepancies — 0; - status — STRICT-REVIEWED / FROZEN TAMIL AUTHORITY.

கலைஞர் மு. கருணாநிதி · துடிக்கும் இளமை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்