பொருளடக்கம்

2. அண்ணாமலைக்கு அரோகரா!

கட்டுரை 2 / 4

அண்ணாமலைக்கு அரோகரா!

Arohara to Annamalai!

ஸ்கேன் 13

No printed page numeral is visible on any scan of this article; nothing is inferred.

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

“ஓய்! நீல வர்ணம்! என்னிடம் காட்டாதே உன் பெருமையை! எங்கேயாவது ஆழ்வார் வர்க்கம் இருந்தால் அங்கே போய்க் காட்டும். சிருஷ்டி கர்த்தாவிடமா சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறாய். சபாஷ்!”
“ஓய்! பல தலை! வீண் ஜம்பம் அடிக்காதீர். உமது பெருமையை மற்ற தலைகளிடம் சொல்லிக் களிப்படையும். வைகுண்ட வாசனிடமா வீராப்பு! வெகு நன்று!”
“ஆத்திரப்பட்டு ஆடாதே தம்பீ! நீ மோகினி உருவம் எடுத்து சிவனோடு கலவி செய்த காரணத்திற்காக உனக்கு மதிப்புத் தர முடியாது!”
“மகளையே காதலித்து, கரடியைக் கூடிய மகானுபாவரே! மூடும் உமது நாலு வாய்களையும்! எனது சங்கின் முழக்கத்திலே—சக்கரத்தின் வீச்சிலே வீழ்ச்சி பெறுவாய். நினைவிருக்கட்டும்.”

தேவலோகத்திலே—ஆமாம்—மனிதரினும் மேம்பட்ட முப்பத்து முக்கோடி தேவர்கள் வாழும்

புண்ய பூமியிலே ஒரு சச்சரவு! யாருக்கும் யாருக்கும்? சாட்சாத் பிர்மாவுக்கும் விஷ்ணுவுக்குந்தான்! சிருஷ்டி கர்த்தாவுக்கும், ஸ்ரீயப்பதிக்கும் ஏற்பட்ட சச்சரவில் நடந்த சம்பாஷணை இது. இதன் சாரம் என்ன? யார் பெரியவர் என்பது! படைப்புத் தொழில் புரியும் பிரமன் பெரியவனா? காத்தல் வேலை செய்யும் விஷ்ணு பெரியவனா என்ற தர்க்கமும் முற்றுகிறது. இவர்களுடைய சண்டையில், இவர்களுடைய தனிப்பட்ட நடவடிக்கைகளின் சாயம் வெளுத்ததே தவிர தீர்ப்புக் கிடைக்கவில்லை. தேவலோகத்திலா? அதுவும் தேவாதி தேவர்களுக்குள்ளா சண்டை என்று சந்தேகம் ஏற்படலாம். தேவர் உலகத்தில் சண்டைமட்டுமல்ல வழக்குகள் பல வண்டி வண்டியாக உண்டு! அங்கு மாத்திரம் கோர்ட்டுகள் ஏற்படுத்தி விசாரணை நடத்தியிருந்தால், பரமசிவன் தாருகாவனத்து ரிஷி பத்தினிகளைக் கற்பழித்த வழக்கு, பிருந்தையை விஷ்ணு பலாத்காரம் செய்த வழக்கு, அகல்யையை இந்திரன் கற்பழித்த வழக்கு, சப்தகன்னியரை அக்கினி பகவான் சூறையாடிய வழக்கு, குரு பத்தினியை சந்திரன் கூடிய வழக்கு, எண்ணாயிரம் சமணர்களை சம்பந்தர் கழுவேற்றிய கொலை வழக்கு, இன்னோரன்ன வழக்குகள், கருவழித்த குற்றங்கள், திருட்டுக் கேசுகள் முதலியன நடைபெற்று தீர்ப்புகள் வந்திருக்கும். பூலோகத்தில் இறந்து சொர்க்கத்திற்குச் செல்லும் வக்கீல்களுக்கும் அங்கு நல்ல சான்சு கிடைத்திருக்கும்.

மேற்கண்ட வழக்குகளில் ஒன்றாகத்தான் பிர்மாவுக்கும் விஷ்ணுவுக்கும், “யார் பெரியவன்” என்ற வழக்கு ஆரம்பமாயிற்று! இதைத் தீர்த்து வைக்க சிவனார் வந்து சேர்கிறார். வழக்கை விசாரிக்கிறார். தீர்ப்பு கூறுவது சங்கடமாகி விடுகிறது. உடனே ஆகாயமளாவ ஜோதியாகக் கிளம்புகிறார். அந்த ஜோதியின் முடியை ஒருவரும், அடியை ஒருவரும் கண்டு திரும்ப வேண்டும். யார் முதலில் திரும்புகிறாரோ அவரே, பெரியவர் என்று சிவனார் முடிவு கூறிவிடுகிறார். முடியை நோக்கி பிர்மா அன்னப்பறவை உருவில் பறந்தார். பன்றி உருவமெடுத்து அடியைக்காண பரந்தாமன் பாதாளத்தைக் குடைய ஆரம்பித்தார். இருவரும் வெற்றியை அணுக முடியவில்லை. மேலே பறந்து கொண்டிருக்கும் பிர்மாவுக்கு எதிரில் ஒரு தாழம்பூ மேலே இருந்து கீழே வந்துகொண்டு இருந்தது. “ஓ! தாழம்பூவே எங்கிருந்து வருகிறாய்” என்றார் பிரம்மா. “சிவபெருமானின் சடாமுடியிலிருந்து வருகிறேன்”, என்றது தாழம்பூ!

“நான் சிவனின் முடியைத் தேடிப்போகிறேன் என்னால் அதைக் கண்டு பிடிக்க முடியவில்லை. நான் அவரது முடியைக் கண்டுவிட்டதாக ஒரு பொய்சாட்சி சொல்லுகிறாயா” என்று கெஞ்சினார் பிர்மா?

பொய் சாட்சி சொல்லத் தாழம்பூ ஒத்துக்கொண்டது. அதன்படி சிவனிடம் சென்று நான் முடியைக்

கண்டுவிட்டேன் என்று பிர்மா கூறினார். அதற்குத் தாழம்பூ, ஆம் நானும் பார்த்தேன் என்று சாட்சியம் கூறிற்று. பாதாளத்தை நோக்கிப் பன்றி உருவிற் சென்ற விஷ்ணு நாரத முனிவரை சந்தித்துத் தன் முயற்சியில் வெற்றியடைய முடியாது என்பதைத் தெரிந்து கொண்டு தோல்வியோடு திரும்பினார். பரமசிவன், பிர்மாவும் தாழம்பூவும் பொய் கூறியதைக் கண்டுபிடித்து அவர்களுக்கு சாபம் அளித்தார். இதிலிருந்து பிர்மா, விஷ்ணுக்களின் கர்வம் அடங்கியதோடு, சிவனே யாவரிலும் பெரியவர் என்ற தீர்ப்பும் கூறப்பட்டது. சண்டையிட்டவர் வெட்கித் தலைகுனிந்தனர்.

இது அருணாசல புராணம். தீப ஒளித்திருவிழா நடக்கப்போகிற திருவண்ணாமலை ஸ்தலத்தின் திருப்புராணத்தில் காணப்படும் ஆபாசங்களில் இதுவும் ஒன்று! அண்ணாமலையில் நடக்கும் கார்த்திகை தீபத்திற்குப் பலப்பல ஐதீகங்கள் உண்டு! சிவன் சில அசுரர்களை நெற்றிக் கண்ணால் எரித்துவிட்டதாகவும் அதுவே சொக்கப்பானைத் திருநாள் என்றும் ஒரு புராணம் கூறுகிறது. மற்றொரு புராணத்தில் அக்கினிதேவன், சப்த கன்னியரைக் காமுற்றதாகவும் அதைக் கண்ட அவன் மனைவி சுவாகா தேவி அருந்ததி கற்புடையவளானதால் அவள் உருவத்தைத் தவிர மற்ற ஆறு கன்னிகைகளின் உருவத்தை எடுத்து அக்கினி பகவானின் ஆசையைத் தீர்த்ததாகவும், அந்த ஆறு உருவங்களும் கார்த்திகைப்

பெண்களாக அவர்கள் முருகனுக்குப் பாலூட்டியதால் முருகனுக்கு கார்த்திகேயன் என்ற பெயர் ஏற்பட்டதாகவும், பிறகு அந்தப் பெண்கள் கார்த்திகை நட்சத்திரங்களாக மாறியதாகவும் அதுவே கார்த்திகை விரதத்திற்குக் காரணமென்றும் மற்றொரு புராணம் சொல்லுகிறது. மாபலி சக்கரவர்த்தி பற்றிய மற்றொரு புராணமும் உண்டு!

இம்மாதிரியே, இந்த நாட்டில் நடைபெறும் பண்டிகைகளுக்கும், உற்சவங்களுக்கும் ஆயிரக்கணக்கான—ஒன்றுக்கொன்று முரண்பட்ட கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அந்தக் கதைகளில் யாராவது ஒரு அசுரன் கொல்லப்பட்ட செய்தியும், அல்லது தேவர்களுக்குள் நடந்த அற்பத்தனமான, ஆபாசமான தகராறும் அதுவுமில்லையானால் ஒரு வஞ்சகத்தையும், விபச்சாரத்தையும் வளர்க்கும் புராணமும் காணப்படுமேயல்லாது, சிறிதாவது அறிவுக்குப் பொருத்தமான, ஒழுக்கமான நிகழ்ச்சிகளைக் காணமுடியாது. இவைகளை சிந்தித்துப் பார்க்க இந்த நாட்டு மக்களுக்கு நேரமோ, நினைப்போ இருப்பதில்லை. எதை யெடுத்தாலும் முன்னோர்கள் வார்த்தை என்று முலாம் பூசப்பட்டு பழக்கவழக்கம் என்ற பசப்பு மொழி பேசப்படுகிறதே தவிர மனிதராக வாழ முயற்சிப்பதே கிடையாது!

இம்மாதிரி ஆபாசக் கதைகளின் பேரால் மாதத்திற்கொரு பண்டிகை! மாதத்திற்கொரு உற்சவத் திருநாள்! அதற்காக பல ஆபாச ஆட்டங்கள்! ஆடம்பரமான செலவுகள்! கண்டவர் சிரிக்கும் காட்டு மிராண்டி நடவடிக்கைகள்! இவைகள்தான், ஞானத்தில் சிறந்து சுதந்திர தாகமெடுத்து சுயராஜ்யத்திற்கு ஏன்? பொது உடமைக்கும் தயாரான சூரர்கள் வாழ்வதாகச் சொல்லப்படும் இந்த நாட்டிலே நடைபெறுகின்றன!

பாட்டாளி மக்களின் பச்சைக் குழந்தைகளின் வறண்ட தலைக்கு ஒரு துளி எண்ணெய் கிடையாது. திருவண்ணாமலைத் தீபத்திற்று ஆயிரக்கணக்கான நெய் டின்கள் உடைக்கப்படுகின்றன. மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள இந்த நாட்டு மாதர்களுக்கு ஒருமுழத் துணி கிடைப்பது கஷ்டமாயிருக்கிறது. ஆனால் அண்ணாமலை தீபத்திற்குப் பீஸ் பீஸாகத் துணிகள் கொளுத்தப்படுகின்றன. பசித்த மக்களுக்கு ஒரு பிடி சோறு கிடையாது. ஆனால் அந்தப் பரமபிதாவுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இங்கு வறுமையால் வாடும் மக்களுடைய வயிறு எரிகிறது. அங்கு, அண்ணாமலையில் ஆடம்பரத்தோடு அறியாமை நெருப்பு எரிகிறது. அதற்கு நெய் வார்க்கப்படுகிறது. அந்தோ! கொடுமை! கொடுமை!

திராவிட மக்களுடைய உணர்வுக் கழனியிலே அறியாமையை நீராகப் பாய்ச்சி, மூடப் புராணீகப் பழக்க வழக்கங்களை பயிராக வளர்த்து, அவ்வப்போது முளைக்கும் ஆராய்ச்சிகளைக் “களை” என்று கழறி, பயமெனும் அரிவாளால் களைந்து தங்கள் சுயநலத்துக்கேற்ற வசதிகளை விளைவாகப் பெற்று பிழைப்பை அறுவடை செய்து பார்ப்பனரும், பணக்காரரும், படித்தவரும் வாழ்கின்றனர். இவர்களுடைய ஒப்பந்தம் முறிந்து கூட்டுச் சுரண்டல் முறை ஒழியவேண்டுமானால் திராவிடர் தன்மானம் பெறவேண்டும். திருவண்ணாமலை தீபங்கள் அணைக்கப்படவேண்டும். அதுவன்றி “அண்ணாமலைக்கு அரோகரா!” போட்டுக்கொண்டேயிருந்தால் பழைய கற்காலத்தை நோக்கிக் கட்டைவண்டிப் பிரயாணத்தை கட்டுசாத மூட்டையோடு ஆரம்பிக்க வேண்டியதுதான்! உணர்வார்களா திராவிடர்கள்? உணர்ந்து ஆவன செய்வார்களா?

Assembly provenance

- scan 13 — publications/thudikkum-ilamai/pages/0013-annamalaikku-arogara-1.md - scan 14 — publications/thudikkum-ilamai/pages/0014-annamalaikku-arogara-2.md - scan 15 — publications/thudikkum-ilamai/pages/0015-annamalaikku-arogara-3.md - scan 16 — publications/thudikkum-ilamai/pages/0016-annamalaikku-arogara-4.md - scan 17 — publications/thudikkum-ilamai/pages/0017-annamalaikku-arogara-5.md - scan 18 — publications/thudikkum-ilamai/pages/0018-annamalaikku-arogara-6.md - scan 19 — publications/thudikkum-ilamai/pages/0019-annamalaikku-arogara-7.md

P3 assembly audit

- source scans — 13–19 / 7/7 records - page-record coverage — 7/7 PASS - verified boundary-word joins applied — 2 - scan 17→18: ஆடம்பர + மான = ஆடம்பரமான - scan 18→19: சுயநலத்துக் + கேற்ற = சுயநலத்துக்கேற்ற - omitted P2 body text — 0 - added unsupported body text — 0 - modernization / paraphrase — 0 - unresolved assembly issues — 0 - result — P3 COMPLETE / PASS

P5 strict visual-fidelity revalidation

- all contributing source scans reopened directly at P5 — PASS; - canonical P2 page records compared word-by-word / punctuation-by-punctuation — PASS; - P5 body corrections required — 0; - source wording / punctuation / historical type identity changed at P5 — 0; - page-boundary joins revalidated — PASS; - unresolved fidelity discrepancies — 0; - status — STRICT-REVIEWED / FROZEN TAMIL AUTHORITY.

கலைஞர் மு. கருணாநிதி · துடிக்கும் இளமை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்