பொருளடக்கம்

4. வெற்றி விளக்கு!

கட்டுரை 4 / 4

வெற்றி விளக்கு!

Lamp of Victory!

ஸ்கேன் 25

No printed page numeral is visible on any scan of this article; nothing is inferred.

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

நச்சுக் கோப்பையைக் கையிலே ஏந்தி-நெஞ்சிலே வீரத்தை யேந்தி—மொழியிலே கொள்கையை ஏந்தி-உயிர் விட்டிருக்கிறார்கள். நெருப்பிலே தள்ளப்பட்ட போதும் உடலைச் சாம்பலாக்க முடிந்ததே தவிர அவர்களின் உயர்ந்த லட்சியத்தைப் பொசுக்க முடியவில்லை. துப்பாக்கியிலிருந்து குண்டுகள் புறப்பட்டு அவர்கள் மார்பைத் துளைத்திருக்கின்றன. அப்போதும் கொள்கையிலே ஓட்டை ஏற்படவில்லை. அலைந்து திரிந்திருக்கிறார்கள், ஆதரிக்க யாருமில்லாது விரட்டப்பட்டிருக்கிறார்கள். வசைமாரிகளைத் தாங்கியிருக்கிறார்கள். மக்களின் முன்பு பைத்தியக்காரர்களாக மதிக்கப்பட்டிருக்கிறார்கள். காணத்தகாதவர்களாக-காதகர்களாக-கயவர்களாக நடத்தப்பட்டிருக்கிறார்கள். ஏச்சு ஒரு புறம்-ஏளனம் ஒருபுறம்-இப்படி மாறி மாறி எதிர்ப்பு அம்புகள் ஏவப்பட்டிருக்கின்றன. இவ்வளவையும் சமாளித்திருக்கிறார்களே தவிர சாய்ந்து போனது கிடையாது.

சுயநலம் அவர்கள் வாழ்வில் சுற்றிக் கிடந்தது கிடையாது. சொந்த விஷயம் அவர்கள் கொள்கையை சுக்கு நூறாக்கியது கிடையாது. குடும்பம் அவர்கள்

பாதைக்கு இடையூறு விளைத்தது கிடையாது. கோலாகலத்தை விரும்பியது கிடையாது. சாக அடிக்கப்பட்டார்கள். ஆனால் அவர்கள் சாகவில்லை. அதற்கு மாறாக புது உடம்பு பெற்றார்கள். புகழ் உடம்பு பெற்றார்கள். நெருப்பு அவர்கள் சரீரத்தின் மீது தாவியது, சதையைக் கருக்கியது. எலும்பை உருக்கியது. ஆனால் அவர்கள் கொள்கைகள் தணலிலே வெந்த தங்கமாயின.

ஏன், இத்தனை கஷ்டமடைந்தார்கள்.... அவதியை வலுவிலே ஏன் அணைத்துக் கொண்டார்கள்.... தாங்கள் மன்னர்களாகவா? அல்லது மடத் தலைவர்களாகவா? மாணிக்க ஊஞ்சலிலே மரகதக் கட்டிலிலே -மயில் ஆசனத்திலே - மந்தகாசர்களாய் அமர்ந்து மகிழ்ச்சிக் கூத்து ஆடவா? அப்படி நினைத்திருந்தால் அவர்கள் கையிலே சிலுவையோ—விபூதியோ—அல்லவா காட்சியளித்திருக்கும். அவர்கள் கரங்களில் இருந்தது அறிவு நூல்கள் தானே! அந்தஸ்தை விரும்பியிருந்தால் ஆண்டவன் - ஆண்டவனின் கதை - ஆண்டவனின் அற்புதம்-இப்படி யல்லவா காலக்ஷேபம் நடத்தியிருப்பார்கள். அவர்கள் விரும்பியது; மதத்தை மண்ணாக்கி, மடத்தனத்தை அழித்து, மக்கள் சமுதாயத்தைப் புதுமைச் சோலையாக்க வேண்டுமென்பதுதான். தாங்கள் அடியெடுத்து வைக்கும் புரட்சிப் பாதை பயங்கரம் நிறைந்தது என்பது அவர்கட்குத் தெரியும். தெரிந்தும் தைரியமாகக் கிளம்பினார்கள். தாங்கள் அழிக்கப்பட்டாலும்

தங்கள் கொள்கைகள் அழிக்கப்பட முடியாத நிலையை அடைந்தார்கள்.

நம் நாட்டிலே மட்டுமல்ல—நானில மெங்கணுமே ஆயிரக் கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்தே நாகரிகம் அரும்பக்கூட முடியாத நிலைமை இருந்திருக்கிறது. மேல் நாடுகளிலே இருந்த மத நம்பிக்கை நம்மைவிட மட்டமானது. அங்கேயிருந்த கடவுள்கள் நமக்கிருப்பதைவிட தொகையிலே அதிகமானவர்கள். அங்கேயிருந்த குருக்கள்-நம்மை ஆட்டிப் படைக்கும் குருக்கள் மார்களைவிடக் கொடுமை நிறைந்தவர்கள். அவர்கள் எல்லாம் இப்போது எங்கே? சீர்திருத்தம் முளை விட்டது. சிரித்துக் கிடந்த மூடநம்பிக்கைகள் மூலையில் போய் முக்காடிட்டு அமர்ந்தன. சீர்திருத்தவாதிகள் செத்து மடிந்தார்கள். சீர்திருத்தம் சீரழியவில்லை. செங்கோல் பிடித்தது. மேல் நாட்டிலேயிருந்த கடவுளின் சிலைகள் கண்காட்சிச் சாலைக்குப் போய்விட்டன. நம் நாட்டிலோ ஆற்றங்கரை கணபதி அப்படியே தானிருக்கிறார். அறியாமைக்கு நீர் ஊற்றி வளர்க்கப்படுகிறது. அதையும் அரசாங்கமே முன்வந்து செய்கிறது. சுக்கல் சுக்கலாகப் போன சோமநாதபுரம் கடவுளை இப்போது தூக்கி மனையில் வைத்து மகிழ்கிறது நமது அரசாங்கம். அது மட்டுமா? வேப்பிலைக்கட்டிய சாமியார் வருகிறார். தில்லையிலே நிர்வாண சாமியார் திரிகிறார், ஐயப்பன் கோயிலிலே பாம்பு அவதாரத்தில்

பகவான் வந்தார், ரமணர் செத்தார், வால் நட்சத்திரம் புறப்பட்டது, பாண்டுரங்கனைத் தூக்கினார்கள் வரமாட்டேன் என்று சொல்லி விட்டார். இந்த வருடம் தேர்தல் நடக்காது என்று அகில இந்திய அற்புத ஜோசியர் கூறிவிட்டார். இப்படி யெல்லாம் செய்திகள் வருகின்றன. அநேகமாக பத்திரிகைகள் எல்லாம் பஞ்சாங்கமாகி விட்டன. சரிந்துபோன சமுதாயத்துக்கு இன்னும் ஆழமாகச் சவக்குழி தோண்ட முயற்சி நடக்கிறது இங்கே.

அந்த முயற்சியை முறியடித்து முதுமை யேறிப் போன மூடக் கொள்கைகளை வேரோடு சாய்த்துப் புது வழி காணத்தான் அறிவியங்கம் பணியாற்றி வருகிறது.

அந்தப் பணியிலே ஒரு பகுதிதான் மே 20-ம் நாள் திண்டிவனத்திலே நடைபெறும் சமூக சீர்திருத்த மாநாடு. பல ஆண்டுகளாகப் படாத பாடுபட்டு பகுத்தறிவுப் பணி புரிந்து வருகிற நமக்கு திண்டிவனம் மாநாடு ஒரு வெற்றி விளக்கு. நம் லட்சியப் பாதையிலே முன்னேறுகிறோம்; ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வருகிறோம் என்பதை நமக்கு அறிவுறுத்தும் அடையாள விளக்கு. இருள் நிறைந்த வழியிலே நடக்கிறோம். நாம் எவ்வளவு தூரம் நடந்து வந்துவிட்டோம் என்பதைக் காட்டுகிறது திண்டிவனத்திலே ஏற்றப்படும் தீபம்! இன்னும் நடக்க வேண்டிய தூரம் ஏராளமாக இருக்கிறது. ஆனால் அந்தப் பாதையிலே இருள் இல்லை. விளக்குகள் வரிசையாக ஏற்றப்பட்டு விட்டன, அந்த வெற்றிச் செய்தியைத்தான் திண்டிவனம் தித்திக்கும் தீந்தமிழிலே விளக்கப்போகிறது.

Assembly provenance

- scan 25 — publications/thudikkum-ilamai/pages/0025-vetri-vilakku-1.md - scan 26 — publications/thudikkum-ilamai/pages/0026-vetri-vilakku-2.md - scan 27 — publications/thudikkum-ilamai/pages/0027-vetri-vilakku-3.md - scan 28 — publications/thudikkum-ilamai/pages/0028-vetri-vilakku-4.md - scan 29 — publications/thudikkum-ilamai/pages/0029-vetri-vilakku-5.md

P3 assembly audit

- source scans — 25–29 / 5/5 records - page-record coverage — 5/5 PASS - verified boundary-word joins applied — 1 - scan 28→29: என் + பதைக் = என்பதைக் - body→advertisement boundary scan 29→30 — PASS - omitted P2 body text — 0 - added unsupported body text — 0 - modernization / paraphrase — 0 - unresolved assembly issues — 0 - result — P3 COMPLETE / PASS

P5 strict visual-fidelity revalidation

- all contributing source scans reopened directly at P5 — PASS; - canonical P2 page records compared word-by-word / punctuation-by-punctuation — PASS; - P5 body corrections required — 0; - source wording / punctuation / historical type identity changed at P5 — 0; - page-boundary joins revalidated — PASS; - unresolved fidelity discrepancies — 0; - status — STRICT-REVIEWED / FROZEN TAMIL AUTHORITY.

கலைஞர் மு. கருணாநிதி · துடிக்கும் இளமை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்