கட்டுரை 10 / 14
விஷ்ணு அவதாரம் எனப்படும் ராமனிடம்!
To Rama, Who Is Said to Be Vishnu's Incarnation!
அச்சுப் பக்கம் 59–62
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
ஆச்சாரியார் தீட்டும் சக்கரவர்த்தித் திருமகன் இதுவரை, 69 அத்தியாயங்கள் வெளிவந்திருக்கின்றன. அவைகளில் 41 அத்தியாயங்களில் வந்த கதைக்கும், ஆச்சாரியாரின் அபிப்பிராயங்களுக்கும், அவ்வப்போது பதில் தரப்பட்டிருக்கிறது. ஆச்சாரியாரோ, அல்லது ராமாயணப் புலிகளோ - யாரும் மறுப்புரைக்க முன்வரவில்லை. வந்தாலும் வாதில் வெல்ல முடியாது என்பதும் அப்படி வருபவர்களிடம் உண்மை லவலேசமும் கிடையாது என்பதும் அவர்களுக்கே தெரியும்.
நாம், நாட்டு மக்கள் உண்மை நிலை உணரவேண்டு மென்பதற்காகவும் - ஆச்சாரியாரின் வார்த்தைகளிலே எவ்வளவு கோணல் இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவும் - மீண்டும் “சக்கரவர்த்தியின் திருமகனை”த் தொடருகிறோம். 42லிருந்து 69ஆம் அத்தியாயம் வரையிலுள்ள கட்டுரைகளை மொத்தமாக இரண்டொரு வாரங்களில் விமர்சனம் செய்துவிட்டு, பின்னர் அவ்வப்போது தொடர்ந்து எழுதுவோம்.
ராமனின் பாதரட்சைகளைத் தூக்கிக்கொண்டு, பரதன் சித்ரகூட மலையிலிருந்து புறப்பட்டான். ராமர் கோஷ்டியினர் தண்டகாரண்யத்திலே வேறு இடம் பார்ப்பதற்காக சித்ரகூட மலைச் சாரலை விட்டுப் புறப்பட்டனர். தண்டகாரண்யத்திலே பத்து வருடங்கள் அவர்கள் எந்த இடையூறுமின்றி சுகமாக வாழ்ந்தார்கள். அதற்கு முன்பு அகஸ்தியரை தரிசிப்பதற்காக ராமன் புறப்பட்டான். இந்த இடத்திலே, அகஸ்தியருடைய பெருமைகளைப் பற்றி, ஆச்சாரியார் வர்ணிக்கிறார் பாருங்கள்: வாதாபி, இல்வலன், என்ற இரண்டு அரக்கர்கள் ரிஷிகளை மிகவும் தொந்தரவு செய்து வந்தார்கள். வாதாபியின் உடலை எவ்வளவுதான் வெட்டித் துண்டு செய்தாலும், மீண்டும் ஒட்டிக் கொண்டு உயிர்வந்துவிடும்; இப்படி ஒரு வரம் பெற்றிருந்தான் அவன். இல்வலன் என்பவன் ரிஷிகளை வீட்டுக்கு ‘சிரார்த்த போஜனம்’ என்று கூறி அழைப்பான் - அழைத்தால் போய்த் தீர வேண்டும். வாதாபி, ஆடாக மாறுவான். ஆட்டை வெட்டி இல்வலன் போஜனம் பரிமாறுவான். ரிஷிகள் வயிறு புடைக்க சாப்பிடுவார்கள். சாப்பிட்டானதும், இல்வலன், “வாதாபி!” என்று கூப்பிடுவான். பிராமணின் வயிற்றுக்குள்ளே ஆட்டு மாமிசமாகப் போன வாதாபி, முழு உடல் பெற்று அவரது வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளியே வருவான். பிராமண ரிஷி செத்து மடிவார். இப்படிப்பட்டவர்கள், அகஸ்தியரை அழைத்து விருந்து வைத்தார்கள். வாதாபி, அகஸ்தியர் வயிற்றுக்குள் மேஷ மாமிசமாகப் பிரவேசித்தான். சாப்பிட்டானதும், இல்வலன் வழக்கம்போல ‘வாதாபி’ என்று கூப்பிட்டான். ஆனால் அகஸ்தியர், வாதாபியை தன் வயிற்றுக்குள் ஜீரணித்துவிட்டதோடு, இல்வலனையும் எரித்துவிட்டார்.
ராமாயண நாடகத்திலே, முனிவர்கள் மாமிசம் சாப்பிட்டார்கள் என்று நடித்துக் காட்டினால், சீறி விழும் சிறியவர்கள் - இந்தப் பெரியவர் எழுதும் உண்மைகளை எப்படி மறுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆட்டு மாமிசமாக மாறி அவர்கள் வயிற்றுக்குள் புகுந்து அவர்களைக் கொலை செய்திருக்கிறான் வாதாபி - ஆட்டு மாமிசத்திலே சூழ்ச்சி கலந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியாதவர்கள் திரிகாலமுணரும் ரிஷிகளாயிருந்தார்கள் என்பது எப்படிப் பொருத்தமாகும்? வலுக்கட்டாயமாக அழைத்துப்போய் சாப்பிட வைத்தார்கள் என்று கூறினாலும், வாதாபியை அழிக்கக்கூடிய சக்திவாய்ந்த அகஸ்தியர், தன்னை அவர்கள் அழைக்கும்போதே புரிந்துகொண்டு இருவரையும் எரித்திருக்கலாமே - என்றுதானே கேட்கத் தோன்றுகிறது! அப்படி அவர்களை அழிக்காமல் - மேஷ (ஆடு) மாமிசம் என்ற பெயரால் நரமாமிசம் (அவர் தம் பாஷைப்படி ராட்சச மாமிசம்) சாப்பிட்டு அதையும் ஜீரணித்துக்கொண்டார் என்பதிலிருந்து, அக்காலத்து ரிஷிகள் மனித மாமிசம் சாப்பிடவும் அஞ்சுபவர்கள் அல்ல என்று தானே தெளிவாகிறது! போகட்டும் - அத்தகைய அகஸ்தியரை ராமன், தரிசித்தான். ராட்சசர்களை அழிப்பதற்காக தண்டகாரண்யம் போகிறேன் என்று கூறினான். உடனே அகஸ்தியர் அவனிடம், “மகாவிஷ்ணுவுக்காக விஸ்வகர்மா செய்த வில்லும், என்றும் குறையாத அம்புத் தூணியும், கத்தியும் தந்தார். ராமனே! ராட்சசர்களை ஒழிப்பாயாக! முன் மகாவிஷ்ணுவானவர் இந்த ஆயுதங்களைத் தந்தார். நீயும் இவற்றைத் தரித்து அவர்களை ஒழிப்பாயாக!” என்று ஆசீர்வாதம் செய்தார்.
(முரண்பாட்டைக் கவனியுங்கள். மகாவிஷ்ணுவின் அவதாரம் ராமன் என்று சொல்லப்படுகிறது. ராமன், கடவுள் அவதாரம் அல்ல என்று கூறிய ஆச்சாரியரே, மீண்டும் - ராமன் அவதார புருஷனே என்று வலியுறுத்தினார். இப்போது குழப்ப ஆரம்பித்திருக்கிறார்!
விஷ்ணு அவதாரம் என்பதும் ராமனிடமே, “இந்தா; இது விஷ்ணு கொடுத்தது” என்று சொல்லி, வில்லையும் அம்பையும் அகஸ்தியர் கொடுக்கிறார். ராமன் யார் என்று திரிகாலமுணரும் தேவரிஷி அகஸ்தியருக்கே தெரியவில்லை யென்றால் இது பெரிய அதிசயம்தானே!
44ஆவது அத்தியாயத்தில் அகஸ்தியரைப் பற்றிக் கூறும்போது ‘வரப்போகும் விஷயங்களையும் அறிந்தவர் அந்த முனிவர்’ என்று கூறுகிறார். அப்பேர்ப்பட்டவர் ராமனிடம், “இந்தா விஷ்ணு தந்த வில்!” என்று கூறுகிறார் என்றால், வேடிக்கையாகத்தானேயிருக்கிறது.
பஞ்சவடி ஆச்ரமத்திலே, சூர்ப்பனகை வருகிறாள். வால்மீகி, சூர்ப்பனகையை சுய உருவத்துடன் அறிமுகப்படுத்துகிறாராம். கம்பர், சூர்ப்பனகை அழகிய மங்கை போல வந்து ராம லட்சுமணரை ஏமாற்ற முயன்றதாக மாற்றி அமைத்திருக்கிறாராம். இந்த இடத்திலே ஆச்சாரியார் கம்பரை மிகவும் பாராட்டுகிறார். வால்மீகி எழுதியுள்ள கட்டம் அவருக்கே சங்கடமாக இருக்கிறது போலும்.
காம தாகத்தால் பேசும் சூர்ப்பனகையைப் பார்த்து ராமன், “அழகியே! என்னைக் குறித்து ஆசைப்படுவது உனக்குத் துன்பமாகும். இந்தப் பெண் - என் மனைவியானவள் கூட இருக்கிறாள். இரண்டு மனைவிகள் வியாபாரத் தொந்தரவுக்கு இடமாகும். இது உனக்குத் தெரியுமல்லவா? இதோ இருக்கிறான் என்னுடைய தம்பி, தனியாக இருக்கிறான். அதிலும் பலத்திலும் எனக்குச் சமம். இவன் உனக்குத் தகுந்த புருஷன். இவனைக் கேட்டுப்பார். என்னை விட்டுவிடு” என்கிறான். லட்சுமணனிடம் அவள் போனதும், அவன், “நீ அண்ணனுக்கே இரண்டாந்தாரமாகப் போ - சீதைக்காகப் பயப்படாதே! ராமன் காதல் உன்பேரில்தான் வேகம் கொள்ளும் -சீதையை அலட்சியம் செய்துவிடுவான். நீ சுகமாக இருக்கலாம்” என்று ராமனிடம் திருப்பி அனுப்புகிறான்.
ராமனும் லட்சுமணனும் அவதார புருஷர்கள் - உத்தம புத்திரர்கள் - தீய பேச்சுக்களை பேசாதவர்கள் - சற்குண சீலர்கள் - என்றெல்லாம் ஆச்சாரியார் புகழ்கிறார். அப்படிப்பட்ட புருஷரத்தினங்கள் - அதுவும் அண்ணனும் தம்பியும் ஒரு பெண்ணிடம் இவ்வளவு தகாத முறையிலே நடந்து கொண்டிருக்கிறார்கள். இதனால்தான் ஆச்சாரியார் சூர்ப்பனகை வரும் கட்டத்தை கம்பர் அழகாக எழுதியிருக்கிறார் என்கிறார். இதற்கு என்ன பொருள்? ராமனும் அவன் தம்பியும் “ரசாபாச மான முறையில் நடந்துகொண்டதை வால்மீகி மறைக்காமல் கூறுகிறார்; கம்பர் மறைத்திருக்கிறார் என்பது தானே!
வால்மீகிக்கும் ஆச்சாரியார் “சப்பைக் கட்டு” கட்டுகிறார் பாருங்கள்:
“ஒரு பெண்ணை அதிகம் காதல் கொண்ட பெண்ணை, இப்படியெல்லாம் வேதனை செய்யலாமா என்று சில மேதாவிகள் கேட்கலாம்; எதிரில் ஒரு விகார சொரூபத்தை வைத்துக் கற்பனா சக்தியை பயன்படுத்தினால் அவ்வாறு கேட்கமாட்டார்கள்” - இது ஆச்சாரியாரின் சமாதானம்.
விகார மிகு சொரூபமாக ஒரு பெண் வந்தால், “அவளை விட்டு விலகிப் போவார்களே தவிர, அவள் காதல் கொண்டதாகக் கூறினால் முடியாது என்று கூறி விட்டுப் போய்விடுவார்களே தவிர, “அண்ணனிடம் போ” என்று தம்பியும், “தம்பியிடம் போ!” என்று அண்ணனும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு அதுவும் பக்கத்திலே மனைவியையும் வைத்துக் கொண்டு, கேவலமான பரிகாசத்தில் - நல்ல உணர்ச்சியுள்ள எந்த ஆண் மக்களும் இறங்க மாட்டார்கள். ஒரு வேளை, ஆரியக் கலாச்சாரத்தின்படி வேண்டுமானால் - ஆச்சாரியாரின் சமாதானம் பொருத்தமாக இருக்கலாம்.
கலைஞர் மு.கருணாநிதி · சக்கரவர்த்தியின் திருமகன். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்