கட்டுரை 11 / 14
நடப்பதெல்லாம் நாராயணன் செயலா?
Is Everything That Happens Narayana's Doing?
அச்சுப் பக்கம் 63–68
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
சூர்ப்பனகை மானபங்கம் செய்யப்பட்டது கண்டு கரன் முதலியோர் ராமனைப் பழிவாங்க முயன்று இறுதியில் மரண மடைகிறார்கள் - ராமன் தனியொருவனாகவே நின்று அரக்கர்களின் சேனையத்தையும் அதன் தலைவர்களையும் கொன்று குவிக்கிறான்.
ராமனின் சக்தியைப் பற்றி ஆச்சாரியார் எழுதுவதைக் கவனியுங்கள்:
“தெய்வமே மனித உருவத்தில் வந்து அனாதைகளுக்கு அபயம் தந்து அந்தச் சத்தியத்தைக் காக்க முனைப்பட்டால் அந்த மனிதன் எவ்வளவு செய்வான் என்பதைச் சிந்தனைச் சக்தியைக் கொண்டு காணலாம்.”
இதோடு விடவில்லை அவர் - இன்னும் படியுங்கள்:
“ராமனை அவதாரப் புருஷனாகத்தான் கம்பரும் வால்மீகியும் எடுத்துக்கொண்டு வெவ்வேறு விதத்தில் நமக்கு நிகழ்ச்சிகளை சித்தரிக்கிறார்கள் - சில இடங்களில் தெய்வப் பிரசாதம் பெற்ற வீரனாகவும், சில இடங்களில் தெய்வமேயாகவும் எடுத்துக் காட்டுகிறார்கள்.”
முன்னையக் கட்டுரைகளில் இதே ஆச்சாரியார் அவர்கள் என்ன எழுதியிருக்கிறார்? அதையும் படியுங்கள்:
“வால்மீகி ரிஷியின் காவியத்தில் ராமன் ஒரு மகா புருஷன் -ஈஸ்வர அவதாரமாக வைத்து எழுதவில்லை.”
ஒரே தொடர்க் கட்டுரை - ஒரே பத்திரிகையில் வெளியாகிறது -1954ஆம் வருடம் மே மாதத்திலே, வால்மீகி, ராமனை அவதாரமாக சிருஷ்டிக்கவில்லை என்கிறார். 1955ஆம் வருடம் மே மாதத்தில், கம்பரும் வால்மீகியும் ராமனை அவதார புருஷனாகவே எடுத்துக் கொண்டு எழுதியிருக்கிறார்கள் என்கிறார் - ஆச்சாரியாரின் பின்னணி வாத்யக் கோஷ்டியினர், இந்த முரண்பாட்டுக்கு என்ன பதில் சொல்வார்கள்? மூளைக் கோளாறா? - குழப்பமா? - கொஞ்சம் சிந்திக்கத் தெரிந்தவனும் இந்தக் கேள்வியைக் கேட்டுத்தானே தீருவான்? பாவம்; ஆச்சாரியார் ஏன் அநாவசியமாக இப்படி சகதியிலே காலை விட்டுக்கொண்டு சங்கடப்படுகிறாரோ தெரியவில்லை - தெரியாமலென்ன; தனது சமூகத்தின் நிரந்தர நல்வாழ்வுக்காக அந்த சாணக்கியர் ஆயிரமாயிரம் முரண்பாடுகளை அணைத்துக் கொள்ளவும் தயாராயிருக்கிறார். ஆனால், ஒன்று - இது, “ஏன்? எப்படி?” என்று கேள்விக்குறி எழுப்பாத பழைய காலமல்ல என்பதை மட்டும் பரிதாபத்திற்குரிய அந்தப் பார்ப்பனத் தலைவருக்கு நினைவு படுத்துகிறேன்.
இன்னொரு வடிகட்டிய வரட்டுக் குழப்பத்தைப் பாருங்கள்:
“நாராயணனோ தானே ராமன் என்று அறிவான். ஆனால் ராமன், தானே நாராயணன் என்றெண்ணவில்லை.”
9.1.1955 இதழில் அவரே தான் இதையும் எழுதியிருக்கிறார். இதை விவரிக்கவோ, விவாதிக்கவோ வேண்டிய அவசியமில்லை. ஆச்சாரியார் எழுதியுள்ள இந்த வரிகளுக்கு ஏதாவது தெளிவான பொருள் தெரிகிறதா என்பதைத் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் -அப்படிக் கண்டுபிடித்துச் சொல்பவர்களுக்கு - அல்லது அவர் எழுதியது சரியானதுதான் என்று விளக்கம் தருபவர்களுக்கு - சரியான பரிசு தருவதோடு, என்னுடைய தோல்வியையும் பகிரங்கமாக ஒத்துக்கொள்ளத் தயாராயிருக்கிறேன்.
நிற்க, சூர்ப்பனகை பங்கப் பட்டதையும், கரன் முதலியோர் அழிக்கப்பட்டதையும் கேள்வியுற்ற ராவணன், சீதையை அபகரிக்கத் திட்டமிட்டு, ஆசிரம வாழ்க்கை நடத்தும் மாரீசன் என்னும் ராட்சச தபசியின் உதவியை நாடுகிறான் - அந்த மாரீசன், ராவணனுக்கு புத்திசொல்லி இலங்கைக்குத் திருப்பி அனுப்பிவிடுகிறான். மீண்டும் ராவணன் மாரீசனை அணுகி உதவி கேட்கிறான் மானாக உருவெடுத்து சீதையை மயக்குமாறு வேண்டுகிறான். மாரீசன் அதை மறுத்து நீண்ட உபதேசம் செய்கிறான். ராமன், தன்னையும் ராவணனையும் அழித்து விடுவான் என்றும், பாதகச் செயல் புரிய தான் உடன்பட மாட்டேன் என்றும் மாரீசன் கூறுகிறான். மாரீசனின் ‘தர்ம நியாய’ங் கலந்த மறுப்புரைகளை ஆச்சாரியாரே இரண்டு மூன்று பக்கங்கள் எழுதித் தள்ளியிருக்கிறார். மாரீசன் மறுப்பது கண்ட ராவணன், “என் இஷ்டப்படி செய்யாவிட்டால், உன்னை இங்கேயே வதம் செய்வேன்” என்கிறான்.
மாரீசன் பேசுகிறான், கேளுங்கள் :
“ராவணா! நான் உனக்கு இதத்தைச் சொல்லிப் பார்த்தேன் - நீ கேட்கவில்லை. நீ சொன்னதுபோல் நான் செய்தால் என் உயிர் போவது நிச்சயம். உன்னால் மாள்வதைவிட பகையாளிக்கு என் உயிரைக் கொடுத்து விடுவது மேல்.” (23.1.1955 - ‘கல்கி’)
தான் ராமனால் செத்துவிடுவோம் என்று மாரீசனுக்குத் தெரிகிறது - ராவணன் பேச்சைக் கேட்கா விட்டாலும் செத்து விடுவோம் என்றும் அவனுக்குத் தெரிகிறது - எப்படியும் சாவு இருக்கிறது - இந்த நிலையில், அவன் என்ன செய்திருக்கவேண்டும்?
ராவணனால் செத்தால், சீதைக்கும் ராமருக்கும் தொந்தரவு கொடுக்காமலே தீர்ந்துபோய்விடலாம் - ராமனால் சாவதற்குத் தயாரானால், சீதைக்கும் அவள் கணவனுக்கும் தொந்தரவுகள் கொடுத்தாக வேண்டும் என்பதோடு, ராவணனையும் தீய வழியில் புகச்செய்ய வழி வகுத்ததாகிவிடும். ஆகவே, மாரீசன் எனும் ஆசிரமவாசி, ராவணன் கையாலேயே மாண்டிருக்கலாம் - ராமர் சீதை முதலியவர்களின் கொடிய வார்த்தைகளுக்கு இலக்காகி இருக்க வேண்டியதில்லை - அவன் கருத்துப்படி ‘பாபச் செய்கை’யிலிருந்தும் விடுதலை பெற்றிருக்கலாம். ஏனோ, அவன் அதைச் செய்யவில்லை. ஆச்சாரியாருக்குத்தான் வெளிச்சம்!
மாரீசன் மானாகச் சென்றான். தேனுறும் இதழ் திறந்து தேவி சீதை, “அந்த மானைப் பிடித்துத் தருக” என ராமனை வேண்டினாள். லட்சுமணனை சீதைக்குக் காவல் வைத்துவிட்டு, ராமன் மானைத் துரத்தி வெகு தூரம் போகிறான். மான் அகப்படாமல் ஓடியதால் அதன்மீது அம்பு எய்கிறான். அந்த மான் வடிவ மாரீசன், ராமன் குரல்போலத் தன் குரலை மாற்றிக் கொண்டு, “அய்யோ லட்சுமணா!” என்று உரக்கக் கத்துகிறான். அதுகண்ட ராமன், “ஓகோ ! இது பெரிய மோசம்; இந்த மோசத்தால் லட்சுமணன் ஏமாற்றமடைந்து சீதையைத் தனியாகக் காட்டில் விட்டுவிட்டு என்னைத் தேடிக்கொண்டு வந்து விட்டிருந்தால் பெரிய அபாயமாகுமே! சீதையை அபகரித்துக்கொண்டு போகவே, கொன்று தின்றுவிடவோ அரக்கர்கள் இந்த மோசத்தைச் செய்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. ‘ஹா சீதே’ என்று என்னுடைய குரலைக் கேட்டதாக எண்ணி உடனே சீதை பயந்து லட்சுமணனை என்னிடம் அனுப்பிவிடுவாள். நரிகள். அவலட்சணமாக ஊளையிடுகின்றன. பறவைகளும் மிருகங்களும் துரதிருஷ்டக் குறிகளைக் காட்டுகின்றன. உள்ளத்தில் தைரியத்துக்கு பதில் நடுக்கமாக இருக்கிறது. நான் காண்பதெல்லாம் அபசகுனங்களாகவே இருக்கின்றன. பெரிய ஆபத்தை அடைவேன் என்றே நினைக்கிறேன்.” (13.2.1955 - ‘கல்கி’)
ராமன் வருத்தமுறுவதைக் காணும்போது, சிரிப்புத்தான் வருகிறது - “அவன் மனைவியைப் பற்றி அவனுக்கல்லவா கவலை; உனக்குச் சிரிப்புத்தான் வரும்!” என்று வசை பாடாதீர்கள் ஆச்சாரியரே! கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! ராமனைப் போன்ற குரலில் மாரீசன் ‘லட்சுமணா!’ என்று கத்திவிட்டு செத்துவிட்டான். இதைக் கேட்டு சீதை பயந்து, லட்சுமணன் நடுங்கி, அவளை தனியே விட்டு வந்துவிடுவானோ என ராமன் அஞ்சுகிறான். மாரீசன் கத்திய அதே சமயம், ஏன் ராமனும் கத்தியிருக்கக் கூடாது?
“தம்பி, லட்சுமணா! இது மானல்ல; மாரீசன் மாண்டுவிட்டான் மாபாவி! அய்யோ லட்சுமணா என்று கத்தியது நானல்ல - அவனேதான்! நீ சீதையை விட்டு விட்டு வராதே!” என்று ராமனும் கத்தியிருக்கலாமே - அப்படிக் கத்தினால் அவர்கள் காதில் விழாது என்கிறீர்களா? மாரீசன் கத்தியது காதில் விழுந்து அலறும் போது, மாரீசனைப் போன்ற ஆயிரமாயிரம் அரக்கர்களை அழிக்கும் ஆற்றல் பெற்ற ராமன் கத்துவது மட்டும் அவர்கள் காதில் விழாமல் போய்விடுமா? மகா சக்தி வாய்ந்த ராமன், மாரீசனின் ஒலியைக்கூட சீதையோ, லட்சுமணனோ கேட்கவொட்டாமல் தடுத்திருக்கலாமே - ஏன் செய்யவில்லை? ஏன் கத்தவில்லை? ‘சக்கரவர்த்தித்திருமகன்’ எழுதும் சக்கரவர்த்தியாரே, சரியான பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்.
“அய்யோ லட்சுமணா!” என்ற கூச்சலைக் கேட்ட சீதை, ராமனுக்கு ஆபத்து வந்ததாக எண்ணித் துடிக்கிறாள். லட்சுமணனை, உடனே ஓடச் சொல்கிறாள். அவன், “இது அரக்கர் மாயை - ஆகவே நான் போகத் தேவையில்லை” என்று அநேக சமாதானங்கள் சொல்லுகிறான். இந்தக் கட்டத்தை ஆச்சாரியரே வர்ணிக்கிறார் படியுங்கள்.
“ஜானகிக்கு உண்டானக் கோபமே கோபம்! வயிற்றில் இரண்டு கைகளாலும் அடித்துக்கொண்டு, “சுமித்திரையின் மகனே! சத்துருவாகி விட்டாயா? இவ்வளவு நாளும் வேஷம் போட்டாயா? ராமனுடைய மரணத்துக்கா இவ்வளவு நாள் காத்திருந்தாய்? அவன் இறந்தான் அவனுக்குப் பின் என்னை அடைந்துவிடலாம் என்று எண்ணி இத்தனை நாள் ஏமாற்றினாயா? துஷ்டனே, ராமன் கதறிக் கூவுவதைக் கேட்டும் போகாமல் இங்கே நிற்கிறாயே? அண்ணனிடம் நீ காட்டிக் கொண்ட பிரியமெல்லாம் பெருஞ் சூழ்ச்சியா? துன் மார்க்கனே!” என்றாள்.
“அண்ணன் ஆணை என்று சமாதானம் சொல்லி அண்ணன் கதறிக் கூவினாலும் போகாமல் அவனைச் சாகவிடுகிறாயா? ஆகா, உன்னை நம்பி என்ன மோசம் போனோம் ராமனும் நானும்! நீசனே! துஷ்டனே! ராமனுக்குப் பகையாய் வந்த வஞ்சகனே! ராமனுக்கு ஆபத்து வந்தது என்று மகிழ்ச்சி அடைகிறாயா? ஏமாற்றப் பார்க்கிறாயா? ராமனோடு நீ வனத்துக்கு வந்த நோக்கத்தை இப்போது நான் கண்டுகொண்டேன். அடே பாவி! பரதனுடைய தூண்டுதலா இது? எல்லாரும் என் நாயகனுடைய சத்துருக்கள் ஆகிவிட்டீர்களா? நீங்கள் எல்லாரும் சேர்ந்து என்ன செய்ய யோசிக்கிறீர்கள்? ராமனோடு வாழ்ந்த நான் உங்களைக் கண்ணெடுத்தும் பார்ப்பேனா? ராமன் இறந்த பிறகு ஒரு நிமிஷம் உயிருடன் இருக்கமாட்டேன், அறிவாய்!” என்றாள்.
(30.1.1955 - ‘கல்கி’)
கொழுந்தனிடம் ஒரு குலமகள் பேசும் பேச்சா இது? அதுவும் சாதாரணப் பெண்ணா? மகாலட்சுமியின் அவதாரம். மகா புருஷன் ராமனின் மனைவி - அவர்கள் பேசுகிறார்கள். ‘அண்ணன் போனால், அண்ணியை அடையலாம் என்று எண்ணுகிறாயா?’ எனக் கோபமாக!
சந்து முனையிலே சண்டைபோடுவதைத் தொழிலாகக் கொண்ட நாலாந்தரப் பெண்மணிகூட தன் கொழுந்தனிடம் பேசக் கூசும் வார்த்தைகளை, சங்கு சக்கராயுதபாணியின் சம்சாரம் பேசுகிறாள் என்றால், அவர்களை எந்தப் பட்டியலிலே சேர்ப்பது? - அம்மையின் அருள் பாடும் ஆச்சாரியர்தான் பதில் சொல்ல வேண்டும். விதி, அவர்களை அப்படிப் பேசவைத்தது என்பார் அவர். விதியைக் காரணம் காட்டுவதானால், ராவணன்கூட குற்றமற்றவனாகத்தான் ஆகவேண்டும்! சீதையை அவன் சிறையெடுத்ததும் விதியின் விளையாட்டுத்தான் என்று கூறி, ராவணனை ஆச்சாரியார் போன்றவர்கள் இழித்துரைக்காமல் இருந்துவிடலாம்.
“விதியோ விதி!” என்று 49 ஆம் அத்தியாயத்தில் புலம்பியவர் - “தெய்வம் எல்லா விதத்திலும் விபத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டது” என்று அதே அத்தியாயத்தில் கதறியவர் - 53 ஆம் அத்தியாயத்தில்-
“மோகத்தாலும், மயக்கத்தாலும் தாம் செய்ய வேண்டியதை சமயத்தில் செய்யாமலும் - செய்யக் கூடாததைச் செய்தும் சீதையை இழந்தார்கள்.” (20.2.1955 - ‘கல்கி’)
ராம, லட்சுமணர்களை ஆச்சாரியார், அவரையுமறியாமல் எவ்வளவு கேவலமாகப் பேசுகிறார் பார்த்தீர்களா? - நாராயணன் அவதாரம் என்று ராமனுக்குத் தெரியாவிட்டாலும் - ஆச்சாரியருக்குமா தெரியாமல் போய்விட்டது? அந்த நாராயண அவதாரத்தை நாக்கில் நரம்பின்றித் திட்டுகிறாரே ஏன்?
மோகம்-
மயக்கம் -
செய்யக்கூடாததைச் செய்தல் -
காரசாரமான சொற்களால், கடவுள் அவதாரத்தை அர்ச்சிக்கிறார் ஆச்சாரியார். அதையே நாம் சொன்னால், தடை - படை எல்லாம் வருகின்றன. ‘கடைகட்டும் நேரம் - காக பட்டர் கணக்கை சரிக்கட்டும் நேரம் - கட்டுண்டோம் - பொறுத்திருப்போம்’ என்று நமக்கு நாமே ஆறுதல் கூறிக் கொள்ளும் வேளை - மிச்சமிருக்கும் சமயத்தில் ஆச்சாரியார்களுக்கு அகப்பட்ட வரையில் லாபந்தானே!
நடக்கட்டும் பிழைப்பு - எவ்வளவு நாளைக்கு என்று பார்ப்போம்;
கலைஞர் மு.கருணாநிதி · சக்கரவர்த்தியின் திருமகன். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்