கட்டுரை 12 / 14
மாரீசனைத் துரத்திச் சென்ற ராமனிடம்
To Rama Who Went Chasing Maricha
அச்சுப் பக்கம் 69–71
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
மாரீசனைத் துரத்திச் சென்ற ராமனிடம் லட்சுமணனையும் அனுப்பிவிட்டு சீதை தனியாக இருக்கும்போது அங்கே சந்நியாசி உருவில் ராவணன் வருகிறான். லட்சுமியின் அவதாரமான சீதை அவனைத் துறவியென நம்பி உபசரிக்கிறாள். அவன் இச்சையை வெளியிடுகிறான். சீதை நடுங்கி, கோபிக்கிறாள். பிறகு என்ன ஆகிறது? - ஆச்சாரியார் எழுதுகிறார், படியுங்கள்.
“மாறு வேஷம் நீக்கிவிட்டுத் தன் நிஜ ரூபத்தைத் தரித்துக் கொண்டான். அவள் தலைமயிரை ஒரு கையில் பற்றி மற்றொரு கையால் அவளைப் பிடித்துத் தூக்கிக்கொண்டு வனத்துக்குள் வேகமாகச் சென்று ஆயத்தமாக இருந்த தேரில் சீதையைத் தூக்கியவாறு ஏறி ஆகாயத்தில் கிளம்பிவிட்டான்.”
(30.1.1955 - ‘கல்கி’)
அப்படிப் போகும் வழியிலே ஜடாயு என்ற கழுகு எதிர்த்துப் போர் செய்யவே, ராவணனுடைய ரதம் உடைந்து விடுகிறது. பாவம் ; அந்த ஜடாயு போர் செய்யாமல் இருந்தாலாவது, ராவணன் சீதையை ரதத்திலேயே வைத்துத் தூக்கிக்கொண்டு போயிருப்பான். அது போர் செய்து ரதம் உடைந்துவிட்ட காரணத்தால், ராவணன் சீதையைத் தன் மெய் சேர அணைத்து, இறுக்கிப்பிடித்து, பலாத்காரமாகத் தூக்கிக் கொண்டு ஆகாயத்தில் பிரயாணம் நடத்த வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டுவிட்டது. ஒரு குலமகள் - ஆச்சாரியார் சொல்கிறபடி அவதாரத் திருமகள் - அவளை ஒருவன் சேர்த்தணைத்துத் தூக்கிக்கொண்டு போகிறான். அந்த நேரத்தில் தான் போகும் பாதையை அடையாளம் காட்டுவதற்காகச் சீதை ஒரு தந்திரம் செய்கிறாளாம், அந்தத் தந்திரம் எவ்வளவு கேவலமானது என்பதை வாசகர்களே யூகித்துக்கொள்ள வேண்டும். ஆச்சாரியார் வாசகத்தை அப்படியே தருகிறேன்: படியுங்கள்.
“பல மலைகளையும் ஆறுகளையும் தாண்டிச் செல்லும் போது வழியில் ஒரு மலைமேல் யாரோ நிற்பதைக் கண்டாள் சீதை. அப்பொழுது மேலுத்தரியத்தை எடுத்துத் தன் ஆபரணங்களை அதில் முடித்துக் கீழே போட்டாள்.”
(6.2.1955 - ‘கல்கி’)
மாற்றானின் பிடியிலே சிக்கியிருக்கிறாள்; தன் கற்பைக் காத்துக்கொள்ள வேண்டுமென்று துடிக்கிறாள் என்றும் ஆச்சாரியார் கூறுகிறார். இந்த நிலையில் எந்தப் பெண்ணாவது, தனது மேலாடையை எடுத்துக் கீழே போடுவாளா? - போட்டாளாமா? - அப்படிப் போட்டால் அது எதற்கு அறிகுறி? - குலப்பெண்ணுக்கு அடையாளமா அது?
சாதாரணமாக ஒரு ஆடவன், ஒரு பெண்ணைப் பார்த்தால், அந்தப் பெண்ணையுமறியாமல் அவளுடைய கை, அவளது மேலாடையை சரியாகப் போர்த்தித் திருத்தி விடுகிறது. அத்தகைய நாண உணர்ச்சி தலைகாட்டுகிற சொந்தக் கணவனைக் காணுகிற நேரத்திலே கூட பெண்கள், தங்கள் மேலாடையைத் திருத்திக் கொள்ளத் தவறமாட்டார்கள். சீதையோ அந்நிய புருஷனின் கையிலே அகப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறாள். அந்த நேரத்திலே மேலாடையை சர்வசாதாரணமாக எடுத்து கீழே வீசுகிறாள் என்றால், அவளைப் பற்றி நாம் என்ன நினைப்பது? ராவணன்தான் என்ன நினைத்திருப்பான் ?
“அண்ணன் செத்தால் அண்ணி கிடைப்பாள் என்று பார்க்கிறாயா?” என்று லட்சுமணனைப் பார்த்துக் கேட்கிறாள். இப்போது வேறு மனிதனின் அணைப்பிலே இருந்துகொண்டு, அவனாகவே மேலாடையைக் கீழே போடுகிறாள். இந்த இரு செயல்களும் சீதையின் நிறையை எந்த அளவுக்குக் குறைக்கின்றன என்பதை ஆஸ்திகப் பெருமக்களே சிந்தித்துப் பார்க்கட்டும். பெண்ணின் நாயகம் சீதை என்று கூறுகிற தாய்மார்களும் இந்த இரு கட்டங்களையும் ஆராய்ந்து பார்க்கட்டும்.
ஆனால் ஆச்சாரியாரோ, சீதை செய்த தவறுகள் சீதையோடு போகட்டும் என்றிராமல், அவரே பெரும் தவறு செய்கிறார். இதோ:
நம் நாட்டில் துயரப்படும் பெண்கள் அனைவரும் சீதா தேவியின் அம்சம்.
(6.2.1955 - ‘கல்கி’) என்று வர்ணிக்கிறார். துயரப்படும் பெண்கள் எல்லாம் சீதையின் அம்சமாம்! என்ன கொடுமையான வெட்கக்கேடு! என்னே கேவலமான வியாக்யானம்!!
நாட்டில் அழுது கொண்டிருக்கும் பெண்கள் எல்லாம் அயலவன் பிடியிலிருந்து மேலாடையைக் கீழே போட்டவர்களா? “அண்ணன் போனால் தம்பி பார்க்கலாம் என்று திட்டம் போடுகிறாயா?” என்று தங்கள் கொழுந்தர்களைப் பார்த்துக் கேட்டவர்களா? துயரப்படும் பெண்கள் எல்லோருமே சீதை அம்சமாமே; பிறரால் களவாடப்பட்டவர்களாமே; கணவன் ராமனின் சந்தேகத்திற்குரிய சீதையின் அம்சமாமே- பொருந்துமா? பூசார் தலைவரே! உமது புதிய ஆராய்ச்சி இந்த நாட்டுப் பெண்கள் குலத்திற்குப் பொருந்துமா? உமது காப்பிலே நின்று வாதாடப் பார்க்கிறேன். துயரப்படும் பெண்கள் எல்லாம் சீதையின் அம்சமென்றால், இளமையையும் அழகையும் இரவு ராஜாக்களுக்கு அடமானம் வைத்து, விபசார வாழ்வு நடத்தி வேதனை எரிமலைகளாக விழியிலே நீர் பெருக்கி வீதியிலே அலைகிறார்களே; அந்த வழுக்கி விழுந்த சகோதரிகள் கூட சீதையின் அம்சந்தானா? ஆச்சாரியாரே! உம்மையுமறியாமல் சீதையை அவமானப்படுத்துகிறீரே ஏன்? ‘கல்கி’ இதழிலே அவர்களுக்கு வக்காலித்துப்படி நிற்பதற்காக எதையாவது எழுதி வைப்போம் என்ற அவசியத்தே எழுதுகிறீரா? அல்லது உமது எழுத்துக்களிலே முன்னுக்குப் பின் ஏற்படும் முரண்பாடுகள் - முதுமைக் கோளாறால் ஏற்பட்டவை என்று மக்கள் மன்னித்து விடுவார்கள் என்ற தைரியத்தில் எழுதுகிறீரா? பரிதாபம் மிகப் பரிதாபம்! காகுத்தனின் மனைவி சீதையும் - கடைத்தெரு முனையிலே நின்று கண் காட்டி வயிறு வளர்க்கும் பாவையும் ஒரே அம்சமென்று எழுதுவதற்கு உமக்கு அதிகம் துணிவுதான் இருக்கவேண்டும்!
மேலாடையைப்பற்றி கவலைப்படாத சீதையையும், மேன் மக்கள் குடிப்பிறந்த பூங்கொடிகளையும் ஒரே அம்சமென சித்தரிக்க உமக்கு மிகுந்த நெஞ்சழுத்தம் தான் இருக்கவேண்டும்!
எவ்வளவு முரண்பாடாக எழுதிக் கொட்டினாலும் - அந்தக் குப்பைகளை தலையில் வாரிப் போட்டுக்கொண்டு ஆடுவதற்கு ஆஷாடபூதிகள் திரிகிறார்கள் என்ற தைரியம் இருக்கும் வரையில் நீர் இந்நாட்டிலேயுள்ள பெண்கள் எல்லாம் சீதையின் அவதாரம் என்று மட்டுமா எழுதுவீர்; திரவுபதையின் அவதாரம் என்று கூட எழுதுவீர்!
கலைஞர் மு.கருணாநிதி · சக்கரவர்த்தியின் திருமகன். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்