பொருளடக்கம்

13. துரோகிகள் சந்திப்பு!

கட்டுரை 13 / 14

துரோகிகள் சந்திப்பு!

Traitors Meet!

அச்சுப் பக்கம் 7276

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

சீதை காணாமற் போனது கண்டு ராமன் புலம்பினான். மரஞ் செடி கொடிகளைப் பார்த்து ‘மனைவியைக் கண்டீரோ?’ என மாறடித்து ஒப்பாரி வைத்தான்.

“சீதை அஞ்ஞானத்தால் உன்னைப் பார்த்து தகாத வார்த்தைகள் கூறினாள் என்றால்; நீ அதையும் பொறுத்துக் கொண்டு அங்கேயே காவல் புரிந்திருக்கக்கூடாதா?” என்று தம்பி லட்சுமணனைத் திட்டினான். இப்படியாக அழுது புலம்பி, கடைசியில் ஜடாயுவின் மூலம், சீதை ராவணன் வசம் இருப்பதை அறிந்தார்கள்.

எப்படி அவளை மீட்பது என்று யோசனை செய்து கொண்டு காட்டில் திரியும்போது, கபந்தன் என்னும் அரக்கன் அவர்களைப் பிடித்துக்கொண்டான். கபந்தனுக்கு தலை கிடையாது- வாயும், கண்ணும் வயிற்றிலேயே இருந்தது. கால்களும் கிடையாது; வனத்திலே செல்லும் மிருகங்களையும் மனிதர்களையும் கையெட்டி இழுத்து வயிற்றுக்குள் போட்டுக் கொள்வது அவன் வழக்கம். அவனை ராம லட்சுமணர் கொன்று விடுகிறார்கள். கொல்லப்பட்டதும் கபந்தன் அரக்க உருவம் மாறி, தேவ உருவில் சொர்க்கலோக வாசியாக மாறி விடுகிறான்.

இந்திரனின் சாபத்தால் இப்படி ஆகிவிட்டதாகத் தன் பூர்வீக கதையைக் கூறிவிட்டு, ராம லட்சுமணர்கள் சீதையை மீட்க வேண்டுமானால், ரிஷ்யமுக மலையில் - வாலியால் துரத்தப்பட்டு ஒளிந்திருக்கும் சுக்ரீவனின் உதவியைப் பெறவேண்டுமென்றும் தெரிவித்து, விமான மூலம் சொர்க்கம் புறப்பட்டான்.

இந்தக் கபந்தன் கதையிலேயிருந்து, தேவர்கள், ராம லட்சுமணர்களாக மட்டும் அவதாரம் செய்யவில்லை; கபந்தன் போன்ற பயங்கர அரக்கர்களாகவும் அவதரித்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது! பிறகு, ராம லட்சுமணர் சுக்ரீவனைத் தேடிப் புறப்பட்டார்கள். சுக்ரீவன் யார் தெரியுமா ? அவன் நிலைமை என்ன தெரியுமா? ராமனைப் போலவே அவனும் நாட்டையும், மனைவியையும் இழந்து பம்பா நதி தீரத்திலே உலவிக் கொண்டிருப்பவன். பரதனுக்கு நாட்டுரிமையில்லாமற் செய்ய சதிபுரிந்த ராமனும் - வாலியை ஏமாற்றி நாட்டைக் கைப்பற்றத் திட்டமிட்டு விரட்டப்பட்ட சுக்ரீவனும் துணைவரானார்கள். “என் மனைவியை நீ வாலியிடமிருந்து மீட்டுத் தா! நான் உன் மனைவியை ராவணனிடமிருந்து மீட்டுத்தருகிறேன்” என்று சுக்ரீவன் ராமனுக்கு உறுதி அளித்தான். சுக்ரீவன் ஏன் விரட்டப்பட்டான்? வாலிக்கும் அவனுக்கும் ஏன் பகை வளர்ந்தது? அந்தக் கதையை ஆச்சாரியரே, 6.3.1955-ஆம் தேதிய ‘கல்கி’யில் எழுதுகிறார்: படியுங்கள் - சுக்ரீவனே கதை சொல்வது போன்ற கட்டம்-

“என் அண்ணன் வாலி வானர ராஜ்ய பட்டாபிஷேகம் பெற்று, கிஷ்கிந்தையில் அரசு புரிந்து வந்தான், மகா பராக்கிரமசாலி. அவனிடம் அன்பும் பக்தியும் குறைவின்றிச் செலுத்திக்கொண்டு, நான் யுவராஜனாக இருந்து வந்தேன். வாலிக்கும் மாயாவி என்கிற அசுரனுக்கும் பழைய விரோதம். ஒரு நாள் ராத்திரி அந்த அசுரன் கிஷ்கிந்தைக்கு வந்து வாலியைப் போருக்கு அழைத்தான்.
“அவன் இரவில் போட்ட கர்ஜனையைக் கேட்டுக் கோபங்கொண்டு தூங்கிக்கொண்டிருந்த வாலி எழுந்து, அவனை உடனே எதிர்க்க வெளியேறினான். நானும் அவனுக்கு உதவியாகக் கூடவே சென்றேன். நிலா வெளிச்சத்தில் நாங்களிருவரும் வருவதைப் பார்த்து மாயாவியானவன் ஓடி ஒரு குகைக்குள் நுழைந்தான். வாலியும் அவனைத் துரத்திக்கொண்டு குகைக்குள் புகுந்தான். நானும் உள்ளே புகப்போனேன். வாலி என்னை வேண்டாம் என்று தடுத்துவிட்டான். தான் ஒருவனாகவே அந்தத் துஷ்டனைக் கொல்ல வேண்டும் என்று சொல்லி, என்னை அந்தக் குகையின் வாயிலில் வெளியே நிற்கச் சொன்னான், சொல்லிவிட்டு அவன் உள்ளே புகுந்து சென்றான்.

உள்ளே சென்றவன், பல நாட்களாகியும் திரும்பி வரவில்லை. அண்ணனுக்கு என்ன நேர்ந்ததோ என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் குகைக்குள் அசுரர்களுடைய பெருங் கூக்குரல் கேட்டது. அதன்கூடக் குகையிலிருந்து ‘ரத்த வெள்ளம் பெருகி வந்தது’. இதைக் கண்டதும் வாலியை, மாயாவியும் பல அசுரர்களும் சூழ்ந்து கொன்று விட்டார்கள் என்று தீர்மானித்துக் கொண்டேன். அசுரர்கள் வந்து என்னையும் தாக்குவார்கள் என்று எண்ணி ஒரு பெரும் பாறாங்கல்லைக் குகை வாயிலில் வைத்து மூடி விட்டேன்.

“கிஷ்கிந்தைக்கு வருத்தத்தோடு திரும்பினேன். வாலி இறந்தான் என்று யாருக்கும் சொல்லாமலே ராஜ காரியங்களைப் பார்த்து வந்தேன். பிறகு வானரப் பிரஜைகள் நிர்ப்பந்தித்தார்கள். ‘அரசனில்லாமல் போனால் ராஜ்யம் பாழாகப் போகும்; வெகு நாளாகியும் வாலி திரும்பவில்லை; நீயே பட்டாபிஷேகம் செய்து கொண்டு அரசு புரிவாய்’ என்று வற்புறுத்தினார்கள், நானும் அதற்கு இணங்கினேன்.

‘சில காலம் கழித்து மாயாவியையும் அவனுடைய துணையாட்களாக இருந்த அசுரர்களையும் கொன்று ஒழித்து விட்டு வாலி திரும்பினான். குகை அடைபட்டிருப்பதைப் பார்த்து, “சுக்ரீவா! சுக்ரீவா!” என்று உள்ளே யிருந்து கத்திப் பார்த்தான். நான் அவ்விடமில்லையானபடியால் எனக்கு இது ஒன்றும் தெரியாது. அவன் என்மேல் மகா கோபங்கொண்டு கற்பாறையை உதைத்துத் தள்ளி விட்டுக் கிஷ்கிந்தைக்குள் பிரவேசித்தான்.

“நான் ராஜ்ய பட்டாபிஷேகம் செய்துகொண்டு அரசு புரிவதைப் பார்த்ததும் அடங்கா சினம் மேலிட்டு என்னைப் பலவாறாகத் திட்டினான். நான் நடந்ததை நடந்தது போலச் சொன்னேன். ‘அரக்கன் உன்னைக் கொன்றுவிட்டான் என்று எண்ணி இவ்விதம் செய்தேன். பிரஜைகளுடைய நிர்ப்பந்தத்துக்காக அபிஷேகம் பெற்றேன். இந்த ராஜ்யம் உன்னுடையது; திரும்பப் பெற்றுக்கொள், உன் அடிமையாக நான் முன்போல் இருப்பேன்’ என்று சொல்லி அவன் காலில் விழுந்தேன். அவனோ நான் சொன்னதை லட்சியமே செய்யவில்லை. நான் துராசைப் பட்டுக் குகை வாயிலை அடைத்து விட்டு அக்கிரமமாகப் பட்டாபிஷேகம் செய்து கொண்டேன் என்றே அவன் நினைத்து, என்னை நகரத்திலிருந்து வெளியே துரத்தி விட்டான். ‘திரும்பி இந்தப் பக்கம் வந்தால் உன்னைக் கொல்வேன்’ என்று சொல்லி என்னைத் துரத்திவிட்டான். அப்போது நான் உடுத்தியிருந்த வஸ்திரத்துடன் வெளியே ஓடினேன். அதுமுதல் காடும் மலையுமாக மறைந்து திரிந்து உயிரைக் காப்பாற்றிக்கொண்டு வருகிறேன். எல்லாம் இழந்து இந்த நிலையிலிருக்கிறேன். இந்த நான்கு வானரர்களே எனக்குத் துணையாக இருந்து வருகிறார்கள். கோபத்தால் உண்மையையறிய மாட்டாமல் என் அண்ணன் இம் மாதிரி அக்கிரமம் செய்து வருகிறான். மகா பராக்கிரமசாலியான அந்த வாலியை வதம்செய்து என்னைக் காப்பாற்றுவாய்” என்றான் சுக்ரீவன்.

இது ஆச்சாரியார் தீட்டியுள்ள கதை!

இதில் சுக்ரீவன் பேச்சில் ஒரு துளியாவது உண்மையிருக்கிறதா என்று கவனியுங்கள். மாயாவி என்ற அசுரனோடு, வாலி, தனியே சென்று சண்டை போடுகிறான். குகையிலேயிருந்து ரத்தவெள்ளம் பெருகி வந்திருக்கிறது அது வாலியின் ரத்தந்தான் என்று கருதி, அவன் இறந்து விட்டதாகச் சுக்ரீவன் கருதுகிறான். குகையினுள்ளே இரு தரப்பாரும் சண்டை போடுகிறார்கள். அதிலும் வாலி, யாராலும் வெல்லப்பட முடியாத வீரன் என்பது சுக்ரீவனுக்கே தெரியும். ஹிமவானாலும் சமுத்திர ராஜனாலும் ஜெயிக்க முடியாத ஆயிரம் யானைகளின் பலம்பெற்ற துந்துபி என்ற எருமை வடிவ அசுரனை ஒரே அடியில் வீழ்த்தி ஒரு யோசனை தூரத்திற்கப்பால் வீசி எறிந்த வீரன் வாலி என்பதை சுக்ரீவனே ராமனிடம் கூறுவதாக ஆச்சாரியார் 13.3.1955 இதழில் குறிப்பிட்டிருக்கிறார். அத்தகைய பலம் பொருந்திய வாலியின் ரத்தம் வழிந்தோடி வருவதாக சுக்ரீவன் நினைத்திருக்க முடியுமா? - சரி! அப்படியே அண்ணன் இறந்து விட்டதாகத் தவறாகக் கருதினாலும், தம்பி என்ன செய்திருக்க வேண்டும்? ‘அண்ணனே போன பிறகு எனக்கென்ன வாழ்வு?’ என்று தன் சேனைகளைத் திரட்டி அமைச்சர் அனுமானுடன் குகைக்குள்ளே நுழைந்து, மாயாவியை எதிர்த்திருக்க வேண்டாமா? - அதைவிட்டு குகையின் வாயிலிலே பெரிய பாறையை வைத்து அடைத்து வந்தது என்ன நியாயம்? - ராஜ்யத்தை அபகரிக்க வாலி எப்போது ஒழிவான் என்று சுக்ரீவன் எதிர்பார்த்துக் கொண்டிருந்திருக்கிறான் என்பதுதானே உண்மை!

இப்பேர்ப்பட்ட மோச குணமும், பாசமற்ற நெஞ்சங் கொண்ட சுக்ரீவனைத் தன் தோழனாக ராமன் பெறுகிறான் என்றால், ராமனின் உள்ளம் பற்றி நாம் என்ன நினைப்பது? அழியாத பாசமுள்ள தம்பியாக லட்சுமணனைப் பெற்றிருக்கிற அண்ணன் என்று பாராட்டப்படுகிற ராமன், அண்ணனுக்குத் துரோகம் செய்த துரோகி சுக்ரீவனின் துணையைக் கோருவது எவ்வகையில் பொருத்தமுடையது?-என்பதை ஆச்சாரியார்தான் விளக்க வேண்டும். அண்ணனுக்கும், அரக்கனுக்கும் போர் நடந்ததாம். ரத்த வெள்ளம் குகை வழியே புரண்டு வந்ததாம். அரக்கன் செத்ததாக நினைக்காமல், அண்ணன் செத்ததாக நினைத்தானாம், தன்னுயிரைக் காத்துக்கொள்ள குகையை மூடி விட்டானாம். பிரஜைகள் விரும்பினார்களாம் முடி சூட வேண்டுமென்று! அவனும் சூடிக் கொண்டானாம்! அண்ணன் திரும்பி வந்ததும் உண்மையைச் சொன்னானாம்; அவன் கேட்கவில்லையாம்! அகப்பட்டுக்கொண்ட பிறகு - சதி வெளிப்பட்ட பிறகு - தப்பித்துக் கொள்ள போலி நாடகம் ஆடியிருக்கிறான் துரோகி! அவனுக்குத் துணைவனாகிறான் ராமன்! இங்கே ஆச்சாரியார் மழுப்புகிறார்.

“வாலியின் நடவடிக்கையிலும் பெருங்குற்றமில்லை! சுக்ரீவனின் காரியங்களிலும் பெருங் குற்றம் சொல்லுவதற்கில்லை.” (6.3.1955 - ‘கல்கி)

ஆச்சாரியாரின் தீர்ப்பு இது!- அப்படியானால், இரு சகோதரர்களுக்கும் சமாதானம் செய்து வைத்து, இருவரின் துணையையும் பெறுவதுதானே இராமன் செய்கையாக இருந்திருக்க வேண்டும்! அப்படியில்லையே; ராமனின் செயல்! ஏன்? ஏன் ஆச்சாரியாரே; ஏன்?

கலைஞர் மு.கருணாநிதி · சக்கரவர்த்தியின் திருமகன். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்