பொருளடக்கம்

14. காரியமாகும் வரையில் காலைப் பிடி !

கட்டுரை 14 / 14

காரியமாகும் வரையில் காலைப் பிடி !

Hold Their Feet Until Your Purpose Is Achieved!

அச்சுப் பொருளடக்கத்தில்: காரியமாகும் வரையில் காலைப் பிடி!

அச்சுப் பக்கம் 7780

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

வாலியின் மார்பில் குத்தி நின்ற பாணத்தை நீலன் மெல்ல அகற்றினான். உடனே காயத்திலிருந்து மலையருவிபோல ரத்தம் பொங்கி, வாலியின் உயிர் உடலைவிட்டுப் பிரிந்தது. அவன் மனைவி தாரை, ‘ஐயோ!’ என அலறி அழுதாள். “அங்கதா! உன் தகப்பனைக் கடைசித் தடவையாக வணங்குவாய்!” என்றாள். “உங்களுடைய பிரிய மகன் வணங்கி நிற்கிறானே! அவனுக்கு ஒன்றும் சொல்லமாட்டீர்களா? நான் விதவையானேன். மகனும் திக்கற்றுப் போனான்!” என்று இதயம் உடைந்த தாரை பிரலாபித்தாள்.

வாலியின் உடல் மலையெனச் சாய்ந்து கிடந்தது. இந்த நேரத்தில் சுக்ரீவனும் கலங்குகிறான். அவன் கலக்கத்தை ஆச்சாரியார் வர்ணிக்கிறார்; பாருங்கள்.

“எனக்குள் மறைந்து நின்று உள்ளே வேலை செய்து வந்த ஆசை என் புத்தியைக் கெடுத்துவிட்டபடியால் அல்லவோ நன்றாக ஆலோசியாமல், வாலி புகுந்த குகையின் வாயிலை மூடிவிட்டு அண்ணனுடைய சம்பத்தை அபகரித்துக்கொண்டு ஆனந்தமாக அனுபவித்தேன்” என்று தனக்குள் சிந்திக்கலானான். (27.3.1955 - ‘கல்கி’)

இதிலிருந்து விளங்குவது என்ன? சுக்ரீவன் ஆசையின் காரணமாக புத்தி தடுமாறி வாலியை ஒழித்துவிட குகையை மூடினான் என்பதுதான் உண்மையாயிருக்க வேண்டுமென்று நாம் குறிப்பிட்டது சரியாகத் தோன்றுகிறது - இல்லையா? இத்தகைய இழிகுணம் படைத்த சுக்ரீவனுக்குத்தான் துணையாக நின்றான் இராமசந்திர மூர்த்தி என்பதை எண்ணும்போது அவன்பால் எப்படித்தான் பக்தி பிறக்கிறதோ, பூஜனைப்பித்தர்களுக்கு - நாமறியோம்.

வாலி சாவுக்குப் பிறகு மழைக்காலம் ஆரம்பமாகி விட்டது. அதனால் சீதையைத் தேடும் முயற்சியை ஒத்திவைத்துவிட்டு, ராம லட்சுமணர் பக்கத்திலிருந்த ஒரு மலைக் குகையில் காலங்கழித்தார்கள். சுக்ரீவன் முதலியோர் கிஷ்கிந்தா புரத்தில் சுகமாக காலங்கழித்தார்கள். அதுவும் எப்படி? ராஜகாரியங்களை யெல்லாம் மந்திரிகளிடம் ஒப்புவித்துவிட்டு, சுக்ரீவன் அந்தப்புர போகத்தில் மூழ்கிக் கிடந்தான் என்று ஆச்சாரியாரே எழுதுகிறார், 3.4.1955ஆம் நாள் இதழில்!

மழைக்காலமும் முடிந்து விட்டது. சுக்ரீவன் சொன்னபடி சீதையைத் தேடும் முயற்சி ஆரம்பமாகவில்லை. ராமனுக்கு அதனால் கோபம் பொங்குகிறது. அந்தக் கோபத்திலே உதிரும் வார்த்தைகளை ஆச்சாரியார் பொறுக்கித் தருகிறார்; படியுங்கள்!

“உலகமெல்லாம் சவுந்தாயமும் மகிழ்ச்சியுமாக இருக்கிறது. சீதை எங்கேயோ தவித்துக்கொண்டிருக்கிறாள். நானோ இங்கே - நன்றி மறந்த வானர ராஜனுடைய தயவை எதிர்பார்த்துக்கொண்டு சும்மா கிடக்கிறேன். இந்த வானர ராஜனோ மதுபானத்தில் மூழ்கி, பெண்களோடு கூடி கிராமிய சுகத்தில் ஈடுபட்டு, எனக்குத் தந்த வாக்கை முற்றிலும் மறந்துவிட்டான். இந்த வானர ராஜன் ஒரு கயவனாகத் தோன்றுகிறான்.” (3.4.1955 - ‘கல்கி’)

ராமனுடைய நண்பன் சுக்ரீவன் எத்தகையவன் என்பதை ராமனே விளக்குகிறான் மேற்கண்டவாறு. ராமன் கோபிப்பான் எனக்கண்ட அனுமான், சுக்ரீவனை எச்சரித்து அவனை சீதையைத் தேட அழைக்கிறான். இதற்குள் ராமனுடைய உத்தரவுப்படி லட்சுமணன் கோபாவேசமாகப் பிரவேசிக்கிறான். “உன் அண்ணனை அனுப்பிய இடத்திற்கு உன்னையும் அனுப்புவேன் - என்று சொன்னதாகச் சொல்” என்றல்லவா ராமன் லட்சுமணனிடம் கூறி அனுப்பியிருக்கிறான்!

ஆகவே லட்சுமணன் ஆயுதபாணியாக ஆக்ரோஷத்துடன் புறப்பட்டு விட்டான். லட்சுமணன் வரும் செய்தியை சுக்ரீவனிடம் வானர் கூறி நடுங்கினார்கள். “வானர ராஜனோ கள்ளும் ஸ்திரிகளுமாக அந்தப்புரத்தில் மயங்கிக் கிடந்தான். வானர் சொன்னது அவன் காதில் ஏறவில்லை” என்கிறார் ஆச்சாரியார். சுக்ரீவனின் அலட்சியம் லட்சுமணனைப் புயலாக மாற்றுகிறது வில்லின் நாணையிழுத்து ஒலி எழுப்புகிறான். ஒலி முழக்கம் கேட்டு சுக்ரீவன் நடுங்கி, தாரையை லட்சுமணனிடம் சமாதானம் பேச அனுப்புகிறான்.

தாரையின் பேச்சைக் கேட்டு லட்சுமணனும் சமாதானமடைகிறான். சமாதானம் பேசவரும் தாரையைப் பற்றி ஆச்சாரியார் கூறுவதைக் கேளுங்கள்:

“அழகிலும், உலக விஷயங்களைப் பற்றிய சாமர்த்தியத்திலும், பேச்சு நயத்திலும் அவளுக்குச் சமானம் யாருமில்லை. அவள் லட்சுமணனைச் சமாதானப்படுத்துகிறாள்.” (3.4.1955 - ‘கல்கி’)

போருக்கு வருகிறவனை சமாதானப்படுத்த வேண்டிய ஒரு பெண்ணுக்கு மேற்கூறிய திறமைகளோடு, அழகும் தேவையென்று ஆச்சாரியார் கருதுகிறார் போலும்!

அதனால் தான் தாரையின் அழகுக்கு முக்கியத்துவம் தரவேண்டிய நிலைமைக்கு அவர் ஆளாகிறார். சமாதானமடைந்த லட்சுமணன் சுக்ரீவனோடு அளவளாவுகிறான். தங்கள் காரியம் நடக்கவேண்டுமென்பதற்காக ஆரியர்கள் எதையும் செய்வார்கள் -எதையும் பேசுவார்கள் என்பதற்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு!

சுக்ரீவன் சீதையைத் தேடாமல், சிருங்கார போகத்தில் ஆழ்ந்து கிடக்கிறான் எனக் கேள்விப்பட்ட ராமன், அவனை ஒரு நன்றிகெட்ட கயவன் என்று தூற்றுகிறான் - லட்சுமணனோ போருக்குப் புறப்படுகிறான் சுக்ரீவனோடு! சுக்ரீவன், சீதையைத் தேட புறப்பட்டதும், லட்சுமணன் என்ன பேசுகிறான் தெரியுமா, சுக்ரீவனைப் பற்றி?

“சுக்ரீவா! உன்னைப்போன்ற தீரன் ராமனைத் தவிர வேறு யாருமில்லை. ரிஷ்யமுகம் வந்து ராமனைக் கண்டு அவன் துயர்தணிக்கும் வார்த்தைகளைச் சொல்வாயாக!” என்றான். (3.4.1955 - ‘கல்கி’)

சுக்ரீவன் வந்ததும் ராமன் என்ன சொல்லுகிறான் தெரியுமா?

“உன்னைப் போன்ற நண்பன் உலகில் வேறொருவனில்லை. உன் நட்பை நான் சம்பாதித்தது என் பாக்கியம்.” (3.4.1955 - ‘கல்கி’) என்று வர்ணிக்கிறான் சுக்ரீவனைப் பற்றி! இதிலிருந்து, தங்கள் காரிய சாதனைக்காக கயவர்களின் காலை பிடிக்கவும் தயாராக இருந்தார்கள் சக்கரவர்த்தியின் திருமகன்கள் என்பது தெளிவாகிறது. அதனால்தான் சகோதரத் துரோகியும், கயவனும், நன்றி கெட்டவனுமான சுக்ரீவனிடத்திலே ராம லட்சுமணர் தோழமை பூண்டொழுகியிருக்கிறார்கள் என்பதும் புலனாகிறது.

கலைஞர் மு.கருணாநிதி · சக்கரவர்த்தியின் திருமகன். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்