பொருளடக்கம்

9. தந்தை மகனும் தருமம் தவறியவர்கள்!

கட்டுரை 9 / 14

தந்தை மகனும் தருமம் தவறியவர்கள்!

Father and Son—Both Strayed from Dharma!

அச்சுப் பக்கம் 5358

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

சித்ரகூட மலைச் சாரலிலே, ‘சீதா! அதோ, பறவைகள் விளையாடுவதைப் பார்! மலைப் பாறைகளைப் பார்! அவற்றில் தாதுக்கள் நீலமும், மஞ்சளும் சிகப்புமாக எப்படி மின்னுகின்றன! வனத்தில் செடிகளையும் கொடிகளையும் பார்! புஷ்பங்களைப் பார். நாம் என்னவோ எண்ணினோம்; இந்த வனவாசம் எவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கிறது. பட்டண வாசத்தைவிட இந்த வனவாசம் எவ்வளவு இன்பமாயிருக்கிறது” என்றெல்லாம் ஆச்சாரியார் எழுதியிருக்கிறபடி, சக்கரவர்த்தி திருமகனும் ஜானகியும் உரையாடிக் கொண்டு, இன்பமாகப் பொழுது போக்கிக் “கஷ்டப்பட்டுக்” கொண்டிருந்த சமயத்திலே பரதனும், மூன்று அரசியரும், மற்றவர்களும் வந்து சேர்ந்தார்கள். போருக்கு வருகிறானா என்று கூடத் தெரிந்துகொள்ள முடியாமல் அவசரப்பட்டுக் குதிக்கிறது லட்சுமண அவதாரம். வந்த பரதனும் மற்றவரும் ராமனைக் கண்டு வருந்தினார்கள். தசரதன் இறந்த செய்தி அவர்கள் சொன்ன பிறகுதான் மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமருக்குத் தெரிகிறது! தெரிந்த பிறகு, தந்தைக்கு செய்ய முடிக்கவேண்டிய கடமைகளைச் செய்து முடித்தார்கள்.

அங்கு மந்தாகினி என்னும் நதியிலேதான் அவர்களுக்கு வேண்டிய தண்ணீரை வழக்கமாக லட்சுமணன் எடுத்துச் செல்வான் என்று கேள்விப்பட்டதும் கவுசல்யா தேவியும் - சுமித்திரையும் அழுதார்களாம். கவுசல்யை ஏன் அழுதிருப்பாள்? அரண்மனையிலே கேட்ட நேரத்திலே தண்ணீரும் பன்னீரும் கிடைக்குமே இங்கே என் மகன் ஆற்றுத் தண்ணீர் குடித்துக் கஷ்டப்படுகிறானே யென்று அழுதாள் போலும்!

சுமித்திரை அழும்போது, கவுசல்யை என்ன சொல்லித் தேற்றுகிறாள் தெரியுமா? ஆச்சாரியார் நடையிலேயே படியுங்கள்.

“சுமித்திரையே! என் மகனுக்காக, இந்தத் துறையில் உன் மகன் தினமும் ஆற்றில் இறங்கிச் சுத்தமான ஜலம் ஆசிரமத்துக்கு எடுத்துப்போய் வைக்கிறான், பார்த்தாயா? அண்ணனுக்காக எந்த வேலையும் சந்தோஷமாக செய்வான் உன் மகன்!”

என்று கவுசல்யை கூறி அவளை சமாதானப்படுத்துகிறாள். இலக்குமணனின் பெருமையைக் கூறுவதுபோல், அவன் கஷ்டங்களை அவனது தாயிடம் மறைக்க எண்ணுகிறாள் மூத்தவள்.

தண்ணீர் எடுத்தல் முக்கிய வேலைகளைக்கூட இலக்குமணனே செய்திருக்கிறான் என்று எண்ணும் போது, சீதையைப் பற்றி நாம் என்ன கருதுவது என்றே புரியவில்லை. ராமனின் அணைப்பிலேயே ஈடுபட்டு ஆரண்ய சுகத்தை அனுபவித்த சீதாதேவி, தன் ‘கொழுந்தனார்’ ‘லட்சுமணன்’ குடமெடுத்துத் தண்ணீர் கொண்டுவரச் செல்லும் நிலைமையை எப்படித்தான் அனுமதித்தாளோ தெரியவில்லை. உடல் நலமில்லாது வருந்தும் பெண்கள் கூட, தங்கள் வீட்டு ஆண்மக்கள், அடுக்கனை வேலைகள் செய்வது, தண்ணீர் கொண்டு வருவது போன்ற பணிகளைச் செய்ய அனுமதிக்க மாட்டார்கள், சீதாதேவியோ கற்பின் அணிகலம்! பழம் பாரதத்தின் பெண்மைச் சிறப்புக்கோர் எடுத்துக்காட்டாம்! அவள் இம்மாதிரி வேலைகளை இலட்சுமணன் செய்யும்போது பார்த்துக் கொண்டிருந்தாளாம்.

அது நிற்க, பரதனும் ராமனும் கானகத்தில் சந்தித்த கட்டமே மிகப்பெருமை வாய்ந்த கட்டம் என்று புகழ்கிறாரே ஆச்சாரியார் -அந்தக் கட்டத்தை சிறிது கவனிப்போம்.

“பரதன் ராஜ்யத்தை ஆளவேண்டும்; ராமன் பதினான்கு வருடம் காட்டேக வேண்டும்” என்பதுதான் தந்தையின் கட்டளை, இந்த வரிகளை நன்றாக ஞாபகம் வைத்துக்கொண்டு இந்தக் கட்டத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். பரதன், ராமனைத் திரும்ப அழைக்கும் போது ராமன் என்ன பதில் சொல்லுகிறான் தெரியுமா? “தந்தை, உனக்கு ராஜ்யப் பொறுப்பைத் தந்தார் - எனக்கு வனவாசம் தந்தார். இப்படி நம்மிருவருக்கும் வாழ்க்கையை வகுத்துக் கொடுத்து மரணமடைந்தார்.” ராமனுடைய உள்ளத்திலே தசரதனைப் பற்றிய ஆத்திரம் எவ்வளவு இருந்திருக்கிறது என்பதைப் பாருங்கள். ஒருவனை நாடாளவும் இன்னொருவனைக் காட்டாளவும் செய்து, இருவருக்கும் தந்தை, வாழ்க்கையை வகுத்துக் கொடுத்துவிட்டார், என்று எரிச்சலை, கேலியோடு கலந்து வழங்குகிறான் ராமன்.

ஜாம்பாலி என்பவர், ராமனை எப்படியாவது அயோத்திக்கு வரவேண்டும் என்று கோரியபோது சொல்லுகிறான்;

“சத்தியத்தை நீர் ஒரு பொருட்டாக மதிக்காமல் நாஸ்திகம் பேசுகிறீர். சத்தியத்தைவிட மேலான ஒரு பொருள் உலகத்தில் இல்லை” இப்படிச் சொல்வது ராமன். தந்தை பரதனுக்கு முடிசூட்ட கட்டளையிட்ட பிறகு அதை மீறுவது சரியல்ல என்கிறான். சத்தியத்தை விட மேலானது எதுவுமில்லை; அதை மீறுவது நாஸ்திகம் என்கிறான். அப்படியானால், கேகய மன்னனுக்கு அளித்த வாக்குறுதியை - சத்தியத்தை - மீறுவது மட்டும் நாஸ்திகமில்லையா? அந்த தசரதனை தர்ம ராஜன் என்றும் நேர்மையான வேந்தன் என்றும் போற்றுவதிலே உண்மையிருக்கிறதா? ஆச்சாரியார் இதற்கு பதில் சொல்ல முன் வருவாரா? ராம கதையை தலையிலே தூக்கி வைத்துக்கொண்டு பரதனைப்போல் ஆடுகிறவர்கள் இருக்கிறார்களே அவர்களைக் கேட்கிறேன் - தசரதன் சத்தியம் தவறியவன்தான் என்பதை மறுக்க முடியுமா இவர்களால்? ஆட்டு மந்தைபோலக் கூடி, “கோவிந்தா” போட்டுப் பயனில்லை. நாம் கூறும் கருத்துக்களை நேர்மையாக எதிர்த்திடும் நாதிகமுள்ளவர்கள் முன்வர வேண்டுகிறோம்; தசரதன் சத்தியம் தவறிய நாஸ்திகனா இல்லையா என்பதை விளக்கிட வேண்டும் - வருவார்களா? - துணிவு உண்டா? ஆதாரம் இருக்கிறதா?

நிற்க, ராமனும் சத்தியத்தை எப்படிக் காப்பாற்றினான் என்ற அழகை சற்று கவனிப்போம்.

பரதன் அழைத்தான் - ராமன் வர மறுத்துவிட்டான். வசிஷ்டர் அழைத்தார் - வர மறுத்துவிட்டான், ஏன்? ராமனுக்கு அயோத்தி திரும்பவும், ராஜ்ய பாரத்தை ஏற்கவும் ஆசையில்லை; தந்தை, தம்பிக்குத் தந்த ராஜ்யத்தை தான் அபகரிக்க விரும்பவில்லை - அதனால் அவன் வர மறுத்துவிட்டான் என்றா கருத முடிகிறது? இல்லை - இல்லவே இல்லை! - ராமன், தசரதன், வசிஷ்டன் முதலியோர் சதி நடத்தி ராமனுக்கு முடிசூட்ட ரகசிய ஏற்பாடு செய்தபோது, அதை முறியடித்து, அவனைக் காட்டுக்கு அனுப்பினாளே கைகேயி - அவளிடத்திலே அல்லவா இருக்கிறது சூட்சமம்! - அவள், பரதனைப்போல ராமனைக் கெஞ்சிக் கூப்பிட்டிருப்பாளேயானால் ராமன் கட்டாயம் வந்தேயிருப்பான். பரதன், தற்கொலை செய்து கொள்வேன் என்றான் - தீயில் இறங்குவேன் என்றான் - என்னவெல்லாமோ சொல்லி அழுதான்; ஆனால், கூப்பிடவேண்டியவர்கள் கூப்பிடவில்லை; ராமனும் அயோத்தி திரும்பவில்லை என்பதுதான் உண்மை!

உள்ளபடியே, ராமனுக்கு அயோத்தியில் அரசனாக வீற்றிருக்க ஆசையில்லை என்று யாரும் கூற முடியாது. அப்படி ஆசையில்லாவிட்டால், பதினான்கு ஆண்டுகள் கழித்து அவன் அரசனாக முடிசூட்டிக் கொண்டிருக்க மாட்டான். தந்தையின் ஆணையை - சத்தியத்தை மீறிய நாஸ்திகனாக ராமன் இங்கே மாறிவிட்டான். தந்தை, ராஜ்யத்தைப் பரதனுக்குத்தானே கொடுத்தார். பதினான்கு ஆண்டு கழித்து மீண்டும் ராமனே நாடாள வேண்டும் என்று கூறியது யார்? வரம் கேட்ட கைகேயியும் கூறவில்லையே! - பரதனுக்குரிய நாட்டை, சத்தியத்தை மீறி ராமன் அடைந்தது எவ்வாறு பொருந்தும்? நாட்டை மீண்டும் பெறுவதற்கு வசிஷ்டரும், ராமனும் எவ்வளவு சதி நினைப்போடு பேசியிருக்கிறார்கள் என்று ஆச்சாரியாரே எழுதுகிறார் காண்க.

ராமன் கூறுகிறான்; “தம்பி, நான் தந்த ராஜ்யமாகவே எண்ணி, நீ ஒப்புக்கொண்டு தந்தை சொற்படி நட!”

பார்த்தீர்களா; ராஜ்யத்துக்கு ராமன் மறைமுகமாகக் கொண்டாடும் உரிமையை! தசரதன் அளித்த வாக்குப்படி நாட்டுக்குரியவன் பரதன்! ஆனால், ராமனோ வெகு லாவகமாக - மிக நளினமாக - அது - “தான் தந்த நாடு” என்று கூறுகிறான் பரதனிடம்! தந்தையினால் பரதனது நாடு என்று சொல்லப்பட்டதை, தன்னுடைய நாடு என்று கூறிக்கொள்ள எவ்வளவு தைரியமும், சத்தியம் மறந்த தன்மையும் இருந்திருக்க வேண்டும் அவதார புருஷன் அயோத்தி ராமனுக்கு! வசிஷ்டன் பேசுகிறான் பாருங்கள்!

“பரதா! ராமனுடைய அதிகாரத்தைக் கொண்டு சக்கரவர்த்தித் திருமகனுக்காக, நீ ராஜ்ய பரிபாலனம் செய்! அப்படிச் செய்தால், பழியுமில்லை - சத்தியமும் காப்பாற்றப்படும்.”

முனிவர் சொல்லியிருக்கிறார் இப்படி! எந்த அளவுக்கு அருமையாக உபதேசம் செய்திருக்கிறார் என்று சிந்தியுங்கள்! எவ்வளவு பெரிய சதி இது! முதலில் ராமனுக்குப் பட்டம் கட்ட, சதி செய்தவர்களில் ஒருவர் வசிஷ்டர், அதே வசிஷ்டர் இப்போதும், ராமனுக்கு அயோத்தியின்மீது உரிமையை நிலைநாட்ட இதுபோல வழி சொல்லித் தருகிறார். ராமன் இல்லாவிட்டாலும் அவன் அதிகாரம் இருக்கட்டும் - அவனது ராஜ்யமே அயோத்தியில் நடைபெறுகிறது என்று தெளிவாகட்டும், என்பதுதான் முனிவரின் திட்டம்! - அதன்படி ராமனது பாதுகைகளை, சிம்மாசனத்திலே வைத்துவிட்டு பரதன், நந்திக் கிராமத்திலே யிருந்து ராஜ்யத்தை கவனித்து வந்தான். இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்கிறோம்? தந்தையின் சொல்லையும் -சத்தியத்தையும் மீறிவிட்டானா இல்லையா ராமன்?

ராமன் சிம்மாசனத்தில் உட்காரவில்லை; அவன் செருப்புகள் உட்கார்ந்தன.

“ஏ! தசரத ராஜனே! தந்தையாக வாய்த்த பாதகனே! என்னை சிம்மாசனத்தில் உட்காரக்கூடாது என்றாய் - இதோ அந்த சத்தியத்தை காப்பாற்றுவது போல் நடித்துக்கொண்டு, என்னுடைய செருப்புகளையே சிம்மாசனத்தில் வைத்துவிட்டேன். உன்னுடைய சத்தியம் - ஆணை - எல்லாம் இந்த செருப்புக்கு சமானம்.”

என்று சவால் விடுவது போலத்தானே ராமன், தனக்கு பதிலாக தன் பாதுகை ஆளட்டும் என்றான் - இதற்கு ராமன் ஆட்சி என்ற பெயர் இல்லையா? - தந்தை வாக்கை மீறியதாக அர்த்தமில்லையா? - இப்போது, சென்னையிலே நேருவா உட்கார்ந்துகொண்டு ஆளுகிறார்? அவர் டில்லியிலே இருக்கிறார்; இங்கே அவரது அதிகாரம் கவர்னர் பிரகாசா மூலம் பிரயோகிக்கப்படுகிறது! இதுபோலத்தான் ராமன் காட்டிலேயிருந்தான் - அயோத்தியிலே அவனது அதிகாரபூர்வமான பிரதிநிதியாக அவனது “புனிதமான” பாதுகைகள் இருந்து ஆட்சி புரிந்தன. ஆயிரம் முறை சொல்லுகிறோம்; ராமன் தந்தையின் வாக்கை மீறினான் - மீறினான் என்று! நெஞ்சிலே நேர்மை உள்ளவர்கள் - ராமனைக் காப்பாற்றத் துடிக்கும் பக்த கோடிகள் - ஆச்சாரியாரின் சீடர்கள் - ராமன், தந்தை வாக்கை மீறவில்லை என்பதை நிருபிக்க முடியுமா? “என்னையா ஆளக்கூடாது என்று சொல்கிறீர்கள்? என் செருப்பை ஆளச் செய்கிறேன்?” என்ற விதத்திலே வெற்றி பெற்றான் சதிகார ராமன்! - “கவுசல்யையின் மகன்” என்றாலே தனிப் பிரியம் காட்டும் வசிஷ்ட முனிவரும், சதி நிறைந்த சாகசப் பேச்சால் ராமன் அதிகாரத்தை அயோத்தியில் நிலைநாட்டி ஜெயக்கொடி நாட்டினார். இதை ஆச்சாரியார் மறுப்பதற்கில்லை.

கலைஞர் மு.கருணாநிதி · சக்கரவர்த்தியின் திருமகன். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்