கட்டுரை 8 / 14
நாடாண்ட மன்னன் நாதியற்று செத்தான்
The King Who Ruled the Land Died with No One to Tend Him
அச்சுப் பக்கம் 48–52
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
ராமர்,லட்சுமணர்,சீதை மூவரும் கானகத்தில் தங்கள் வாழ்க்கையைத் துவங்கிவிட்டனர். இங்கே அயோத்தியில், தசரதன் புத்திர சோகத்தில் புழுவாய்த் துடிக்கிறான். அந்தச் சமயத்தில் அவனருகே இருப்பது கவுசல்யை என்றும் ஆச்சாரியார் குறிப்பிடுகிறார்.
“அரசன் இன்னது செய்வது என்று தெரியாமல் தத்தளித்து அரை ஜீவனாக இருக்கும் சமயத்தில் கவுசல்யை தனக்குத் தோன்றிய நியாயத்தை யெல்லாம் சொல்லித் தசரதனுடைய குற்றத்தை வெகு கடுமையான முறையில் குத்திக் குத்திக் காட்டிப் பேசினாள்.”
கவுசல்யாவின் பதிபக்தி எத்தன்மைத் தூய்மை யுடையதாயிருக்கிறது பாருங்கள். உயிருக்கே மன்றாடி, அரை ஜீவனாகக் கிடக்கிறானாம் மன்னன். வெகு கடுமையாக குத்திப் பேசினாளாம் கவுசல்யாதேவி! ராமனின் தாயார். அது மட்டுமா? - மகனைக் காட்டுக்கு அனுப்பி விட்டு மணாளனையும் மரணப் படுக்கையிலே காணும் அந்தக் கற்புக்கரசி(?) கணவனிடம் என்ன சொல்லிப் புலம்புகிறாள்; ஆச்சாரியாரே எழுதியிருக்கிறார் படியுங்கள்.
“எனக்கு யார் கதி? ஸ்திரீக்குப் புருஷன்தான் கதி. நான் பெற்ற புருஷனோ வேறு மனைவியுடன் சேர்ந்து கொண்டு என்னைக் கைவிட்டுவிட்டான். என் மகனோ காட்டுக்குப் போய்விட்டான். என் பிறந்தகத்துப் பந்துக்கள் தூர தேசத்தில் இருக்கிறார்கள். புருஷன் உயிரோடிருக்க அங்கேபோய் நான் எப்படிப் பந்துக்களை அண்டிப் பிழைக்க முடியும்? நிர்க்கதியாக நிற்கிறேன். உமக்கு இதைப்பற்றி யெல்லாம் என்ன கவலை?”
தன்னைப் பற்றியே கவலைப்பட்டுக் கொள்ளும் தாம் பத்தினி கவுசல்யா தேவி, கைகேயியைவிட எந்த விதத்தில் உயர்ந்தவள் என்று ராமாயணக் கதையையே ஆதாரமாக வைத்துக் கேட்கிறேன். பந்துக்கள் வீட்டில் போய் அண்டிப் பிழைக்கலாமென்றால், அதற்கும் கணவன் உயிரோடிருந்து தொலைகிறானே என்று ஒரு ராஜ பத்தினி புலம்புகிறாள் என்றால், அவளது பண்பின் அளவு எத்தகையது என்பதை இயம்பவும் வேண்டுமோ?
தசரதனோ, புத்திர சோகத்தால் தான் வருந்துவதற்குக் காரணம் இளம் வயதில் தனக்குக் கிடைத்த சாபமே என உறுதியாக எண்ணுகிறான்.
ஓசை கேட்டு அம்பு எய்வதிலே அவன் வல்லவனாம். வாலிப வயதில் ஒருநாள் வனாந்திரப் பகுதியில் ஒருவன் குடத்தில் தண்ணீர் முகப்பதை யானை நீர் குடிக்கும் ஓசையெனக் கருதி அம்பு பூட்டினான். அந்த அம்பு மனிதனைக் கொல்லவே அந்த மனிதனின் பெற்றோர் அப்பெய்திய தசரதனும் புத்திர சோகத்தால் வருந்துக எனச்சாபமிட்டுச் செத்தனராம். ஆகவே தசரதனது, வாட்டத்திற்கு காரணம் கைகேயி அல்ல; இளமையிற் பெற்ற சாபமே - என்பதும் தெளிவாகி விட்டது.
ஓசையைக் கேட்டு அம்பெய்து வெல்லக்கூடிய அத்தனை சிறப்புடைய வீரன் தசரதனுக்குத்தான், ஒரு போர்க்களத்திலே கைகேயியின் துணை அவசியமாகப் போய்விட்டது! பாவம்; அவனால் ஓசையைத்தான் கேட்க முடியுமே தவிர; அந்த ஓசை யானையின் ஓசையா? - தண்ணீர் முகக்கும் பானையின் ஓசையா? - என்று கண்டுபிடிக்கத் தெரியாதுபோலும்! பால்யத்தில் தான் பெற்ற சாபத்தின் சாயலே இந்த சங்கடம் என்ற கதையை கவுசல்யாவிடத்திலே அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே.
“மார்பு அடைக்கிறது! இனி எதும் மிச்சமில்லே கவுசல்யே! நீ என் கண்களுக்குத் தெரியவில்லை. மரணம் நெருங்குகிறது - அருகில் வா! விளக்கில் எண்ணெய் வற்றிப் போயிற்று - கவுசல்யே! சுமித்திரே!” எனக் கூவினான். வர வர பேச்சு அடங்கிப்போய் அன்றிரவே உயிர் நீத்தான் அரசன்.
இதையும் ஆச்சாரியார் விபரமாக எழுதியிருக்கிறார். இன்னும் ஒரு வேதனையான வேடிக்கையையும் எழுதியிருக்கிறார் பாருங்கள். உயிர்நீத்த விஷயம் பக்கத்திலிருந்த கவுசல்யை சுமித்திரைக்குக்கூடத் தெரியவில்லை.
காரணம் என்னவாம்? கூறுகிறார், படியுங்கள்.
“சோகத்தாலும், கண் விழித்த களைப்பாலும், அந்தப்புரத்தில் ஒரு மூலையில் அயர்ந்து கிடந்தார்கள்.
மணவாளன், “மரணம் நெருங்கிவிட்டது - எல்லோரும் அருகே வாருங்கள் - கவுசல்யே! சுமித்திரே! விளக்கில் எண்ணெய் வற்றிவிட்டது!” என்று கதறியிருக்கிறான். பேச்சும் வர வர அடங்கி விட்டது - என்று அவனது மரணப்படுக்கையின் இறுதிக் கட்டம் வர்ணிக்கப்படுகிறது. அந்த வேதனைப் படலத்தின்போது, கவுசல்யா தேவியும், சுமித்திராதேவியும் கண்விழித்த களைப்பால் அயர்ந்து போய்விட்டார்களாம்! தசரதன் உயிர் நீத்த விஷயம் பொழுது விடியும்வரையில் அவர்களுக்குத் தெரியாதாம்! பொழுது விடிந்த பிறகும் எப்படித் தெரிகிறது? ஆச்சாரியாரே அதையும் எழுதியிருக்கிறார்; பாருங்கள்!
“பொழுது விடியும் காலத்தில் சூதமாகதர்கள் அந்தப்புர வாயிலில் வழக்கம்போல் கூடி அவரவர்களுடைய கிரமப்படி அரசனை எழுப்ப - சுப்ரபாதம் பாடவும், வாத்தியம் வாசிக்கவும் செய்தார்கள். அரசன் எழுந்ததாக காணவில்லை. பணியாட்கள் வெகு நேரம் காத்திருந்துவிட்டு, ‘இன்று அரசர் ஏன் இன்னும் எழவில்லை’ என்ற சந்தேகத்துடன் உள்ளே பிரவேசித்தார்கள். அரசன் உயிரற்றுக் கிடப்பதைக் கண்டார்கள். பிறகு அரண்மனை முழுதும் விஷயம் தெரிந்து ஒரே துயரக்கடலாயிற்று.”
அயோத்தி வேந்தன் - பட்டத்தரசி மூவரும், ஆசை சரசிகள் அறுபதினாயிரவரும் கொண்ட தசரத மகா ராஜன் - இரவு வெகுநேரம் வரையிலே, யாரும் கவனிக்காத அளவுக்கு பிணமாகக் கிடந்தான் என்பது பரிதாபத்திற்குரிய விஷயம்தான். இப்படி பல மனைவிகளை கட்டிக்கொள்வதிலே வருகிற ஆபத்தே இதுதான்!
மூத்தவள் கவனிப்பாள் என்று இளையவள் தூங்க - இளையவள் கவனிப்பாள் என்று அடுத்தவள் தூங்க - இப்படி அன்பு மனைவிகள் அனைவரும் அரசனின் மரணப் படுக்கையருகே போட்டி போட்டுக் கொண்டு தூங்கியதால்தானே அவன் தூங்க ஆரம்பித்த நீண்ட தூக்கத்தை யாரும் கவனிக்க முடியாமற் போயிற்று!
உயிர் பிரிந்த உடனே - திறந்திருக்கும் கண்களை மூடி வைக்கவும், அந்த தேசாதிபதியின் பக்கத்தே ஆளில்லாமல் போய்விட்டது, பாவம்! - கடைசி மூச்சு பிரிவதற்குள் பால் வார்க்கும் சடங்கு நடத்தி வைக்கக்கூட அந்தப் பார் ஆண்ட பார்த்திபனுக்கு நாதியில்லாமல் ஆகிவிட்டது! ஆயிரக்கணக்கிலே மனைவியர் - இறுதி மூச்சுவிடும்போது அவர்களில் ஒருவர் மடியிலாவது மன்னவனுக்கு இடம் கிடைக்காது போய்விட்டது - அப்படி அயர்ந்து தூங்கிவிட்டனர். அக்கால ஆரியப் பண்பு போலும் அது! தூக்கத்திலே மிகவும் திறமைசாலிகள் போலும் அயோத்தி ஆரணங்குகள்! அயோத்தியென்ன, மிதிலையின் மின்னல் கொடியாள் சீதாதேவி கூட, இந்திரன் மகன் சயந்தன் காக்கை உருவில் தன் பாக்கையைக் கொத்தியபோதும், குருதி வழிந்தபோதும் எழாமல் தூங்கிக் கொண்டிருந்த திறமைசாலியாயிற்றே! கற்பின் திருவுருவமாயிற்றே! எப்படி யோ ஒருவிதமாக தசரத மகாராஜன் மாண்டுவிட்டான். புலன்களை அடக்கியாளும் திறமைபெற்றவன் என்று வால்மீகியால் புகழப்பட்டவனாம் தசரதன். ராமாயண ஆரம்பத்திலேயே முனிவர், தசரதனைப் பற்றிய அப்படிக் குறிப்பு எழுதியிருக்கிறாராம். ஆச்சாரியார் கூறுகிறார், புலன்களை அடக்கியாளும் திறமை பெற்றவனுக்குத்தான் ‘அறுபதாயிரம்’ தேவைப்பட்டிருக்கிறது!
இன்ப கேளிக்கை ஒன்றுக்காக மட்டுமே, இளைய மனைவி கைகேயி இருந்தாள். ராமனுக்கு ‘முடிசூட்ட நாள்’ குறிக்கப்பட்டிருந்த முதல்நாள் இரவு, கைகேயியிடம் காம போதையில் தசரதன் உளறினான் என்று ஆச்சாரியாரே எழுதியிருக்கிறாரே; அந்தக் காம போதைகூட - புலன்களை அடக்கும் திறமையால் வந்ததுதான் போலும்! புத்திர சோகத்தை தாங்கமுடியாமல் இறந்து விட்டானே; அந்த நிகழ்ச்சியும் புலன்களை அடக்கும் திறமையால் ஏற்பட்டதாகத்தான் ஆச்சாரியார் கூறுவாரோ என்னவோ? “கண்ணில் பட்ட காரிகையாம், இளமை பொங்கும் கைகேயி எனும் அழகியாள் மனதைப் பறிகொடுத்து, வாலை அடக்கிப் பேசமுடியாமல் அவளுக்குப் பிறக்கும் மகனுக்கே நாடு தருவேன் எனக் கூறி, அவளுடன் தினந்தோறும் உடல் சுகம் அனுபவித்து, ‘ராமன் காட்டேகினான்’ என்ற சொல் செவி புகுந்ததும் சிந்தைகெட்டு செத்து மடிந்த தசரதன்” புலன்களை அடக்கியவன் என்று கூறுவது பொருந்துமா என்று பூணூல் வேந்தர் ஆச்சாரியாரைக் கேட்கிறேன்.
கலைஞர் மு.கருணாநிதி · சக்கரவர்த்தியின் திருமகன். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்