பொருளடக்கம்

7. விபீஷணருக்கு விடை யளிப்போம்!

கட்டுரை 7 / 14

விபீஷணருக்கு விடை யளிப்போம்!

Let Us Answer Vibhishana!

அச்சுப் பக்கம் 4147

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

சமீபகாலமாக ராமாயணப் பிரச்சினை நாட்டிலே தலை தூக்கி நிற்கிறது. ராமாயண கதா காலட்சேபங்களும் நாடக, சினிமாக்களும் கடந்து முடிந்து மறந்துபோய் இருந்த நேரத்திலே மீண்டும் புதிய முறுக்குடன் ராமாயணப் பிரச்சாரத்தைத் துவக்கியிருக்கிறார்கள். இப்படி துடிப்போடு துவக்கப்பட்டிருக்கிற இந்தக் காலத்தை நாம் ஓரளவுக்கு வரையறுத்துக் கூறிவிட முடியும், ஆச்சாரியார் அமைச்சர் பதவியிலிருந்து விரட்டப்பட்ட நேரத்திலிருந்து - என்பதாகக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

ஆட்சியின் மூலமாக தன் இனத்திற்கும், தன் இனத்தைப் பாதுகாக்கும் பாரத ராமாயண புராணக் கருவிகளுக்கும் ஆக்கம் தேட முயன்று திராவிட இனத்தின் அடி பீடத்தையே இருந்த இடம் தெரியாமல் அழித்து விட முடிவு கட்டி முப்புரியை உருவிப் புறப்பட்ட சூதின் உருவம் - சூழ்ச்சியின் எல்லைக்கோடு - ஆச்சாரியார் அவர்கள், நினைத்தது பரிபூரணமாக நடக்காது எனத் தெரிந்த காரணத்தால், புதிய முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார், அந்தப் புது முயற்சியின் விளைவுதான் அந்த சதித்திட்டத்தின் எதிரொலிதான் - ராமாயணத்திற்கு ஏற்பட்டிருக்கும் புதிய பொலிவு!

பழமை - மூடநம்பிக்கை - தண்ட கண்ட கடவுள் கொள்கை - கலாச்சாரத்திற்கு முரண்பட்ட பண்பாடு - இவைகளையெல்லாம் தரை மட்டமாக்கி, பகுத்தறிவு ஒளி பரப்பும் புதிய சமுதாயத்தை உருவாக்க ஏங்கி நிற்கும் அறிவுலகம் - அந்த அறிவுலகத்தின் படை வீரர்கள் - அந்த வீரர்க்கு அனுதாபம் தெரிவிப்போர் - அனைவருமே எச்சரிக்கையாகயிருந்து பணியாற்ற வேண்டிய நேரமிது வென்போம் வீழ்த்திக்கொள்ள வேல் கிடைக்காத காரணத்தால் -

கோல்கொண்டாவது கண்ணைக் குத்தி குருடாக்கி விடலாம் என்று எண்ணிக் கிளம்பும் இழிந்தகையோனுக்கும், அதிகாரம் கை தவறிய காரணத்தால் இதிகாசத்தைக் கொண்டாவது திராவிட இனத்தாரைக் கபோதிகளாக்கி விடலாம் என்று கனவு காணும் ஆச்சாரியாருக்கும் அதிக வேறுபாடில்லை! நிச்சயமாக இல்லை!

அதனால்தான் ஈரோட்டில் இருமல் முற்றி, பாடை கட்டிப் பயணம் நடத்த வேண்டிய பக்குவத்தை அடைந்துவிட்ட பாரத ராமாயணங்களுக்கு “கார்ண பூஷணம்” “பூணூல் தரிக்கும் புனித விழா” “கல்யாண வைபவம்” எல்லாம் நடத்திக் களித்திடக் குதிக்கிறது காகபட்டர் பரம்பரை! அந்தப் பரம்பரைக்கு ஏற்படும் ஆசையிலும் - ஆர்வத்திலும் அர்த்தமிருக்கிறது - ஒத்துக் கொள்கிறோம்.

தன் இனம்,தன் சமுதாயம்,அந்த சமுதாயத்தின் பரம்பரை பாத்தியமான உழைப்பில்லா பெருவாழ்வு, அத்தனையும் நாடொறுமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வாழ வேண்டுமென்பதிலே அந்தப் பரம்பரை அக்கரை காட்டுகிறது! நரி! புதரிலே பதுங்கி நிற்கிறது நாக்கை நீட்டிக் கொண்டு! ஏன்? தான் வாழ! கொக்கு கரையிலே காத்திருக்கிறது - ஏன்? தன் வயிற்றை நிரப்ப! நரியும் கொக்கும் தீனி தேடக் காத்திருக்கின்றன - அது அவைகளின் பசியைப் பொறுத்த விஷயம் - நரிக்கும் கொக்கும், முறையே ஒரு மானும், மீனும் நண்பர்களாகி தம் இனத்தவரை அவைகளுக்கு இரையாக்கிக் கொண்டிருந்தால் - மான் மீதும் மற்றுகள் ஆத்திரப்படாமலிருக்க முடியுமா? மன்னிக்க வேண்டும் நண்பர்களே! - மானிடத்திலும், மீன் இனத்திலும் அத்தகைய துரோகிகள் கற்பனைக்குக் கூட கிடைக்கமாட்டா! உதாரணத்திற்காகச் சொன்னேன்; அவ்வளவுதான்! மனித இனத்திலேதான் அவர்களைக் காண முடியும். இராவணன் காலத்து விபீஷணன் முதல் இராஜாஜி காலத்து சிவஞானங்கள் வரையிலே அத்தகையோரை மனித சமுதாயத்திலே தான் காண முடியும்!

அப்படித் தொன்று தொட்டு விபீஷணர்கள் தொகை வளர்ந்து வருவதாலேதான் இந்த இனம், இன்னும் தன் உரிமையை, தனக்குள்ள அரச பாத்யதையைப் பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது!

சிவஞானங்களை விபீஷணர்கள் என்பதால் சீறிப் பாய்வோரும் இருப்பார்! உண்மைதான்; விபீஷணர் பெரிய ஆழ்வார் - ராமபக்தர் அறநெறி தெரிந்தவர் - என்றெல்லாம் பாராட்டிப் பாடல் புனைவோருக்கு, விபீஷணர் என்று தன்னை அழைப்பதால் கோபம் ஏற்பட நியாயமில்லை அல்லவா? அதனால் சொல்லுகிறோம்; ஆனந்தமாகவே ஏற்றுக்கொள்வார்கள் விபீஷணப்பட்டத்தை! சீற மாட்டார்கள்! சிந்தை குளிர்வார்கள்! அப்படி அவர்கள் ஆத்திரப்படுவார்களேயானால் - விபீஷணன் என்ற பெயர் களங்கமுடையது என்பதை ஒத்துக்கொண்டவர்களே யாவார்கள்! ஆகையால் நாம் தாராளமாக ராமபக்தர்களை - ராமாயணம் தூக்கிகளை விபீஷணர் என்று அழைக்கலாம் - தகுதியான பெயர் எனத் தலையசைத்து ஆமோதிப்பார், வால்மீகி கம்பர், வாலேந்திகள்!

கடைந்தெடுத்த விபீஷணத் தன்மையின் முழு உருவமும் வெளிப்படும் வகையிலேயே தோழர் சிவஞானம் அவர்கள் ஒரு கட்டுரை தீட்டியிருக்கிறார் - ராமாயணத்திற்கும், ராமனுக்கும் கம்பனுக்கும், வால்மீகி முனிவருக்கும் வக்காலத்து வாங்கிக்கொண்டு! அதைப் படிக்கப் படிக்கப் பரிதாபம் மேலிடுகிறது.

அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழியே - என்று சொல்லக் கேட்டிருக்கிறோம்; ஆனால் ஆச்சாரியார் எவ்வழியோ அவர் வழியே தொண்டர் படைகளும் முரண்பாடான செயலில் இறங்குவதெனக் கிளம்பியிருக்கும் காட்சியிருக்கிறதே; அது நினைக்க நினைக்க சிரிப்பூட்டுகிறது!

‘சக்கரவர்த்தித்திருமகன்’ எழுதி ஆரம்பித்த ஆச்சாரியார், ‘ராமன் கடவுள் அல்ல - அவதாரம் அல்ல’ என்று உறுதியாக குறிப்பிட்டு, பிறகு போகப் போக, அவனும் அவதார புருஷனே என்று முரண்பாடுடைய கட்டுரைகள் எழுதினார் - எழுதியும் வருகிறார். மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமன் - கடவுளின் பிறப்பான ராமன் என்றும் அடிக்கடி குறிப்பிடுகிறார். கடைசியாக அக்டோபர் 3ஆம் நாள் “கல்கி” இதழில் கூட, “ராமாவதாரத்தில் மானுஷ சுபாவத்தின் போக்கும், அதனுடன் சாதாரண தருமத்தின் விளக்கமும் சேர்ந்துவரும்” என்று “அவதார”த்திற்கு அஸ்திவாரம் அமைத்துக் காட்டியிருக்கிறார். ஆனால், பெரியார் ராமசாமியைத் தாக்குவதற்குப் புறப்பட்ட தோழர் சிவஞானம் தன் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது - அவரது குருவாம் ஆச்சாரியாரை எந்த வகையில் எதிர்த்து நிற்கிறது என்பதை கீழே படியுங்கள்.

“கடவுள் மனித உடல் தாங்கி, மண்ணுலகில் பிறப்பதில்லை என்பது மதவாதிகளும் அறிந்த உண்மை தான்.”

சீடர் சிவஞானம், குருநாத ஆச்சாரியாரின் முரண்பட்ட வாதத்திற்கு மற்றுமொரு முரண்பாட்டை இவ்வண்ணம் தருகிறார், “ராமன் வாழ்வாங்கு வாழ்ந்த மனிதன் - அவனை விண்ணுறையும் தெய்வமாகப் போற்றினார்” என்றும் சிவஞானம் வாதிடுகிறார் - ஆச்சாரியாருக்குப் பலம் தேட முனைந்தவர், ஆச்சாரியாரின் ஆரம்பப் பாதையிலே போய், அவரை அறியாமலே தடுமாறுகிறார் - பாவம்!

“அயோத்தி வேந்தன் தசரதன், அறுபதினாயிரம் மனைவியரை மணந்து வாழ்ந்ததாக ராமாயணம் கூறுகிறதே; இது அடுக்குமா? பெண்ணுலகம் அங்கீகரிக்குமா? என்றெல்லாம் கேள்வி கேட்டு அங்கலாய்த்துக் கொள்கிறார் ஈ.வெ.ரா! ராமாயணம் இயற்றப்படும் காலம் வரை இல்வாழ்க்கையில் ஒருத்திக்கு ஒருத்தன் என்ற கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அது போல ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கொள்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆம், பெண் கற்பு வற்புறுத்தப்பட்டதேயன்றி ஆண் கற்பு வற்புறுத்தப்படவில்லை. இந்தக் கொடுமைக்கு எதிராக ஆண் கற்பைப் போதிக்கிறது ராமாயணம்.
“தந்தை தசரதன் அறுபதாயிரம் மனைவியரை மணந்தவன் - மைந்தன் ராமனோ ஏகபத்தினி விரதன். இல்வாழ்க்கைப் பண்பில் எத்தகைய புரட்சிகரமான மாற்றம்!”

மேற்கண்ட இவ்வளவும் எழுதியிருப்பது தோழர் சிவஞானம் தான்! ராமனும் சீதையும் வாழ்ந்த வாழ்க்கைதான் இல்வாழ்க்கைப் பண்பாம்! புரட்சிகரமான மாற்றமாம்!

எவனோ, ஏதோ சொன்னான் என்று, மனைவியை கற்புக்கேடு காட்டிலே கொண்டு போய்விட்டு விட்டு, நாட்டை ஆண்டு கொண்டிருந்தானே ராமன் அவன் இல்வாழ்க்கைப் பண்பின் இலக்கணமாம்! காட்டிலே லவன் என்ற மகனைப் பெற்று, பிறகு குசன் என்ற மகனையும் ரிஷி அருளால் பெற்று கணவனிடம் சென்று வாழ நினைக்காமல் காட்டிலேயே காலங் கழித்தவள் மாதர் வாழ்வில் புரட்சிகரமான மாற்றத்தைச் செய்த புனிதவதியாம்! புலம்புகிறார் சிவஞானம்; விபீஷண போதை தலைக்கேறிவிட்ட காரணத்தால்!

தம்பி இலக்குமணன், அழகு மனைவி ஊர்மிளாவை அரண்மனையிலே விட்டுவிட்டு, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியாக காட்டிலே வாழ்ந்து அண்ணன் அண்ணி படுத்திருக்கும்போது காவலும் காத்து நின்றானாம்! அதைப் பற்றி ராமனோ சீதையோ கவலைப்பட்டிருந்தால் இலக்குவன் காத்திருக்க, அவர்கள் களிப்பில் ஆடவும், கண் அயரவும் மனம் வந்திருக்குமா? இல்வாழ்வின் பண்பாம் இது? இனித்தவாயனும் ஏற்க முடியாத இலக்கணம்! பாதகப் பண்பு சிவஞானத்தின் வாதம் சரிதானா என்று ஆச்சாரியாரையே கேட்போம்!

“ஏகபத்தினி விரதத்தை போதிக்கவே ராமாயணம் எழுதப்பட்டது என்று சிவஞானம் கூறுகிறாரே, அப்படியானால் ஆச்சாரியாரே! ராமனை விஷ்ணு அவதார மென்றீர்கள். நீங்கள் அந்த விஷ்ணு உலகத்திற்கு ஏக பத்தினி விரதத்தை போதிக்கப் புறப்பட்டது உண்மை என்றால், அதற்காகவே ராமவதாரம் எடுத்தார் என்பது சரி என்றால், அதே விஷ்ணு, பூதேவி, ஸ்ரீதேவி என்ற இருவரைத் தழுவுவானேன்? அந்த விஷ்ணு எடுத்த கிருஷ்ணாவதாரத்திலே அளவில்லா கோபிகைகளுடன், குலவுவானேன்? பாமா, ருக்மணி, ராதா முதலியோரின் ஆசைநாயகனாக இருப்பானேன்?” இப்படி யெல்லாம் ஆச்சாரியாரை நோக்கி கேள்விகள் எழுவதற்குத் தான் சிவஞானத்தின் கட்டுரை பயன்படும்.

ராமாயணத்தின் மூலம், கற்பு சம்மாக்கப்பட்டு ஏகபத்தினி விரதம் பாதுகாக்கப்படுகிறது என்று வாதாடுகிற சிவஞானம், பாரதத்தின் மூலம் - அய்வருக்கும் தேவியாக இருந்தவளின் வரலாறு மூலம் - என்ன பாடம் உலகுக்கு போதிக்கப்படுகிறது என்று கூறுவாரோ, யார் கண்டது? இருதார மணம் புரிந்துகொண்ட குமரக் கடவுளின் கதை மூலம் என்ன பாடம் கிடைக்குமென்று கூறுவாரோ தெரியவில்லையே! இந்திரன் என்று தெரிந்தும் அவனோடு கூடி நின்றாள் அகலிகை என்று ஆச்சாரியார் எழுதியிருக்கிறார் - வால்மீகியும் எழுதியிருக்கிறார்.

அந்தத் தவறுடைய தவ முனிவன் பத்தினியை சாப விமோசனம் செய்து வணங்கி நின்றான் ராமன் - என்கிறதே ராமாயணம்; அந்த ராமாயணமா கற்பு நிலையைப் பாதிக்கும் ராமனைக் கதாநாயகனாகக் கொண்டது என்று கூறுகிறார் சிவஞானம்!

அந்தோ! அந்தோ! வெட்கம் வெட்கம்!

“ராமன் வட நாட்டான்; ஆகவே தமிழ் நாட்டார் அவனை வழிபடக் கூடாது என்று வம்பு பேசுவது நிறவெறிப் பேயாட்டமே யன்றி அறிவு வழிப்போராட்டமன்று.”

இந்தப் பொன்னான(?) கருத்தையும் வீசியிருப்பவர் தோழர் சிவஞானம் தான்! மனிதன் தெய்வீக சக்தி பெற்று வழிபடுதற்குரியவனாகிறான் - அப்படி ஆனவன் ராமன் - அவன் வடநாட்டானாயிருந்தால் என்ன? வணங்குவதில் என்ன தவறு?

இப்படிக் கேட்கிறார் சிவஞானம், பொட்டி ஸ்ரீராமுலு தெலுங்கு நாட்டவர் என்பதற்காக அவர் தியாகத்திற்குத் தரவேண்டிய மதிப்பைத் தர மறுக்கும் சிவஞானம், நம்மைப் பார்த்து “நிற வெறிப் பேயாட்டம்” ஆடுகிறோம் என்கிறார்! நல்லவேளை, இதன் மூலமாகாவது, வேறு வேறு “நிறங்கள்” என்ற உண்மையை ஒத்துக் கொள்கிறாரே!

வடநாட்டு ராமனை வணங்கினால் என்ன என்று கோபத்தோடு கேட்கும் சிவஞானம், தெய்வமாகப் போற்றப்படும் கண்ணகியை வணங்கும் வடநாட்டார் யாருமில்லை என்பதை வெட்கத்தோடு ஒத்துக் கொள்வாரா? கண்ணகியின் புகழ் தமிழகத்திலேயே சரியாகப் பரவ முடியாதபடி - ஆரிய சீதை அடியெடுத்து வைத்து விட்டாள் என்பதை சிவஞானங்கள் மறுக்க முடியுமா?

வடநாட்டு ராமனை வணங்க மறுப்பது நிறவெறி என்கிற சிவஞானம், மேல்நாட்டு அப்போலோ, ஆர்குஸிஸ் போன்ற தேவதைகளை நிறவெறியின்றி வணங்கத் தயார்தானா?

கடைசியாக, சிவஞானம், ராமனைக் கடவுளாக்கியது கம்பரல்ல - முதலில் சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் கூட ராமனைக் கடவுளெனக் குறித்திருக்கிறார் என்கிறார்.

யார் முதலில் சொன்னால் என்ன; ராமன் கடவுள் அல்ல; ராமாயணம் பண்புள்ள காவியம் அல்ல - அதை நம்பி மக்கள் தங்கள் மதியை இழக்கக் கூடாது என்பது தான் அறிவுடையோர் வாதம்!

இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும் சிவஞானங்கள்! இளங்கோவடிகள் ராமனைப் பற்றி குறிப்பிடும் முறையும், கம்பர் குறிப்பிடும் முறையும் வேறு வேறானவை !

கம்பர், தானே ஆழ்வாராக மாறி ராமக்கடவுளைத் தொழுது பாடுகிறார். இளங்கோவடிகளோ, அந்தக் காலத்து மக்கள் உள்ளத்தை, வாழ்க்கை நிலையை நம்பிக்கைகளை, ஆசிரியர் பாடும் குறவைப் பாட்டு மூலமாகச் சொல்லுகிறார். இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் பாடுவதற்கு முன்பே ராமகதை இருந்திருக்கிறது - ஆனால் அவர் கம்பரைப்போல ராமாயணம் எழுத எண்ணவில்லை; கண்ணகி என்ற தமிழச்சியின் மாண்புக்கோர் நூல் யாத்திருக்கிறார். கம்பரோ, தமிழகத்து சரித்திரக் கதை எதுவும் கிடைக்காதவர்போல வடமொழி வால்மீகி நூலுக்கு தமிழ் மெழுகு கொடுத்துப் பழி தேடிக் கொண்டிருக்கிறார், ராமனைக் கடவுளாக்கித் தொழுவதின்மூலம்!

தமிழகத்து வரலாறு எதையும் எழுத வால்மீகி ஆசைப்பட்டாரில்லை! ஆனால் கம்பரோ வடநாட்டு சரிதை எழுதியிருக்கிறார்!

“ஏகபத்தினி விரதம்” என்ற கொள்கை வலியுறுத்தப்பட கற்பு இலக்கணம் சொல்லப்பட, சிலப்பதிகாரத்தைவிட ராமாயணம் தகுதி வாய்ந்தது என்று சிவஞானங்கள் கருதுகிறார்கள். இது வடநாட்டுக்கு காவடி தூக்கும் பரம்பரைப் பழக்கத்தின் பாற்பட்ட கருத்து! இராவணன் காலத்திலே கிளம்பிய விபீஷணக் கொள்கை! இந்தக் கொள்கை என்று ஒழியுமோ? எப்போது நாடு நலம் பெறுமோ?

ராமபக்தர்கள் தெளிவு பெறுவது வெறுங்கனவு தானோ? காலந்தான் பதில் கூறவேண்டும்!

கலைஞர் மு.கருணாநிதி · சக்கரவர்த்தியின் திருமகன். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்