கட்டுரை 6 / 14
இராமன் காட்டேகியது ஏன்? ரிஷியின் சாபமா? கைகேயி கோபமா?
Why Did Rama Go to the Forest? A Rishi's Curse? Kaikeyi's Anger?
அச்சுப் பக்கம் 36–40
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
பரதன் நாடாள வேண்டும் - ராமன் காடு செல்லவேண்டும் என்று உறுதியாகக் கூறுகிறாள் கைகேயி.
கேகய மன்னனுக்கு தசரதன் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித்தான் கைகேயி அத்தகைய வாசகத்தை வீசுகிறாள், கேகயனுக்குத் தந்த வாக்குப்படி பரதன் நாடு பெற வேண்டியது நியாயம் தான்.
ஆனால், ராமன் காடு செல்ல வேண்டுமென்பது அநியாயமல்லவா என்று கேட்கத் தோன்றும். கைகேயியின் பக்கமும் நின்று வாதிட்டுப் பார்த்தால் அவள் நிபந்தனையிலும் நியாயமிருப்பது நன்றாகத் தெரியும். பரதனைப் பாட்டன் வீட்டுக்கு அனுப்பிவிட்டு யாருக்கும் தெரியாமல் சதிசெய்து முடிசூட்டிக் கொள்ள ராமன் தயாராயிருந்தான் என்று கேள்விப்படும்போது கைகேயிக்கு ஆத்திரம் பொங்காதா? கைகேயி ராமனிடம் ஆரம்ப முதல் பொறாமை உள்ளவள் அல்ல! அன்புடன் அவனை நேசிப்பவள். ஆச்சாரியாரும் அதை எழுதியிருக்கிறார். அப்படிப்பட்ட கைகேயி ராமன்மீது கோபங்கொண்டு காட்டேகச் சொன்ன காரணம் என்ன? தன் மகனை வஞ்சிக்க ராமனும் உடன்பட்டான் என்ற செய்தி எந்தத் தாயாரைத்தான் கொதிப்படையச் செய்யாது! நாம், கைகேயி நல்லவள் என்று நிரூபிப்பதற்காக இந்த ஆதாரங்களை கண்டுபிடிக்கவில்லை. ராமாயணக் கதையில் அமைக்கப்பட்டுள்ள கைகேயி பாத்திரம், முன்னுக்குப்பின் முரண்படுவானேன் - மூலி அலங்காரி பட்டியலிலே சேர்க்கப்படுவானேன் - என்பதற்காகத்தான் இதைக் குறிப்பிடுகிறோம். ராமனிடத்திலே கைகேயி எது பற்றி பேசியிருக்கவேண்டும்?
ராமன் கடவுள் அவதாரமல்ல - பெரிய வீரன் மட்டுமே - என்று எழுதியிருக்கிறாரே ஆச்சாரியார். அத்தகைய ராமனைப் பாத்திரமாகக் கொண்ட ராமாயணக் கதையில் வரும் கைகேயி பாத்திரம், ராமனிடத்திலே எப்படிப்பேசியிருக்கவேண்டும் ? அப்படிப் பேச வைத்தார்களா - வால்மீகியோ? அல்லது கம்பரோ? - அல்லது இந்த பிராமணவம்பரோ? இல்லை!
“ராமனே! உன் தந்தை என் தந்தைக்குத் தந்த வாக்குறுதி என் மகனுக்குப் பட்டம் தருவது என்பது! அதை இப்போது மீறுகிறார் -மீறுவது மட்டுமல்ல; சூழ்ச்சியாக என் மகனைப்பாட்டன் வீட்டுக்கு அனுப்பி விட்டு, அவனுக்குத் தெரியாமலே உனக்குப் பட்டம் கட்ட முனைகிறார்! இது நியாயமா? நியாயமென்று கருதித் தானே, நீயும் இந்த சூழ்ச்சிக்கு உடன் பட்டாய்? என் தந்தை கேகயராசருக்கு கொடுத்த சத்தியத்தை தசரதர் மீறுகிறார். ஆகவே தசரதர் எனக்கு கொடுத்த இரண்டு வரங்களைப் பயன்படுத்தி, இப்போது என் காரியத்தை வெற்றிகரமாக சாதித்துக் கொள்கிறேன்! - சூழ்ச்சி வெல்லாது என்பதை எடுத்துக் காட்டுகிறேன்!”
இப்படித்தானே கைகேயி ராமனிடம் பேசியிருக்க வேண்டும்! இது போலத்தானே கதையிலே கைகேயி பாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது. தசரதன் கேகயனுக்கு தந்த வாக்கையும் குறிப்பிட்டு, பரதனை தந்திரமாகப் பாட்டன் வீட்டுக்கு அனுப்பியதையும் குறிப்பிட்டு, அவன் அறியாமலே ராஜ்யாபிஷேகம் ராமனுக்கு செய்துவிட முயற்சித்ததையும் குறிப்பிட்டு, கடைசியில் கைகேயியின் சம்பாஷணையை மட்டும் வேறு கோணத்திற்குத் திருப்பிக்கொண்டு போவானேன்? தசரதனை நல்லவன் என்று காட்டவா? அல்லது, கைகேயி கொடியவள் என்று சொல்லவா? அல்லது அது மூலக்கதை ஆசிரியருக்கு பாத்திரம் அமைக்கும் திறமை கிடையாது என்பதை ஆச்சாரியார் ஒத்துக் கொள்கிறாரா?
ராமன் காட்டேகத் தீர்மானிக்கிறான். இந்தச்சோகக் கட்டத்தின் சிறப்புகளை ஆச்சாரியார் அள்ளி இறைக்கிறார், இறைக்கும் வேகத்தில் ராமாயணத்தின் பெருமையையும் சுருக்கமாகக்குறிப்பிடுகிறார்;
“எந்த இடத்திலும் எங்கேயேனும் ராமாயணக் கதையை யாரேனும் சொன்னால் அவ்விடம் “பாஸ்பவாரி பரிபூரண லோசனத்துடன் கண்களிலிருந்து நீர் பெருக ஆஞ்சநேயர் கைகூப்பி நின்று கேட்டுக் கொண்டிருப்பார் என்று பெரியோர்கள் சொல்லுவதின் கருத்து இதுவே.
ஆச்சாரியார் எழுதுகிறார் இப்படி - அது என்னவோ உண்மைதான்! மறைந்திருந்து ஆஞ்சநேயர் கேட்கிறாரோ என்னவோ; நிஜ ஆஞ்சநேயர்கள் பலர் - இனத்தை எதிரியிடம் காட்டிக் கொடுக்கும் ஆஞ்சநேயர்கள் பலர் ஆச்சாரியார் போன்றவர்கள் - ராமாயணக் கதை சொல்லும்போது, கண்ணீர் பெருக கை கூப்பி நின்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது!
சூழ்ச்சியால் நாடு கவர எண்ணினார்கள் தந்தையும் மகனும்! அதை எதிர்த்து ஒரு பெண்மணி போரிட்டாள் - தன் மகனுக்கு பட்டம் கிடைக்குமென்ற ஒரே நம்பிக்கையிலே தான் வயதான கிழராஜனையும் மணந்து கொள்ள சம்மதித்தாள் - தன் எழில் மிகுந்த பருவத்தையே கிழவனின் பலிபீடத்திலே வைக்கத் தயாரான அந்தப் பெண்மணி - எதற்காக அந்த இளமைத்தியாகத்தை ஏற்றுக் கொண்டாளோ அது நிறைவேறவில்லை. என்கிற போது, ஆத்திரமடைவதிலே என்ன தவறு? அந்த ஆத்திரத்திலேதான் அயோத்தி பரதனுக்கு - ஆரண்யம் ராமனுக்கு - என்று ஆணையிட்டாள் - இது சோகக் கட்டமாக நமக்குத் தெரியவில்லை - சூதர்கள் வீழ்ந்துபோன மகிழ்ச்சிக் கட்டமாகவே தெரிகிறது.
காட்டேகும் ராமன் தாயிடமும் சீதையிடமும் விடை பெற்றுக் கொள்கிறான். லட்சுமணனும் அவன் கூடப் புறப்படுகிறான். சீதையும் ராமனுடன் கிளம்புகிறாள்.
“உம்மைவிட்டு எப்படிப் பிரிந்திருப்பேன்?” என்று அழுகிறாள். சீதை ராமனிடத்திலே மிகுந்த அன்பு கொண்டவள். ஆகவே அழுதாள் என்று நாம் விட்டுவிட்டுப் போக முடியவில்லை. சீதையின் அன்பிலும் களங்கம் காணக் கிடக்கிறது. படியுங்கள் அதை! ஆச்சாரியாரே எழுதியிருக்கிறார் - செப்டம்பர் 19 நாள் இதழில்!
ராமபிரபு! உம்மோடு வனத்தில் வாழ்வதே எனக்கு இன்பம் - அதுவே எனக்கு வாழ்வு - என்றெல்லாம் சீதை சொல்லுகிறாள் - சொல்லட்டும் - ஆனால் அவள் கணவனிடம் கடைசியாகச் சொன்னதை நினைத்தாலே சிரிப்பு வருகிறது.
“நான் மிதிலையில் இருந்த காலத்தில் பிராமணர்களும், ஜோதிஷர்களும், இவளுக்கு வனவாசப் பிராப்தி என்று என்னைக் குறித்து என் தாயிடம் சொல்லியிருக்கிறார்கள். நான் தனியாக வனவாசம் செய்ய முடியுமா? உம்முடன் சேர்ந்து வனவாசம் செய்துவிட்டு, எப்படியும் நடக்கவேண்டிய அந்த நிகழ்ச்சியை சுகமாக முடித்து விடுவதற்கு இதுவே சமயம்.”
சீதை சொன்னாளாம் இது போல! - எப்படியும் நடந்து தீரவேண்டிய பிராப்த விஷயத்தை இச்சமயத்தில் உன்னோடு சேர்ந்து அனுபவித்து விடுகிறேன் என்று மனைவி கூறுகிறாள் என்றால், அவளுக்கு சுயநலத்தை தவிர வேறென்ன தலைதூக்கியிருக்கிறது என்பதை ஆச்சாரியார்தான் கூறவேண்டும்.
சீதையின் சுயநலம் ஒருபுறம் இருக்கட்டும்; ராமன் வனவாசம் போவதற்கு கைகேயி காரணமல்ல சீதையின் ஜாதக விசேஷம் தான் காரணம் என்பதாகுவது ஆச்சாரியாரால் ஒத்துக்கொள்ளப்படுமா? ரிஷியின் சாபம் ஒன்றால், தசரதனுக்கு புத்திரப்பிரிவு ஏற்பட்டதாக ஆச்சாரியார் கூறியிருக்கிறார். ஆகவே - ராமன் காடு சென்றது; சீதையின் ஜாதகத்தாலா? ரிஷியின் சாபத்தாலா? கைகேயியின் கோபத்தாலா? அல்லது விதியின் வலிமையாலா?
விதியின் வலிமை என்றால், கைகேயியை திட்டுவது நேர்மையாகாது - நாணயமாகாது!
சீதை லட்சுமியின் அவதாரம் என்கிறார் ஆச்சாரியார் ஓரிடத்தில்!
லட்சுமி அடியெடுத்து வைத்த அயோத்தியிலே அனர்த்தங்கள் அமோகமாக விளைகின்றன.
மணமகள், வீட்டுக்கு வந்து ஏதாவது துன்பம் ஏற்பட்டால் ‘மூதேவி அடி எடுத்து வைத்த நேரம் அப்படி!” என்று முணுமுணுக்கிறார்கள் ஆச்சாரியார் உட்பட - அனைவருமே!
ஆனால் இந்த சீதை அடி எடுத்து வைத்த அரண்மனையில் அறுபதாயிரம் வருடம் வாழ்ந்த தசரதன் சாக நேரிடுகிறது - ராமன் காட்டேக நேருகிறது - அயோத்தியே சோகக் காடாகிப் போகிறது - மகா லட்சுமி அவதாரமாம் அவள்! மூதேவிதான் இவளும் என்று கூறினால் முட்ட வருகிறார்கள்.
சக்கரவர்த்தித்திருமகன் மூலம் பழமைக்கு சப்பைக் கட்டு போடும் ஆச்சாரியார் விடும் சரடுகள் ஒருபுறமிருந்தாலும் - அவர் எழுத்து அழகு இருக்கிறதே! அடடா - அந்த அனுமாருக்குத்தான் வெளிச்சம்!
இதோ ஒரு உதாரணம் பாருங்கள் - செப். 19 கல்கியில் எழுதுகிறார்,
“ஜனங்கள் கூட்டம் கூட்டமாக நின்று, ராமனும், சீதையும், லட்சுமணனும் காலால் நடந்து போவதைக் கண்டார்கள்.”
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்! அப்போதெல்லாம் மக்கள் தலையாலும், கையாலும் நடந்து போவார்கள். அந்தப்பாவி கைகேயி, ராம லட்சுமணரை காலால் நடந்து போகக் கட்டளையிட்டுவிட்டாள் என்றுதானே! காலால் நடந்து போனார்களாம்! காலால்! ஆச்சாரிய மேதை எழுதுகிறார் இப்படி! - அதையும் பக்தியோடு படிக்க ஆஞ்சநேய கும்பல் காத்திருக்கிறது! - வக்காலத்து வாங்கி வாழ்த்துப்பாட, சுதேசமித்திரன் போன்ற ஆரியக்காவல் படைகள் காத்துக் கிடக்கின்றன. காகபட்டர் எதையும் எழுதுவார் - எதையும் பேசுவார் - இதெல்லாம் மேதையின் இலக்கியமய்யா இலக்கியம்!
கலைஞர் மு.கருணாநிதி · சக்கரவர்த்தியின் திருமகன். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்