பொருளடக்கம்

5. பரத்துவாஜா ஆஸ்ரமமா - பாரிஸ் நகரத்து ‘பாரா’?

கட்டுரை 5 / 14

பரத்துவாஜா ஆஸ்ரமமா - பாரிஸ் நகரத்து ‘பாரா’?

Bharadvaja's Ashram—or a Paris 'Bar'?

அச்சுப் பொருளடக்கத்தில்: பரத்துவாஜர் ஆஸ்ரமமா - பாரீஸ் நகரத்து ‘பாரா’?

அச்சுப் பக்கம் 2835

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

ஆஸ்ரமம் - அங்கே அப்சரஸ்களா?

முனிவர் கூடாரம் - அங்கே மோகக்களியாட்டமா? -

முத்திக்கு வழிதேடும் முகாம் - அங்கே

முத்தத்தால் வீங்கிய முகங்களா? -

துக்கமான கட்டடம் - அங்கே தொடர்ச்சி கெடாத

இன்பலோக யாத்திரையா?

தொல்லை நிறைந்த வேலை - அப்போது

எல்லை மீறிய இன்பமா?

பாட்டன் வீட்டிலிருந்து பரதன் வந்தான். தந்தையின் சாவு தமையனின் ஆரண்யவாசம் - இவைகளைக் கேள்விப்பட்டான். தான் பட்டம் கட்டிக்கொள்ள மறுத்து அழுதான், அண்ணன் பிரிவும் அரண்மனை நிகழ்ச்சிகளும் அவனை அனலிடைப் புழுவாக ஆக்கின. தன் பரிவாரங்களுடன் ராமனை அழைத்து வருவதற்காகப் புறப்படுகிறான், வழியிலே குகனை சந்திக்கிறான், பெருந்துக்கத்தில் மூழ்கியிருக்கும் பரதனின் சகோதர பாசத்தைக்கண்டு குகன் வியக்கிறான்.

பரதன் நிலையை ஆச்சாரியார் விளக்குகிறார் பாருங்கள்.

“குகனைச் சந்தித்த பிறகு, பரதனுக்குத் துக்கம் முன்னிருந்ததைவிட, அதிகரித்தது. பரிசுத்த சுபாவத்தை ஜென்ம சம்பத்தாகப் பெற்றவன் பரதன் இப்படியாயிற்றே - என்று அவன் இராமனை நினைந்து பெருமூச்சுவிட்டு உடம்பெல்லாம் வேர்த்துத் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான்.”

இப்படி வேதனையின் சிகரமாகிவிட்ட பரதன், குகனைப் பார்த்து - ராமன் என்ன சாப்பிட்டான்? எங்கு உட்கார்ந்தான்? என்றெல்லாம் கேட்டு அழுதானாம் - லக்ஷ்மணன் எங்கே தூங்கினான் என்றும் கேட்டானாம்.

“ராமனும் ஜானகன் மகளும், தரையில் அங்கே படுத்திருப்பதைப் பார்த்து எனக்குத் தூக்கமும் வருமா என்று கண்ணீர் சொரிந்து, அழுது, இரவு முழுதும் வில்லும் கையுமாக என்னைப் போலவே படுக்காமல் நின்று காத்து வந்தான்.”

என்று குகன் சொன்னபோதும் துயரம் தாங்க முடியாமல் பரதன் துடித்துப்போனானாம்!

“காலையில் எழுந்தவர்கள் தலைமயிரைச் சடையாகத் திரித்துக்கொண்டு, காலால் நடந்து போனார்கள்.”

இத்தனை சோகச் செய்திகளையும், குகன் பரதனிடம் கூறுகிறான். அரண்மனையிலேயே, அழுது புரண்டு, ஆரண்யத்திலும் வேதனைச் செய்திகள் தாக்கியதால் துடித்துத் துவண்டு, வருகிறானாம் பரதன்.

“பரதனும், குகனும் கங்கைக் கரையில் சந்தித்து துயரத்தைப் பங்கிட்டுக் கொண்டது ஆழ்வார்களும், பக்தர்களும் மிகவும் அனுபவிக்கும் கட்டம்.”

என்று ஆச்சாரியாரே எழுதியிருக்கிறார். அவ்வளவு சோகப் பெருவெள்ளம் அது! ராமாயணத்தின் நயங்களை வால்மீகி மூலமும், கம்பர் மூலமும் காணுகிற ஆச்சாரியார், இந்தச் சோகக்கட்டத்திலே கம்பனின் கவிதா வேகம் எவ்வளவு உச்சக் கட்டத்திற்குப் போயிருக்கிறது என்பதை ஏனோ விளக்கவில்லை.

‘சக்கரவர்த்தித்திருமகன்’ கட்டுரையில் பல இடங்களில், கம்ப ராமாயணப் பாடல்கள் எடுத்தாளப்படுகின்றன. அதுபோலவே, பரதன், ராமனைத் தேடிச் செல்லும்போது கம்பர் தரும் காட்சியையும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல ஆச்சாரியார் ஏன் தயங்கவேண்டும்? கண்ணீர் மல்கும் நிலையிலே பரிவாரங்களோடு பரதன் போகிறான், குகனுடைய முயற்சியால் கங்கையைக் கடக்கப் பெரியதோர் படகு வரிசை ஏற்பாடு செய்யப்படுகிறது. அதில் பரதனும், வசிஷ்டரும், மற்றும் ஆண்களும் பெண்களும் அமர்ந்து ராமனைக்காணும் ஆவலுடன் போகிறார்கள்.

இந்தத் துயரமான கட்டத்தை ஆச்சாரியாரின் அன்புக்குரிய கம்பர் எவ்வளவு அழகாக வர்ணித்திருக்கிறார் பாருங்கள்.

படகைச் செலுத்தும் துடுப்புகளின் அசைவிலே, கங்கையாற்றின் நீர்த்திவலைகள் மேலெழும்பி, படகில் உள்ள மங்கையரின் ஆடை நனைந்து, அந்த நனைந்த பாகத்தின் வழியாக அவர் தம் மறைவிடத்தை வெளியே தெரியும்படி செய்ததாம் - அந்தக் காட்சியை படகில் உள்ள ஆடவர் ரசித்தார்களாம்.

அதற்கு இதோ பாடல் -

அயோத்தியா காண்டம் குகைப்படலம் 56ஆவது செய்யுள்:

“இயல்வுறு செல்வினாவா யிருக்கையு மெயினர் தாண்டத் துயல்வன துடுப்பு வீசுந் துவலை கண்மகளிர் மென்று சுயல்வுறு பரவை யல்கு வெளி புறத்தளிப்ப வுள்ளத் தயர்வுறு மதுகை மாந்தர்க் களா உயிர்ப் பளித்த தம்மா!”

அரண்மனைப் பெண்களும். ராணிகளும் செல்கிறார்கள் படகில்! கட்டமே சோகக் கட்டம்! கம்பரின் கண்களோ, எந்தக் காட்சியையோ படம் பிடிக்கின்றன!

நீர்த்துளிப்பட்டு நனைந்து வெளியே ஒளிகாட்டும் பாகங்களை மறைத்துக்கொள்ள எண்ணாத மாதர்கள்!

அப்படி மறைக்கப்படாதவைகளை பார்த்து ஆனந்தப்படும் பரிவாரங்கள்!

அயோத்தியின் நாகரிகமே நாகரிகம்! - கம்பன் பக்தியை பிரதானமாக வைத்து ராமாயணம் எழுதினான் என்று கூறியிருக்கிற ஆச்சாரியாரின் மேதா விலாசத்துக்கு ஈடு இணை இந்த உலகத்தில் ஏது?

சரி, சேனை முழுதும் நதியைத் தாண்டியாயிற்று - அக்கரையில் உள்ள பரத்துவாஜ ஆசிரமத்துக்கு பரதன் சென்றான். பரத்துவாஜ முனிவர் “பரதன் ஒருவேளை ராமன்மீது படையெடுத்து வந்து விட்டானோ” என்று சந்தேகப்பட்ட குகனைப் போலவே சந்தேகப்பட்டாராம் பரதன்மீது! குகன்; சாதாரண மனிதன். அதனால் பரதன் மீது சந்தேகப்பட்டான். பரத்துவாஜர், முனிவர் - அவர் சந்தேகப்படலாமா? என்று யாராவது கேட்டு விடுவார்களே எனப் பயந்த ஆச்சாரியார், அதற்கும் சமாதானம் எழுதியிருக்கிறார். அது, இதோ!

“நான் சக்கரவர்த்தித் திருமகன் எழுதுவது வால்மீகி ராமாயணத்தின்படி! குகன் எப்படி பரதனுடைய பரிவாரத்தைக் கண்டு சந்தேகித்தானோ, அப்படியே பரத்துவாஜ ரிஷியும் சந்தேகித்தார் என்று வால்மீகி பாடியிருக்கிறார். துளசி ராமாயணத்தில் இப்படி இல்லை. துளசி ராமாயணம் முற்றிலும் பக்தி மயம். ரிஷிகளுக்குத் தெரியாத ஒரு விஷயமில்லை. ஆனபடியால் துளசி ராமாயணத்தில் பரதனைப் பற்றிப் பரத்துவாஜருக்கு, சந்தேகம் எப்படி இருக்க முடியும்? ஆனால் கம்பர் பாடியிருப்பது, வால்மீகியைப் பற்றித்தான் ஆச்சாரியாருக்கு எவ்வளவு பெரிய குழப்பம் ஏற்பட்டு, மக்களையும் குழப்புகிறார் என்று கவனியுங்கள்.

வால்மீகி, ராமனை - ஒரு வீர புருஷனாக சித்தரிக்கிறார் - துளசிதாஸ் பக்திக் கண்ணோடு ராமனைக் காணுகிறார் - கம்பர் கடவுளாகவே பார்க்கிறார் - என்றெல்லாம் கூறுகிற ஆச்சாரியார். இப்படி எல்லோரும் ஆளுக்கு ஒருவிதமாக காணுகிற கதம்ப ராமனைத் தூக்கிக்கொண்டு காலட்சேபம் நடத்துவானேன்?

பரத்துவாஜருக்கு பரதனைப் பற்றி அறியும் ஞானமில்லை என்கிறார் வால்மீகி! ஞானமிருந்தது என்கிறார் துளசிதாஸ்! ரிஷிக்கு ஞானமில்லாமல் இருக்குமா? என்று கேட்கிறார் ஆச்சாரியார். ஆனாலும் அவர் எழுதுவது வால்மீகி ராமாயணந்தானாம்!

இதுவரை 36 கட்டுரைகள் எழுதியிருக்கிறார் ராமாயணத்தைப் பற்றி. 36 கட்டுரைகளிலும் 36 முரண்பாடுகள் காணப்படுகின்றன. முதல் இதழில், ராமன் கடவுள் அவதாரமல்ல என்று எழுதினார் - அதன் பின்னர் எழுதிய கட்டுரைகளில் ராமன் விஷ்ணு அவதாரம் என்று மொழிந்தார்.

இந்த 36ஆவது கட்டுரையில் என்ன கூறுகிறார் தெரியுமா?

“ராமன், சாட்சாத் பகவானுடைய திரு அவதாரமாயினும் வால்மீகி ராமாயணத்தில் ஒரு வீர புருஷனாகவே சித்தரிக்கப்படுகிறான்.”

எத்தனை முரண்பாடுகளும், மழுப்பல் வேலைகளும் பாருங்கள்!

உண்மையை மறைப்பதற்கு யார் முயன்றாலும் அவர்கள் எவ்வளவு பெரிய திறமைசாலிகளாயிருந்தாலும் - இப்படித்தான் சேற்றில் மாட்டிக்கொண்டு திண்டாடுவார்கள்! அதற்கு ஆச்சாரியார் ஒரு நல்ல உதாரணம் - பின்னர், பரத்துவாஜர் - பரதனுக்கும் அவன் பரிவாரங்களுக்கும் ஆஸ்ரமத்தில் ஒரு விருந்து நடத்தினார்.

ஆஸ்ரமத்திலே நடைபெற்ற விருந்து எப்படியிருக்குமென்று கருதுகிறீர்கள்? கனி வகைகள், காய் கறிகள், ஆவின் பால், இதுபோல இருக்கும் என்று எண்ணுவீர்கள்; அதுவும், பரதன் கோஷ்டியார் சோக ராகத்தில் மூழ்கி, அழுத கண்ணோடு இருக்கிறார்கள். அந்தக் கட்டத்தில், விருந்து இன்னும் சாதாரணமாகத்தானேயிருக்கும் - போடுகிறவன் போட்டாலும், சாப்பிடுகிறவனுக்கு வயிறோ, மனமோ இடங்கொடுக்காத நேரமல்லவா அது! - ஆனால், பரத்துவாஜர் அளித்த விருந்தைப் பாருங்கள்.

யமன், வருணன், அக்கினி, குபேரன் ஆகிய தேவர்களை வரவழைத்து, (ஆரியபவன் ஹோட்டலிலே, டின்னர் பார்ட்டிக்கு ஆர்டர் கொடுப்பது போல) பரத்துவாஜர் விருந்துக்கு உத்தரவு கொடுத்தார். அவர்களும் கட்டளையை கச்சிதமாக நிறைவேற்றினார்கள். விருந்தைப் பற்றி ஆச்சாரியாரே எழுதுகிறார், படியுங்கள். ஆனால் படிக்கும்போது, பரதன் கூட்டத்தார் எவ்வளவு சோகமான கட்டத்தில் இருக்கிறார்கள் என்ற கதையை மறந்து விடாதீர்கள்.

“எல்லோருக்கும் தகுந்த விடுதிகள், ஸ்நானாதி விஷயங்களுக்குச் சவுகரியங்கள், சந்தனம், புஷ்பம், அன்னபானாதிகள், பணியார வகைகள், அப்சரஸ்களின் நிருத்தியம், கந்தர்வ சங்கீதம், எல்லாம் நினைக்க முடியாத தெய்வீக ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டு எல்லோரும் மெய்மறந்து அனுபவித்தார்கள். பரதனுடைய சேனையிலுள்ள படை வீரர்கள், மகிழ்ச்சி மயக்கத்தில் ‘இனி நாம் தண்டகாரண்யம் போக வேண்டியதில்லையே - அயோத்திக்கும் திரும்பப் போவதில்லை. இங்கேயே இருந்து விடுவோம்’ என்று எண்ணினார்கள்.”

எல்லையில்லாத சம்பத்தை அடைந்த ஒரு மகாராஜா, மற்றொரு மகாராஜாவுக்கும், அவன் பரிவாரத்துக்கும் தன் ராஜதானியில் நடத்தும் ஒரு பெரிய விருந்தைப்போல் பரத்துவாஜர் வசித்த ஆசிரம வனத்தில் விடுதிகள், வாகனங்கள், பணியாட்கள் உட்பட, எல்லாம் ஒரு கணத்தில் உண்டாக்கி, அனைவரும் எல்லை மீறி அனுபவித்து, மெய் மறந்து தூங்கிவிட்டார்கள்.”

எப்படி ஆஸ்ரமத்து விருந்து! அதுவும் துக்ககரமான நேரத்திலே நடைபெற்ற விருந்து!

ஆச்சாரியார் எழுதியதைத்தான் அப்படியே காட்டியிருக்கிறேன் - விருந்து எவ்வளவு சுவையாக இருக்கிறது பார்த்தீர்களா? - அதுவும் முற்றும் துறந்த முனிவர்கள் ஆஸ்ரமத்தில்! அமெரிக்க அரசாங்கம்கூட நடத்த முடியாத அவ்வளவு பெரிய விருந்து! - கொத்தவாலை கொழுமண்டபத்தில் கூட நடத்த முடியாத அவ்வளவு அற்புதமான நடனம்! ஆகா! ஆகா! ஆகா! ஆச்சாரியார் எழுதியுள்ளதை மீண்டும் படியுங்கள்.

(1) அப்சரஸ்கள் - (தேவமாதர்களான ரம்பை ஊர்வசி முதலியோர்)

(2) அன்னபானாதிகள் -

(3) எல்லைமீறி அனுபவித்து -

(4) மெய்மறந்து -

இந்த வார்த்தைகளையெல்லாம் இணைத்துப் பாருங்கள் - முனிவர் நடத்திய விருந்தை எண்ணும்போது! “அய்யோ! நாமும் பரதனாக இல்லையே!” என்கிற எண்ணம் சில வாலிபர்களுக்கு வருமா? வராதா?

- ஆச்சாரியார். இந்த இடத்தில் வால்மீகி, கம்பர் வர்ணனைகள் முழுதும் எழுதவில்லை - அவைகளையும் எழுதினால் ஒவ்வொரு எழுத்தும் போதையாக இருக்கும் - விருந்து முடிந்தது.

வயிற்றுக்கு உணவுபெற்ற அயோத்தி வீரர்களும் - அண்ணனைத் தேடவந்த அருமைத் தம்பி பரதனும் உணர்ச்சிக்கு உணவுபெற்ற விதத்தை கம்பர் விளக்குகிறார் பாருங்கள்.

அஞ்சடுத்த வமளி யலங்கப் பஞ்சடுத்த பரிபுரந் பல்லவ நஞ்சடுத்த நயனியர் நல்லியிற் றுஞ்ச வந்தனை மைந்தருந் துஞ்சினார்.

அதாவது அய்ந்துவகை மென்மையான பொருள்களால் ஆகிய பஞ்சு மெத்தையிலே, செம்பஞ்சு ஊட்டப்பெற்ற, சிலம்பு அணிந்த தளிர்போன்ற பாதங்களையும், விஷம் போன்ற விழிகளையுமுடைய தேவ மகளிர் பெண்மான்களைப்போல அருகில் படுத்து உறங்க, அத்தனை மைந்தரும் உறங்கினார்களாம்.

இடமோ ஆரண்யம்; நேரமோ அர்த்தசாமம்; காமக் காட்சிகளை வர்ணிப்பதோ கம்பன்; ஆச்சாரியார் கூட நிலைதவறிப் போயிருப்பார்.

தான் பெற்ற இன்பத்தை ‘கல்கி’ வாசகர்களும் பெறக்கூடாது என்கிற கெட்ட நினைப்புதானோ என்னவோ, அந்த வேதியப் பெருங்கிழவர், கம்பனது வர்ணனை விநோதங்களுக்கு விளக்கம் தராமல் ஒதுக்கி விட்டார்.

அப்படிப்பட்ட விருந்தின் மேன்மையைப்பற்றி - ஆச்சாரியார் எழுதுகிறார் - இனிக்கிறது பக்தர்களுக்கு! ஆஸ்ரமத்து போக்கியதையைப் பாருங்கள் என்று நாம், இதே விருந்து விளக்கத்தைத் தந்தோம் - அப்போது பக்தர்கள் சீறிப் பாய்ந்தார்கள்!

இப்போது இனிப்பது, அப்போது கசப்பாகத் தெரிவானேன்? பதில் கூறுவார்களா, பக்தர்கள்? அல்லது, பரத்துவாஜர் விருந்தை விமர்சிக்கும் பார்ப்பன குலமகிபர் ஆச்சாரியார்தான் பதில் கூறுவாரா?

ஆஸ்ரமம் - அங்கே அப்சரஸ்களா?

முனிவர் கூடாரம் - அங்கே மோகக் களியாட்டமா?

முத்திக்கு வழிதேடும் முகாம் - அங்கே முத்தத்தால் வீங்கிய முகங்களா? -

துக்கமான கட்டடம் - அங்கே தொடர்ச்சி கெடாத இன்ப லோக யாத்திரையா?

தொல்லை நிறைந்த வேலை - அப் போது எல்லை மீறிய இன்பமா?

❧★❧

கலைஞர் மு.கருணாநிதி · சக்கரவர்த்தியின் திருமகன். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்