பொருளடக்கம்

4. காமராஜன் ஆட்கொண்ட தசரதராஜன்!

கட்டுரை 4 / 14

காமராஜன் ஆட்கொண்ட தசரதராஜன்!

Dasaratha Raja in the Grip of Kama-Raja!

அச்சுப் பக்கம் 2427

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

தந்தையினிடம் விடை பெற்றுக் கொண்டு ராமன், உடனே கவுசல்யா தேவியின் அந்தப்புரத்துக்குச் சென்றான். பெற்ற தாய்க்கு விஷயத்தைச் சொல்லி ஆசி பெறுவதற்காகச் சென்றான். அதற்கு முன்னதாகவே கவுசல்யைக்கு சமாச்சாரம் எட்டியிருந்தது. நகரம் மகிழ்ச்சிக் கடலில் மிதந்து கொண்டிருந்தது. பெண்களுக்கு அடங்காத உற்சாகம் ஆண், பெண், குழந்தைகள் எல்லாரும் எல்லை கடந்த குதூகலத்தில் இருந்தார்கள். சுற்றுப் பக்கத்துப் பிரதேசவாசிகள் எல்லாம் அயோத்திக்குப் பட்டாபிஷேக மகோத்சவத்தைப் பார்க்க வந்து சேர ஆரம்பித்து விட்டார்கள்.

ராமனும் சீதையும் தங்களுடைய மனையில் நாராயணனைத் தியானித்து, மறுநாள் பட்டாபிஷேகத்திற்கான சடங்குகளை மேற்கொண்டு தரையில் புல் பரப்பி, அன்றிரவு படுத்தார்கள்.

மேலே காணப்படும் இவ்வளவும் ஆகஸ்டு 8-54ஆம் தேதி இதழிலே ஆச்சாரியார் குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள்.

அடுத்த ஊரார் அயோத்திக்கு வந்துவிட்டனர் பட்டாபிஷேக சேதி கேட்டு, ஆனால் கைகேயிக்கு மட்டும் அந்தச்செய்தி தெரிவிக்கப்படவில்லை. மந்தரை மூலமாக கைகேயி செய்தி கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைகிறாள். பிறகு, மந்தரை - தசரதன், கேகேயனுக்குத்தந்துள்ள வாக்குறுதியை நினைவூட்டி, பரதனுக்குப் பட்டம் கட்ட யோசனை சொல்லித் தருகிறாள்.

பரதன் வருவதற்குள் தசரதன் ராமனிடம் கூறி, இருவரும் அதற்கான ஏற்பாடுகளைத் துவங்கியதும், கைகேயிக்கு அறிவிக்கப்படாததும், சதித்திட்டத்தின் எதிரொலிகளே என்று ஆச்சாரியார் எழுத்து மூலமாகவே எடுத்துக் காட்டியிருந்தோம்.

மந்தரையால் மனம் திருப்பப்பட்ட கைகேயியின் மனைக்கு இப்போதுதான் தசரதன் வருகிறான். அதை இந்த முறை ஆச்சாரியார் வர்ணித்திருக்கிறார், ஆகஸ்டு 22-54ஆம் நாள் இதழில்!

“சபையில் காரியங்களையெல்லாம் முடித்துவிட்டு, பட்டாபிஷேக மகோத்சவத்துக்காக செய்யவேண்டியதை யெல்லாம் பூர்த்தியாக உத்தரவிட்டு ஒரு கவலையும் இனி இல்லை என்று சந்தோஷமடைந்து, தசரதன் - தன் காதல் மனைவி கைகேயி தேவியினுடைய அந்தப்புரத்தை நோக்கிச் சென்றான்.

பொழுது விடிந்ததும் உற்சவம், அதுவரையில் ஆசை தீரப் போகத்தில் மூழ்கலாம் என்கிற எண்ணத்தோடு வெள்ளை மனத்துத் தசரதன் அந்தப்புரத்தில் புகுந்தான்”.

வெள்ளை மனத்துத் தசரதன், ஆசை தீரப் போகத்தில் மூழ்குவதற்கு அதுவும் பொழுது விடியும் வரையில் மூழ்குவதற்கு கைகேயி ஆண்மனைக்கு வருகிறானாம் - அவன் எத்தகையோன்? வெள்ளை மனத்தவனாம் - அது மட்டுமல்ல; அவன் எத்தகைய நிலையில் உள்ளவன் என்பதை அவன் வாயாலேயே ஆச்சாரியார் சொல்ல வைத்திருக்கிறார் படியுங்கள்.

“இப்போது என் உடல் மூப்பின் காரணம், தளர்ந்து போயிருக்கிறது. என் முன்னோர்களின் வழியைப் பின்பற்றி நானும் மிகுதியுள்ள என் வாழ்நாளை வனத்தில் கழிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.”

இந்தக் காரணத்தால்தான் தசரதன், ராமனுக்கு முடிசூட்டப் போவதாகச் சொல்கிறான் என்பதாக; ஆகஸ்டு 8-54ஆம் தேதி ஆச்சாரியார் எழுதியிருக்கிறார்.

உடல் மூப்பு - தளர்ச்சி - வாழ்நாளை வனத்தில் கழிக்க வேண்டிய வயது - இவ்வளவும் கொண்ட தசரதன்தான் “பொழுது விடியும் வரையில் ஆசை தீரப் போகத்தில் மூழ்கலாம்” என்ற வெறியுடன் கைகேயி அந்தப்புரத்தில் நுழைகிறானாம், நாமல்ல; ஆச்சாரியக் கிழவரே கூறுகிறார் இப்படி! - தசரதக் கிழவனின் வேகம் அதிகரித்த விந்தையை இன்னும் கூறுகிறார் ஆச்சாரியார் கேளுங்கள்! “அரண்மனையில் வாசனைத் திரவியங்கள், பான விசேஷங்கள் வழக்கம்போல் எல்லாம் அந்த அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தன. அவனுடைய பிரகிருதி வேகம் அதிகரித்தது.”

என்னென்ன பான விசேஷங்கள் இருந்தனவோ? எப்படி பிரகிருதி வேகம் அதிகரித்ததோ - ஆச்சாரியாரே அறிவார் போலும்!

“இன்பத்துக்கென்றே தனியாக அமைக்கப் பெற்ற மனைவியாவாள் கைகேயி, அவளுடைய அந்தப்புரம் நுழைந்ததுமே அரசன் உள்ளம் முழுதும் காதல் வேகம் பொங்கும்.”

மூப்பு - தளர்ச்சி - வனவாசப் பருவம் - அனைத்தும் கொண்ட ராஜ கிழவரின் யோக்கியதாம்சத்தை மாஜியாகிவிட்ட மந்திரிக் கிழவர் எப்படி சிறப்பித்திருக்கிறார் பார்த்தீர்களா? அந்தப் புரத்தில் நுழைந்தாலே காதல் வேகம் பொங்குமாம்! அடடா கிழவர்களே! கிழவர்களே!!

உள்ளே நுழைந்துவிட்டான்; பிறகு -

“கைகேயி அரசனை கண்டெடுத்தும் பார்க்கவில்லை. அப்பாவி அரசனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. எவ்வாறு விளங்கும்? கல்மஷம் என்பது கொஞ்சமும் அவன் உள்ளத்தில் இல்லை,”

வெள்ளை மனது - அப்பாவி - கல்மஷம் அற்றவன் தசரதனின் ஓவியத்தை இப்படித் தீட்டுகிறார் ஆச்சாரியார்.

இளம் வயதிலே உள்ள உன் பெண்ணை மணந்து அவளுக்கு துரோகம் செய்ய மாட்டேன் - அவளுக்குப் பிறக்கும் மகனுக்கே பட்டம் கட்டுகிறேன் என்று கேகய மன்னனிடம் ஆணையிட்டு விட்டு, அதை மீறி தந்திரமாக ராமனுக்கு முடிசூட்டும் சூழ்ச்சியில் ஈடுபட்ட இந்த தசரதன் கல்மஷமற்ற, வெள்ளை மனதுடைய அப்பாவியாம்! ஆச்சாரியார் கூறுகிறார்! அப்பாவிதான் ஆச்சாரியரே. அப்பாவிதான்! கேகய மன்னன் சொல்லவேண்டும்: “அப்-பாவி” என்று! அரிச்சந்திரனின் வாக்கு மீறாத தன்மையை, சத்தியத்தை வையகத்திற்கு எடுத்துரைக்கும் புராணக் கூட்டத்தின் தலைவர், வாக்கு மீறிய வஞ்சக அரசனை வாயாரப் புகழுகிறார், வர்ணிக்கிறார், வெட்கம் - வெட்கம் - வேதனை கலந்த வெட்கம்!

இந்த நல்ல அரசனைப்பற்றி ஆச்சாரியார் தீட்டியுள்ள சித்திரத்தின் முரண்பாட்டை இன்னும் பாருங்கள்!

ராஜ்யத்தை சோம்பலின்றி பெற்ற குழந்தையைப் போல ஆண்டு வந்தானாம் தசரதன். அத்தகைய தசரதன்? கைகேயியின் கோபத்தைக்கண்டு பேசும் வார்த்தைகளை ஆச்சாரியார் மூலமாகவே கேளுங்கள்.

“கைகேயி! உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள்! யாரைத் தண்டிக்கவேண்டும் - தண்டிப்பேன், யாரை தண்டனையிலிருந்து விடுவிக்கவேண்டும்? உடனே கொலையாளியாக இருந்தாலும் விட்டு விடுவேன்!

எனக்கு உள்ள சர்வாதிகாரம் உனக்குத் தெரியாதா? யாருக்கு என்ன கொடுக்கவேண்டும்? எந்த தேசத்தில் யாரை என்ன செய்யவேண்டும்? சொல்! உடனே செய்து விடுவேன். இப்படி யெல்லாம் காம மோகத்தில் ஈடுபட்டுக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்!”

ஆகஸ்டு 22ஆம் தேதி இதழில் ஆச்சாரியார் இவ்வாறு எழுதியுள்ளார். இவன்தான் நல்லவனாம் - வெள்ளைமனம் படைத்தவனாம் - கல்மஷமற்றவனாம் - ராஜ்யத்து மக்களை குழந்தைகள்போல பாவித்து, ராஜ்யத்துக்காக சோம்பலின்றி உழைத்தவனாம்! ஆகஸ்டு 8ஆம் நாள் எழுதியிருக்கிறார்.

இதுபோன்ற தசரதக் கிழவர்களைப் பாராட்டும் கிழவர்கள் ஆட்சி பீடத்திற்கு வந்தால் - ஆட்சி பீடத்தில் நிலைபெற்று இருந்திருந்தால் - நாடு என்ன ஆகியிருக்கும் என்பதை நினைக்கவே பயமாயிருக்கிறது! காமராஜனின் சக்திதான் என்னே! கிழ ராஜனை எப்படி எப்படி யெல்லாம் உளற வைத்திருக்கிறான் பாவம்!

<!-- Article 4 ends on scan 29 / printed 27; scan 30 / printed 28 begins Article 5. -->

கலைஞர் மு.கருணாநிதி · சக்கரவர்த்தியின் திருமகன். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்