கட்டுரை 3 / 14
சதி நிரூபிக்கப்படுகிறது
The Conspiracy Is Proven
அச்சுப் பக்கம் 20–23
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
சென்ற இதழில் தசரதன், வசிஷ்டன், ராமன் மூவருமே சதியில் ஈடுபட்டு பரதனுக்கு, நிபந்தனைப்படி நியாயமாக சேர வேண்டிய ராஜ்ய பாரத்தை ராமன் தலையில் கட்டி விட முடிவு செய்தார்கள் என்ற உண்மையை ஆச்சாரியார் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதாக முடித்திருந்தேன். பரதனுக்குப் பட்டம் கட்டுவதாக தசரதன் கேகய மன்னனிடம் கொடுத்த வாக்கை மீறுகிறான் என்றும் குறிப்பிட்டிருந்தேன். இதோ இந்த இதழில் அதே கருத்தை யொட்டி ஆச்சாரியார் எழுதுகிறார் கவனியுங்கள்.
“புத்திர பாக்கியம் பெறாமலிருந்த காலத்தில் கைகேயியைத் தசரதன், ராஜகுல வழக்கத்தை அனுசரித்து விவாகம் செய்து கொண்டான். இந்தச் சமயம் கைகேயினுடைய தந்தை கேகய ராஜன் தசரதனிடம் வாக்குறுதி பெற்றான்; இவள் வயிற்றில் பிறக்கும் மகனுக்குப் பட்டமென்று. இப்படி அப்போது சொன்னதில் ஒன்றும் வியப்போ வித்தியாசமோ இருந்திருக்க இடமில்லை. அப்போது யாருக்குமே குழந்தைகள் இல்லை. மற்ற மனைவிகளுக்குப் புத்திரப்பேறுக்கு உண்டாகவில்லை. புத்திரப்பேறுக்கு ஆசைப்பட்டே மூன்றாவது மனைவியைக் கொண்டது. அந்த ஆசையும் நிறைவேறவில்லை. வெகு நாட்கள் கழித்து யாகம் செய்து மூன்று மனைவிகளும் குழந்தைகள் பெற்றார்கள். பட்ட மகிஷியின் மகனான ராமன், நான்கு புத்திரர்களுக்குள் மூத்தவனாகவும், சகல உத்தம குணங்களையுடையவனாகவும், ராஜ்ய பாரம் வகிக்கும் தகுதியைக் கொண்டவனாகவும், மந்திரிமார்கள், நகரத்தார், கிராமவாசிகள், சிற்றரசர்கள் அனைவரும் யுவராஜப் பதவிக்குத் தகுந்தவன் என்று அவர்களுடைய அன்பைச் சம்பாதித்தவனாகவும் இருக்க, எப்படி அவனுடைய உரிமையையும் ராஜகுல முறையையும் புறக்கணித்து பரதனுக்குப் பட்டாபிஷேகம் செய்வது நியாயமாகும்?”
தசரதன் வாக்களித்ததையும் ஒத்துக்கொண்டு, அப்படிக் கொடுத்த வாக்கு மீறி - பரதனைப் புறக்கணித்தது தவறு அல்ல என்றும் வாதாடுகிறார் ஆச்சாரியார் - அதற்கு அவர் கூறும் காரணங்கள் என்ன? ராமன் நால்வரிலும் மூத்தவனாம், யாகத்தில் கிடைத்த தேவ பாயசத்தை மூன்று மனைவிமாரும் ஏக காலத்தில்தான் சாப்பிட்டார்கள் - ஆனாலும் ராமன் மூத்தவன் என்கிறார் ஆச்சாரியார். ஒருவேளை மூத்தாளின் மகன் என்பதால் மூத்தவன் என்கிறார் போலும் அவர். அப்படியானால் மூத்தாளின் கடைசி மகனும் மூத்தவன்தானே? ராமன் சகல உத்தம குணங்களும் உடையவன் எனவும் கூறுகிறார். அப்படியானால் என்ன அர்த்தம் - அண்ணன் புத்திசாலி என்றால் தம்பி கொஞ்சம் முட்டாள் என்று தானே அர்த்தம் - நான்கு பிள்ளைகளுக்கும் விஷ்ணு அம்சம் சொல்லப்படுகிறது என்று தனது முந்திய கட்டுரைகளில் எழுதிய ஆச்சாரியார், இப்போது நால்வரில் ராமன் சகல உத்தம குணங்களும் பெற்றிருந்தான் என்று கூறுவதால், விஷ்ணு அம்சத்தின் பிரிவுகளான மற்ற மூவரையும் குறை சொல்லுகிறார் என்றுதானே அர்த்தம்! ஒருவேளை, முன் கட்டுரையில் அவர் எழுதியதுபோல ராமன், விஷ்ணு அம்சத்தின் பாதி - லட்சுமணன் கால்பங்கு - பரதசத்ருக்கனர் ஒவ்வொருவரும் அரைக்கால் பங்கு - அதனால் ராமன், சகல குணங்களும் பொருந்தியிருந்தான் என்று கூறுகிறாரே - அப்போ அதுவும் பொருந்தாதே - ஏனெனில் அவரே - அதே கட்டுரையின் கீழே, கடவுள் அம்சத்தில் பங்கு கணக்கென்ன வேண்டியிருக்கிறது; எல்லாப்பங்குமே பூரணத்துவம் பெற்றதுதான் என்ற கருத்தையும் தீட்டியிருக்கிறார். ஆகவே நான்கு குமாரர்களும் பூரணமேதான் - ஆச்சாரியர் வாதம்; ஆச்சாரியராலேயே தோற்கடிக்கப்படுகிறதா இல்லையா என்பதை சிந்தியுங்கள்.
ராமன்தான் ராஜ்யபாரம் வகிக்க தகுதியுடையவனாம் - கூறுகிறார் இப்படி! பரதனுக்குத் தகுதி கிடையாதா? ராமன் கானகம் சென்ற பிறகு துணைக்கு லட்சுமணனும், ஆறுதலுக்குத் தந்தையும் இல்லாத பரதன், சத்ருக்கனோடு சேர்ந்து பதினான்கு ஆண்டு ராஜ்யத்தை நடத்தி வந்தானே - அப்போது என்ன அயோத்தியில் குழப்பமா ஏற்பட்டது? எதிரிகள் படையெடுத்தா வந்தார்கள்? அராஜகம் நடந்துவிட்டதா? அடக்குமுறை தேவைப்பட்டதா? அமைதியாகத்தானே பரதன் அரசு புரிந்திருக்கிறான். பதினான்கு வருடம் கழித்த பிறகு, ராமன் பட்டத்திற்கு வந்த பிறகு வேண்டுமானால் கலகம் நடந்திருக்கிறது - அதுவும் உள்நாட்டு யுத்தம் - தகப்பனுக்கும் மகன் எனக் கூறப்படும், லவ, குசன் ஆகியோருக்கும் அஸ்வமேத யாகத்தை அடிப்படையாகக் கொண்ட போராட்டம் நடைபெற்றிருக்கிறது. அமைதியோடு பதினான்கு ஆண்டு ஆட்சி புரிந்த பரதனுக்கு ராஜ்யபாரம் வகிக்க தகுதியில்லையாம் - காடாண்டபோதும் போராட்டம் நடத்திய ராமனே தகுந்தவனாம். ஆச்சாரியார் வாதிடுகிறார்.
ராமன் சகல உத்தம குணங்களும் பொருந்தியவனாம் அதனால் பட்டம் கட்டலாமாம். பரதன் என்ற அருமைச் சகோதரன் இல்லாத சமயம் முடிசூடிக் கொள்ள ஆசைப்பட்ட ராமனா உத்தம குணம் கொண்டவன்? வனமேகினான் அண்ணன், எனக் கேள்விப்பட்டதும் வாடிச் சோர்ந்த பரதனைவிட ராமன் எந்த விதத்தில் உத்தம குணம் வாய்ந்தவனோ தெரியவில்லை.
தசரதன் முதலில் கொடுத்த வாக்கை மீறி பரதனுக்குத் தெரியாமல் - ரகசியமாக ராமனுக்கு முடிசூட்ட முயற்சித்தது சரிதான். நியாயமானதுதான் - என்று வாதிக்கிறார் ஆச்சாரியார்.
கொல்லைப்புறமாக மந்திரி சபைக்கு வந்தவரல்லவா ஆச்சாரியார்! அதனால் அவர் தசரதனுக்காகப் பரிந்து பேசுவதில் ஆச்சர்யமில்லையதான்.
இன்னும் பாருங்கள் - ஆச்சாரியார் முரண்படும் கட்டம் வந்துவிட்டது.
தவிர - பரதனும் கைகேயியும் - முடியைப்பற்றி எதொரு ஆசை, அல்லது எண்ணங்கூட வைத்து கிடையாது. அதைப் பற்றிப் பேச்சே கிடையாது. ஆனபடியால் முறைப்படி ராமனை யுவராஜ்யப் பதவியில் அமர்த்துவதில் ஒரு சிக்கலும் ஏற்படாது என்று அரசன் எண்ணினான். அவ்வாறே கைகேயியின் உள்ளத்திலும் எதொரு கல்மஷமும் இருக்கவில்லை. இது கைகேயியின் நடவடிக்கைகளினால் வியக்தமாகத் தெரிகிறது. பரதன் உள்ளத்தைப்பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.”
இப்படி இந்த இதழில் எழுதியிருக்கிறார். சென்ற இதழில் எப்படி முடித்திருந்தார் தெரியுமா? முறைப்படி ராமனை யுவராஜ்யப் பதவியில் அமர்த்துவதில் ஒருவித சிக்கலும் ஏற்படாது என இந்த வாரக் கல்கி இதழில் எண்ணுகிற தசரத ராஜன், சென்ற வாரம் - பரதன் வந்துவிடுவானே எனப்பயந்து, ராமனை அவசர அவசரமாக இரண்டாவது முறை கூப்பிட்டு வாக்குச்சொல்லி, அவனிடமும் நிலையை விளக்கி - மறுநாளே யுவராஜ்யப் பட்டாபிஷேக ஏற்பாடுகளை கவனிக்கிறான்.
தெருவெல்லாம் தண்ணீர் தெளித்து அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஜனங்கள் தங்கள் வீடுகளின் மேல் பலவித அழகிய கொடிகள் பறக்கவிட்டிருந்தார்கள். ஆடை அணிகள் பூண்டு சந்தனம் பூசி, புஷ்பம் அணிந்து எங்கே பார்த்தாலும் கூட்டம் கூட்டமாக ஜனங்கள் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். கோயில்களில் வாத்தியகோஷம்.”
அயோத்தி இப்படி ஆனந்தமாக இருக்கிறது - ஆனால் இந்த சம்பவங்கள் எதுவும் கைகேயி சொந்தக்காரியும் - தோழியும், அந்தரங்க வேலைக்காரியுமான மந்தரை என்பவளுக்கு ஒன்றுமே தெரியாது. பக்கத்தில் உள்ள ஒரு தோழியிடம் கேட்டு, அந்தக் கொண்டாட்டமெல்லாம், ராமன் பட்டம் சூட்டும் விழாவிற்கு என்று தெரிந்து கொள்கிறாள். மந்தரை மட்டுமல்ல; மகாராணிகளில் ஒருத்தியாகிய கைகேயிக்குக்கூட இந்தச் செய்தி மந்தரை மூலமாகத்தான் கிடைக்கிறது. இந்த விபரங்களையெல்லாம் ஆச்சாரியார் (ஆகஸ்டு 15, 1954 கல்கி) இதழில் எழுதியிருக்கிறார்.
சாதாரண ஜனங்கள் ராமன் முடிசூட்டு விழா செய்தி கேட்டு கொடி கட்டி கொண்டாடுகிறார்களாம் கூட்டம் கூட்டமாக. ஆனால் அந்தச் செய்தி “கல்மஷ” மனமில்லாத கைகேயிக்கும் தெரியாதாம் - அவள் அந்தரங்க வேலைக்காரி மந்தரைக்கும் தெரியாதாம்!
அப்படி என்றால் என்ன பொருள்? பரதனையும் கைகேயியையும் ஏமாற்ற “சதி” நடந்திருக்கிறது என்றுதானே நாம் முடிவுகட்ட வேண்டியிருக்கிறது - நாமென்ன; மூளையுள்ளவர் அனைவருமே அப்படித்தான் முடிவு கட்டுவார்கள்.
<!-- Article 3 ends on scan 25 / printed 23. Scan 26 / printed 24 begins Article 4: காமராஜன் ஆட்கொண்ட தசரதராஜன்! -->
கலைஞர் மு.கருணாநிதி · சக்கரவர்த்தியின் திருமகன். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்