பொருளடக்கம்

2. தேகமும் உணர்வும்

கட்டுரை 2 / 14

தேகமும் உணர்வும்

Body and Feeling

அச்சுப் பக்கம் 1419

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

“ஆனந்தமாக - ஆண்டுகள் பன்னிரெண்டு ராமனும் சீதையும் அயோத்தியில் சுகம் அனுபவித்தார்கள். இனி, உலகில் மக்கள் படும் இடையூறுகள், துயரங்கள், கோபதாபங்கள் - எல்லாவற்றையுமே பகவானும் ஈஸ்வரியும் நேராக ஊனுடலில் அனுபவிக்கப் போகிறார்கள்.”

புரிகிறதா நண்பர்களே! புரோகிதர் தலைவரின் பொருள் பொதிந்த பேச்சு! ராமாயணத்தில் வரும் கதாபாத்திரம் ராமன் இனி வரும் கட்டங்களில் எல்லாம் செய்யப்போகும் தவறுகளுக்கு இப்போதே திரை போட்டுக்கொள்ள விரும்புகிறார் ஆச்சாரியார். சென்ற இதழில் (ஆகஸ்டு 154) ராமன், சீதை முதலியவர்களை கதாபாத்திரங்களெனக் கூறியதோடு நிற்காமல் சீதையின் அழகு, தேவலோகத்து சீதையின் அழகு போன்றது என இருவரையும் வேறுபடுத்திப் பிரித்துக் காட்டி, சீதையை மானிடப் பெண் என்றே எடுத்துக் காட்டிய மேதை ஆச்சாரியார் - ராமன் ராஜகுமாரனே தவிர - கடவுள் அல்ல என்று திட்டவட்டமாக எழுதத் துவங்கிய சக்கரவர்த்தியார் - இப்போது கூறுகிறார்; பகவானும் ஈஸ்வரியும், மக்கள் படும் இடையூறுகள் - துயரங்கள் - கோபதாபங்கள் எல்லாவற்றையுமே நேராக ஊனுடலில் அனுபவிக்கப் போகிறார்கள் என்பதாக! பகவான், தன் பத்தினியைக் காட்டுக்கு விரட்டலாமா? பகவான் மறைந்திருந்து ஒரு வீரனைக் கொல்லலாமா? இப்படியெல்லாம் இனிமேல் கேள்விகள் எழும் எனப் பயந்துதான் - ஆச்சாரியார் பகவானை மனித குணத்துக்கு அடிமையாக்க முயலுகிறார். அப்படி அவர் சொல்லும்போதும் ஏற்படுகிற வேடிக்கையான முரண்பாட்டைப் பாருங்கள். நன்றாக கவனிக்க வேண்டும் நண்பர்களே, நன்றாகக் கவனிக்கவேண்டும்.

“பன்னிரெண்டு ஆண்டுகள் ஆனந்தமாக ராமனும் சீதையும் அயோத்தியில் சுகம் அனுபவித்தார்கள்.”

ஆச்சாரியார்தான் எழுதியிருக்கிறார், ராஜகுலத்தில் உதித்த அந்த இன்ப ஜோடிகள் எப்படி பெய்ப்படி தங்கள் காதல் கீதத்தைப் பாடியிருப்பார்கள் என்று நாமும் ஒரு முறை வர்ணிக்க வேண்டுமா என்ன? நான் சொல்ல வந்த விஷயம் அதுவல்ல! பகவானும் ஈஸ்வரியும் மனித குணங்களுக்கு உட்பட்ட, இடையூறு, கோபதாபம், எல்லாவற்றையும் அனுபவிக்கப் போகிறார்கள் என்று ஆச்சாரியார் கூறுவது எந்தக் காலத்திலிருந்து தெரியுமா? மீண்டும் படியுங்கள்! “பன்னிரெண்டு ஆண்டுகள் ஆனந்தமாக ராமனும் சீதையும் அயோத்தியில் சுகம் அனுபவித்தார்கள். இனி, உலகில் மக்கள் படும் இடையூறுகள், துயரங்கள், கோபதாபங்கள், எல்லாவற்றையுமே பகவானும் ஈஸ்வரியும் ஊனுடலில் அனுபவிக்கப் போகிறார்கள்.”

இதில் வருகிற “இனி” என்ற வார்த்தையைக் கவனிக்க வேண்டும். பன்னிரெண்டு ஆண்டுகள் இன்பமாக இருந்த இருவரும் இனிமேல் தான் உலக மக்கள் உணர்ச்சிகள் எல்லாவற்றையுமே ஊனுடலில் அனுபவிக்கப் போகிறார்களாம்.

அப்படியானால் சீதா கல்யாணம் ஆன பிறகு இருந்த அந்த பன்னிரெண்டு ஆண்டுகளிலும் சரி, அதற்கு முன்பு ராமனின் பால்யப் பருவத்திலும் சரி அவர்கட்கு ஊனுடலில் ஏற்படும் உணர்ச்சிகள் ஏற்பட்டதில்லையா? - கோபம் கொண்டதில்லையா? - தாடகையைக் கொல்ல கோதண்டத்தை வளைத்தது கோபத்தால் அல்லவா? - மனைவி சீதையுடன் பன்னிரெண்டு வருடம் ஆனந்தம் அனுபவித்து, தாபம் ஏற்படாமல் என்று யாராவது கூற முடியுமா? ராமன்தான் கூறுவானா? தையல் சீதை தான் சொல்லுவாளா எனக்குத் தாபம் ஏற்படவில்லை என்று!

பிறகு ஏன் - பிராமணஜோதி ஆச்சாரியார், கோப தாபங்கள் போன்ற மனித உணர்ச்சிகளை இனி பகவானும் ஈஸ்வரியும் ஊனுடலில் அனுபவிக்கப் போகிறார்கள் என்று கூறவேண்டும்? அப்படியானால் இதுவரையில் ராமனும் சீதையும் அனுபவித்த உணர்ச்சிகள் தேவ உடலில் அனுபவித்தவைகளா? விளக்கம் தேவை - வேதியப் பெருந்தகையாரே, விளக்கம் தேவை! “எந்த அவதாரம் எடுக்கிறேனோ அந்த அவதாரத்திற்குரிய தேகமும் உணர்வுமாகத்தான் என் திருவிளையாடல் நடைபெற்று வரும் - என்பது பகவானே சொல்லிய விளக்கம்.”

ஆகஸ்டு 8ஆம் நாள் இதழிலே ஆச்சாரியார் இப்படி எழுதியிருக்கிறார், “பகவான் வாமனாவதாரம் எடுத்தார். அந்த உருவத்தைப் பற்றிய வர்ணனைகளையும், படத்தையும் கூட நாம் பார்த்திருக்கிறோம். மிக மிகக் குள்ளமான உருவம், சிறிய உருவம், மனித இலக்கணத்துக்கும் கீழான தேகம் படைத்த அவ்வளவு சிறிய உருவம் வாமனாவதாரம் என்று படித்திருக்கிறோம். என்ன செய்து தெரியுமா? மாபலிச்சக்கரவர்த்தியின் வலிமையைக் கெடுப்பதற்காக - மூன்றடி மண் கேட்டு, உலகத்தையே இரண்டு அடிகளாக அளந்துவிட்டது என்பது கதை! பகவான் எந்த அவதாரம் எடுத்தாலும் அந்த அவதாரத்திற்குரிய தேகமும், உணர்வுமாகத்தான் திருவிளையாடல் நடத்துவார் என்று ஆச்சாரியார் கூறுகிறார். கவனியுங்கள் இதையும்!

தேகம், உணர்வு இரண்டும் எடுத்த அவதாரத்திற்குத் தக்கதாய்த்தானிருக்குமாம், பகவான் கூறிய விளக்கமாம். பார்ப்பனகுல மகிபரும் பகருகிறார், சரி! ஒப்புவோம்! “அப்படியானால் வாமனாவதாரம் என்ற சிறிய தேகத்தின் பாதங்கள் எவ்வளவு சிறியதாய் இருந்திருக்க வேண்டும்? அந்தச்சிறிய பாதங்களால் ஜெகத்தை எப்படி அளந்து வாமனாவதாரம்?” என்று அறிவுள்ளவர்கள் கேட்கமாட்டார்களா? ஆச்சாரிய மேதை அதற்குப் பதில் சொல்லவேண்டாமா?

அவதாரத்திற்குத் தகுந்த தேகமும், உணர்வும் பெறுவாராம் பகவான். வராகவதாரம் எடுத்தார் - பூமியைத் தூக்கிக்கொண்டு வந்தார், பன்றியைப் போன்ற தேகம் பெற்றார் - சரி! ஆனால் அந்தப் பன்றி பூமாதேவியுடன் இன்பம் அனுபவிக்கிற அளவுக்கு உணர்வு பெற்றது என்று புராணம் எழுதப்பட்டிருக்கிறதே அதுதான் அவதாரத்திற்குத் தகுந்த உணர்வா? என்று ஆச்சாரியாரை வினயத்தோடு கேட்க ஆசைப்படுகிறோம்.

பட்டாபிஷேகம்

ராமனுக்குப் பட்டாபிஷேகம் நடத்த ஏற்றதொரு நாள் குறிக்க வேண்டுமென்று தசரதன் சபையில் அறிவிக்கிறான். பிறகு ஏதோ ஒரு யோசனை வந்து, மறு நாளே புஷ்ய நட்சத்திரத்தில் ராமனின் பட்டாபிஷேகத்தை வைத்துக் கொள்வதென்று முடிவுசெய்து அதை ராமனிடமும் தசரதன் கூறுகிறான். அவ்வளவு அவசரமாக தசரதன் நாள் வைத்தமைக்குக் காரணம் என்னவென்று ஆச்சாரியார் விளக்குகிறார் பாருங்கள்.

“கைகேயியை விவாகம் செய்துகொண்ட காலத்தில் தசரதன் கேகயனுக்கு (கைகேயியின் தந்தை) கொடுத்த வாக்கு அவன் நினைவுக்கு வந்து, அது அவனை மனத்தில் தொந்தரவு செய்ததுபோல் தோன்றுகிறது, பரதன் மிக நல்லவன், அண்ணனிடம் அவன் மிக்க அன்பும் பக்தியும் வைத்தவன். ஆனபடியால் கைகேயி விவாக நிபந்தனையை அவன் பொருட்படுத்தமாட்டான். ஆயினும் மனிதனுடைய மனத்தை நம்பக் கூடாது. நல்லவருடைய புத்தியும் சில சமயம் மாறிப்போகும் என்று தசரதன் பயந்தான்.”

புரிகிறதா தோழர்களே! பரதனுக்குப் பட்டம் கட்டுவதாக தசரதன் வாக்களித்திருப்பது - யுத்தத்தில் உதவி செய்த தன் மனைவி கைகேயி என்பவளை தான் மணந்திட விரும்பியபோது அவள் தகப்பன் கேகய மன்னன் விதித்த நிபந்தனை அது! உனக்கு மூத்த மனைவியிருப்பதால் அவள் மகன் பட்டத்திற்கு வர நேரும்; என் மகள் கைகேயியின் மகனுக்குப் பட்டம் தருவதாக வாக்களித்தால் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேகய மன்னன் நிபந்தனை விதித்தான். அதை ஒத்துக்கொண்ட தசரத ராஜன்தான் இப்போது, பரதன் ஊரில் இல்லாத சமயம் அவசர அவசரமாக மூத்தவன் ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடு துவங்குகிறான்.

“பரதன் ஊரில் இல்லை, அவனுக்கு இப்போது சொல்லி அனுப்பி வரவழைக்க சவகாசமில்லை. அவன் வருவதற்காக காரியத்தை நிறுத்திவைப்பது உசிதமல்ல.”

தசரதன், ராமனிடம் கூறுகிறான் இப்படி ஆச்சாரியார் எழுதியிருக்கிறார். தோழர்களே! சூழ்ச்சி எங்கே முதலில் உருவாகிறது பாருங்கள். கைகேயி இடத்தில் அல்ல; தசரதன் இடத்தில்தான் சூழ்ச்சி உருவாகிறது என்பதை ஆச்சாரியார் தன்னையறியாமலே ஒத்துக் கொள்ள நேரிடுகிறது. “ராஜ்யாதிகாரம் உடனே வகிக்க வேண்டுமென்று ராமனுக்கு ஆசை இருக்கவில்லை. அதை கடமையாகவே பாவித்தான். அரசன் ஒப்புக்கொள்ளும்படி சொன்னால் சரி, இல்லாவிட்டால் வேண்டியதில்லை என்பது அவன் கருத்து.”

இப்படிப்பட்ட ராமன் - அருங்குணவான் - தகப்பனுடன் சேர்ந்து சூழ்ச்சியில் எப்படி ஈடுபடுகிறான் பாருங்கள். ஆச்சாரியாரே எழுதுகிறார்; படியுங்கள்.

“பரதன், அண்ணனைக் குருவாகக் கருதுகிறவன் தர்மாத்மா, சுத்தமான உள்ளமும் ஆசைகளை அடக்கும் சக்தியும் பெற்றவன். ஆயினும் மனுஷ்யனுடைய சித்தம் எப்போதும் ஒரே விதமாக இருக்காது என்று தசரதன் ராமனிடம் சொல்லி... பரதன் வருவதற்காக காக்கவேண்டாம் என்று வசிஷ்டருக்கும் தெரிவித்துவிட்டான்.

பட்டாபிஷேக வைபவம் அதில் சகோதரன் பரதன் இல்லாமல் - தான் பட்டம் கட்டிக்கொள்ள ராமனும் சம்மதித்து விட்டான். பரதன் வந்துவிட்டால் தசரதன் தன் அன்னையைத்திருமணம் புரியும்போது தன் தாத்தா கேகய மன்னனிடம் கொடுத்த வாக்கை நினைவுபடுத்தி பட்டாபிஷேகத்தைத் தடுத்துவிடுவானாம் - அதற்காக பயந்து ராமனுக்குப்பட்டம் கட்டும் சதியில் - வசிஷ்ட முனிவர், தசரத சக்கரவர்த்தி யென்னும் தாம்பிரபு, பகவான் ராமச்சந்திரமூர்த்தி - ஆகிய இத்தனைபேரும் கலந்து கொள்கிறார்கள்.

“ஏதாவது இடையூறு நேருமோ” என்று தசரதனுக்கு திகில் இருந்ததாம்! இருக்காதா திகில்? இருக்கும்! நிபந்தனையை மறந்து, பரதன் ஊரில் இருந்து வருவதற்குள் ராமனுக்குப் பட்டம் கட்டவேண்டுமென்று சதி செய்த தசரதனுக்கு திகில் இருக்காதா? இத்தகைய தசரதனின் திருமகனாகப் போய் மகாவிஷ்ணு பிறந்தாரே; அதில் அல்லவா இருக்கிறது ஆச்சரியம்! விஷ்ணுவைப் பங்குபோடப் பிறந்த பிள்ளைகள் நால்வரும்! அந்த நால்வருக்குள்ளாகவே சதி! அதுவும் அதிகப் பங்கில் அவதரித்த ஸ்ரீராமன், தந்தையின் சதிக்கு உடந்தையாக இருக்கிறான், பட்டாபிஷேகத்திற்கான சகல முன்னேற்பாடுகளையும் அவனும் கவனிக்கிறான் தன் மனைவியுடன்!

இந்த இதழில் ஆச்சாரியார் எழுதிய கட்டுரை, அவரையும் அறியாமல் ஓர் உண்மையை உணர்த்தி விட்டது.

தசரதன், கேகய மன்னனுக்கு வாக்களித்து, கைகேயியை மணந்தான். இப்போது அந்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு, ராமனுடன் சேர்ந்து சதி செய்து அவனையே பட்டத்திற்குரியவனாக்க திட்டமிட்டுவிட்டான். அதற்கு ராமனும் உடந்தை, என்கிற உண்மைதான் அது!

❧★❧

கலைஞர் மு.கருணாநிதி · சக்கரவர்த்தியின் திருமகன். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்