பொருளடக்கம்

12. சிந்தித்துணர்க! சீற்றமுறாதீர்!

கட்டுரை 12 / 13

சிந்தித்துணர்க! சீற்றமுறாதீர்!

Think and Understand! Do Not Grow Angry!

அச்சுப் பக்கம் 69–74

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

திருப்பத்தூரிலே திராவிட முன்னேற்றக் கழக ஆதரவு பெற்றவரும் ஒப்பந்த ஏட்டில் கையெழுத்திட்டவருமான தோழர் ராகவன் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார் என்ற செய்தியும், மதுரையிலே கம்யூனிஸ்ட் தோழர் ராமமூர்த்தி அவர்கள் வெற்றி பெற்று விட்டார் என்ற செய்தியும், உதயகிரி தொகுதியில் நிதி மந்திரி கோபாலர் தோல்வியுற்றார் என்ற செய்தியும், அமலாபுரம் தொகுதியில் காளா வெங்கட்டராவ் தோல்வியுற்றார் என்ற செய்தியும், திராவிடத்தில் தேன் பாய்ச்சும் செய்திகளாக மதிக்கப்படுகின்றன.

கோபாலர், மந்திரியார் நிதிக்கு! காளாவும் மந்திரியார் தான் சுகாதாரத்திற்கு. இருவருமே காங்கிரஸ் மாளிகையின் தூண்கள் என்று பாராட்டப் பெற்றவர்கள். அந்தத் தூண்கள் தூள் தூளாகிவிட்டன.

முன்பொருநாள் சட்டசபையிலே “இப்படி வரிப் பளுவை அதிகமாக்குகிறீர்களே; தேர்தலில் மஞ்சள் பெட்டிக்கு ஓட் கிடைக்குமா?” என்று கேட்டபோது அதற்கு கோபாலர் “மஞ்சள் பெட்டிக்கு ஓட்டு கிடைக்காது என்றால் பெட்டியை மாற்றிக் கொண்டால் போகிறது” என்று பதில் கூறினார்.

மஞ்சள் பெட்டியை மாட்டுப் பெட்டியாக மாற்றிக் கொண்டிருந்துங்கூட தோல்வியின் மடியிலே கோபாலர்—காளா இருவரும் விழ நேரிட்டுவிட்டது!

திருப்பத்தூரிலே நமது ஆதரவைப்பெற்ற நண்பர் ராகவன் அவர்கள் காங்கிரசை ஆறாயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்று தோல்வியுறச் செய்திருக்கிறார். அவருக்கு நம் பாராட்டுதல்!

மதுரையிலே கம்யூனிஸ்ட் நண்பர் ராமமூர்த்தி அவர்கள் காங்கிரசை முறிய அடித்து வெற்றி முரசு கொட்டியிருக்கிறார். சிறைச்சாலையில், இருந்தபடியே—செங்கோல் பிடித்திருக்கும் கட்சியின் செல்வாக்கை செல்லாக்காசாக ஆக்கிவிட்டார்! அவர் நமது பாராட்டுக்கும் மகிழ்ச்சிக்கும் உரியவர்!

ராமமூர்த்தியின் வெற்றியை நாம் பாராட்டுவது போலவே சில இடங்களில் கம்யூனிஸ்ட் நண்பர்களின் வெற்றியையும் எதிர்பார்க்கிறோம். வரவேற்கிறோம். வாழ்த்துகிறோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பந்த ஏட்டிலே கையெழுத்திடாத அபேட்சகர்கள் போட்டியிடுகிற இடத்திலும், கையெழுத்திட்டவர்கள் பொறுக்கப்படாத இடத்திலும் நம்முடைய கழகத்தவரின் ஓட்டுக்கள் கம்யூனிஸ்டு நண்பர்களுக்கு அளிக்கப்படாமல் வேறு யாருக்கு அளிக்கப்படும்!

இதை அண்ணாவின் அறிக்கையும் சுட்டிக் காட்டியிருக்கிறது. அத்தகைய இடங்களிலே திராவிட

முன்னேற்றக் கழகம் அதிகார பூர்வமாக கம்யூனிஸ்டுகளை ஆதரிக்காவிட்டாலும் ஓட்டு அளிக்கும் விஷயத்தில் தி.மு. கழகத்தார் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதையும், எப்படி நடந்துகொண்டார்கள் என்பதையும், தோழர்கள் ராமமூர்த்தி, அனந்த நம்பியார், மணலி கந்தசாமி, முத்தையா, மோகன் போன்றவர்களின் மனச்சாட்சி, நிச்சயமாக மறைத்துக்கூற முடியாது! நேர்மையிலும் நீதியிலும் நாட்டமுள்ளவர்கள்—விஷம எண்ணம் படைக்காத விவேகிகள்—அந்த உண்மையை உணர முடியும்.

சென்னையிலே ஜீவானந்தத்தை எதிர்க்க நேரிட்ட தென்றால் அது தி. மு. கழகத்தின் அடிப்படை இலட்சியமான திராவிட நாட்டைப்பற்றிச் சட்டசபையிலே எடுத்துக் கூறுவேன் என்று தோழர் ஆல்பர்ட் ஜேசுதாசன் அவர்கள் உறுதி தந்து நமது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிற காரணத்தால்தான்! கம்யூனிஸ்ட் நண்பர்கள் கூறுவதுபோல ஆல்பர்ட் ஜேசுதாசன் அவர்கள் அறிமுகமில்லாத புது மனிதரல்ல! திராவிட இயக்கப் போராட்டங்களிலே இருந்தவர்தான். இந்தி எதிர்ப்புப் போரிலே ஈடுபட்டவர்தான்.

இந்திப் போரை மெளனமாக கம்யூனிஸ்டுகள் கவனித்திருந்த நேரத்திலே ஆல்பர்ட் அவர்கள் அறப் போர்க்களத்திலே இருந்தவர் என்பதை யாரும் மறுக்க முடியாது.

“ஜீவானந்தத்தையே எதிர்க்கிறார்களே!” என்று கலக மூட்டுகிறார்கள், கண்யமிழப்பதையே கடமையாகக் கொண்ட சிலர்! அந்தச் சிலர், மோகன் குமார மங்கலத்தையே, கே. டி. ராஜூவையே எதிர்க்கிறார்கள் என்பதை ஏன் தான் மறந்தார்களோ தெரியவில்லை.

மோகன் குமாரமங்கலம் ஜீவாவைவிட தாழ்ந்தவர் என்ற எண்ணமா? அல்லது சேலம் தோழர் பாலுவைவிட குறைந்த ஓட்டுகள்தான் மோஹன் வாங்குவார்—பாலுதான் ஜெயிக்க முடியும் என்ற உறுதியான ஆருட இலட்சணமா?

ஜீவாவின் வரிசையிலே உள்ளவர்தான் மோகன் குமாரமங்கலம்.

அத்தகைய மோகனை எதிர்த்து, தோழர் பாலுவை ஆதரிக்கும் அந்தத் தோழர்கள் நாம் ஜீவாவை எதிர்ப்பதைப் பெரிதுபடுத்தி விஷம வேலைகளில் இறங்குகிறார்கள்.

இதை உணர்ந்தோ உணராமலோ — அல்லது தேர்தல் நேரத்தில் காட்டிக்கொள்ளக் கூடாது என்று உணராதவர்போல காட்டிக்கொண்டோ கம்யூனிஸ்டு நண்பர்களும் நம்மீது ஏளன வார்த்தைகளை வீசுகிறார்கள்.

“மாலைமணி பக்தர்கள்” “அருள் சுரக்க வந்திருக்கிறார் அண்ணா”

“பிராணனை விடுகிறார்கள்” “அனாதை ரட்சகாக அபயம் அளிக்க விந்துவிட்டார் அண்ணா” “பிளாங்க் செக்” என்பவை போன்ற கேலி மொழிகளை நம் கழகத்தின்மீது வீசுகிறார்கள் ஜனசக்தி மூலமாக!

தோழர் ஜீவானந்தத்தை எதிர்க்கும் நிலைமையேற்பட்ட வடசென்னை போன்ற சில தொகுதிகளில் வேண்டுமானால் நமது தோழர்கள் இந்த கேலிகளை அலட்சியம் செய்துவிட்டுப் பணியாற்றிக்கொண்டிருக்கலாம்.

ஆனால் நம்பியார், கல்யாணசுந்தரம், முத்தையா, மணலி போன்றவர்கள் நிற்கும் இடங்களிலே அவர்களுடைய வெற்றியை விரும்பி தங்கள் ஓட்டுக்களை அளிக்க இருக்கிற கழகத் தோழர்களின் உள்ளம் எவ்வளவு வேதனை அடையும் என்பதை கம்யூனிஸ்ட் நண்பர்களும் ஜனசக்தி பத்திரிகையும் சிந்திக்கவேண்டும். எவ்வளவுதான் வெந்த புண்ணிலே வேல் சொருகினாலுங்கூட கழகத்தவரின் ஓட்டுக்கள் காங்கிரசுக்குப் போகாது என்பதையும் கம்யூனிஸ்டு நண்பர்கள் உணரவேண்டும்; உணருவார்கள்.

ஏகாதிபத்திய தாசர் என்று கம்யூனிஸ்டுகளால் வர்ணிக்கப்படுகிற சர்மா அவர்களைப் பெரியார் ஆதரிக்க

வும்—பெரியாருடன் கலந்து பணியாற்றவும் துணிந்திருக்கிற கம்யூனிஸ்டு நண்பர்கள், நம்மீது வீண்பழிகளை சுமத்துவது ஏனோ புரியவில்லை.

ஆல்பர்ட் ஜேசுதாசன் திராவிட நாட்டுப் பிரச்சினையைச் சட்டசபையில் முழக்குவேன் என்றார். ஜீவா அது இயலாது என்றார். நாம் ஆல்பர்டை ஆதரிக்கிறோம். இம்மாதிரியான சூழ்நிலை இல்லாத இடத்தில் கம்யூனிஸ்டுகளை எதிர்க்காதது மட்டுமல்ல, கழக பூர்வமாய் ஆதரிக்காவிட்டாலுங்கூட நம்முடைய ஓட்டுக்களை கம்யூனிஸ்டுகளுக்கே வழங்குவோம் என்ற உணர்ச்சிதான் பரவியிருக்கிறது. கம்யூனிஸ்டுகளை ஆதரிக்கிறோம் என்று சொல்லிவிட்டு மோகனை, கே. டி. ராஜூவை, இன்னும் பல கம்யூனிஸ்டு நண்பர்களை எதிர்த்திடும் விபரீதப்போக்கு கொண்டவர்கள் அல்ல நாம்.

இதைக் கம்யூனிஸ்டுகள் உணரவேண்டும் என்பதோடு—கலக மூட்டுபவரும்--அந்தக் கலகத்தால் குழப்ப நிலையில் உள்ள பொதுமக்களும் நன்கு சிந்தித்து உணர வேண்டுமாய், உண்மை தெரிய வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம். அத்துடன் தோல்வியுற்ற காங்கிரசு மந்திரிகளுக்கு நமது அனுதாபத்தையும் வெற்றி வீரர்களுக்கு மகிழ்ச்சியையும் வழங்குகிறோம்.

Assembly provenance

- scan 71 — publications/perumoochu/pages/0071-sindhiththunarga-seetramuraadheer-1.md - scan 72 — publications/perumoochu/pages/0072-sindhiththunarga-seetramuraadheer-2.md - scan 73 — publications/perumoochu/pages/0073-sindhiththunarga-seetramuraadheer-3.md - scan 74 — publications/perumoochu/pages/0074-sindhiththunarga-seetramuraadheer-4.md - scan 75 — publications/perumoochu/pages/0075-sindhiththunarga-seetramuraadheer-5.md - scan 76 — publications/perumoochu/pages/0076-sindhiththunarga-seetramuraadheer-6.md

P3 assembly audit

- source scans — 71–76 / 6/6 records - page-record coverage — 6/6 PASS - physical page boundaries — preserved with scan comments - omitted canonical P2 body text — 0 - added unsupported body text — 0 - modernization / paraphrase — 0 - unresolved assembly issues — 0 - result — P3 COMPLETE / PASS

P5 strict visual review

- every contributing physical source scan was closure-reconciled directly against source pixels in P5. - current article body reconstructed from current canonical page records and compared exactly — PASS. - unresolved P5 fidelity discrepancies — 0. - status — STRICT-REVIEWED / FROZEN.

கலைஞர் மு. கருணாநிதி · பெருமூச்சு. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்