பொருளடக்கம்

13. பூம்! பூம்! பூம்!

கட்டுரை 13 / 13

பூம்! பூம்! பூம்!

Boom! Boom! Boom!

அச்சுப் பக்கம் 75–78

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

அய்யாவுக்கு நல்லகாலம் பிறக்குமா ? பூம், பூம், பூம்! பசி போகுமா ?.... பூம், பூம், பூம்! பட்டினி தொலையுமா ? பூம், பூம், பூம்! பிள்ளை வியாபாரம் நிற்குமா ? பூம், பூம், பூம்! தற்கொலைகள் தணியுமா ? பூம், பூம், பூம்! தேனும், பாலும் ஓடுமா ? பூம், பூம், பூம்! அப்படின்னு அய்யா, ஓட்டுப் போடுவாரா? பூம், பூம், பூம்!

எல்லாவற்றுக்கும் அந்தப் பெருமாள் மாடுகள் தலையாட்டுகின்றன. பெருமாள் மாடுகள் எவ்வளவு அழகாக அலங்கரிக்கப் பட்டிருக்கின்றன தெரியுமா ?

நெற்றியிலே வைரமணிகளால் ஆன அசோகச் சக்கரம். பார்வைக்குத் தான் வைரமே தவிர, அவையெல்லாம் பாட்டாளி மக்களின் உடைந்துபோன பற்கள். ( தடியடி தர்பாரில் உதிர்ந்தவை )

கொம்புகளிலே மஞ்சள் தடவப்பட்டிருக்கிறது. அது மஞ்சள் நிறமாகக் காட்சியளிக்கிறதே தவிர அது இந்தநாட்டு உழைப்பாளிகளின் உதிரம்! அது உலர்ந்து போய் மஞ்சளாகக் காட்சி தருகிறது.

மாட்டின் கழுத்திலே வெள்ளித் தாயத்துக்கள் மின்னுகின்றன; தாயத்துகளா அவைகள்! இல்லை; இல்லை! பசியால், வேதனையால், சுருண்டு செத்துப் போன சுதந்திர நாட்டுப் பிரஜைகளின் எலும்புகளைக் கோர்த்துப் போட்டிருக்கிறார்கள்.

மாட்டின் முதுகிலே வட நாட்டு பிர்லாக்கள் அணிவித்த பீதாம்பரங்கள் ஜரிகைத் துப்பட்டாக்கள்—இத்தனை ஆடம்பரத்தோடு காங்கிரஸ் பெருமாள் மாடுகள். பூம், பூம், வாத்தியத்தைக் கேட்டுத் தலையாட்டுகின்றன.

“அப்படின்னு, அய்யா ஓட்டுப் போடுவாரா? பூம், பூம், பூம்!

மாடுகள் தலையாட்டுகின்றன; போடுவார் என்று!

ஒரு சிறுவன், பெருமாள் மாட்டுக்காரனிடம் ஓடிவந்தான். பிண்ணாக்கு வேணுமா? புளியங் கொட்டை வேணுமா? பருத்திக் கொட்டை வேணுமா? பூம், பூம், பூம், பூம்! என்று கத்த ஆரம்பித்தான்.

பெருமாள் மாட்டுக்காரனுக்குக் கோபம் வந்துவிட்டது. ஆத்திரத்தில் எதுவும் சொல்ல முடியாமல் பூம், பூம், பூம் என்று வாத்தியத்தை முழங்கினான். நிறுத்தியதும், மாடுகள் தலையாட்ட ஆரம்பித்தன. அந்தத் தலையாட்டால், பிண்ணாக்கு வேணும், பருத்திக் கொட்டை வேணும் என்று சொல்வதுபோலிருந்தது!

பிண்ணாக்குச் சாப்பிடச் சொன்ன மாடே ! பருத்திக்கொட்டைச் சாப்பிடச் சொன்ன மாடே ! இந்தா, பிண்ணாக்கு! என்று எடுத்துக்கொண்டு சிறுவன் ஓடிவந்தான். உடனே பெருமாள் மாட்டுக்காரன், “சின்ன எஜமான் ஓட்டு கொண்டாந்து போடுங்க! இந்த மாடு ஓட்டைத்தான் சாப்பிடும்” என்று கெஞ்சினான்.

சின்ன எஜமானுடைய அப்பா சிரித்துக்கொண்டேயிருந்தார்.

“பாருங்கசாமி, பாருங்க எதாவது ஒரு பழசுபட்டு; ஒரு ஓட்டு போடுங்க” என்று பல்லைக் காட்டினான். அவர் மௌனமாயிருந்தார்.

அய்யா போடுவாரா? பூம், பூம், பூம்! மாடுகள் தலையாட்டின.

வீட்டுக்காரர் உள்ளே போனார். பெருமாள் மாட்டுக்காரனுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. “அய்யா உள்ளே போயிருக்கிறார், ஓட்டுக்கொண்டு வந்து போடுவாரா?” பூம், பூம், பூம். “அய்யா போடுவாரா? பூம், பூம், பூம்!”

உள்ளே சென்ற அய்யா, போட்டுவிட்டார்! எதை? கதவுக்குத் தாழ்ப்பாளை!

பெருமாள் மாட்டுக்காரன், திகைத்தபடி, ஈனஸ்வரத்தில். “அய்யா போடமாட்டாரடா? பூம், பூம், பூம்!” என்றான். மாடுகள் தலையாட்டிக்கொண்டே இருந்தன. பூம்! பூம்!! பூம்!!!

Assembly provenance

- scan 77 — publications/perumoochu/pages/0077-boom-boom-boom-1.md - scan 78 — publications/perumoochu/pages/0078-boom-boom-boom-2.md - scan 79 — publications/perumoochu/pages/0079-boom-boom-boom-3.md - scan 80 — publications/perumoochu/pages/0080-boom-boom-boom-4.md

P3 assembly audit

- source scans — 77–80 / 4/4 records - page-record coverage — 4/4 PASS - physical page boundaries — preserved with scan comments - omitted canonical P2 body text — 0 - added unsupported body text — 0 - modernization / paraphrase — 0 - unresolved assembly issues — 0 - result — P3 COMPLETE / PASS

P5 strict visual review

- every contributing physical source scan was closure-reconciled directly against source pixels in P5. - current article body reconstructed from current canonical page records and compared exactly — PASS. - unresolved P5 fidelity discrepancies — 0. - status — STRICT-REVIEWED / FROZEN.

கலைஞர் மு. கருணாநிதி · பெருமூச்சு. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்