பொருளடக்கம்

11. தேர்தல் கோவலன்!

கட்டுரை 11 / 13

தேர்தல் கோவலன்!

Election Kovalan!

அச்சுப் பக்கம் 61–68

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

“காங்கிரஸ் துருப்பிடித்து விட்டது. லட்டுப், பூரியைப்போல பதவியிலே ஆசைகொண்டு, அனேக தகாத பேர்வழிகள் இதற்குள் நுழைந்துவிட்டார்கள்.”
“காங்கிரஸ் அதிகாரத்திற்கு வந்தபிறகு அனேக காங்கிரஸ்காரர்கள் சோம்பேறிகளாய், சுகவாசிகளாய் விட்டார்கள். இதனால் காங்கிரஸ் ஸ்தாபனம் பாதிக்கப்பட்டு பலஹீனப்பட்டு விட்டது.”

மேலே காணப்படும் வாசகங்கள் காஞ்சியிலிருந்து கிளம்பி வட்டமிடுபவை யென்று சிலர் நினைக்கலாம். நிச்சயமாக இல்லை.

காஞ்சியிலிருந்தோ, கம்யூனிஸ்ட் முகாமிலிருந்தோ வீசப்பட்ட கருத்துக்கள் அல்ல அவைகள்!

காந்தீய வார்சுதான் கூறியிருக்கிறார், இந்தக் கனற்கக்கும் மொழிகளை!

கிருபளானி சொன்னார், பிரகாசம் சொன்னார், ரங்கா சொன்னார், அவர் சொன்னார், இவர் சொன்னார் என்ற நிலைமைபோய் நேருவே சொன்னார் என்பது இப்போது பழக்கப்பட்டுவிட்ட, பரிதாபத்திற்குரிய செய்திதான்.

பீஹார் மக்களிடத்திலே ஓட்டு வேட்டையாட வந்த நேரு, இந்த ஒப்பாரியை ஒருமுறை சொல்லி முடித்திருக்கிறார்.

நேரு அவர்களால் இதுபோன்ற புலம்பல் கச்சேரி பல முறை நடத்தப்பட்டிருக்கிறது. தேர்தல் நேரத்திலே இந்தப் புலம்பல் துரித காலத்திலே பாடப்படுகிறது.

“தான் ஒருவரே புனிதமானவர்! புன்மைச் செயலில் ஈடுபடும் காங்கிரஸ்காரர்களை எப்படி யெப்படிக் கண்டிக்கிறார் பார்த்தாயா, நேரு?” என்று மக்கள் புகழ் மாலை சூட்டுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்.

சுமார் ஐந்து ஆண்டு காலம் நேருவின் ஆட்சி நடைபெற்றிருக்கிறது!

அப்போதெல்லாம் நேர்மையைப்பற்றிப் பேசாதவர், நீதி, நியாயம் போதிக்க வராதவர், கட்சி கட்டுப்பாடு குலைந்ததுபற்றிக் கண்ணீர் வடிக்க வராதவர் திடீரென்று கலகலவெனக் கண்ணீர்ச் சிந்தி, படபடவெனத் தலையில் அடித்துக்கொண்டு துடிதுடிக்கிறார், குதிகுதிக்கிறார் என்றால் என்ன அர்த்தம்!

தேர்தல் நேரத்திலே பேசுகிற பேச்சென்றே சில பேச்சுகள் உண்டு!

கட்டிலறையிலே ஊடல் நடைபெறும்போது உளறிக் கொட்டுகிற உறுதி வார்த்தைகள். அதற்கு ஒப்பந்த பத்திரம் கிடையாது;

“கண்ணே, மணியே! கற்பகமே! பொற்சிலையே!” என்று அழைத்து காதலைக்கொட்டி, அவள் அன்பைப் பெறுவதற்காக வேறு சில மாதர்களைப் பழித்து வாய்ச்சொல்லால் சில வாக்குகள் தந்து, விடிந்ததும் சொன்னதை மறந்துவிடுகிற சுந்தராங்கதர்கள் பலர் உண்டு!

தேர்தலிலும் அந்த ரகத்தவர் பலருண்டு!

“செய்ததை மறந்துவிடு! செப்புவதைக் கேள் மாதவியின் மஞ்சம் நாடிச் சென்றது தவறுதான்” என்று மன்னிப்புக்கேட்டு, அந்த வார்த்தையிலே மயங்கி விடும் கண்ணகியிடம் சிலம்பைப்பெற்றுச் செல்லும் சிங்காரக் கோவலர்கள் பலருண்டு! சிலப்பதிகாரக் கோவலன் மன்னிப்புப்பெற்ற பிறகு தானும் அழிந்து, தன் மனைவியையும் அழிய வைத்தான், கண்ணகி சிலம்பைக் கொடுத்த காரணத்தால்!

இந்தத் தேர்தல் கோவலர்களும் ஓட்டு என்னும் சிலம்பைப்பெற்று, வாக்காளர் என்னும் கண்ணகியை காடுமேடு அழைத்துச்சென்று, அமெரிக்கா என்னும் வஞ்சிப்பத்தரிடத்திலே சிக்கிக்கொண்டு எல்லோரின் வாழ்நாளையும் கெடுத்துக்கொள்ளத் திட்டமிடுகின்றனர்.

அந்த முடிவைத்தான் காங்கிரஸ்காரர்கள் எழுதுகின்ற துன்பத் தொடர் கதையிலே நாம் எதிர்பார்க்கிறோம்.

கோவலன், சிலப்பதிகாரத்திலே உண்மையிலேயே மன்னிப்பு கேட்டான். திருந்திக்கொள்ள முயன்றான்.

இந்தக் கோவலர்களோ, சிலப்பதிகாரத்தை வஞ்சிப்பத்தர் இல்லத்தோடு முடித்துவிட விரும்புகின்றனர். ஆமாம், அமெரிக்காவிடம் அடிமைப் படுவதோடு முடிய இருக்கிறது. இந்த அவலக் கதையின் கடைசி அத்தியாயம்! அவர்களாகத் தேடிக்கொள்ளத் துடிக்கும் இந்தச் சோக முடிவிலே திராவிடத்தை—நம்மை இணைக்க விரும்புகிறார்கள்.

நேருவின் குரலிலே பலர் பேசுகிறார்கள்.

“செய்ததை மறந்து விடுக! இனிச் செய்வதைச் சரியாகச் செய்வோம்” என்கிறார்கள்.

மாதவியை மறந்துவிட்டு வந்த பிறகுதான் கோவலன் மன்னிப்புக் கேட்டான். மன்னிப்பு நியாயமுங்கூட!

இவர்களோ, தவறுகளை நிறுத்திக் கொள்ளாமல் இன்னும் செய்துகொண்டே, அமெரிக்க ஆதிபத்தியத்தின் பக்கம் அணைப்பை நெருக்கியபடி, அரசியல் கைதிகளைத் தேர்தல் சமயத்திலும் விடுதலை செய்யாமல் சிறையில் போட்டு அடைத்தபடி, அறிவியக்கத்தின் நாடகங்கள், நூல்கள் மேலுள்ள தடைகளை நீக்காதபடி, எதிர்க் கட்சிகளின்மீது எடுத்துக்கொண்டுள்ள வழக்குகளை காலதாமதம் செய்து கஷ்டங்களை வாரியிறைத்தபடி, மழை பெய்துவிட்ட காரணத்தால் தென்னாட்டுக்கு இனிமேல் தேவையான உணவை அனுப்ப முடியாது

என்று கொடுமையான அறிக்கைகள் பறக்கவிட்டபடி, தவறுகளை மறந்துவிடுங்கள் என்று கெஞ்சுகிறார்கள். கண்ணீர் விடுகிறார்கள். கண்ணீரிலே நீலிக்கண்ணீர் என்று ஒரு வகையுண்டு! அதை அறியாதவர்களல்ல மக்கள்!

தவறுகளை எடுத்துச் சொல்பவர்கள்—அவைகளை மறந்து விடுங்கள் என்று சொல்லி ஆதரவுப் பிச்சை கேட்பவர்கள், இருதயத்திலே சொருகிய ஈட்டியை எடுக்காமலேயே இனியமொழி பேசுகிற இரக்கமற்றவனிடம் நம்பிக்கை வைக்கச் சொல்லுகிற இனத்தைச் சேர்ந்தவர்கள்!

தேர்தல் நேரத்தில் தென்றலாகவும், வெற்றிக்குப் பிறகு புயலாகவும் மாறிவிடப் போகிறவர்களை, இதுவரை மாறி இருந்தவர்களை நாம் அறியாமலில்லை. மக்கள் உணராமலில்லை. அந்த உணர்வைப் புது உபதேசங்களால் ஒழித்துவிட முடியாது! திருவாங்கூர் கொச்சி தேர்தல் முடிவுகள் இதைத்தான் எதிரொலிக்கின்றன.

காங்கிரசுக்கும், அதை எதிர்த்த எல்லாக் கட்சிகளுக்கும் கிடைத்த மொத்த ஓட்டுக்களை எண்ணிப் பார்க்கும் போது எதிர்க்கட்சிகள் பெருவாரியான ஓட்டுக்களைப் பெற்றிருக்கின்றன.

அது மட்டுமல்ல, காங்கிரசைவிட அதிகப்படியான ஸ்தானங்களை எதிர்க் கட்சிகள் கைப்பற்றி யிருக்கிறார்கள்.

எதிரிகள் பலராய் ஆகிவிட்ட காரணத்தால் காங்கிரஸ் சில இடங்களிலே வெற்றி முரசு கொட்டியிருக்கிறது ஆனால் நனைந்துபோன முரசின் ஒலியாகத்தான் அது இருக்கிறது.

எப்படியோ, அதேபோன்ற சூழ்நிலை தமிழகத்திலும் உருவாகிவிட்டது. காங்கிரசை எதிர்த்து ஒவ்வொரு இடத்திலும் பலர் போட்டியிடுகிறார்கள். காங்கிரஸ் குறைந்த ஓட்டுக்களிலேயே வெற்றி பெறக்கூடிய சூழ்நிலைதான் இது! ஆனாலும் இந்தச் சூழ்நிலை எப்படியோ அமைந்து விட்டது! கம்யூனிஸ்ட்களுக்கும் தி. மு. கழகத்திற்கும் தேர்தல் உறவு இல்லாமல் போய்விட்டதால், சில இடங்களில் நாம், கம்யூனிஸ்டு அபேட்சகர்களை எதிர்க்க வேண்டியவர்களானோம். கம்யூனிஸ்டுகளுக்கும் திராவிடர் கழகத்திற்கும் தேர்தல் உறவு இருந்துங்கூட திராவிடர் கழகம் கம்யூனிஸ்டுகளின் முக்கியஸ்தர்களான, மோகன் குமாரமங்கலம், கே. டி. ராஜு போன்றவர்களை எதிர்க்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

அண்ணாவின் அறிக்கை கூறுவதுபோல, திராவிட நாட்டுப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டதால் நாம் சில இடங்களில் கம்யூனிஸ்டுகளை எதிர்க்க வேண்டியிருக்கிறது.

திராவிடர் கழகம் வெற்றிக்கு வாய்ப்புள்ள இடங்களில் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து நிற்கிறது.

பொதுவாக இரண்டு முகாம்களும் காங்கிரசை ஒழிப்பதைத்தான் தேர்தல் திட்டமாகக் கொண்டபோதிலும் தி. மு. கழகம், அத்துடன் திராவிடநாட்டு பிரச்சினையையும் சேர்த்திருக்கிறது.

தி. மு. கழகம் ஆதரிக்கும் சில அபேட்சகர்களை திராவிட கழகமும் ஆதரிக்கிறது. அண்ணாவின் அறிக்கை இதை விளக்கிறது. ஆனால் திராவிடர் கழகம் ஒப்பந்தம் இல்லாமல் ஆதரிக்கிறது. அதே அபேட்சகர்களிடம் ஒப்பந்தம் பெற்று தி. மு. கழகம் ஆதரிக்கிறது.

தி. மு. கழகத்தின் ஒப்பந்தத்தால் ஏற்படுகிற புதிய நிலை—புதிய லாபம்—காங்கிரஸை ஒழிப்பது என்பது மட்டுமில்லாமல், திராவிட நாட்டு பிரச்சினையைச் சட்ட சபை மக்கள் சபைகளிலே குரல் எழுப்புவது என்றும் வளர்ந்திருக்கிறது.

திராவிடர் கழகம் இந்த ஒப்பந்தம் கேட்காவிட்டாலுங்கூட—அல்லது கேட்கத் தவறிவிட்டாலுங்கூட திராவிடர் கழகத்தின் குறிக்கோளாகவும் உள்ள திராவிட நாட்டுப் பிரச்சினையைத்தான் நாம் தேர்தல் அடிப்படைப் பிரச்சினையாக வைத்தோம்.

சட்ட சபைகளிலே—மக்கள் சபைகளிலே—நம் ஆதரவு பெற்றவர்கள், “திராவிடநாடு திராவிடருக்கே!” என்று முழங்கும் போது, தி. மு. கழகம், திராவிடர் கழகம் இரண்டுமே இதயம் பூரிக்கத்தான் போகின்றன.

அந்தப் பூரிப்பு ஏற்படாமல் செய்யத்தான் நேருவின் பாணியிலே தமிழ் நாட்டில் பலர் பேசுகிறார்கள்.

திராவிடம் பிரிவதற்கான அடிப்படை சூழ்நிலைகள் அமையக்கூடாது என்பதிலே அக்கரை செலுத்தும் பலர் “செய்ததை மறந்திடுக! செய்யப் போவதைப் பார்த்திடுக” என்று கூறுகிறார்கள். ஆசை காட்டுகிறார்கள்.

சூழ் நிலைகள் காரணமாக, காங்கிரசை எதிர்ப்போரின் ஓட்டுக்கள் பிரிந்து விடுமா, என்கின்ற சந்தேகத்திற்கு இடமில்லாமல் செய்ய, திராவிட மக்கள் மாட்டுப் பெட்டியில் ஒரு ஓட்டுக்கூடப் போடாமல் இருந்துவிடவேண்டும்.

அதிலே நூறு ஓட்டுவிழுந்தால்தானே எண்பதும், அறுபதும் பெற்ற இரண்டு அபேட்சகர்களை காங்கிரசு வெல்ல முடியும்.

ஆகையால் திராவிட மக்கள் நேருவும், அவர் தம் குரலுடையவரும் வடிக்கிற நீலிக்கண்ணீரிலே ஏமாந்து விடாமல், திராவிட நாட்டுப் பிரச்சினையை மறந்து விடாமல், திராவிடம் பிரிந்தால் தீமைகள் விலகும்! விலகும் என்பதை நெஞ்சிலே கொண்டு காங்கிரசை ஒழிக்க முனைய வேண்டுகிறோம்.

சிலப்பதிகார கோவலன் கேட்ட மன்னிப்பிலே தெளிவு இருந்தது. வாஞ்சை இருந்தது.

தேர்தல் கோவலன் கேட்கும் மன்னிப்பிலே தெளிவு இல்லை! வஞ்சகமும் மறைந்திருக்கிறது!

Assembly provenance

- scan 63 — publications/perumoochu/pages/0063-therthal-kovalan-1.md - scan 64 — publications/perumoochu/pages/0064-therthal-kovalan-2.md - scan 65 — publications/perumoochu/pages/0065-therthal-kovalan-3.md - scan 66 — publications/perumoochu/pages/0066-therthal-kovalan-4.md - scan 67 — publications/perumoochu/pages/0067-therthal-kovalan-5.md - scan 68 — publications/perumoochu/pages/0068-therthal-kovalan-6.md - scan 69 — publications/perumoochu/pages/0069-therthal-kovalan-7.md - scan 70 — publications/perumoochu/pages/0070-therthal-kovalan-8.md

P3 assembly audit

- source scans — 63–70 / 8/8 records - page-record coverage — 8/8 PASS - physical page boundaries — preserved with scan comments - omitted canonical P2 body text — 0 - added unsupported body text — 0 - modernization / paraphrase — 0 - unresolved assembly issues — 0 - result — P3 COMPLETE / PASS

P5 strict visual review

- every contributing physical source scan was closure-reconciled directly against source pixels in P5. - current article body reconstructed from current canonical page records and compared exactly — PASS. - unresolved P5 fidelity discrepancies — 0. - status — STRICT-REVIEWED / FROZEN.

கலைஞர் மு. கருணாநிதி · பெருமூச்சு. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்