கட்டுரை 5 / 13
பொது மக்களுக்குத் தனி எச்சரிக்கை
A Special Warning to the Public
அச்சுப் பக்கம் 22–34
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
திராவிட முன்னேற்றக் கழக மாநில மாநாட்டில் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற நமது முடிவை அறிவித்த பிறகு கம்யூனிஸ்ட் ஏடான 'ஜன சக்தி' அந்தத் தீர்மானம் மிக மிக ஏமாற்றத்தை அளிப்பதாகவும் காமராஜர்களும் சாமியப்பாக்களும் வெற்றி பெறச் செய்ய உதவுமென்றும் குறிப்பிட் டிருக்கிறது.
உண்மையில் சாமியப்பா வெற்றி பெற வேண்டுமென்று அதிகார பூர்வமாக உழைப்பவர்களிடம் கை குலுக்குகின்ற கம்யூனிஸ்டுகள் நம்மைப் பற்றி அபாண்டத்தைச் சுமத்துவது ஏனோ தெரியவில்லை!
நம் கழகத்தை 'உதிரிகள்' என்று கூறியவர்களிடம் சேர்ந்துகொண்டு, வெட்கத்தை விற்றுவிட்டு வாழ்வதற்கு நாம் ஒப்பவில்லை யென்றால் நாம் எதிரிகளின் வெற்றிக்கு ஆதரவு தருகிறோம் என்று கூறுவது மிக மிகத் தவறான பிரச்சாரமாகும்.
நம்முடைய நேசக்கரம் நீட்டப்பட்ட நேரத்திலே அதைத் தட்டிவிடும் முறையில் நம் அடிப்படைப் பிரச்சினையை அவமதித்துவிட்டு "தேர்தலுக்கு மட்டும்வா" என்று அழைத்துவிட்டு, இப்போது "தேர்தல் தேனைப்
பருக அல்ல" என்று குறிப்பிடுவதும் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைக்க அழைக்கவில்லை என்று சுட்டிக்காட்டுவதும் புரியாத புதிர்களாகவே இருக்கின்றன.
சாமியப்பா, தஞ்சை மாவட்டத்திலே கம்யூனிஸ்ட்டுகளுக்கு அழிவுதேடும் வேலையிலே அக்கரை எடுத்துக் கொண்டார். அவரை வெற்றி பெறும்படி விடுவது மகா கொடுமை என்றெல்லாம் மேடை அதிரப் பேசிவிட்டு, ஏடுகளிலே எழுத்தோவியங்களைத் தீட்டிவிட்டு, அவரை ஆதரித்து நிற்பவர்களின் கூட்டுறவிலே நிற்கும் செயலுக்கு என்ன பெயர் என்றே நமக்குப் புரியவில்லை.
ஒரு பக்கம் முதலாளி வீட்டு விருந்து, மறு பக்கம் தொழிலாளர் துயர் துடைக்கும் பிரசங்கம்! கம்யூனிஸ்டுகளின் வீரத்திற்கு — கொள்கைக்கு வேறுபட்ட செயலாயிற்றே இது! இத்தகைய அவலட்சணமான ஐக்கிய முன்னணிக்கா நாங்கள் அழைத்தோம்!
எங்கள் கூட்டுறவு இருந்தால், ஈரோட்டில் கே. டி. ராசுவை எதிர்க்க மாட்டோமே! சேலத்தில் மோகன் குமார் மங்கலத்தை ஒழிக்க முயல மாட்டோமே!
காஞ்சியில் நடைபெற்ற கூட்டமொன்றில் தோழர் ஜீவானந்தம் கூறினார்! "சாமியப்பாவுக்கு விட்டுக்
கொடுக்கும்படி பெரியார் கூறினார்! அந்தக் கொலைகாரப்பாவிக்கா விட்டுக் கொடுப்பது?" என்று!
ஜீவானந்தம் அகராதிப்படி கொலைகாரப்பாவிக்கு விட்டுக்கொடுக்கச் சொன்ன மனப்பான்மையோடு உறவாட முடிகிறது, கம்யூனிஸ்டுகளின் மனப்பான்மை! ஆனால் ஒழுங்கான—உறுதியான—மூளியற்ற ஐக்கிய முன்னணிக்கு நாம் அழைத்தோம்—அதற்கு ஒப்புதல் கூற முடியவில்லை கம்யூனிஸ்டுகளால்! ஒப்புதல் கூறாதது மட்டுமல்ல; நம் உயிர்ப் பிரச்சினையையே மறுக்கவும் தொடங்கிவிட்டார்கள்.
ஜனசக்தி, கம்யூனிஸ்ட்டுகளின் பத்திரிகையல்ல என்று கூறுகிறவர்களிடம் தொடர்பு வைத்துக் கொள்ள முடிகிறது! ஜனசக்திக்கு மதிப்பு தந்து அதன் சந்தேகங்களைப் போக்க முற்படுகிற, நேசம் விரும்புகிற நம்மை அணுகி வரவே அஞ்சிடுகிறார்கள்!
திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒரு ஸ்தாபனமாக ஒத்துக்கொள்ள மறுத்த, ஜனநாயகத்தைப் புரிந்து கொள்ளாதவர்களிடம் நேசம் வைத்துக்கொள்ளும் அளவுக்கு விளைவு ஏற்பட்டது கொள்கையில்! ஜனநாயகத்தில் இயங்குகிற ஒரு மாபெரும் சக்தியோடு நட்புவைத்துக்கொள்ள நடுக்கம் ஏற்படுகிறது!
திராவிட முன்னேற்றக் கழகம் கம்யூனிஸ்டுகளை ஆதரிக்க முடியாது என்று கூறவில்லை. ஆதரிக்க இயலாத சூழ்நிலையை கம்யூனிஸ்டுகளே உற்பத்தி செய்து கொண்டார்கள்! நம் பிரச்சினைக்கு ஒத்து வராதது மட்டுமல்ல—நம் பிரச்சினையே தவறு என்று கூறிவிட்டார்கள்!
மேடைகளிலே 'திராவிட நாடு நியாயமானது' என்று கூறியவர்கள் ஒப்பந்த ஏட்டிலே கை எழுத்திட ஏன் மறுத்தார்கள் என்பதுதான் சிந்திக்க வேண்டிய பிரச்னை!
ஏட்டிலே கை எழுத்துப் போட்டவர்களே மாறி விடுவார்கள் என்று ஆரூடம் கணிக்கும் போது, கை எழுத்துப் போடாமல் மேடையிலே மட்டும் பேசிக் கொண்டிருந்தவர்கள் மாறாமல் இருந்து விடுவார்கள் என்று எப்படி நம்புவது?
நாமென்ன கம்யூனிஸ்டுகளை ஆதரிப்பதாக ஒரு புறம் காட்டிக் கொண்டு, மறுபுறத்திலே கம்யூனிஸ்டுகளைக் காட்டி முதலாளிகளைப் பயமுறுத்தித் தேர்தல் வியாபாரம் நடத்துகிறவர்களா?
கம்யூனிஸ்டுகளுக்கு நாம் வலியுறுத்திக் கூற ஆசைப்படுகிறோம். விடு தலை (20-12-51) பொன் மொழியை அவர்களிடம் ஒரு முறை நினைவூட்டுகிறோம்.
விடுதலையின் பொன் மொழி அவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்! "உள்ளன்புடன் குலவுகிற மனைவியை அலட்சியமாகக் கருதிக் கொண்டு நடனமாடும் விலை மாதின் கண் வெட்டிலும் தளுக்குப் பேச்சிலும் மயங்கி அவளைத் துரத்திக் கொண்டு அலைகின்ற கணவனுக்கு என்றேனும் ஒரு நாள் நல்ல புத்தி வந்துதான் தீரும்."
திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கம்யூனிஸ்டுகள் பலஹீனமான கட்சி என்று கருதவில்லை யென்பது நமக்கு நன்றாகத் தெரியும். தலைவர்-பத்திரிக்கை ஆசிரியர்-சொற்பொழிவாளர்-கமிட்டி-செயலாளர், அறிக்கை விடுப்போர் ஆலோசனை சொல்பவர் பொருளாளர் எல்லாமே ஒருவராக இருந்து பல பல அவதாரங்களில் நடத்தப்படும் கட்சியல்ல தி. மு. கழகம் என்பதைக் கம்யூனிஸ்டுகள் நன்கறிவர்!
'பத்துப் பதினைந்து சிறுவர்கள்! பாவம்; நல்லவர்கள் " என்பதற்காகக் கம்யூனிஸ்டுகள் பிரியங்காட்ட வில்லை யென்பதும்—பத்துப் பதினைந்து சிறுவர்கள், பகைவரும் மலைக்கும் படியான—கிழவர்கள் வயிறு எரியும் படியான மாநாட்டை நடத்திக் காட்டினார்கள் என்ற அளவில் நமது சக்தியை அவர்கள் உணர்ந்துதானிருக்கிறார்கள்.
சென்னையைச் சுற்றி இரண்டு முன்று கூட்டங்கள் பிரமாத விளம்பரத்தில் நடைபெற்ற அந்த நாளிலே
கூட இரண்டு லட்சம் பேர் கூடிய மகா நாட்டை நடத்திக் காட்டுகின்ற அளவுக்கு மக்கள் உள்ளத்தில் குடியேறி விட்டவர்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியாததல்ல!
கம்யூனிஸ்டுகள் நம் சக்திக்கு மதிப்பு கொடுக்கிறார்கள்.
கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல; காங்கிரஸ்காரர்கள் கூட நம் சக்திக்கு மதிப்பளிக்கிற காரணத்தால்தான் ஓரளவுக்கு நம்மை இருட்டடிப்பு செய்யாமல் நம் செய்திகளைப் போட முன் வந்திருக்கிறார்கள்!
நம் செய்திகளைக் காங்கிரஸ் ஏடுகள் போடுவதால் நாம் காங்கிரசின் கங்காணிகள் என்று கூறுவது கடைந்தெடுத்த பொறாமைச் செயல்! கம்யூனிஸ்டு ஏடுகளும்தான் மாநாட்டுச் செய்தியைப் போட்டன. அதனால் நாம் கம்யூனிஸ்ட் கங்காணிகளா? சோஷலிஸ்ட் ஏடுகள் கூடத்தான் அதிக அளவில் போட்டன. அதனால் நாம் சோஷலிஸ்ட் கங்காணிகளா? தினத்தந்திக் கூடத்தான் போட்டது; அதனால் நாம் பிரஜா கட்சிக் கங்காணிகளா?
பெரியாருக்கு விவாகம் நடைபெற்றபோது மாதவ மேனன் போன்ற மந்திரிகள் ஆதரித்து பேசினார்கள்!
அதனால் பெரியார் மாதவமேனனின் தொடர்பு கொண்டவர் என்று கூறிவிட முடியுமா? ஓமந்தூராரை ஆதரித்துப் பெரியார் பேசாத மேடை கிடையாது! அதனால் பெரியார் காங்கிரஸ் கங்காணி யாகிவிட முடியுமா? ஏன்? கம்யூனிஸ்டுகளின் நிகழ்ச்சிகள், பேச்சுகளுக்கும் கூடத்தான் காங்கிரஸ் ஏடுகள் இடம் தருகின்றன. அதனால் கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் கங்காணிகளாகிவிட முடியுமா?
காளி கோயில் கட்டியுள்ள திரு ஆர். எஸ். சர்மா அவர்களை ஆதரிப்பது குற்றமல்ல என்று கூறப்படும் போது; அதற்கு ஆரியக் கங்காணி என்று பட்டம் சூட்டப் படாமலிருக்கும் போது; குற்ற மற்றவர்களை, கொள்கை தவறாதவர்களைக் கங்காணிகள் என்று கூறிடுவது எந்த 'நீதி தேவன்' தந்த அதிசயத் தீர்ப்போ என்று புரியவில்லை!
காங்கிரஸ் வெற்றிக்கு வழி தேடுவதாக இருக்கிறது நம் போக்கு என்று கூறிடுகிற தோழர்கள் நன்றாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
'திராவிட நாடு' என்ற இலட்சியத்தைப் பல ஆண்டுகளாகக் கூறி வந்திருக்கிறோம் நாம்!
தேர்தலிலே நிற்கப் போவதில்லை யென்பதையும் சேலத்திலிருந்து முழக்கி வந்திருக்கிறோம் நாம்! நியாயப்படி - நமக்கு இருக்கிற சக்திப்படி நாமே தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும். அந்த சூழ்நிலை அமையாத காரணத்தால் தேர்தலில் காங்கிரசை எதிர்ப்பவரை ஆதரிப்பது என்று முடிவு செய்தோம்.
அப்படி ஆதரிக்கப் படுகிறவர் நம் அடிப்படை பிரச்சனைக்காகச் சட்டசபையிலே வாதாடுகிறவராக இருக்கவேண்டும் என்று விரும்பினோம். நாமோ சட்ட சபையில் இல்லை! நம் குரலாவது சட்ட சபையில் கேட்கவேண்டும் என்று ஆசைப்படுவதிலே தவறுமில்லை! அர்த்தமில்லாமலுமில்லை!
சிறையிலேயிருந்து திரும்பி வந்த நம்பியார் சட்ட சபையிலே குன்றத்தூர் கொடுமைபற்றி கேட்டதாகத் தெரியவில்லை! நாரணமங்கலம் அடக்குமுறைபற்றி நாவசைக்க வில்லை! அண்ணாவும் பெரியாரும் சிறைப்பட்டது பற்றிக் கேள்வி கேட்டதாகக் கேள்விப்படவில்லை. அப்படிப் பட்டவர்களை சட்ட சபைக்கு அனுப்பும் போது ஆலோசித்து, உறுதிபெற்று, கையெழுத்து
பெற்று, நேசத்தை வலுப்படுத்தி, ஐக்கியத்தைப் பலப் படுத்தி ஆதரவு தருவது என்பதிலே என்ன தவறு இருக்க முடியும்!
தி. மு. கழகம் என்ன சர்வாதிகார ஸ்தாபனமா? அண்ணாதுரை சொல்லிவிட்டார்; அதுதான் தேவ வாக்கு என்று கூறிட! தி. மு. கழகத்திற்கு ஒரு பொதுக் குழு இருக்கிறது. அந்தப் பொதுக் குழுவிலே அரசியல் அனுபவம் பெற்ற ஆற்றல் நிறைந்த வீரர்கள் இருக்கிறார்கள். பத்து வயதுச் சிறுவன், பக்குவம் தெரியாப் பசலை என்ற ரீதியில் உள்ளவர்கள் அல்ல கட்சியின் கட்டுப்பாட்டை வளர்ப்பவர்கள்!
ஏதாவது ஒரு உத்தரவைப் போட்டுவிட்டு, பல மாதங்களுக்குப் பிறகு பேருக்கு ஒரு கமிட்டி போட்டு அந்த உத்தரவுக்கு முத்திரை போடும் முற்போக் கற்ற சர்வாதிகாரமல்ல தி. மு. கழகத்தை ஆட்டிப் படைப்பது! தி. மு. கழகம் ஜனநாயகத் தோட்டம்! அந்தத் தோட்டத்து இலட்சியப் புது மலர்கள், அதிலே பணியாற்றும் இளைஞர்கள்! அவர்கள் வெறும் தேர்தல் விரும்பிகள் அல்ல!
தேர்தலை இடைக்காலப் பிரச்சினையாக எண்ணுபவர்கள்!
"அய்யோ! நம் அடிப்படைத் திட்டமான பண நாயகக் கொள்கையைக் கெடுத்து விட்டார்களே பாபிகள்" என்று அலறுகிறவர்களுக்கு தி. மு. கழகத்தின் தேர்தல் திட்டம் பச்சை அயோக்கியத் தனமாக இருக்கலாம். அந்தப் பச்சை அயோக்கியத்தனம் என்ற பட்டம் பெற்றாலும் கவலையில்லை; கட்டிக் காத்த கண்ணியமான திட்டத்திலிருந்து மாறமாட்டோம் என்று உறுதி கூறிவிட்டது தி. மு. கழகம்!
அந்த உறுதிக்கு இணங்கி, ஒப்பந்த ஏட்டில் கையெழுத்திட்டவர்கள் சுமார், நூற்றியம்பது பேர். அவர்களிலே, மாவட்ட கமிட்டிகள் தகுதி, திறமை பார்த்துப் பொறுக்கி எடுக்கப் பட்டவர்கள் சுமார் எழுபது பேர்! அந்த எழுபது பேரும் இழந்த நம் நாட்டைப் பெறும் பணியிலே நம்மோடு ஒத்துழைக்கப் போகிறவர்கள்! அந்த எழுபது பேரை மட்டும் நம்பி திராவிட நாட்டுப் பிரச்சினையை அவர்களிடம் நாம் ஒப்புவித்து
விடவில்லை. அல்லது நம்மால் முடியாத ஒன்றை அவர்களிடம் கொடுத்து வெற்றி வாங்கித் தரும்படி கூறவில்லை!
"எம் ஒத்துழைப்பு வேண்டுமானால் உம் ஒத்துழைப்பை அளியுங்கள்" என்று கூறுவது எப்படி கோழைத் தனமாகும்? கம்யூனிஸ்டுகளைக் காட்டி, பணக்காரரை மிரட்டி, தேர்தல் வாணிபம் செய்வோர்கள் நம் செயலைப் பழிக்கலாம். பழிப்பவர்கள் சிந்திக்க வேண்டும், காங்கிரசை ஒழிக்க கம்யூனிஸ்டுகளின் தயவை நாடுவதும், சாமியப்பா, சர்மாக்களின் துணையைத் தேடுவதும் எந்தப் பட்டியலிலே இடம் பெறுகிற கோழைத்தனம் என்பதை!
கம்யூனிஸ்டு நண்பர்களிடத்திலே நமக்கு அளவற்ற மதிப்பு உண்டு! அவர்களின் தற்போதைய செயல்களால் மனமொடிந்த நிலையில் கடுமையான சில சொற்கள் வெளிவந்திருக்கலாம். அதை வைத்துக்கொண்டு கம்யூனிஸ்டுகளுக்கும் நமக்கும் பகை மூட்டிடக் கனவு காண்கிறார்கள் பலர்! கம்யூனிஸ்டு நண்பர்களும் கூறியிருக்கிறார்கள், நமது பொதுச் செயலாளரும் கூறியிருக்கிறார்; தேர்தலுக்குப் பிறகாவது உறவு நீடிக்க வழி காணுவோம் என்ற கருத்தமைந்த வார்த்தைகளை!
கம்யூனிஸ்டுகளின் தியாகத்தை நாம் பாராட்டியதைப்போல் கம்யூனிஸ்டுகள் கூட நம் தியாகத்தைப் பாராட்டியது கிடையாது! தியாகிகள் எந்தக் கூடாரத்திலே இருந்தாலும் அவர்களை நாம் பாராட்டியிருக்கிறோம். தேசீய இயக்கத்திலே தூக்கு மேடையை முத்தமிட்ட பகவத்சிங்கும், செக்கிழுத்த சிதம்பரமும், தில்லையாடி வள்ளியும், திருப்பூர் குமரனும், நம்மைவிட பெரியார் இராமசாமியால் அதிகம் பாராட்டப்பட் டிருக்கிறார்கள்.
ஆனால் அந்தத் தியாகிகள் வாழ்ந்த காங்கிரஸ் கூடாரத்தைக் கனல் கக்கிடும் வார்த்தைகளால் தாக்கிடப் பெரியார் தவறவில்லை. தியாகிகளைப் பாராட்டினார்! தீய கொள்கைகளை எதிர்த்துப் பேசினார்! தியாகிகள் இருக்கிறார்களே என்பதற்காகத் தித்திப்பு மொழி பேசவில்லை பெரியார்! தீ மொழிகள் வீசியிருக்கிறார்!
கம்யூனிஸ்டுகள் காங்கிரசை ஒழிப்பதை எப்படி பாராட்டுகிறாரோ, அப்படித்தான் காங்கிரசார் வெள்ளையனை விரட்டுகிறார்கள் என்பதை அண்ணா பாராட்டினார்! காங்கிரசை ஒழிப்பதற்காக கம்யூனிஸ்டைப் பாராட்டும் பெரியார், அடிப்படைப் பிரச்சினையான திராவிட நாட்டை மறந்துவிட்டார்!
வெள்ளையனை ஒழித்த காங்கிரசாரைப் பாராட்டிய அண்ணா, திராவிட நாட்டுப் பிரச்சினையை மறந்துவிட வில்லை! இதை நமது எதிர்ப்பாளர்கள், நம் சக்தியைக்கண்டு சங்கடப் படுவோர், நம் வளர்ச்சி கண்டு வயிறு எரிவோரின் வாய்ஜாலத்தில் மயங்கியுள்ள கம்யூனிஸ்டு நண்பர்கள் உணரவேண்டும்.
பொது மக்களும் இதுபோன்ற கபட நாடகப் பேச்சில் கவனத்தைச் செலுத்தாமல் காங்கிரசை ஒழிப்பதைக் கருத்தில் கொண்டு, அதே சமயம் திராவிட நாட்டுப் பிரச்சினைக்கு ஆதரவு தருவதாக உறுதி கூறிய அபேட்சகர்களைத் தேர்தலில் ஆதரிக்கும்படியாகக் கேட்டுக் கொள்கிறோம்.
வாழ்க உண்மையான பொதுவுடமை! வாழ்க உண்மையான நேர்மை! வாழ்க புனிதமான பொதுஜன சேவை! வீழ்க வீண் பித்தலாட்டம்!
Assembly provenance
- scan 24 — publications/perumoochu/pages/0024-podhu-makkalukku-thani-echarikkai-1.md
- scan 25 — publications/perumoochu/pages/0025-podhu-makkalukku-thani-echarikkai-2.md
- scan 26 — publications/perumoochu/pages/0026-podhu-makkalukku-thani-echarikkai-3.md
- scan 27 — publications/perumoochu/pages/0027-podhu-makkalukku-thani-echarikkai-4.md
- scan 28 — publications/perumoochu/pages/0028-podhu-makkalukku-thani-echarikkai-5.md
- scan 29 — publications/perumoochu/pages/0029-podhu-makkalukku-thani-echarikkai-6.md
- scan 30 — publications/perumoochu/pages/0030-podhu-makkalukku-thani-echarikkai-7.md
- scan 31 — publications/perumoochu/pages/0031-podhu-makkalukku-thani-echarikkai-8.md
- scan 32 — publications/perumoochu/pages/0032-podhu-makkalukku-thani-echarikkai-9.md
- scan 33 — publications/perumoochu/pages/0033-podhu-makkalukku-thani-echarikkai-10.md
- scan 34 — publications/perumoochu/pages/0034-podhu-makkalukku-thani-echarikkai-11.md
- scan 35 — publications/perumoochu/pages/0035-podhu-makkalukku-thani-echarikkai-12.md
- scan 36 — publications/perumoochu/pages/0036-podhu-makkalukku-thani-echarikkai-13.md
P3 assembly audit
- source scans — 24–36 / 13/13 records - page-record coverage — 13/13 PASS - P2 physical-boundary repair authority — ebe8b2146eef22ac203f8014367cb78dea2d4b76 - physical page boundaries — preserved with scan comments - omitted canonical P2 body text — 0 - added unsupported body text — 0 - modernization / paraphrase — 0 - unresolved assembly issues — 0 - result — P3 COMPLETE / PASS
P5 strict visual review
- every contributing physical source scan was directly rechecked in P5. - current article body was reconstructed from current canonical page records and compared exactly — PASS. - unresolved P5 fidelity discrepancies — 0. - status — STRICT-REVIEWED / FROZEN.
கலைஞர் மு. கருணாநிதி · பெருமூச்சு. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்