பொருளடக்கம்

4. வாபஸ் வீரர்கள்!

கட்டுரை 4 / 13

வாபஸ் வீரர்கள்!

Heroes of Retreat!

அச்சுப் பக்கம் 19–21

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

வீராதி வீரர்கள் விரண்டோடினர். நாட்டையாளும் அமைச்சர் நாலுகால் பாய்ச்சலில் ஓடினர். சுட்டு விரல் அசைந்தால் சுட்டுத் தள்ளும் ராணுவப் படை கொண்டவர்கள் ஓடினார்கள். ரதகஜதுரக பதாதிகள் படைத்தவர்கள் பதறி ஓடினார்கள். யாரைக்கண்டு?

எதிரி நாட்டுப் படை வீரர்களைக் கண்டா? பிரிட்டனின் போர் முரசு கேட்டா? அமெரிக்கரின் அணிவகுப்பைப் பார்த்தா? ரஷ்யப் பட்டாளம் வருவதாகச் செவியுற்றா? இல்லை.... இல்லை........ஒரு கோமாளியைக் கண்டு ஓட்டமெடுத்தார்கள்;

(மன்னிக்கவும்........கோமாளி என்பது கலைவாணர் கிருஷ்ணனுக்குக் காமராசர் அளித்த வசவுப் பதக்கம்.)

ஸ்ரீ வில்லி புத்தூரிலே மந்திரிகள் கலந்து கொள்ளும் மகாநாடு!

ஆமாம் புண்ணிய பூமியிலே பிறந்து அன்னை பாரத மாதாவின் அருள் பெற்று அந்தராத்மா தந்த வரத்தின் மகிமையால் நினைத்ததைச் சாதிக்கும் வல்லமை பெற்று (நினைத்ததை சாதிக்கும் வல்லமை யென்பது பிள்ளை வியாபாரம் நடத்தச் சொன்னது—பிணமலை குவித்தது) மந்திரி பீடத்திலே அமர்ந்திருக்கும் மந்திரிமார் மகா பெரிய மகான்கள்......ரஷ்யா சென்று வந்த பாவியின் முகத்தைப் பார்ப்பது கூட தோஷம் என்று கருதி பின்னங்கால் பிடரியில் இடிபட பாய்ச்சல் நடத்தி யிருக்கிறார்கள்.

கோலோச்சிடும் கோமான்கள் கோமாளியின் குரலுக்கு நடுங்கி யிருக்கிறார்கள். ஸ்ரீ வில்லிபுத்தூர், காமராசர் போட்டியிடும் தொகுதி! அந்த இடத்திலே தாழ்த்தப் பட்டவர்கள் மகாநாடு நடத்திட விரும்பி யிருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்காக உழைப்பதாகத் தலைவெடிக்க அலறியவர்கள், தர்பார் சூரர்களை அவமானப் படுத்திவிட்டு ஓடியிருக்கிறார்கள். ரஷ்யாவைப் பார்த்துவிட்டு வந்தவர்—ரஷ்யாவில் குலுங்கும் இன்பங்களைத் தாழ்த்தப் பட்டவரிடம் எடுத்துக் கூறினால்......அத்தனை தாழ்த்தப்பட்டவர்களும் உடனே, அங்குள்ள பஞ்ச! மந்திரிகளைப் பார்த்து, “பாராள வந்தவரே! கேளுமய்யா ரஷ்யாவின் குதூகலத்தை!” என்று உரக்கக் கூவினால், என்ன செய்வது என்று பயந்து கொண்டுதான் ஓடி யிருக்கிறார்கள்.

சுற்றிலும் ராணுவம்—கையிலே ஆட்சிக் கோல்.... சுழலும் துப்பாக்கி — இத்தனைச் சாதனங்களும் அமைந்த நாட்டின் அரசர் (குமாரசாமி ராஜா) நகைச் சுவையரசுக்குப் பயந்து ஒளிந்திருக்கிறார்!

இந்த பயம் வாழ்க! இந்த 'ஓட்டம்' யுத்த பாஷைப்படி வெற்றிகரமான வாபசாயிருக்கலாம். இந்த 'வாபஸ்' வாழ்க!

Assembly provenance

- scan 21 — publications/perumoochu/pages/0021-vaapas-veerargal-1.md - scan 22 — publications/perumoochu/pages/0022-vaapas-veerargal-2.md - scan 23 — publications/perumoochu/pages/0023-vaapas-veerargal-3.md

P3 assembly audit

- source scans — 21–23 / 3/3 records - page-record coverage — 3/3 PASS - physical page boundaries — preserved with scan comments - omitted canonical P2 body text — 0 - added unsupported body text — 0 - modernization / paraphrase — 0 - unresolved assembly issues — 0 - result — P3 COMPLETE / PASS

P5 strict visual review

- every contributing physical source scan was directly rechecked in P5. - current article body was reconstructed from current canonical page records and compared exactly — PASS. - unresolved P5 fidelity discrepancies — 0. - status — STRICT-REVIEWED / FROZEN.

கலைஞர் மு. கருணாநிதி · பெருமூச்சு. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்