பொருளடக்கம்

7. “அஹிம்சா விலாசம்”

கட்டுரை 7 / 13

“அஹிம்சா விலாசம்”

“Ahimsa Vilasam”

அச்சுப் பக்கம் 39–46

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

திராவிட சமதர்மக் குடியரசு நாட்டின் தென் மேற்கு மண்டலமாக அங்கம் வகிக்க இருக்கும் திருவிதாங்கூர் கொச்சிப் பகுதி காங்கிரஸ் ஆட்சிக்குச் சவக்குழி வெட்டும், தேவையான காரியத்தைத் திறமையுடன் செய்திருக்கிறது. தினந் தினம் வரும் தேனான சேதிகள் இந்தத் தித்திப்பான விஷயத்தைதான், விளக்குகிறது. "அஹிம்சா விலாசம்" மாளிகையை மடமடவெனத் தரை மட்டமாக்கும் திருப்பணியின் ஆரம்ப அத்தியாயம் கேரளத்தில் துவக்கப்பட்டு விட்டது.

இன்னும் சில தினங்களில் தமிழ் நாட்டு மக்கள் ஓட்டுச் சாவடிகளுக்குச் செல்ல இருக்கிறார்கள். எதேச்சாதிகார, அக்கிரம அடக்குமுறைக் காங்கிரசுக்கு தமிழ் மக்கள் என்ன தீர்ப்பை அளிக்க இருக்கிறார்கள் என்பதை நாம் மிக நன்றாக அறிவோம். காங்கிரஸ் மீண்டும் ஆட்சிப் பீடம் ஏறக்கூடாது என்பதற்கு ஒன்றல்ல, ஓராயிரம் காரணங்களை நமது எழுத்தில், பேச்சில் எடுத்துரைத் திருக்கிறோம்.

தமிழ் மக்கள், காங்கிரஸ் ஆட்சியை ஒழிப்பதிலே, தங்கள் சகோதரர்களாகிய கேரளத்தாருக்கு இளைத்தவரல்ல என்ற பேருண்மையை நிரூபித்தாக வேண்டிய பொறுப்பு ஏற்பட் டிருக்கிறது.

டில்லி பார்லிமெண்டுக்கு தென் சென்னைத் தொகுதிக்குக் காங்கிரஸ் சார்பிலே நிறுத்தப்பட் டிருப்பவர் தோழர் டி. டி. கிருஷ்ணமாச்சாரியார், அவர்கள். முதலாளித்வம், பிற்போக்குத் தன்மை வைதிகம் ஆகியவைகளின் பாதுகாவலான காங்கிரஸ் டி. டி. கிருஷ்ணமாச்சாரியை தனது அபேட்சகராய் நிறுத்தி யிருப்பதைக் கண்டு யாரும் ஆச்சரியப்பட மாட்டார்கள் என்றே கருதுகிறோம்.

நம்முடைய ஆச்சரியமெல்லாம், திராவிடத்தின் தலை நகராகிய சென்னையிலே இப்படிப்பட்ட பண மூட்டைகளையும் பரம்பரைப் பண்பை விட்டுக் கொடுக்காமல் திராவிடச் சமுதாயத்தைத் தங்கள் பாதத்தின் கீழ் மிதித்துத் துவைத்து நசுக்கிவரும் படாடோபக்காரரை மக்களின் பிரதி நிதியாக ஆக்க வேண்டுமென காங்கிரஸ் இன்னும் கனவு காண்கிறதே என்பதுதான். தென் சென்னைத் திராவிட வாக்காளருக்குக் காங்கிரஸ் விடுத்திருக்கும் அறைகூவல், சவாலே டி. டி. கிருஷ்ணமாச்சாரியை நிறுத்தியிருப்பது என்பதை வலியுறுத்திச் சொல்ல ஆசைப்படுகிறோம்.

சென்னையிலேயுள்ள பெரும் முதலாளிகளின் பட்டியலிலே முதல் வரிசையிலே இடம் பெறும் டி.டி. கிருஷ்ணமாச்சாரி அவர்களின் அரசியல் வாழ்வை அவ்வளவு எளிதில் மறந்துவிடும் ஏமாளிகளல்ல சென்னை வாசிகள்.

1936-ம் ஆண்டு, எந்தக் காங்கிரஸ் சார்பாக டி. டி. கே. நிற்கிறாரோ அதே காங்கிரசை வர்த்தகர் சபையின் சார்பிலே தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்டதும் அரசியல் நிர்ணய சபைக்குக் கொல்லை வழியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், அரசியல் திட்ட நிலை அமைப்புக் குழுவில் உறுப்பினரானதும், திராவிட மக்களின் ஜீவாதார உரிமைகளைப் பறிக்கும் அடிமைச் சாசனத்தைத் தயாரிக்கும் சத்காரியத்தில் அவர் கொண்ட பங்கும் திராவிடர்களின் உள்ளத்தி லிருந்து மறைந்து விடவில்லை.

கம்யூனல் ஜி. ஓ. என்ற வகுப்புவாரி உத்தரவு திராவிட மாணவர்களுக்கும் உத்தியோகத் துறையிலும் செய்துவந்த பேருபகாரத்தை நன்றியுள்ள திராவிடன் எவனும் மறக்க மாட்டான். அத்தகைய வகுப்புவாரி உத்தரவை இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், அரசியல் சட்டத்திற்கு, தி. மு. க. வின் தலைமையில், தமிழகத்தில் சண்டமாருத

மென எழுந்த எதிர்ப்பும் திராவிட மாணவர்கள் போர்ப்பரணியும், அதன் பயனாய் அரசியல் சட்டம் திருத்தப்பட்டதும் சமீப கால நிகழ்ச்சிகள்.

அத்தகைய கேடுடைய அரசியல் சட்டத்தின் சிருஷ்டி கர்த்தாக்களில் ஒருவர்தான் டி. டி. கிருஷ்ணமாச்சாரி, அவர்தான் "மாட்டுப் பெட்டியுடன்" மக்கள் முன் வந்திருக்கிறார், ஓட்டுப் போடுங்கள் என்று சொல்லிக் கொண்டு.

எந்த இந்தி மொழிகூடாது என்பதற்காக ஆயிரக்கணக்கான தோழர்கள், தாய்மார்கள் பச்சிளங் குழந்தைகள் சிறைச்சாலையை மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எனக் கருதினார்களோ, எந்த இந்தி கூடாது என்பதற்காகத் திராவிட வாலிபர்கள் இரத்தம் சிந்தினரோ, தடியடியையும் தியாகத் தழும்புகளையும் ஏற்றுக் கொண்டனரோ; எந்த இந்தி தாலமுத்து — நடராசன் எனும் திராவிடச் செல்வங்களைப் பிணமாக்கிக் கொடுத்ததோ, எந்த இந்தி அண்ணாவையும் பெரியாரையும், பெல்லாரிச் சிறையிலும் சென்னைச் சிறையிலும் போட்டுச் சீரழித்ததோ, எந்த இந்தி தனபாக்கியம் என்ற பூர்ண கர்ப்பவதியை, மறியல் செய்த குற்றத்திற்காக, திக்குத் திசை தெரியாத கானகத்திலே போலீஸ் லாரியிலிருந்து இறக்கி விட்டதோ, அந்த இந்தி பதினைந்து ஆண்டுகளில் தமிழ் நாட்டின் தேசிய மொழியாக வேண்டும்; தமிழரே! இந்தி படியுங்கள் என்ற போதனை

யோடு மக்கள் முன்னால் திக்விஜயம் செய்திருக்கிறார் டி. டி. கே.

திராவிடர்கள் தங்கள் கலாச்சாரத்தின் பெருமையை மறக்காதிருக்கும் இந்நாளில், திராவிட மொழிக்காகத் தங்கள் உயிரைக் காணிக்கையாக்க ஆயிரம் ஆயிரம் கட்டிளைஞர் காத்துக் கிடக்கும் நமது நாட்களிலே டி. டி. கே. பேசுகிறார், இந்தி படியுங்கள் என்று. திராவிடரைப் பற்றி எவ்வளவு தவறாக நினைத்திருந்தால் அவர் அப்படிக் கூற முடியும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

"மாட்டையும் ஆட்டையும் ஓட்டிக்கொண்டு கங்கைச் சம வெளியிலே இரண்டாயிரம் வருடத்திற்கு முன் புகுந்தவரின் கமண்டலத்திற்கும் ஜெபமாலைக்கும் அடிமையானான் திராவிடன்!" அந்த அடிமை விலங்கை உடைத்தெறியும் புனிதப் போரிலே ஈடுபட்டிருக்கும் வேதனை நிறைந்த திராவிடரை, அந்த வம்சத்தின் இருபதாம் நூற்றாண்டுப் பிரதி நிதி டி. டி. கே. மாட்டை ஓட்டிக்கொண்டு வந்து உங்கள் பயிர் நிலத்தை மீண்டும் ஐந்தாண்டுக்குக் குத்தகைக்குத் தாருங்கள் என்று தைரியமாக, ஆணவமாகக் கேட்க வந்திருக்கிறார்.

சென்னைத் திராவிட மக்களை எவ்வளவு சத்தற்ற ஜன்மங்கள், சொரணை கெட்டவர்கள் என்று நினைத்திருந்தால் அவருக்கு அவ்வளவு தைரியம் வந்திருக்கும் என்பதை யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம். அவருக்கு 'நல்ல பாடம்' கற்பிக்கும் வாய்ப்பு சென்னைத் திராவிட மக்களுக்கு ஏற்பட்டிருப்பது பெருமைக் குரியதாகும்.

அவரை எதிர்த்துப் போட்டியிடுபவர் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவு பெற்ற 'சண்டே அப்சர்வர்' ஆசிரியர் தோழர் பி. பாலசுப்பிரமணியம் அவர்கள். திராவிட முன்னேற்றக் கழக உறுதி மொழிப் பத்திரத்திலே கையொப்பம் இட்டிருப்பவர் மாத்திரமல்ல; திராவிடநாடு பிரச்னை உருவும் திருவும் பெறாது கருவாக இருந்த நேரத்திலே அதைக்கட்டிக் காத்து வளர்த்த தளபதி அவர். திராவிடநாடு பிரச்னை புதிராக இருந்த நேரத்தில் சளைக்காது உழைத்த அவரது சண்டே அப்சர்வர் பத்திரிகை லண்டனுக்கும், பாரிசுக்கும், வாஷிங்டனுக்கும், மாஸ்கோவிற்கும், பீகாங்கிற்கும் நமது இலட்சியக் கீதத்தை அறிமுகப்படுத்தியது. கடந்த இந்தி எதிர்ப்புப் போரிலே அவர் ஆற்றிய அளவற்ற தொண்டை நாடு அறியும்.

நவீன சாணக்கியர், குல்லுகப்பட்டர், இந்திய மாக்கிய வல்லி என்றெல்லாம் சொல்லப்படுகிற ஆச்சாரியார் தொடுத்த அவதூறு வழக்கிலே நீதி மன்றத்தில் தன்னந் தனியாக நின்று வக்கீலில்லாமல் சொந்த வாதத் திறமையால் அவர் வெற்றிக் கொடி நாட்டியது இன்று சட்டப் புத்தகங்களிலே இலக்கியமாக மட்டுமல்ல திராவிட அறிவாற்றலின் கீர்த்திக்கோர் கிரீடமாக அமைந்திருக்கிறது. ஆங்கில அறிவு அவ்வளவு வாதத்திறமை படைத்த வீரரின் குரல் டெல்லி பாராளு மன்றத்திலே ஒலிக்க வேண்டும். கரடு முரடுமான ஆனால் கணீரென்ற அவரது குரல் முழக்கம், டில்லி ஆதிக்க வெறியர்களின் காதுகளிலே நடுக்கத்தைக் கொடுக்க வேண்டும். "பாரீர் திராவிடத்தின் அருமையை, காணீர் திராவிடரின் இன எழுச்சியை" என்று நாம் கூறக் கேட்டு டெல்லி அலற வேண்டும். அந்த நல்ல வாய்ப்பை, சந்தர்ப்பத்தைத் தென் சென்னைத் திராவிட வாக்காளர்கள் பெற்றிருக்கிறார்கள்.

தென் சென்னை திராவிட வாக்காளர்களே! தோழர் பி. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு நீங்கள்

போடும் ஒவ்வொரு ஓட்டும் திராவிடத்தின் சார்பில் டில்லிக்கு நீங்கள் அனுப்பும் தூதர்கள். காங்கிரசு மாளிகை சரியவேண்டும் என்பதற்கு நீங்கள் வைக்கும் வெடிகுண்டுகள்.

ஆகவே, திராவிடத் தனியரசிலே உங்களுக்கு நம்பிக்கை யிருப்பது உண்மையானால் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட நீங்கள் அண்ணாவின் தலைமையிலே மாநில மாநாட்டிலே திராவிட நாடு பெற்றே தீருவோம் என்று எடுத்துக்கொண்ட பிரதிக்ஞை உண்மையானால்—ஜனநாயகத்தில் உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை உண்மையானால் ஏழைகளின் தோழன், பாட்டாளியின் நண்பன், திராவிடத் தீரன் தோழர் பி. பாலசுப்பிரமணியத்திற்கு உங்கள் வாக்குகளைக் கொடுத்து வெற்றி பெறச் செய்யுங்கள் அவரின் வெற்றி உங்கள் வெற்றி திராவிடத்தின் வெற்றி.

Assembly provenance

- scan 41 — publications/perumoochu/pages/0041-ahimsa-vilasam-1.md - scan 42 — publications/perumoochu/pages/0042-ahimsa-vilasam-2.md - scan 43 — publications/perumoochu/pages/0043-ahimsa-vilasam-3.md - scan 44 — publications/perumoochu/pages/0044-ahimsa-vilasam-4.md - scan 45 — publications/perumoochu/pages/0045-ahimsa-vilasam-5.md - scan 46 — publications/perumoochu/pages/0046-ahimsa-vilasam-6.md - scan 47 — publications/perumoochu/pages/0047-ahimsa-vilasam-7.md - scan 48 — publications/perumoochu/pages/0048-ahimsa-vilasam-8.md

P3 assembly audit

- source scans — 41–48 / 8/8 records - page-record coverage — 8/8 PASS - P2 physical-boundary repair authority — ebe8b2146eef22ac203f8014367cb78dea2d4b76 - physical page boundaries — preserved with scan comments - omitted canonical P2 body text — 0 - added unsupported body text — 0 - modernization / paraphrase — 0 - unresolved assembly issues — 0 - result — P3 COMPLETE / PASS

P5 strict visual review

- every contributing physical source scan was directly rechecked in P5. - current article body was reconstructed from current canonical page records and compared exactly — PASS. - unresolved P5 fidelity discrepancies — 0. - status — STRICT-REVIEWED / FROZEN.

கலைஞர் மு. கருணாநிதி · பெருமூச்சு. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்