பொருளடக்கம்

8. திண்டிவனம் தீரர்காள்!

கட்டுரை 8 / 13

திண்டிவனம் தீரர்காள்!

O Heroes of Tindivanam!

அச்சுப் பக்கம் 47–50

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

திராவிடத் தனியரசு பெறுவதற்கான நம் போராட்டத்திலே குறுக்கே வந்து கொடி நாட்டப் பார்க்கிறார் கோயங்கா! வட நாட்டுச் சீமான், வட்டிக்கடை வைத்து வண்டமிழ் நாட்டை வறண்ட நாடாக்கிய வஞ்சகர்களின் பிரதி நிதி; தமிழரின் தாள் பிடித்துக் கிடந்த நிலை போய், தமிழரிடம் தாள் படித்துத் தமிழரைத் தாழ்வுறச் செய்யும் வர்க்கத்தின் தூதுவர், திராவிடத்திலே திராவிட மறவர் திண்டோள் தேய்ந்து விடாமல் இருக்கிற நேரத்திலே திண்டிவனம் பகுதியிலே திருக்குறள் முனுசாமியை எதிர்த்துப் போட்டி முழக்கம் செய்து வருகிறார்!

சிங்கத்தின் குகையிலே சிறு நரிகள் செங்கோல் செலுத்திடக் காணுகிறோம் அந்தக் கோழைத் தனம் மறைவதற்கான முயற்சியிலே தீரத் திராவிடர் பலர் பணிபுரிந்திடும் காலத்திலே கோயங்கா பிரவேசித்திருக்கிறார்.

தினமணி மூலம் திராவிடத்தைத் தேய்த்திடும் திராவிடத்தின் நிரந்தரப் பகைவர்களின் தளபதிகளிலே ஒருவர் திண்டிவனத்திலே வெற்றி முரசம் கொட்ட, வீர விருத்தம் பாடமுனைகிறார் என்றால் இதைவிடப் பெரியதொரு சோதனைக்காலம் வீரர்களுக்கு வரவேண்டிய தில்லை?

திராவிடரை இழித்துப் பேசிய வட நாட்டார் கனக விசயர்கள் தலையிலே கல்லேற்றி இழுத்து வந்தான் பழைய நாள் தீரன்! அந்த கனக விசயர் பரம்பரை, திராவிடத்தை நோக்கி வருகிறது, சேரன் பரம்பரையைத் தோற்கடிக்க.

சொந்தப் பத்திரிகை பலம்! சுற்றிச் சுற்றி வேலை செய்யும் பத்திரிகை உத்தியோகஸ்தர்களின் பிரச்சாரம்! அந்தப் பிரச்சாரர்களைச் சந்தேகித்து அவர் பின்னே மறைந்து மறைந்து வேவு பார்த்து வேலை செய்யும் மார்வாரிகள்! இப்படி நடக்கிறது தேர்தல் போர் திண்டிவனத்திலே!

திண்டிவனம் தொகுதியிலே இருப்பவர்கள், ஏமாளிகள் அல்ல! "எலிகள் புசிக்க எல்லாம் கொடுத்தே சிங்க ஏறுகள் தூங்கிடுமோ?" என்ற புரட்சிக் கீதத்தை மறந்து விட்டவர்கள் அல்ல!

கோயங்காவுக்கு போடுகின்ற ஒவ்வொரு ஓட்டும், திராவிடர் வாழ்வுக்குத் தரப்படுகிற அதிர்வேட்டு என்பதைத் திண்டிவனம் தொகுதி மறந்துவிடக் கூடாது!

ஆலை அரசர்கள் வடநாட்டிலே! அரசியல் தலைமை வடநாட்டிலே, ஆட்சிக்கோல் வடநாட்டிலே! இவ்வளவு பிடியையும் வைத்துக்கொண் டிருக்கிற வடநாடு, செக்கிழுத்த தேசீய சிதம்பரத்திற்கு மதிப்புத் தராத வடநாடு, திருப்பூர் குமரனை நினைத்தும் பார்க்காத வடநாடு, தில்லையாடி வள்ளியம்மாளுக்கு புகழ் பாடாத வடநாடு, தென்னாட்டைச் சுரண்டிடும் வடநாடு, திராவிடத்தை மிதித்து வாழும் வடநாடு, திராவிடத்திலேயே அபேட்சகரையும் நிறுத்தி வைத்து, திராவிடத்தின் ஏமாளித்தனத்தை எடை போட்டுப் பார்க்கத் தீர்மானித்துவிட்டது!

திருக்குறள் முனிசாமி, தி. மு. கழகத்தின் ஆதரவு பெற்றவர். திராவிடத் தனியரசுப் பிரச்சினையிலே அக்கரை கொண்டவர்! அவருடைய வெற்றி திராவிட நாட்டுப் பிரச்சினையின் வெற்றி! தி. மு. கழக மதுரை தீர்மானத்தின் வெற்றி!

கோயாங்கா வீழ்ந்தால் திண்டிவனம் தொகுதி திராவிடம் உள்ளளவும் 'தீரர்கள் சோலை' என்ற திருப்பெயரைப் பெறும்! கோயாங்கா வெற்றி பெற்றால் திண்டிவனத்திலே, விபீஷணர்கள் திரிகிறார்கள் என்ற அவச் சொல்லுக்கு ஆளாகும்!

திண்டிவனம் தொகுதி வாக்காளர்களே! உங்கள் ஆதரவு, திராவிடப் பிரச்னையை ஆதரிக்கும் திருக்குறள் முனிசாமிக்கா? வடநாட்டு ஏகாதிபத்தியப் பெருச்சாளி கோயாங்காவுக்கா? திண்டிவனம் தொகுதி வாக்காளர்களே! உங்கள் ஆதரவு சேரன் செங்குட்டுவன் பரம்பரைக்கா? களங்கமூட்டவரும் கனக விசயன் வம்சத்திற்கா?

சுயமரியாதை இரத்தம் சுழன்றோடிடும் சுத்தத் திராவிடரே! சொல்லுங்கள் பதில்! சூழ்ச்சிக்கார வடநாட்டைச் சோர்வுறச் செய்யுங்கள்! வாழ்க திராவிட மானம்!

Assembly provenance

- scan 49 — publications/perumoochu/pages/0049-thindivanam-theerargaal-1.md - scan 50 — publications/perumoochu/pages/0050-thindivanam-theerargaal-2.md - scan 51 — publications/perumoochu/pages/0051-thindivanam-theerargaal-3.md - scan 52 — publications/perumoochu/pages/0052-thindivanam-theerargaal-4.md

P3 assembly audit

- source scans — 49–52 / 4/4 records - page-record coverage — 4/4 PASS - P2 physical-boundary repair authority — ebe8b2146eef22ac203f8014367cb78dea2d4b76 - physical page boundaries — preserved with scan comments - omitted canonical P2 body text — 0 - added unsupported body text — 0 - modernization / paraphrase — 0 - unresolved assembly issues — 0 - result — P3 COMPLETE / PASS

P5 strict visual review

- every contributing physical source scan was directly rechecked in P5. - current article body was reconstructed from current canonical page records and compared exactly — PASS. - unresolved P5 fidelity discrepancies — 0. - status — STRICT-REVIEWED / FROZEN.

கலைஞர் மு. கருணாநிதி · பெருமூச்சு. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்