கட்டுரை 21 / 26
யாழ்
Yaazh
அச்சுப் பக்கம் 95–95
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
“மருங்கு வண்டு சிறந்தார்ப்ப, மணிப்பூ ஆடை அதுபோர்த்துக், கருங்கயற் கண் விழித்தொல்கி நடந்தாய், வாழி காவேரி!”
கானல் வரிப் பாடல்தன்னைக் கரும்பனைய சுவையேற்றித் தருபவளின் கரத்தினிலே இருப்பதுதான் யாழோ; அன்றி இதழிடை ஒலிப்பதுதான் யாழோ என அயர்ந்திருந்தான் அழகுரும்பி. உயர்ந்து நிற்கும் மாபகத்தின் குறுக்கே சாய்த்த எழில் யாழின் இருமுனையும் இணையாய் இல்லையென அவன் கண்கள் தீர்ப்புக் கூறித் திருமகளாம் தேன்மொழியின் தேகக் கட்டை வியந்து நோக்கும். அவளே யாழ்! அவள் உருவே யாழ்! அவள் மொழியே யாழ்!
அழகுரும்பி, மதி மயக்கம் கொண்டவனாய் அவள் எதிரே அசைவற்று அமர்ந்திருந்தான். திசையெட்டும் இவள் போலத் தேன் தமிழைப் பாடுதற்கும், யாழ் நரம்பை மீட்டுதற்கும் இதுவரையில் பிறக்கவில்லை யெனப் பேசி மகிழ்ந்தது இசை அரங்கம்.
“யாழின் நரம்புகளில் எத்தனையோ உணர்ச்சிகளைக் கிளப்புகின்ற இவள் விரல்கள், இதய நரம்புகளில் பட்டுவிட்டால் இன்பக் கதைகள் கோடி கோடி கேட்கலாமே! இறைவா! நின் அருளால் இன்மொழியாள் எந்தனுக்குக் கிட்ட வேண்டும்!” எனத் துடித்தான் அழகுரும்பி.
யாழோசை நின்ற பின்னர் இந்த உலகத்தில் இருப்பதை நினைத்துக் கொண்ட மாமன்ற இசை வாணரெல்லாம் இல்லம் ஏக, வெல்லத்தை மொய்த்து விட்ட எறும்பு போல அழகுரும்பி அவள் பின்னே நடக்கலானான்.
உயிர் பெற்ற ஓவியமோ - உலகு பெற்ற பெரும் பேறோ - ஒப்பற்ற அழகினாலே உயிர் வாங்கி நடக்கின்றாளே; எனப் பெருமூச்சு விட்டுக் கொண்டான்... “பின் அழகுக்கே அந்த நிலையென்றால், முன் அழகும் முல்லைச் சிரிப்பழகும், முத்தாரம் தொடுப்பதற்குக் குவிகின்ற இதழ் அழகும் கண்டு விட்டால் என் நிலைதான் என்னாமோ ?” எனக் கேட்டபடி தொடர்ந்து சென்றான்.
அரங்குதனை மயங்க வைத்தாள். அழகுதனைப் பழகு தமிழ் இசையோடு குழைத்துத் தந்தாள். யாழ் எடுத்தாள். யாழானாள்.
யாரானாலும் நிகரில்லையென நாதம் தந்தாள்! வேதம் தந்த கருத்தெல்லாம் அவள் விழி தந்த ஒளியினிலே கருகிப் போகும். அவள் நடந்தாள் வீடு நோக்கி!
தன் பின்னே தனியாத ஆசைக் குன்றும், தாகமுடன் தள்ளாடி வருவதை அறியாத பாவையவள்!
வீட்டுக்குள் நுழைந்து விட்டாள் - கூட்டுக்குள் சென்ற புறா - யாழ் மீட்டும் எந்தன் புறா - நாட்டுக்கு இளவரசன் எனக்கின்றி எவர் கொள்வார் என நினைத்து வாயிலிலே நின்றிருந்தான் அறிவிழந்த அழகுரும்பி.
அண்ணாந்து நின்றவனின் இதயத்தின் அடித்தளம் ஆட்டுதற்கு விண்மீது நிலாத்தட்டு தொங்கியது - அதன் நடுவே ஓர் உருவம் - அதுதான் அவள் உருவம். இளைப்பாற நிலா முற்றம் வந்தவளின் முழுத் தோற்றம் கண்டுவிட்ட முடிவேந்தன் மைந்தனுக்கு முப்பாலின் இறுதிப்பால் தலைக்கேறி விட்டதாலே தட்டி விட்டான் வீட்டுக் கதவு தன்னை! ஓடி வந்து ஒரு தோழி திறக்கலானாள் - “இளவரசன் வருகைதனை எந்தன் எழிலரசி அறியட்டும்” எனச் சொன்னான்.
அவள் ஓடி அழகியிடம், “தேன் மொழியே! தேசத்து இளவரசன் தெருக் கதவைத் தட்டிவிட்டுத் தேகமெல்லாம் வியர்வைக் குளமாக நிற்கின்றான். தீரங் காட்டும் தோள்களிலே நாணம் தொங்குவதை - வீரம் பாடும் மீசைகளில் வெட்கம் ஆடுவதை
விழியினால் உணர்ந்தேன் தோழி; விடை கொடுத்து அனுப்பவா - அழைக்கவா ?” எனக் கேட்டாள்.
“அழைத்து வா” எனச் சொல்லி அவள் அலங்கார மாடம் புகுந்தாள். அவன் வந்தான், அவளும் வந்தாள் கையில் யாழோடு!...
“தேன்மொழி” எனச் சொன்னான்; “வணக்க”மென உரைத்துவிட்டு வாய்திறக்க வழியின்றி யாழ் மீட்டிப் பாடலானாள்.
“யாழ் கேட்க வரவில்லை கண்ணே” என்றான்.
“பின் யாது கேட்க ?” என்றாள்.
“உனைக் கேட்க!”
“எனைக் கேட்கவா ?”
“ஆம் அழகே; அவனிதனிலே உனையன்றி வேறோர் நினைவறியேன். நெஞ்சினிலே இக்கணமே குடியேறு” என்றான்.
“இளவரசே! கணிகைதானே எனக் கருதிக் கணக்கைத் தவறாகப் போட்டுவிட்டீர்; என் கொழுநன் ஒருவனுண்டு என்பதையும் மறந்தீர். கற்புக்கு மதிப்பு தரும் தமிழகத்தை அழிக்காதீர்; போய் வாரும்!” எனச் சினந்தாள்.
“உனை மணந்த ஒருவனுண்டு எனும் சேதி இன்றுதான் கேட்கின்றேன் பாவாய்; அவன் எவனோ
எனக்குக் காட்டிவிடு; கால் வேறு கை வேறாய் ஆக்கிவிட்டுக் கட்டிலறையை நமக்காக்கிக் கொள்வோம்” என்றான்.
“செங்கோல் வேந்தர் குடிப் பிறந்த கொடுங்கோல் கொழுந்தே, இழக்கத் துணியாத என் பொருள்கள் - ஆளன், யாழ், அருங்கற்பு - இம்மூன்றுமென நீ அறிக!” எனச் சொல்லி எழுந்து நின்றாள்.
எண்ணெய் மீது பாய்கின்ற தீ போல - எரிமலையின் பெருமூச்சில் வழிகின்ற குழம்பு போல - வேகம் காட்டி அவள் மீது பாயவுற்றான்; ‘அய்யோ’ என அவள் ஓடி அடுத்த அறையினில் உறங்குகின்ற கணவன் மீது விழுந்தழுதாள். கண் விழித்த அவன் ஆளன்; எதிரே இளவரசன் நிற்கின்ற நிலை கண்டு கொதித்துப் போனான்.
“கணிகைக்குக் கற்பா? காசினியோர் சிரிப்பார்கள்! கணவனென இருக்கின்ற மனிதா!... கட்டி வெல்லம் நான் சுவைத்திடத் தருவாய்!... இல்லை, என் கத்திக்கு இரையாக வேண்டும்...” என முழங்கி நின்றான்.
நிற்பதற்கு வழியில்லாப் பிறவி; தேன்மொழியின் ஆளன்; காலற்ற நொண்டி - அதைக் கண்டுவிட்ட இளவரசன், துணிவு மிகக் கொண்டு தொட்டிமுத்தான் தோகைதனை! கண் எதிரே நடக்கின்ற கொடுமை காண்பதற்குச் சகியாத நொண்டி, ஆங்குள்ள மண்தொட்டி தூக்கி, இளவரசன் தலைமீது வீச அதுகண்டு அநியாயக்காரன், வாள் நீட்டி அவன் மீது பாய்ந்தான். அதைத் தடுக்கத்
தேன்மொழியாள் எண்ணி, யாழ் எடுத்து வாள் மீது வீச, வாள் ஒடிந்து யாழ் முறிந்துபோக, மணிமொழிந்து வீழ்ந்துவிட்டாள் கீழே!
“யாழ் போன பின்னர் எது போனால் என்ன ? வாழ்வோமடி வாடி!” என வாரியணைத்தான் நம்பி.
“யாழ் போனால் பிறிதொன்று வாங்கிக் கொள்வேன்; எந்தன் கற்பும், ஆளனும் போய் விட்டால் அவை வாங்க அங்காடி கிடையாது அறிவாய்!” என மொழிந்து ஒடிந்த வாள் கைபிடித்து “உயிர் பிழைத்து ஓடு” என்றாள்.
அவள் வாளெடுத்தது கண்டு, அதை எதிர்க்க - முறிந்த யாழ் எடுத்து நின்றான் இளவல்.
“என் யாழை, உன் வாளால் வெட்ட மாட்டேன்; நீயும் எம்மை உயிரோடு விடமாட்டாய்! காக்க வேண்டிய மூன்றில் ஒன்றிழந்தேன் - கற்பிழக்க, கணவனை உனக்கு அடிமையாக்க நான் பிறந்தேனில்லை; இதோ பார்” என்றாள், பாய்ந்தாள் கணவன்மீது!
“என்னருமை அத்தான்! உம்மை உயிரோடு சித்திரவதைக் கூடத்துக்கு அனுப்ப மாட்டேன்; இருவருமே சேர்ந்து செல்வோம் இப்புலகு” என்றாள். “சரி” யென்றான் கொழுநன்.
உடைந்த வாளைக் கணவன் நெஞ்சதனில் நுழைத்தாள் - அவ்வாளைத் தன் இதயத்தில்
எந்தினாள் - இருவர் உடல் உடைந்த யாழ் மீது சாய்ந்தது!
கற்பு - ஆளன் - யாழ் - மூன்றையும் பாதகன் பறிக்க முடியவில்லை. அவன் உறுதி வென்றதெனக் கூறி வெட்கினான் வேந்தன் மகன்! விழி அருவியாக வெளியேறினான் வீட்டை விட்டு!.... அவன் சென்ற திக்கெல்லாம் யாழோசை அவனைத் துரந்து கொண்டது.
●
கலைஞர் மு. கருணாநிதி · மீசை முளைத்த வயதில். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்