கட்டுரை 20 / 26
முறம்
Winnowing Tray
அச்சுப் பக்கம் 90–90
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
வேட்டையாடி வீடுவந்த வேழன், வீதி நீளம் காட்டுகின்ற பாவை, விரைந்து வந்து தழுவாதாலே - வெகுண்டெழுந்து அடுக்களைக்குச் சென்றான்.
“புளி உடைத்துக் கொண்டிருந்ததாலே தழுவவில்லை, புகையாதீர் அத்தான்!” எனப் புன்னகையால் கொன்று புதுமுத்தம் தந்தாள்.
தனிச் சுவையால் தணல் அணைந்து போகக் கனிச்சுவையைக் கண்டவாறு பேசலானான் வேழன்.
“புளி உடைப்பதென்ன; உளியெடுத்து மலை பிளக்கும் திறமோ; அன்றி புதிரிடையே - குகை நடுவே உயிர் மறந்து புலி கொல்லும் மறமோ ?” எனக் கேட்ட ஆளிடம் பாவை; “புலி கொல்லல் மறமென்று யார் சொன்னார் அத்தான்! கிளி கொண்டு, உம்போல ஆண்கள் எல்லாம் வில் கொண்டு, வேல் கொண்டு அடக்குகின்ற புலியொன்றை என் போலப் பெண்ணொருத்தி முறத்தினாலே துரத்தினாள்; அறிவீரோ ?” என்றாள்.
“புறமென்றும் அகமென்றும் புகழ் மண்டும் இலக்கியங்கள் தமிழனுக்குச் சொந்தம். முறமொன்று படையாகுமென்று முரட்டுப் புலியொன்றைத் தமிழச்சி விரட்டியதும் உண்டு, அது அந்நாள் பெண்ணே! இந்நாள் உன்னால் ஆகாது கண்ணே!”
“ஏறு தழுவுகின்ற என் அத்தான்! சோறு வடிப்பதற்கே பெண்கள் என்ற இழி மொழியை அகற்றுகின்றேன்! ஈட்டியின்றி, தீட்டிய வாளின்றி ஓட்டுகின்றேன் பழ முறத்தால் ஒரு புலியை!”
“புலியென்றால் புளியம்பழம் அல்ல பாவாய்!”
“தெரியும் இந்தப் பழத்தைவிட பலவீனமான உயிர்!”
“நெருப்புமிழும் கண்கள்! நெஞ்சு கலக்கும் பாய்ச்சல்!”
“பயமுறுத்த வேண்டாம் - பாவை, தமிழச்சி!”
“பார்ப்போம் அதையும் ஒரு நாள் - இப்போது சேர்ப்போம் ஈரிதழ் ஓரிதழாய்” என்றான்.
“கட்டி வெல்லம் தின்பதற்கு அட்டியுண்டோ ? சட்டியிலே புளிக் கொழம்பு கொதித்த பின்னர் இறக்கி விட்டு - ஆகட்டும்!” என்றாள்.
“புளிக் குழம்போ ? புலிக் குழம்போ ?” என்றான்.
“புலிக்குக் குழம்புண்டோ; நீங்கள் புலி வேட்டை ஆடியதன் அழகு இதுதானோ ?” எனச் சிரித்தாள் பாவை. வேழன் வெளியே நடந்தான்...
அடுப்பினிலே கொதித்துவிட்ட புளிக் குழம்பை இறக்கிவிட்டு அத்தானின் கன்னத்தில் இதழ் பதித்து விளையாட ஆயத்தம் செய்திருந்த பாவையின் காதினிலே “அய்யகோ, புலி” என்ற அவல ஒலி!
திறங்காட்ட, போர்க் குணங் காட்ட நேரம் வந்ததென்று முறமெடுத்தாள்! தனக்கொரு இலக்கியம் தமிழகம் படைக்கட்டுமென்று இடைக்கச்சு மேற்கச்சு இறுக்கிக் கட்டி ஒலி வந்த திக்கு நோக்கி ஓடினாள் பாவை!
போர்க்களத்து வீரநடை போடுகின்ற பாவை மீது, வைக்கோற்போர் மேலே படுத்துக் கொண்டு புலியொன்று பாய்ச்சல் காட்ட, “ஆரிங்கே, என் அத்தானெங்கே ?” எனக் கேட்டவாறு முறமோங்கி எதிர் நின்றாள் புலியின் முன்னே!
பாவை மீது பாய்வதற்கு எழுந்த புலி பதுங்கிக் கொண்டு பயமுறுத்தும் வாய் திறந்து உறுமியது! எங்கிருந்தோ ஒரு குரல் புலம்பிற்று :
“என்னருமைப் பெண்பாவாய்! என்னைப் புலி விழுங்கியது!”
“என்னத்தான் சொல்லுகின்றீர் ? விழுங்கியதா ? ஆயின் எங்கிருந்து அழுகின்றீர் ?” - முறமோங்கி நிற்கின்ற பெண்ணழகு கண் கலங்க அலறி விட்டாள்.
“புலியின் வயிற்றுக்குள் இருக்கின்றேன்; அரை உயிராய்; கால் உயிராய்; அழிவோடு இணைகின்றேன். அய்யகோ, எனைத் தின்ற புலியாலே நடப்பதற்கும் இயலவில்லை; எனக்கோ இனி நாக்கு அழைப்பதற்கும் வலுவில்லை; அதனாலே சாகின்றேன்; இறுதி முத்தம்!”
“பாழும் புலியே! பாவை எந்தன் உயிர் போல இருந்திட்ட பாசமிகு அத்தானைக் கொன்று விட்டாய்! இரை தின்ற கருநாகம் போல அசையாமல் கிடக்கின்றாய் . . . . உன்னை பழி வாங்கிவிட்டு யானும் எந்தன் பதியோடு செல்கின்றேன். வைக்கோற் போரோடு சேர்த்து உனைத் தீ வைக்கின்றேன்!” என வெகுண்டு வெந்தழல் பற்றி எரிகின்ற பந்தமொன்று கொண்டு வந்தாள். வைக்கோற்போர் மீது நெருப்பிட்டாள். அக்கணமே, போர் மேலே அவள் கணவன் வேழன் குதித்தோடி வந்திட்டான். அவன் கையில் புலித்தோலும் பார்த்திட்ட பாவை தலை குனிந்திட்டாள்.
“பழ முறத்தால் நீ அடிக்க வந்த புலி பார்த்தாயோ ?” எனப் புலித் தோலை விரித்தான்.
“உமது கேலி புரிந்துதானே தீயின் துணை நாடினேன் என்றாள் பாவை.”
இருவருமே சிரித்த பின்னர் . . . சிங்கார வனம் போகத் திட்டமிட்டு நடக்கலானார். சிந்தையணு சிலிர்த்திடவே இரவெல்லாம் ஆங்கு கழிப்போமெனப் புறப்பட்டார். புறப்பட்ட சமயத்தில் குறுக்கிட்டது பூனையொன்று. ‘சகுனம் சரியில்லை’யெனப் பயந்து நின்றாள் பாவை.
“புலியடிக்க முறமெடுத்த தமிழச்சி! . . . பூனை எதிர்ப்பட்டதென்று நெஞ்சு நடுங்குகின்றாய் . . . வீரத் திருவிளக்கே! கலங்காதே; வா” என்றான்.
“வீரத்தை வெல்வதன்றோ சாத்திரம்” என்றாள்.
“சாத்திரத்தை வெல்வதற்கும் ஒன்றுண்டு; அதன் பேர்” அறிவு என்றான்.
“அதைப் பெறுவதெவ்வாறு ?” என முத்தமிட்டாள்.
“புலி துரத்த முறமெடுத்து வந்தாயே; அம்முறத்தால் மூடப் பதர்களைப் புடைத்தெறிந்து விட்டால், நமைப் பயமுறுத்தும் சாத்திர சகுனங்கள் எல்லாம் வெறும் பதரே - புலித்தோலே - என்பது புலனாகும்!” என்றான்.
●
கலைஞர் மு. கருணாநிதி · மீசை முளைத்த வயதில். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்