கட்டுரை 19 / 26
அருவி
Waterfall
அச்சுப் பக்கம் 84–84
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
நீலமுகில் திரளை - கோல மயில் உருவை - சோலை தரும் எழிலை - பாலை மணற் பரப்பை; தூரிகையால் படைக்கின்ற ஓவியன்!
அணி தேர்ப் புரவி - மணிமுடி மன்னன் - ஆடலழகி - ஊடும் பாவை - அவன் கைவண்ணம் காட்டுகின்ற சித்திரங்கள்!
ஆடை நெய்வோன் - பானை தருவோன் - கூடை முடைவோன் - குமுறும் நெஞ்சினன் - ஏழை மனிதன் - இவையெல்லாம் அவன் எண்ணத்தை - எதிரொலிக்கும் ஓவியங்கள்!
அரசியலார் - அறிஞர் மன்றம் - கலைஞர் குழுக்கள் - அனைத்திலுமே அவனுக்குச் சிறப்புண்டு! அவனைப் போல் ஓவியனை எதிர் நிறுத்த யாராலும் ஆகாதென்று; “ஆதவனும் ஒருவன்தான்; இந்த ஓவியனும் ஒருவன் தான்” எனச் சொல்லி மகிழ்ந்திருந்தார். ஆண்டுதோறும் தங்கத்தால் சட்டமிட்டு, வைரத்தால் வாழ்த்தெழுதி மன்னவனும் பாராட்டிப் பரிசளிப்பான்; கொடுத்திட்ட பரிசுதனை அடுத்துவந்து மன்னன் பார்க்கவா விரும்புவான் என்று படை எடுத்திட்ட ஏழைகள்பால் வழங்கிடுவான்; வைரத்தைத் தங்கத்தைப் பங்கு செய்து!
முத்தமிழர் ஆட்சியெனில் ஏழைகளின் முறையீடு - குறைபாடு இல்லாது இருந்திருக்கும்; எவரோ பல்லவப் பெருமன்னன்; கலையிலே வல்லவன் எனப் பெயர் பெற்றோன் ஆளுகின்ற காலமது!
குறையில்லாச் சித்திரங்கள் குவிக்கின்ற தமிழனுக்கு ஓர் குறையுண்டு!
மலை தழுவி மேகம் மயங்கியிருத்தல் போல் வரைகின்ற நேரத்தில் - தன் தோள் தழுவியொருத்திப் பின்னின்று சுவைத்திட்டால் - அந்த இன்பம் கிடைத்திட்டால் - என எண்ணி ஏக்கத்தால் சுழலுகின்ற ஆடவனின் உருவங்கள்
ஆயிரம் வகை தீட்டிவிட்டான்!
இரு புறா ஒன்றையொன்று மரக்கிளையில் நெருங்குதல் போல் எழுதுகோல் அசைகின்ற தருணத்தில்... அவன் இதழ் நெருங்கும் இதழொன்று இல்லையே எனக் குறைப்பட்டான்!
காட்டாற்றின் வேகத்தை எழுதிவிட்டான் வண்ணத்தால்!.... எண்ணத்தை உலுக்குகின்ற வேகம் காட்டும் காதலாற்றை வரைவதென்றால் கவிஞருண்டோ?
விலை போட்டுக் கலைப் படைப்பை வாங்குவதற்குப் பெண்ணொருத்தி வந்துவிட்டாள் ஒரு நாள்!
திருநாள் இதுவென்று மகிழ்ந்திட்டான்! பேசிடையே காதல் வலை போட்டான்! இலை போட்டு அழைத்த பின்னர் உணவருந்தப் பசிகாரன் தடையா சொல்வான்? துணைவனாகி விடுவோமென்று துணிந்திட்டார். சித்திரத்தில் சிந்தை தந்தேன் எனச் சொன்னாள் பெண்ணழகு! இத்தினத்தில் இன்பம் பெற்றேன் எனச் சொன்னான், அன்னவனும்!
ஓவியம் வாங்க வந்தேன்; உயிர் ஓவியம் பெற்று விட்டேன் . . . ஒன்பது நாள் கழித்துத் திரும்ப வருகின்றேன்; ஒப்புதலைப் பெற்றோரிடம் பெற்று விட்டால் உந்தன் தோள் தழுவிக் கிடப்பதற்கு அடியில்லை எனச் சொன்னாள். அருவியோரம் மகிழ்ந்திருப்போம் வா என்றாள்; சம்மதித்தான்.
வெண் மேகக் குழு சரிவது போல் வீழ்கின்ற அருவி, கொக்கு நிறக் கூந்தல்தனை உவமை காட்டும் பேரழகைச் சுவைத்தவாறு சுவைத்திருந்தார்.
“அத்தான்” என்றாள்; “ஏன்” என்றான்! “அடியாள் அருவிதனில் குளித்துவிட்டு ஆடையெல்லாம் நனைந்திருக்க அமர்ந்திருக்கும் விதத்தினிலே படமொன்று எழுதுவீரா?” எனக் கேட்டாள். அப்படமே திருமணப் பரிசு என்றான் - முத்தமிட்ட இதழ் திறந்து! போய்விட்டாள்; அந்தப் பொழுதெல்லாம் இன்பம் நல்கிவிட்டு!...
இன்பவல்லி அருவியிலே நீராடி அமர்ந்திருக்கும் காட்சிதனைத் தீட்டுதற்குக் கோல் எடுத்தான். பால் வகுத்துக் குறள் வகுத்த வள்ளுவனும் காணாத பேரழகைப் பெண் வடிவில் கண்டுவிட்டோம் எனக் களித்து எழுதலுற்றான்!
விழியழகை - விதவிதக் கதை பேசும் விதமாகச் சித்தரித்தான்! இதழ்ப் பொலிவைத் தீட்டும்போது தூரிகைக்கு முத்தம் தந்தான்! நீராடி அமர்ந்திருக்கும் படமன்றோ; மேலாடை மட்டும்தான் உண்டு; அதனாலே இளமைதனைக் காட்டுகின்ற உடலெடுப்பை அழகாக வரைந்துவிட்டு மயங்கிவிட்டான்! போட்டியிட்டுத் தோற்றதாலே தலைகுனிந்த விதமாகப் பொற்குடமொன்றை அவள் கையினிலே தந்தான்! பரிமளத்தாள் பெட்டியொன்று வலக் கையில்!.... எழுதி முடித்து விட்டுத் தொழுது நின்றிருந்தான்; காதலி வரும் திக்கு நோக்கி!
ஒன்பது நாள் ஆனதாலே வந்துவிட்டாள். ஓடோடி அணைத்துக்கொண்டான். ‘நீராடி அமர்ந்திருக்கும் சித்திரம் தயார்’ என்றான். பெற்றோரும் சம்மதித்தார் எனச் சொன்னாள். பேரின்பம் இதுவன்றோ எனச் சொல்லிப் பூரித்தார். ஓவியத்தைக் காண்பதற்கு ஓய்வு பெற்றுக் கலைக்கூடத்துள் நுழைந்தார். தன்னைப் போல அணுவளவும் வேறுபாடின்றிப் பொன்னைப் போல இருக்கின்ற மேனியையும் எழுதிக் காட்டிப் பொற்குடத்தைப் போட்டிக்கு நிறுத்தி வைத்துத் தீட்டியுள்ள சித்திரத்தை வியந்தாள்! மகிழ்ந்தாள்! அவ்விடமே இருவருமே ஒருவராய்த் தழுவிக் கொண்டார்.
திடுமெனக் குறும்புச் சிரிப்பொன்றை உதிர்த்து விட்டுத், “தோற்றுவிட்டீர் அத்தான், இந்தத் தோகையிடம்!” என்றாள், திகைத்துவிட்டான்!
“நீராடி எழுந்துவந்து நனைந்துபோன கூந்தலுடன் பாறையினில் அமர்ந்திருக்கும் பெண்ணுக்கு நெற்றியிலே குங்குமத் திலகம் எதற்கான்?” எனக் கேட்டு நகைத்து விட்டாள்!
தழுவி நின்ற பிடியை விட்டு ஓவியனும் நழுவிவிட்டான்... பின் தொடர்ந்தாள்... காணவில்லை... நெடுந்தொலைவு தேடிச் சென்றாள்... பின்னர் கலைக் கூடம் திரும்பி வந்தாள்... கலைக்கூடம் இருந்த இடம் தீக்காடாய் இருத்தல் கண்டாள்!.... ஓவியனைக் காணாமல் குரலெடுத்துக் கூவி அழுதாள்; ஓடிச்சென்று அருவியோரம் நின்று பார்த்தாள்...
அருவியிலே மனித உருவொன்று மிதத்தல் போல் தெரிந்ததாலே குதித்துவிட்டாள் . . . அவனே தான் பிணமாக மாறிவிட்டான்! மணநாளைக் குறித்து வந்த மங்கை நல்லாள் அவனோடு சேர்ந்துகொண்டாள்! குளிக்கையிலே கோதையின் குங்குமத்தை அழிக்காதே அருவி நீர் எனக் கேட்டாள் அப்போது! இருவர் உயிர் அழித்து விடும் அருவி நீர் எனத் தெரிந்திருந்தால் கேட்டிருக்க மாட்டாள்!
●
கலைஞர் மு. கருணாநிதி · மீசை முளைத்த வயதில். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்