கட்டுரை 18 / 26
மருதாணி
Henna
அச்சுப் பக்கம் 77–77
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
நகை நட்டு எதுமின்றி எழில் சொட்டும் பருவத்தாள். புகையொத்த கொடிபோல நெளிந்தாடும் உருவத்தாள். இடையோ ஒரு பிடிக்குங் காணாத இளம்பிடி! இதழ்களிலோ தேன் ஒரு படி!.... இல்லை இவளுக்குக் குறையெனும் புகழ்பெற்ற முல்லை. பேசிலோ கிள்ளை!.... அவளை விடுமோ காதல் தொல்லை!
அழகும் உண்ணப் பிறந்தவன் ஒருவன் ... அவன் பேர் மருதன். குமுதம் சிரித்திடக் கோல நிலவென வந்திடும் குமரன். “வேலெடுத்தாள் உந்தன் விழி நினைவு வாட்டுதடி; வாளெடுத்தாள் முத்துப் பற்கள் ஒளி தலைகாட்டுதடி; வேழம் ஏறிவிட்டால் மத்தகந்தான் மெத்தத் தொல்லை அளிக்குதடி!” எனக் கொஞ்சிப் பஞ்சணையில் அஞ்சுகத்தைப் புலன் மாற்றிப் போடுகின்ற பொல்லாக் காளை! போர் முகத்துப் பெருவீரன்! தானைத் தலைவன்!
அவன் ஒருநாள் பகைப்புலத்தினை அழிப்பதற்கு அரசின் ஆணை - காதல் அரசி ஆணை பெற்றுச் சென்றோன், பத்து கிழமை சென்ற பின்னும் வந்தானில்லை. பசலை நிறம் படர்ந்தாலே பாவை வாட, பருவ மெய்த நாள் நோக்கும் தோழிக் கூட்டம் கேலி பாட “தருணமிதே தாக்கந் தீர்க்க வருவீ” ரென்றே அவளும் ஓடி, நிழல் கண்டு ஏமாந்து - ஏங்கி நின்றாள்.
ஆலையிட்ட கரும்பாக ஆன மனம் தேறுதற்கு மாலையிட்ட கண்ணாளன் வரைந்த ஓலை மட்டும் கிட்டியது அவள் கையில்! ... அதில்,
“குளிர்தருவே! பனிமலரே! வெற்றியுடன் திரும்புகின்றேன். கொற்றவனைக் காணுதற்கு முன்பாகக் கொவ்வைக் கனி கொத்துவதற்கு வருகின்றேன்.”
எனக் கண்ட எழுத்தெல்லாம் நனைந்தன முத்தம் பெற்று!... உயர்வான நெஞ்சகத்தில் ஒட்டிக் கொண்ட ஓலைக்கு ஊமைக் குணம் இல்லையேல் ஓராயிரம்
கதை சொல்லும் உவமை காட்டி!
தோழிகள் வந்தனர். “கோழிபோல் குடிலுக்குள் அடை காக்க வேண்டாம்; காலையில் ஆடிப் பெருக்கிற்கு ஆற்றினிலே விழா எடுக்க வருவாய்” என்றாள். காலையில்தான் அவர் வருவார்! “ஆடிப் பெருக்கினும் அன்பைப் பெருக்குவார்” என்றாள் முல்லை. “அட கிறுக்கே! ஆள் எப்போதும் இருப்பான்; ஆடிப் பெருக்கு ஆண்டுக்கு ஒருமுறைதான்” எனக்கூறிக் காவிரியை வாழ்த்துகின்ற கவிதையொன்றை இசை கூட்டிப் பொழியலானார். பாட்டியொருத்தி பவளம் என்பாள்; அவள் நீட்டி முழக்கிக் கூறலுற்றாள்; ஆடிப் பெருக்கிற்குத் தடையின்றிப் போகவேண்டுமென்ற அறிவுரையை!.... முல்லையும் வருவேன் என்றாள்.... அனைவருமே அடுத்த கொல்லையிற் சென்று மருதாணி இலை பறிக்கப் பறந்து விட்டார்.
கிள்ளி வந்த மருதாணிக் கொழுந்துகளை அள்ளி வைத்து, அரைத்தெடுத்து, அம்மாவின் துணையோடு, அழகான கைகளிலும், அந்தமிகு தந்தக் கால்களின் நுனிகளிலும் தடவிக் கொண்டாள். உள்ளங்கை தனிலே உதய சூரியன் போல் மருதாணி! வீணை மீட்டும் விரல்களிலே... குறி பதிக்கும் நகங்களிலே... மருதாணி! கண்ணகியின் சிலம்பு போல் காலினிலே மருதாணி! இங்கெல்லாம் இட்டுக் கொண்டு மருதாணி இடாமலே சிவந்து நிற்கும் கன்னத்தில் இனமறியா வெட்கந் தேக்கிப் படுத்துக் கொண்டாள்.
“இரவெல்லாம் மருதாணி ஈரம் காய்ந்து காலையிலே உதிர்ந்து விட்டால்...
-புது எழிலோடு வரவேற்போம்; போர் முடிந்து வருகின்ற காதலனை...” என நினைத்து மகிழ்ந்து கொண்டாள்.
உறங்காமல், ஒரு புறமும் அசையாமல், மருதாணி கலையாமல் படுத்திருக்கும் அவள் காதில் மருதன் அழைக்கின்ற குரல் கேட்க... எழுந்து நின்றாள்; அவன் எதிரே நின்றான். அசைவற்றாள். “பாய்ந்து வந்து தழுவிடுவாய்; படை முகத்துச் சேதியொன்றும் சொல்வதற்கு வழியின்றி வாய்மூடி இதழ்பதிப்பாய் என நினைந்து ஓடி வந்தேன்; ஏன் முல்லை தயக்க”மென்றான், காதல் மயக்கத்தால் சுழலுகின்ற மனமுடையோன்.
“காலையிலே வருவீர் என்று மருதாணி பூசிக் கொண்டேன் - ஓலையிலே விபரம் இல்லை... ஓடிவந்து தழுவிக்கொண்டால்; மருதாணி கலைந்துவிடும் - ஊர் முழுதும் தோழிகள், நாளைக் காலை முதல் நம்மைப்பற்றித் தம்பட்டம் போட்டிடுவார்; அதனால்தான் தயங்குகிறேன்; தழுவாமல் இதழ் குவிப்போம் இப்போதே” என்றாள். தடையா சொல்வான் - முத்தமிட்டுத் தனியாக முற்றத்திலே படுத்துக் கொண்டான். கலையாத மருதாணி - கலங்கி நின்ற இளம் நெஞ்சம் - இந்நிலையில் உறங்காமல், புரளாமல், விடிவெள்ளி வருவதெப்போதென எண்ணி விண்ணோக்கி விழித்திருந்தாள், விழியழகி முல்லைப் பெண்ணாள்.
ஓரிரவு போயின் என்ன; நாளை உண்டு - என்னருகே அந்தக் காளையுண்டு - இனி நாளெல்லாம் தேன் மொள்ளும் இன்பமுண்டு - எனச் சொன்னாள், அழுகின்ற இதயத்துக்கு ஆறுதலாய் ஒரு வார்த்தை!
விடிந்தது பொழுது - வெண் சக்கரக் குடையானைக் காணுதற்கும், வெற்றிச்சேதி கூறுதற்கும் காதலிபால் விடைபெற்று வேந்தனது தலைநகரம் பயணப்பட்டான் வீரத் தலைவன், வெள்ளி நிலவு முளைப்பதற்குள் வருவதாக வாக்களித்து!
மருதாணி உலர்ந்ததாலே... உதிர்த்துவிட்டு அழகான கைகளையும், கால்களையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டாள் மங்கை நல்லாள். செங்கோடு - சிலம்புக் கோடு - சித்திரக்கோடு - இவைகளோடு - பத்தரை மாற்றுத் தங்கமேனி பொலிவு சிந்தப் புறப்பட்டாள் ஆறு நோக்கித் தோழிகளுடன்!... விழா எடுத்தனர்-ஆடினர்! பாடினர்!.... விரிந்த பகல் இரவாய்ச் சுருங்குவதெப்போதென விழைந்தனள் முல்லை!
இருண்டது உலகம் - ஒளிபெற்றது அவள் உள்ளம்!... வெள்ளி நிலவே வராயோ என்றாள்; அதுவும் வந்தது... “அவரெங்கே - வந்தவுடன் அணைத்து மகிழ்வதற்குத் தடையில்லை; மருதாணி இலையில்லை; ஈரமில்லை... அது தந்த எழிலுண்டு கையில்!.... இன்ப விருந்துண்டு இரவெல்லாம் கழிப்போம்...”
முல்லை பாடினாள் நிலவு நோக்கி... புரவியொன்று வேகமாகத் தலைவாயில் பக்கம் வருவது கண்டாள். அவரேயென்று கூவினாள். ஆவலினால் ஆளுக்குப் பதிலாக அவன் தந்த ஓலை கொண்டு தூதன் வந்தான். அதில்;
“தமிழே! தண்பொழிலே!... கடாரத்தில் படையெடுப்பு! கடல் கடந்து செல்லுகின்றேன். உடல் மெலிந்து வாடாதே... ஓராண்டில் திரும்புகின்றேன்!”
-என்ற எழுத்துக்களை நனைத்தாள் கண்ணீரால்...! கட்டிலிலே குப்புற வீழ்ந்துவிட்டாள்... வீணாக்கி விட்டேனே நேற்றிரவை . . . விரலுக்கும் காலுக்கும் அழகு தேவையென்று விருந்துண்ண மறுத்தேனே - இனி ஓராண்டு யாருக்கு அழகு காட்ட இந்த மருதாணி தேவையென்று... கசக்கிக் கொண்டாள்; கைகளையும் கால்களையும்!...
இதுபோல நேற்றிரவே ஈர மருதாணியைக் கலைத்திருந்தால் அது கலைந்திருக்கும்... களவி நடந்திருக்கும். இன்று கலையுமோ ?... கலையவில்லை! ‘ஓராண்டு!’ எனச் சொல்லிக் கொட்டி விட்டாள் மழைக்கண்ணீர்!... அப்போது ‘கலகல’ சிரிப்புக் கேட்டு ‘மளமள’ என எழுந்தாள் - எதிரே மருதன் நின்றான்... ஏன்தான் அழவிட்டாய் எனக் கேட்டபடி அணைத்துக் கொண்டாள்! கடாரம் போவதுண்டோ எனக் கத்தியழும் பாவை நோக்கி; “மருதன் பெரிதோ - மருதாணி பெரிதோ ?... இதற்கு விடை தேவை” எனச் சிரித்தான் வீர குலத்தான்.
“மன்னிப்பீர்; கலைகின்ற வண்ணக்கோடு மருதாணி - கலையாத சித்திரந்தான் தாங்கள் எனக்கு!”
- எனச் சொல்லி விம்மிவிட்டாள் - விம்முகின்ற வடிவழகில் மனம் பறிகொடுத்து முத்தம் பதித்துவிட்டான் கணக்கின்றி; முல்லை மணம் குடிலெங்கும் கமழ்ந்தது! காதல் வாழ்ந்தது!
●
கலைஞர் மு. கருணாநிதி · மீசை முளைத்த வயதில். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்