கட்டுரை 17 / 26

தோழி

Friend

அச்சுப் பக்கம் 71–71

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

கயற்கண்ணி - நப்பின்னை! சங்கத் தமிழ் முழங்குகின்ற தமிழக்கத்துச் சோலையிலே இரு மயில்கள்! இசைக் குயில்கள்! முத்தவள் முத்தெடுத்துக் கோத்தது போல சிரிப்புக்காரி - முழு நிலவு காட்டுகின்ற முகத்துக்காரி! மொண்டு தரும் சுவையனைத்தும் உண்டு களிப்பதற்கு உலகினிலே யாருக்கு வாய்ப்போ என்று ஊர் பேசும், உவகை சிந்தும் பவழ இதழ் கண்டு!

கற்கண்டு இன்னொருத்தி - வயதினிலே இளைய தோழி! தங்கம் மேனி... குணத்தினிலே கொஞ்சும் கூனி!

ஓடையிலே - குளிர் தென்றல் மிதக்கின்ற ஓடையிலே - அருவியோரத்து அழகுக் காவின வாடையிலே - அவ்விருவர் ஆடிப்பாடி சோடிப் புள்ளெனவே பறந்திடுவார்! காண்போர், தம்மை மறந்திடுவார்!

கிரேக்கத்து எழிலாளும் யவனத்துப் பெருமகளும் - தமிழகத்துக் கரையோரம் இவர்களைக் கண்டதனால் மறுமூச்சு வாங்குவதற்கும் மறந்து போனார் - தலை குனிந்தார் - நிலை குலைந்தார்!

தென்னகத்துச் சந்தனத்தை வாங்குதற்கும், மலைப்பாம்பு-மயில்-மிளகு ஏற்றிச் செல்வதற்கும் - யானை தந்தத்தை நாவாயில் அடுக்கிப் போவதற்கும் வெளிநாட்டு வாணிபக் கோமான்கள் வரும்போது, கயற்கண்ணி - நப்பின்னை இருவரையும் கண்டுவிட்டால், கிரேக்கத்தை, யவனத்தைப் பண்ட மாற்றுச் செய்து கொள்வோம்; இந்தக் கிள்ளைகளைத் தந்திடுவீர் எனக் கேட்பார் என்று கூறி, கிழட்டுப் பெண்டிரெல்லாம் அவர்தம் அழகுக் கீர்த்திதனை வியந்துரைப்பார்!

வைரம் பதித்திட்ட பவழ வாய்ச் செம்புட்கள் தங்குவதற்கு இதயக் கூண்டுதனைப் பெற்றிருக்கும் ஆடவர்தான் யாரோ - எந்த ஊரோ - என்ன பேரோ - எனப் பேசி வினாக்குறி முகங்காட்டிக் கலைவார் அவ்வூரார்!

“கயற்கண்ணி, நப்பின்னை தோழிதானே - நப்பின்னை நமதருந் தங்கை தானே - இவள் மூலம் முயன்று பார்த்தால் அந்தத் தித்திக்கும் செந்தேனை யார் கொள்வார் நம்மையன்றி! எனவெண்ணி உழைக்கலானான், மணிவேலன்! மாணிக்கச் சிற்பத்தின் அண்ணன், மான், புலி, வேழம் கொல்வதையே தொழிலாய்க் கொண்ட பெருவீரன்!

நல்ல தருணம் வாய்க்கின்றபோதெல்லாம் கயற்கண்ணி காதினிலே அண்ணனது அழகாற்றல் வலிவையெல்லாம் அளந்தளந்து சலித்துவிட்டாள் நப்பின்னை!

துடிக்கின்ற அண்ணனிடம் ஓர் நாள். “தொட்டவுடன் துவளுகின்ற தோகையல்ல கயற்கண்ணி! முயற்கொம்பே அவள் இடத்தில் காதல் எதிர்பார்க்கும் வேலை என்பேன்! எதற்கும் புலி கொன்று நகம் கொண்டு வருவாய்! புலி நகத் தாலி கட்டும் போர்க்குடி மகனுக்கு ஒப்புவாய் என்று அவள் மனத்தை மாற்றுகின்றேன். அதுவும் முழு உறுதி அல்ல அண்ணா!” என மொழிந்து காட்டுக்கு அனுப்பி வைத்தாள்!

ஓர் நிலவுக் காலந்தன்னில் விழி வெள்ளி தோன்றும் மட்டும் தோழிதனைக் காணோமென்று தேடி வந்தாள் நப்பின்னை! கடற்கரையின் வெண் மணலில் தனி நடந்து வருகின்ற கயற்கண்ணி விழியெல்லாம் வெண் சிவப்பாய் இருந்தல் கண்டாள்! விளக்கமேதும் தேவையில்லை; புரிந்து கொண்டாள் விவரமெல்லாம்!

“என் அண்ணன் உனக்காகப் புலிநகம் கொண்டு வரப் போனான் - இன்னும் வரவில்லை”யென்று சொன்னாள், நப்பின்னை!

“வரவேண்டாம்; வந்தாலும் எனக்கு அதைத் தர வேண்டாம் - வாழ்க்கைக்குத் துணையொன்றை நாடி விட்டேன்.”

-மொழிந்தவாறு கழுத்தினிலே ... ஆடுகின்ற முத்தாரம் எடுத்து முத்தம் தந்தாள், கயற்கண்ணி!

“முத்து கொடுத்து முத்தம் பெற்றானோ; முட்டாள் நீ ஏமாந்துவிட்டாய்! தமிழ் வீரம் காட்டுகின்ற செயல் புரிந்து புலி நகத்தைப் புதுப் பரிசாய்த் தந்து மனம் புரியும் வழக்கத்தை மாற்றிவிட்டாய் - மறத்தியல்ல!” எனக் கடிந்தாள்!

புன்னகையைத் தவழவிட்டுக் கயற்கண்ணி, பொன்னுதிரும் வார்த்தைகளால் பதில் சொன்னாள்!

“அடிதோழி! அவசரப்பட்டாதே! ஒளிமுத்து என்கிற உயர் வீரன் - உத்தமன்! என் உள்ளங் கவர்ந்தான் - மறத்தி நான் - அதனால் மாவீரா ... புலி நகம் பரிசாக வேண்டும் மென்றேன்! புதுவகைப் பரிசு தருவேன் என்றான் - முத்தெடுத்து அளித்திட்டான் - என்னையும் சேர்த்தெடுத்து அணைத்திட்டான்!”
“கடையினிலே ஒரு முத்தை ஒளிமுத்து வாங்கித் தருவதற்கும் காட்டகத்தில் புலி வேட்டை ஆடுவதற்கும் வித்தியாசம் நிரம்ப இருக்குதடி தோழி!”
“கடையினிலே அல்ல; என் கண் எதிரே கடல் நடுவே குதித்தான் ... பின்னர் முத்துச் சிப்பிகளோடு உதித்தான்!”
“இதோ, நானுந்தான் நேற்றிரவு வாழ்வுக்குத் துணை கண்டேன்!... புலிவேட்டைப் புலியொருவன்... நம்பியெனும் நல்லோன் நகமொன்று பரிசளித்தான். நான் அவனுக்கானேன்!”
“பரிசுக்கும் பாராட்டும் வீரத்துக்கும் மட்டும் பாவையர்கள் பறிகொடுக்க வேண்டுமோ உள்ளம்!... பண்போடு - அழகோடு - பராக்கிரமத்தோடு - மணவாளன் வருவதிலே மரபுக்கு மாச வருமோ பெண்ணே! கடையினிலே முத்தெடுத்து வந்தார் என்கிறாய்; என் கணவன்! காட்டினிலே புலி கொன்று வந்தான் உன் கணவன் என்று யார் கண்டார் ?”
“நம்பிக்கையில்லையென்னாதே! நம்பி அவர் பெயர்!”
“இந்த மலருக்குத் தும்பி! அதனால் புகழ்ச்சியுரை!”
“வார்த்தை நீள வேண்டாம் - வாழ்த்துகின்றேன் - வருகின்றேன் - என் வீரர் காத்திருப்பார்!”

நப்பின்னை நன்முகம் கோணி; போய் விட்டாள் அதை விட்டு!

“பித்துப் பெண்! இவள் அண்ணன் இரு புலியை ஒன்றாய்க் கொல்வான் - ஆயின் என் ? ... அவன் பண்பு பரத்தை வீட்டில் கேட்டால் தெரியும்!....” முணு முணுத்துச் சென்றாள் கயற்கண்ணி!

அண்ணனுக்குக் கயற்கண்ணி வாய்க்கவில்லை யென்கிற சீற்றமுடன் வீடு வந்த நப்பின்னை, மணிவேலன் மனமுடைந்து இருப்பதையும் கண்டு விட்டாள். மன்னிப்புக் கேட்டு நின்றாள்.

“இனியென்ன போகட்டும்; இலவு காத்த கிளியானேன்” எனச் சொல்லி எழுந்து சென்றான் மணிவேலன்!

“என்ன அண்ணா - எனக்கோர் துணைவன் தேடி விட்டேன்! ... இதோ பார் அவன் கொன்ற புலி நகம்!” எனத் தந்தாள் ... ஆர்வமுடன்!....

“யார் அவன்?” என்றான் ஆசையுடன்!.... “நம்பி!” என்றாள்.

“அவனா ?... அவன் கொன்றானா புலியை ?... நான் கயற்கண்ணிக்காகக் கொன்ற புலியின் நகத்தையன்றோ நம்பிக்குக் கொடுத்தேன்; அவள் மனச்சேதி கேட்ட பிறகு.”

எனச் சொல்லிச் சிரித்தான் மணிவேலன்!

வீரனை மணந்ததாய் எண்ணியிருந்த அத்தோழி, வீழ்ந்துவிட்டாள் பூமிதனில் மூர்ச்சித்து!....

ஆரியனாம் அந்த நம்பி என்ற சேதி அதன்பிறகு கேள்விப்பட்டாள்; ஆவிதனைக் கடவுளுக்கு அர்ப்பணித்தாள்! மறத்தியானாள்!

கலைஞர் மு. கருணாநிதி · மீசை முளைத்த வயதில். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்