பொருளடக்கம்

16. தேனலைகள்

கட்டுரை 16 / 26

தேனலைகள்

Honey Waves

அச்சுப் பக்கம் 62–62

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

தழைத்துக் குலுங்கும் தண் மலர்ப் பொழில் ஆங்கு மழைக் கூந்தற்காரி - பேரழகி யொருத்தி! அவள் இழைக்குப் பொன் வேய்ந்த துகில் பூண்டு நிற்கின்றாள், அணைக்கும் காதலனை அழைக்கும் கண் கொண்டு - கன்னங்களில் தேன் மொண்டு! கிள்ளை அவள் பெயர். பல், முல்லை! இதழ், சாக்கரை வில்லை!

அவனோ தமிழ்மகன், இள வணிகன். பருவ மயில் ஆடுதற்கு முகில் கூட்டும் கண்ணுடையான். வளரும் மலைத் தோளுடையான், வளவன் பெயரால்!

அவன், விற்காட்டும் புருவத்தாளை - தற்காத்துத் தற்கொண்டான் பேணுகின்ற கற்புக் கருவத்தாளை - சந்திக்க வருகின்றான், பந்திக்கு முந்துகின்ற பசிகாரன் வேகத்தில்!

கனிமரங்கள் தலைநாணும்- அவள் எழில் தருவாய் நிற்கின்ற காட்சி கண்டு! வந்துவிட்டான் வளவன் என்ற சேதிதன்னை அங்கிருக்கும் சருகுகளின் சலசலப்பால் அறிந்துகொண்டாள். ‘அத்தான்’ என்பதற்குள் அணைத்துவிட்டான் பின்னிருந்து! கொத்தாக இன்பம் - குலை குலையாய்ச் சுவை மொழிகள் - காதல் அலை முழங்கும் இரு கடல்கள் - பெரு விருந்து! நீண்ட மெளனம்! ... விடியற் பறவைகளின் பண் கேட்டு, விழித்தெழுந்தார்!

“நீல்விழி நெருப்பாகச் சிவந்ததடி என் கண்ணே” என அவன் கூற, “ஆமத்தான்! அங்கென்ன வாழ்கிறது!” எனச் சொல்லி மீண்டும் தழுவுகிறாள்.

“இனி நாம் இதுபோல் ஆடிப்பாட இருபதுத் திங்கள் ஆகும் பெண்ணே - நாளை மறு நாள் ரோம் நகரம் போகின்றேன் கண்ணே!”
“கட்டழகா! கடலலையில் கட்டுமரம் போலத் தவிப்பதற்கோ பிறந்தேன்! இல்லை - இந்தப் பயணத்தைத் தவிர்ப்பதற்குத் துணிந்தேன்!”
“தடை வேண்டாம் - தணல் வேண்டாம் உன் விழியில்! புனல் கடந்து ஒளிமுத்து விற்றால் மடை திறந்த வெள்ளம் போல் பொற்காசு குவியும். தமிழர் வளத்தைத் தரணி அறியும். விடைகொடு பாவாய் - அத்துடன் விருந்தளிக்கும் உன் இதழ்க் கடையை இங்கு கொடு!”
“முத்துச் சுமையேற்றிக் கத்துக் கடல் சீறிச் செல்கையிலே குத்து விளக்கொன்றை இங்கு செத்து மடிய விட்டுச் செல்கின்றோம்... என நினைப்பீரா அத்தான் ?”
“நினைக்க மாட்டேன் நேரிழையே... உனை மறந்தன்றோ நினைப்பதற்கு!”
“களிவொழுக்கம் புகுந்து விட்டோம் - நாளை மறந்து விட்டால் நில நடுக்கம் என் வாழ்வில்! இதை உணர்வீர்!”
“மூச்சு வாங்குவதற்கும் விடுவதற்கும் நினைப்பை வைத்துக் கொள்வதில்லை. என் உயிர் மூச்சே! ஏதேதோ எண்ணாதே! நீயின்றி நானில்லை! நிலவின்றி வானில்லை!”
“விண்மீன்கள் படையெடுத்தால் ?”
“புலால் உண்ணேன்!”
“ரோம் நாடு அழகிகள் வாழ் தேன் கூடாமே!”
“அங்கு நானோர் முடவனாயிருப்பேன். கொம்புத்

தேன் தமிழகத்தில் உண்டென்று உன் கொய்யா இதழ் நினைத்து உறங்குவேன். கற்பனையில் உண்ணுவேன்.”

“வெளிநாட்டுக் கனியொன்றைச் சுவைப்போமேயென எண்ணி விட்டால்...?”
“அணிலா நான் ? பல கனி சுவைக்கும் பண்பில்லை எனக்கு!”
“பரத்தையர் நட்பு குற்றமில்லையெனக் கொண்டு விட்டால்...?”
“தமிழர் பண்பு இன்று அதுவெனினும் நான் விதிவிலக்கு! வீண் ஐயத்தை நீ விலக்கு”

பிறகு பேச்சில்லை! இருபது திங்கள் பிரிவுக்கும் சேர்த்தளித்தார் ஒருவருக்கொருவர் இன்பச் சுவையை பாலைவனப் பயணம் போகும் ஒட்டகம் போல். இருபது திங்கட்கு இன்பத்தை மூட்டை கட்ட இடந்தரவில்லை இயற்கையென வந்து நின்றார். பின் பிரிந்தார், நன்றாக விடிந்து விட்டதால்!

தென்பாண்டிக் கடல் முத்தை முதுகிற் சுமந்து தமிழகத்து நாவாய் ஒன்று ரோம் நோக்கிப் போகும் காட்சி. அதன் தளத்தினிலே வளவன் நின்று உளத்தினிலே மூண்டுவிட்ட காதல் தீயால் கிள்ளையை எண்ணிச் சிறு பிள்ளைபோல் அழுதான். “என் சோகம்?” என்று ஒரு தேன் குரல்

கேட்டுத் திரும்பினான். கிள்ளையினும் கவின் மிக்காள். கீழ் வானத்துச் சூரியன் போல் கன்னங் கொண்டாள். உடலெடுப்பாய்த் தோன்றுகின்ற உடையமைப்பு! காதலுக்கு வாவென்று தூது விடும் கண்ணின் கடை அமைப்பு! விற் புருவம்! அதன் மேலே விண்மீன்கள் போலே ஒளிர்கின்ற புள்ளிக் கூட்டம்! கார் கூந்தல் கட்டி முடிந்திருக்கும் காட்சிக்கு; இரண்டு நாட்கள், இருபது ஆட்களுக்குமேல் பிடித்திருக்கும்!

தாமரை மலர்மீது வண்டொன்று அமர்ந்தது போல் அவள் முகமீது அழகுப் பரு! இன்ப உரு!

யாரென்றான்! ரோமென்றாள்! பெயர் கேட்டான். லெஜியா! பெருவணிகன் மார்க்கசின் பேத்தி! தகவல் தந்தாள்! காதல் தகவல் பாடும் அவள் விழிகண்டான். புரிந்து கொண்டான், அவள் நெஞ்சம்!

“மயில், மிளகு, முத்து தரும் தமிழகம், எனக்கு மையல் தீர்க்கும் அழகனையும் அளித்தது” என்றாள். “அவன் யார்?” அவன் கேட்டான். துணிச்சல்காரி அவன் தோள் சாய்ந்து, “நீர்தான்” என்றாள். “கடல் நீர் கரிக்குமம்மா!” எனக் கேலி பேசி அகன்று விட்டான். “பருகுதற்குத் தேவையில்லை; என் இதயப் படகு மிதப்பதற்குத் தேவை”யென்றாள்.

“பாய் கட்டிப் படகு நீ!... காற்றடித்த பக்கமெல்லாம் செல்லாதே... கற்புச் சுக்கானை ஒழுங்காய்ப் பிடி”யென்றான். “காற்றும் நீர்... படகும் நீர்... பாய் மரமும் நீர்... சுந்தரத் திருப்பந்தரும் சுக்கானும் நீர்...

இந்த ஓடம் ஊர்கின்ற கடலும் நீர்!....”

“கடலும் நீர்தான்!”
“என் கண்களிலும் அதுதான்!”
“கவனித்தேன்... விழி நீரில் என்னை மிதக்க விடாதே - விடுவித்துவிடு தங்கையே என்னை!”
“தங்கை யென்றா அழைக்கின்றீர்...?”
“திகைப்பானேன்! திருவிடத்தின் பெருமை சார் பண்பு தாயே அது!”
“ஆண்டவன் அளித்த அழகிற்கு நீங்கள் தரும் மதிப்பு இதுதானா?”
“ரோமானியரைப் போல், தமிழர் அழகிற்கு அடிமையாவதில்லை; அழகை வியப்போம் - வளர்ப்போம் - மதிப்போம் - இவ்வளவும் எங்கள் நாகரிக இலக்கணத்திலிருந்து சிறிதும் நழுவாமல்!”
“என் ஆசை வெறும் கனவுதானா?”
“வருந்துகிறேன். என்னை முன்பே இன்னொருத்திக்கு ஒப்படைத்து விட்டேன் லெஜியா!”
“யார் அந்த கொடுத்து வைத்த கோகிலம்?”
“கிள்ளை அவள் பெயர்!”
“அவள் வாழ்க - இதோ என் அன்பின்

அடையாளமாக அவளுக்கு இந்த முத்துமாலையை அணிவிப்பீர்களா?”

“ஆகட்டும்!”
“அவளை நான் மதிக்கிறேன். அவள் பெரும் பேறு பெற்றவள். கற்புடைய கட்டழகனைப் பெற்ற அந்த நல்லாள் வாழ்ந்திடுக!... வளவர் கோமானே!... தங்கள் அன்பு நினைவாக எனக்கு ஏதாவது...”
“இதோ... இதயத் தாய்மையை வெளிப்படுத்தும் பரிசு!... இந்த முத்துக் கணையாழியை அணிந்துகொள்... இது தங்கைக்கு அண்ணன் தரும் அணிகலன்...”

இருபத்து திங்கள் கழிந்தன! ஒரு திங்கள்; சோலையிலே வந்ததுவோ எனத் தக்க காட்சி! கிள்ளை நிற்கின்றாள். இன்பக் கொல்லையிலே அத்தானின் அன்புத் தொல்லையிலே அகப்பட்டுக் களிக்க! முத்தம் பெறுவதற்கு முன்பாகக் கரம் ஏனோ கன்னத்தைத் தடவுகிறது! சத்தம் வரும் திக்கெல்லாம் கண் நோக்குத் தாவுகிறது! எனை மீட்ட வரும் யாழரசன் எங்கேயென்று இதய வீணை தவிக்கிறது! தாபம் தகிக்கிறது! கருகிப் போகும் முன்னாலே பயிர்க்கு மழை போலவே - உருகிச் சாகும் உளியடாச் சிலை முன்பு ஒளித் தமிழன் வந்துவிட்டான். “அத்தான்!” என்றாள். இதழ்ப் போர்; முழவின்றி, முன் அறிவிப்பின்றி, முடிவுமின்றித்

தொடங்கிற்று! இடையிடையே சொல் முத்து!

“வாணிபம் எவ்வாறெ”ன்றாள். “மிக வளம்” என்றான். “மின் வெட்டுக்காரிகள் யாராவது”என இழுத்தாள். “யாருமில்லை”யென்று கூறி, ஆரம் ஒன்று கொண்டு வந்தேன்; அணிந்துகொள்” என எடுத்தான்.

“எது இது?”
“ரோம் நகர வேலைப்பாடு... தமிழ்நாட்டு முத்து!”
“யார் அளித்தார்?”
“ஒருத்தி தந்தாள் உனக்காக!”
“அவள்?”
“என் தங்கை போல!... ரோம் நாட்டுக்காரி!”
“உண்மைதானா?”
“உன்மீது ஆணையாக!... ஒளிர்பூங் கொம்பே; உன் கழுத்தை இங்கு தந்திடு!”

“அத்தான்... இந்த முத்துக் கணையாழி கண்டீரோ?” எனக் கேட்டாள் கிள்ளை; கண்டுவிட்டு வியப்படைந்தான் மணப்பிள்ளை.

“யாரளித்தார் எனக் கேட்பீர்; ஒரு தமிழன் - உயர் தமிழன் தந்தார்!”
“யார் அந்தத் தமிழன்?”
“எனக்கு அண்ணன் போல!”
“உண்மையா ?”
“ஆமாம்.... லெஜியாவுக்கு அவர் அண்ணன்....”
“லெஜியா - நீயேதான்!”
“அத்தான்... நானேதான் லெஜியா!”
“கிள்ளை! முந்தீர் வழக்கம் ‘மகடூஉவோடில்லை’ என்பதை மறந்தனையோ ?”
“மறக்கவில்லை... விதிவிலக்கு எனக்கு மட்டும்!”

சிரித்தான் அவன்... அவள் கழுத்தில் முத்தாரம் அணிவித்தான். அவள் சிரிப்பு முத்தாரம் தந்தாள். பின்னர் இரவெல்லாம் முத்தாரம் தொடுத்தார் இருவருமே!

கலைஞர் மு. கருணாநிதி · மீசை முளைத்த வயதில். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்