கட்டுரை 22 / 26

சிற்பி

The Sculptor

அச்சுப் பக்கம் 102–102

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

சேலை, சோலையிலே முல்லை. முல்லையிலே வண்டு. தென்றல் முல்லையை அசைக்க... வெட்கத்தால் ஒடுகிறது என்றெண்ணிய வண்டு... ரீங்காரம் எழுப்பி நெருங்க... அப்போது ஒரு மல்லிகை சிரித்து, மணம் சிதற... அழைக்கிறது என்று; தவறாக எண்ணிய வண்டு அங்கே பறக்க... இந்த இன்பமான காட்சி முடிவதற்குள் ஒரு ரோஜா மலர் ஓடிவருவது போல அவள் வந்தாள்.

வந்தவள் சோலையைச் சுற்றிப் பார்த்து ... ஒரு பெருமூச்சு விட்டாள். “இயற்கை, கவிஞர்களைப் படைக்கும் இயற்கை, காவியங்களை உண்டாக்கும் இயற்கை!”

அவள் இதை உரக்கச் சொன்னாள். “என்னை ஒரு கவியாக்கிய இயற்கையே! நன்றியின் காணிக்கையாக ஒரு கவிதை! இதை ஏற்றுக்கொள்.”

“மாமரத்தில் தாவுகின்ற மல்லிகையே - பாமரர்கள் கூறுகின்ற ‘சாதி’ உனக்கு இல்லையே!”

இதைப் பாடிவிட்டு அந்தக் குயிலாள் குதித்தோடினாள். உலகத்தைப் பற்றியே கவலைப்படாத ஒரு அலட்சியம்... இளமையின் மிடுக்கோடு சேர்ந்துகொண்டது. பிறகு அவள் மான்குட்டிதானே! என்னென்னவோ ஆடிப் பாடினாள். ஆடிக்கொண்டே ஓடினாள். “கலைவாணன்” என்று அகில உலகப் பட்டமளிப்பு விழாவிலே பெயர் தட்டப்பட்ட ஒரு சிற்பி செய்த சிலை உயிரெடுத்து உலவுவது போல் படர்ந்து கிடந்த கொடிகளைத் தடவிப் பார்த்தாள். கலாபமொன்று களிநடம் புரிந்து - அதனோடு போட்டிப் போட்டுச் சாயல் காட்டினாள். அந்தச் சோலையின் செடிகளுக்கும், கொடிகளுக்கும் பேச வாயிருந்தால், ‘அட பைத்தியமே’ என்ற பரிகாச வார்த்தையால் அவள் காது செவிடப்பட்டு விடும்.

ஆட்ட பாட்டம் முடிந்து... அவள் வரவுக்காகக் காத்திருந்த ஊஞ்சலிற் பாய்ந்தாள்; ஊஞ்சல் ஆடிற்று!

மாமரத்தின் கிளை வளைந்து கொடுத்தது. அவ்வளவு வேகம்!

“படை வீரர் எதிரிகள்மேல் பாய்வதுபோல் ஆடு! உடைவாளை வீசியே சாவதுபோல் ஆடு! ஊஞ்சலே நீ ஆடு!”

ஊஞ்சலுக்கும் உடனே ஓர் கவிதை கட்டினாள் அவள்! ஆம்; கட்டழகி! பாடிக்கொண்டிருந்த அவள் பவழவாய் திடீரென முடிக்கொண்டது. குளிர்ச்சியைக் கொட்டிக் கொண்டிருந்த அவள் கண்கள் கனற்கட்டிகளாயின. இதழ்கள் அவளை அறியாமலே அவள் பற்களால் கடிபட்டன. கன்னங்களில் ஈட்டி பாய்ந்து இரத்தம் வழிவது போன்ற சிவப்பு முகத்தைத் திருப்பிக்கொண்டு மீண்டும் ஆடினாள். அவள் கண்கள் ஏதோ ஒரு குறிப்பான இடத்திற்கே கணைகளைப்போல் பாய்ந்தன; பலமான இரும்புக் கேடயத்தில் மோதிக் கூர்முனைக்கும் அம்புகள் போலவே மீண்டும் அவள் விழிகள் சாய்ந்தன. ஆனால் அவளால் அந்த இடத்தைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. “கேவலம்... ஒரு... சிற்பி... எவ்வளவு ஆணவம் ?” - அவள் வாய் முணுமுணுத்தது. சோலையின் ஓரத்தில்தான் வீடு. அந்த வீடு - பழைய வீடு! சில இடங்களில் சுவர்கள் சரிந்திருந்தன. வீட்டின் மேல் தளத்திலிருந்த அந்தப் பலகணிதான் அவள் ஆத்திரத்தை அதிகப்படுத்திற்று. கருப்புடை போர்த்துக் கொண்டிருந்த ஒரு மனிதனின் கண்கள் பலகணியின் வழியாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தன.

“தத்தளிக்கிற மானைக் கண்டு... சில சமயங்களில் வேடன் கூடக் குறி மாற்றிவிடுவான். செயலற்ற எதிரியைக் கண்டு சில சமயங்களில்... படை வீரன் கூட ஒதுங்கி விடுவான். இந்தப் பாவி... வைத்த கண் எடுக்காமல் என்னைத் துரத்துகிறானே! இயற்கை இன்பம் அனுபவிக்க ஒரே ஒரு இடம் எனக்கிருந்தது. இதற்கும் கேடா ? உம்... இவனை விடக்கூடாது... நான் யார் ? இவன் யார் ? கேவலம் - ஒரு சிற்பி! எவ்வளவு ஆணவம் ?... இதோ அகம்பாவத்திற்கு அழிவு தேடித் தருகிறேன்!”

அவள் கொதித்தாள். ஒரு சாதாரண சிற்பியின் பார்வையால் - பலாத்காரக் காமநோக்கால் - தன் கற்பு அழிந்துவிடுமென்று கருதினாள். மீண்டும் அந்தப் பலகணியைப் பார்த்தாள். அந்தக் கண்கள் அவளை விட்டுப் பிரியவில்லை. “பொன்னழகன்... பெயரைப்பார். சிற்பி! அந்தக் காமக் கண்கள் குருடாகட்டும். சிற்பி, கபோதியாகட்டும்...” அவள் தொடர்ந்து பேசவில்லை! திடீரென ஓடினாள். ஒரு நல்ல கூர்மையான கருங்கல்! அதை வெகு வேகமாக வீசினாள்! அவள் கல்லை வீசியதுதான் தாமதம்... “ஆ... என் கலை ஒழிந்தது!” என்று வீரிட்டபடி ஒரு மனிதன் ஓடினான். பலகணியில் படார் என்ற ஒலியோடு கல் மோதிற்று.

நரம்புகள் எல்லாம் நடுங்க... அவள் அப்படியே நின்று விட்டாள். ஓடிக் கொண்டிருந்த மனிதன் நின்று, “இளவரசி!... என்ன காரியம் செய்தீர்கள் ?” என்று பேச்சை ஆரம்பித்தான். அவன் வார்த்தைகளை ஆத்திரம் தடுத்து அடைத்துக்

கொண்டது. மீண்டும் அவன் ஓடினான். அவளும் அவன் பின்னால் ஓடினாள்.

ஓடிக்கொண்டேயிருந்த மனிதன் வீட்டுக்குள் நுழைந்தான். அவளும் வீட்டை ஒரு முறை எறிந்துதுப் பார்த்தாள்.

‘சிற்பியின் வீடு’ - அவள் வேகத்திற்கு இந்த முணுமுணுப்பு முட்டுக்கட்டை போட்டாலும்... உடனே முறிந்துபோக வேண்டிய அளவுக்கு அவள் நெஞ்சில் ஓர் ஆவல் மண்டுகொண்டேயிருந்தது. வீட்டுக்குள் ஓடினாள். மேல் தளத்தில் தேம்பும் ஒலி! அந்த சோக ஒலிக்கு... நடைபோட்டு நகர்ந்து கொண்டிருந்தாள் அவள். “சேரன் செங்குட்டுவன்...! நான் படைத்த கலை...” விக்கி விக்கிக் கிளம்பும் அழுகையோடு இந்த வார்த்தைகள் பின்னிப் பின்னி அறுந்து போயின.

அவள் அசையாமல் நின்று கொண்டிருந்தாள். அவள் நரம்புகள் மாத்திரம், தட்டிவிட்ட வீணைத் தந்திகள் போல் அதிர்ந்தன. சேரன் செங்குட்டுவன் சிலை நொறுங்கிக் கிடந்தது. சிற்பி பொன்னழகன் குப்புறக் கிடந்தான்.

“அய்யோ... என் இருதயத்தைப் பிளந்து எறிந்து விட்டாளே இளவரசி! சந்திரனைக் கூறு போட்டது போல் சேரனைச் சிதைத்து விட்டாளே! செங்குட்டுவா... உன் கண்ணில் ஒளியேற்ற... எவ்வளவு கஷ்டப்பட்டேன். அந்தக் கண்கள் கதிரவனை உருட்டிவிட்டது போல் உருண்டு

கிடக்கின்றனவே! உனக்கு அரும்பு மீசை அமைக்க ஒரு நாள் முழுவதும் செலவிட்டேனே! அவை ஆச்சரியக் குறிகளைத் துண்டாடியது போல் தூளாகிக் கிடக்கின்றனவே! உன் அதரங்களில் துடிப்பை நிறுத்தி வைத்து... தொகை தொகையாக பகைவர்கள் வந்தாலும் துச்சமெனக் கருதும் எண்ணத்தையும் அமைத்து வைத்து... அதனால் பெருமையடைந்தேனே... அந்தப் பெருமை இதோ அழிந்து கிடக்கிறதே!”

பொன்னழகன் புலம்பினான். அவன் படைத்த நினைவுச் சின்னத்தின் சாவு கண்டு ஒப்பாரி வைத்தான்.

அவள் கண்கள் உடைப்பெடுத்த எரிகளாயின. பூகம்ப அதிர்ச்சியையும் தோற்கடிக்கும் ஒரு தேம்பல் அவளை உலுக்கிற்று. மரத்துப்போன சிற்பியின் மனத்திலும் உணர்ச்சியுண்டாக்கி அதனைத் துள்ளியெழச் செய்து அந்தச் சோக விக்கல். பொன்னழகன் திரும்பிப் பார்த்தான். அவள் நின்று கொண்டிருந்தாள்; செதுக்காத சிலைபோல்! பொன்னழகனின் கண்களில் புனல் திரண்டுவிட்டது. கனல் கிளம்பிற்று.

“இளவரசி!... பாண்டிய நாட்டில் சேரர் ஆதிக்கத்திற்கு இடமில்லை. இதுதானே உங்கள் சட்டம் ? சேரநாட்டு வீரவேந்தன் செங்குட்டுவனின் சிலையைச் செய்யக் கூடவா சிற்பிக்கு உரிமையில்லை ? வேண்டு மானால் இந்தச் சிலையைச் செய்த குற்றத்திற்காக என்னைச் சிரச்சேதம் செய்திருக்கலாம். சிலையைச்

சிதைக்காமல் சேர நாடு மண்ணிலாவது நட்டுவைத்தால்... ‘என் கலை வாழ்கிறது’ என்று பூரிப்போடு சாவைத் தழுவியிருப்பேன். தங்கள் பெண்ணுள்ளத்தில் கூடவா இந்தக் கருணை தலை நீட்டவில்லை.”

இளவரசியின் கண்ணீரைத்தான் அவன் பதிலாகப் பெற முடிந்தது. அவனும் அமைதி பெற்றான். “சிலையை உடைக்க வேண்டுமென்ற எண்ண மிருந்தால் அவள் சீற்றமல்லவா அடைந்திருப்பாள்! அதற்குப் பதிலாக அழுகிறாளே!”

சிற்பியின் நெஞ்சில் இந்தச் சந்தேகம் சாந்தத்தைக் குடியேற்றியது.

கொதிக்கும் எண்ணெயில், கடுகைப் போட்டால் வெடித்துச் சிதறி விடுகிறது. சிற்பியின் கொதிப்பு அடங்கிய பிறகு இளவரசி பேச ஆரம்பித்தாள்.

“சிலையை உடைக்கும் குறுகிய மனப்பான்மையும், கோணல் புத்தியும் எனக்கில்லை. இந்த ஒரு சிலையை உடைப்பதால் கோடிக்கணக்கான பாண்டிய மன்னர்களின் சிலைகள் சேர நாட்டில் உடைப்படும் என்பதை நானறிகிறேன். அது மட்டுமல்ல; பாண்டிய மரபின் புகழே... சிலை உடைந்தால் ஒரு சின்ன புத்திக்காரி - என்ற விமர்சனத்தால் வீழ்ந்து விடும் என்பதும் எனக்குத் தெரியும். அதுமட்டுமல்ல; சேரனும் நமது இனத்தவன் என்ற உண்மையும் தெரியும் கலைஞரே... நான் இந்தச் சிலையை உடைத்த காரணத்தை உலகம் அறிந்தால்... தங்களைக் ‘கலைவாணர்களின் மன்னர்

மன்னன்’ என்று வாயார வாழ்த்தும்!”

சிற்பியின் கண்களில் புது ஒளி! அவன் நெற்றியில் சந்தேக ரேகைகள்! அவன் இதழ்களில் ஆவல் துடிப்புகள்! இளவரசி பேச்சைத் தொடர்ந்தாள் :

“மனிதனா சிலையா - என்று நிதானிக்க முடியாத நிலையில், என்னை விடாமல் பார்ப்பது ஒரு மனிதன் தான் என்று நினைத்து . . . கோபத்தால் கல் எறிந்தேன். ஆனால் உடைந்திருப்பது சிலை! சிலைக்கு உயிர் அளித்து நிறுத்தியிருந்த தங்கள் கலைத் திறமையைப் புகழக் கவிஞர்கள் கிடைக்கமாட்டார்களே!”

“என்ன! சிலை தங்களைப் பார்த்ததா ?” சிற்பியின் அதரங்களில் துடிப்பு அடங்கவில்லை.

“ஆமாம். என்னை அந்தப் பார்வை இழுத்தது. என் நெஞ்சில் நீ கிளம்பும் அளவுக்கு என்னை விடாமல் அந்தப் பார்வை துரத்தியது. அதன் பிறகுதான் கல்லை வீசினேன்!”
“காதல் பார்வை என்கிறீர்களே!... என் சேரனுக்கு வீரப் பார்வையல்லவா அம்மா ?”
“இருக்கலாம்... வெகு தூரத்தில் பார்வையின் தன்மை தெரியவில்லை.”
“உம், நல்ல பாடம்! அழகுள்ள பெண் - சுவையுள்ள கனி - மணமுள்ள மலர் - இவைகளுக்கு ஆபத்து இருப்பது போல் உயிருள்ள கலைக்கும் ஆபத்து

உண்டு! ஆனால் அந்த ஆபத்து இந்த வடிவிலும் வருமென்று பார்த்ததை இன்றுதான் அறிந்தேன்.”

“மண மலரும், அழகியும், சுவையுள்ள கனியும் மனத்தில் மோதும் ஆசை அலைகளால் கரையும். தங்கள் கலைச் சின்னம் என் கல் மனம் வார்த்தெடுத்த கட்டாரியால் அல்லவா நொறுங்கி விட்டது!”
“கல் மனமா ?... என் கலைத் திறமை என்று கூறினீர்களே இளவரசி!”
“மனதை மயக்க நினைப்பது ஒரு மனிதர் என்று நான் எண்ணியது தங்கள் கலைத் திறன்! எண்ணிய மனிதரை எதிர்க்கத் துணிந்தது என் மனம்.”
“புரியவில்லை இளவரசி!”

பொன்னழகன், சிலை நொறுங்கிக் கிடப்பதைக் கூட மறந்து விட்டான். இளவரசியின் இதழசைவை எதிர் பார்த்திருந்தான். அவளோ பேச முடியாமல் நின்றாள். அவள் நெற்றியில் வியர்வைத் துளிகள்! அவள் கண்ணில் பல மின்னல்கள்! அவள் நிற்பதற்குச் சக்தியற்றுப் போனாள். சிற்பி சொல்லாமலே அங்கு கிடந்த பீடத்தில் உட்கார்ந்தாள். அவள் பார்வையை மாற்றவில்லை. அவன் மட்டும் உடைந்து கிடந்த சேரனின் கையை எடுத்து கைகளில் உருட்டிக் கொண்டிருந்தான்.

ஓர் ஆண்டவன்; அவன் அரச குமாரனல்லன். அவன்

மடியிலே ஒரு பேரழகி; அவள் அரச குமாரிதான். இப்படி ஒரு சிலை! அந்தச் சிலையை அவள் பார்த்தாள் சிற்பியைத் தன் கண்களால் இருத்து...

‘இந்தச் சிலை...?’ என்று அவள் கேட்டு முடிப்பதற்குள்... ‘அது அம்பிகாபதியும் அமராவதியும்’ என்று அவன் பதில் வழங்கினான், “அம்பிகாபதி கவிஞன்; அமராவதி அரச குமாரி! பொன்னழகன் கலைஞன், வேல்விழி இளவரசி”.

அவள் இதை வாய்விட்டுப் பேச இயலவில்லை. சிற்பியின் விழாவில் மட்டும் ஒரு வேல் பாய்ந்திருந்தது போலிருந்தது! அவன் முகத்தில் ரேகைகள் மின்னல் வேகத்தில் பாய்ந்து மறைந்தன. அந்தக் கோடுகள் தந்த விளக்கத்தை அவளும் புரிந்து கொண்டாள். அவர்கள் பேச வேண்டிய கஷ்டமே இல்லாமல் போயிற்று.

செங்கதிரும் செந்தாமரை மலரும் பேசிக் கொண்டா இருக்கின்றன ? “இளவரசி!” என்றான், அவளுடைய பழச்சுளை பதிலைக்கேட்டு இன்பமடைய அவளுக்கும் அவன் சொற்கள் இப்போது கற்கண்டாகி விட்டன.

எந்தப் பொன்னழகன் தன்னைப் பார்த்த குற்றத்திற்காகக் குமுறினாளோ - எந்தப் பொன்னழகனைக் கேவலம் ஒரு சிற்பி என்று முணுமுணுத்துப் பேசினாளோ - அந்தப் பொன்னழகனின் இன்மொழி கேட்க... அவள் துடிதுடித்தாள். பேசத்தான் நா எழவில்லை.

பொன்னழகன் பேச்சைத் தொடர்ந்தான்.

“தாங்கள் சோலையிலே பாடினீர்களே கவிதை!... அதை ஒரு முறை கேட்கலாமா ?”
“கவிதையா ?... தாங்கள் கேட்டீர்களா ?”
“ஆமாம். நாள்தோறும் கேட்கிறேன்.”
“உண்மையாகவா ?”
“மாமரத்தில் தாவுகின்ற மல்லிகையே - பாமரர்கள் கூறுகின்ற சாதி உனக்கு இல்லையே!

-என்று மாமரத்தையும், மல்லிகையையும் கவிதையில் நிறுத்தி மனித வர்க்கத்தைப் பழித்தீர்களே... நினைவிருக்கிறதா ?”

இளவரசியின் கன்னங்களில் சிவப்பு விரிந்தது.

சிற்பி இன்னும் பேசினான் : “நான் தங்கள் கவிதை இன்பம் பெறத் தவறுவதேயில்லை. தங்கள் கற்பனைக்கு இலக்கான மல்லிகைக் காட்டுக்குப் பின்புறத்தில் மாலை நேரங்களில் ஒளிந்திருப்பதும், தங்கள் கவிதைகளை ரசிப்பதும் என் வாடிக்கை...”

“காரணம் ?” அவள் இந்த உலகத்தில் இல்லை.

“இளவரசி......” பொன்னழகன் பேச்சை இழுத்தான்.

இளவரசி குறுக்கிட்டாள். “நான் வேல்விழி!”

வெட்கத்தால் அவள் குனிந்து கொண்டாள்.

“வேல் விழி!”
“அன்பா!”

அம்பிகாபதி அமராவதி சிலை அவர்களை வாழ்த்துவது போல் தோன்றியது!

கலைஞர் மு. கருணாநிதி · மீசை முளைத்த வயதில். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்